Monday 7 January 2019

எதிர்ப்பின் நுட்பத்தை உள்வாங்கும் அணுகுமுறை

‘வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட வித்தியாசம் ஒரு வெளிச்ச மாறுபாடுதான். அதை கணித்து விட்டால் இலக்கை அடைவது சுலபம்...’ என்பார், பிரபல எழுத்தாளர் ஜிம் கார்பெட். ஒரு காட்டில் இருட்டு அனுபவத்தை அவர் விவரி்ப்பதே அலாதியாக இருக்கும். முற்றிலும் வேறானது அவரது வாழ்வு அனுபவம். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அனுமானித்து கடக்கும் அவரது நுட்பம் மேன்மையானது.
அந்த நுட்பத்தை புரிந்து கொண்டால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், புதிய அனுபவங்களை உணர்த்தும். மென்மை நிறைந்த உலகத்தின் மேன்மைகளை உணர்த்தும். காடு சார்ந்தும், காட்டுயிர்கள் சார்ந்தும் வேட்டை சார்ந்தும், மனிதர்கள் சார்ந்தும் பல புத்தகங்களை, ஜிம் கார்பெட் எழுதியுள்ளார். சில தமிழ் மொழியாக்கம் பெற்றுள்ளன.
ஒரு சுவைக்காக, Jim Carbet எழுதி, Oxford University press வெளியிட்டுள்ள, The Man Eating Leopard of Rudraprayog என்ற புத்தகத்தில் இருந்து, A Wild Boar Hunt என்ற பகுதியை தமிழ் ஆக்கி தந்திருக்கிறேன்.
‘‘...இந்த மலை உச்சி, 12 ஆயிரம் அடி உயரமுள்ளது. இதில் உள்ள கணவாய் வழியாக, காஷ்மீருக்கு செல்லலாம். மலையில், 8000 அடி ஏறியதும் பனிப் புயல் வீசத் துவங்கியது. மேகங்களின் நிறம் மாறியது. என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; கவனமாக, ஒரு மரத்தைத் தேர்வு செய்தேன். பனிப் புயல் வீசும் போது, கூடவே, பயங்கர மின்னலும் வெட்டும். சாய்வான உச்சி உள்ள பெரிய ஊசி இலை மரத்தின் அடியில் ஒதுங்கினால், மின்னல் தாக்கும் அபாயம் உண்டு. எனவே, வட்டமான உச்சியுள்ள, அடர்ந்த இலைகளைக் கொண்ட மரத்தின் அடியில் ஒதுங்கினேன்.
சுள்ளிகளை சேகரித்து, தீ மூட்டினேன். தலைக்கு மேல் மின்னல் கீறியது; இடி கர்ஜித்தது; புயல் வீசி அடித்தது. கணப்பின் கதகதப்பில் உட்கார்ந்திருந்தேன்.
ஒரு மணிநேரத்துக்குப்பின் புயல் ஓய்ந்தது; சூரியன் தலைகாட்டியது. மரத்தடியிலிருந்து, வெளியே வந்த போது, வெண் தேவதைகளின் தேசத்தில், பிரவேசிப்பது போல் இருந்தது. தரையில் வெண் கம்பளம் போல், பனி போர்த்தியிருந்தது. அதில், முத்துக்கள் ஒளிர்ந்தன. இலைகளும், புல் இதழ்களும் பனியை சுமந்து மின்னின.
ஒரு பாறையை அடைந்தேன். அதைச் சுற்றி நீலவண்ண மலைஅரளி பூத்து குலுங்கி மனதை வருடியது. இமயமலை காட்டு மலர்களில், மிக மிக அழகானது. புயலால் தண்டு முறிந்த நீல மலர்கள், வெண்பனிப் படுக்கையில் சாய்ந்து கிடந்தன. இந்த காட்சி என்னுள் நிரம்பியது.
பிரமிப்பூட்டும் பிர் மரங்கள் அடர்ந்த காட்டினுாடே நடந்து, ஒரு புல் சரிவுக்கு வந்தேன்.
சிறிய மண்மேட்டில், சின்ன விலங்கு ஒன்று வாலை காட்டியபடி நின்றது. விலங்கு படப் புத்தகத்தில், அதை பார்த்திருக்கிறேன். இதன் பெயர் காஷ்மீர் சிவப்பு கலைமான்; அது, தலையை உயர்த்திய போது, பெண்மான் என, அடையாளம் கண்டேன்.
புல்வெளிச் சரிவில், ஒரு பாறை மறைவில் நின்று கவனித்தேன்; புல்மேய மான் குனியும் போது, மெதுவாக அதை நோக்கி நகர்வதும், தலையை உயர்த்தும் போது, அசையாமல் நின்று விடுவதுமாக நெருங்கிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வலப்பக்கத்தை அது நோக்கியது; அங்கு, அதன் உறவினர்கள் நிற்கலாம் என கணித்தேன்.
எனவே, ஒரு பாறை மறைவில் நின்று கவனித்தேன். இந்த ரக மானை, முதல் முறையாகப் பார்ப்பதால் சிறுத்தை குரல் கேட்டால், அவை நடந்து கொள்ளும் விதம் பற்றி அறிய விரும்பினேன்.
புல் மேய அது குனிந்த போது, சிறுத்தை போல, குரல் எழுப்பினேன். முதல் குரல் கேட்டதுமே, பெண்மான் ஒரு சுற்றுச் சுற்றி  திரும்பி, குரல் வந்த திசையைப் பார்த்தது. முன்னங்கால்களால், தரையை உதைக்க ஆரம்பித்தது. இது, கூட்டாளிகளை விழிக்க வைக்கும் எச்சரிக்கை சமிக்ஞை. ஆனால், கூட்டாளிகள் நகரவில்லை. சிறுத்தையை, பெண்மான் பார்த்தால் மட்டுமே, குரல் கொடுத்து எச்சரிக்கும் என, அறிவேன்.
 நான், பழுப்பு நிற, கோட் அணிந்திருந்தேன். பதுங்கி நின்ற பாறைக்கு வெளியே, என் தோள்பட்டையை மேலும், கீழுமாக அசைத்தேன். பெண்மான், இந்த அசைவைக் கண்டு, சட்டென்று சில அடிகளை முன் வைத்து, கத்த ஆரம்பித்தது. அதன் பொருள், ‘ஆபத்து நெருங்கி வருகிறது; ஓடி வந்து, என்னோடு சேர்ந்து விடுங்கள்’ என்பதுதான்.
இப்போது, அவை சேர்ந்து கொள்வதுதான் பாதுகாப்பானது. முதலில், ஓடி வந்தது ஒரு குட்டிமான். அது பனிமூடிய பாதை மீது, துள்ளித்துள்ளி வந்து, பெண்மான் ஓரம் நின்று கொண்டது; குட்டியைத் தொடர்ந்து, மூன்று ஆண் மான்கள் ஓடி வந்தன. அவற்றைத் தொடர்ந்து, வயதான ஒரு பெண் மான் வந்தது. இவற்றை, 30 அடி துாரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெண்மான் கத்துவதை நிறுத்தவில்லை. மற்றவை, காதுகளை, மாற்றி மாற்றி விடைப்பதும், முன்னும், பின்னும் நகர்வதும், சப்தமும், காற்றும் வரும் திசை நோக்கி, சலனமின்றி வெறித்து பார்ப்பதுமாக இருந்தன.
நான் நின்ற இடத்தில் பனி உருகியதால், அசவுகரியமாக இருந்தது. இப்படியே, நின்றால் தடுமன் பிடித்து விடும். பெண்மான் கத்துவதைக் கேட்டு விட்டேன்; ஒரு ஆண்மான் கத்துவதையும் கேட்க விரும்பினேன். ஆகவே, பாறை மறைவில் நின்றபடியே, தோள்பட்டையை உயர்த்தினேன். உடனே, ஆண்மான்கள் கத்தின; பெண்மான்களும், குட்டியும் பல்வேறு தொனிகளில் குரல் எழுப்பின.
நான் அன்று புறப்பட்டதன் நோக்கமே, ஏதேனும் ஒரு மானை வேட்டையாடி, உணவுக்காக கொண்டு வருவது தான். அதற்கு அனுமதி சீட்டு வைத்திருந்தேன். ஆனால், வேட்டையாட அவசரப்படவில்லை. மெதுவாக வெளியே வந்தேன். அவ்வளவுதான்... காஷ்மீர் சிவப்பு கலைமான் கூட்டம் திகைத்து, ஓடி மறைந்தன. புதர்களினுாடே அவை ஓடும் சத்தம்  சடசடத்தது...’’
இது போல், தெளிந்த ஆறாக பாய்கிறது, ஜிம் கார்பெட் எழுத்துக்கள். மேன்மையான வாழ்வு அனுபவத்தை பேசுகிறது; மிகை அனுபவத்தை அல்ல. எதிர்ப்பின் நுட்பங்களை உள்வாங்கும் வழிமுறைகளை உணர்த்துகிறது. இதை வாசிக்க கிடைக்கும் வாய்ப்பு, வாழ்வின் பெரும் அனுபவப் பேறு. மின்நுால் வடிவிலும், ஜிம் கார்பெட் புத்தகங்கள், இணையத்தில் கிடைக்கிறது.