Tuesday 26 June 2018

திட்டமிடாத சில மணித்துளிகள்...

சில நேரங்களில்...
திட்டமிடாமலே நிகழ்வுகள் உரிய திசையில் நகரும். கடந்த, ஜூன் மாதம், 24 ம் தேதி ஞாயிறு.  அப்படித்தான் நகர்ந்தது. நண்பர் நவமணி, சனியன்று மாலை ஒரு தகவல் அனுப்பினார். சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியில் கட்ட உள்ள வீட்டருகே தோட்டம் அமைக்கும் ஆலோசனை கேட்க அழைத்தார்.
ஞாயிறுக்காக திட்டமிட்டிருந்த பணிகள் நிறைவடைந்தால், மாலை வருவதாக பதில் அனுப்பினேன்.
அன்று, பிற்பகலுக்குள், பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. மாலை, 5:00 மணிக்குள், அய்யப்பன்தாங்கல் வந்துவிடுவதாக தகவல் அனுப்பினேன். புறப்படும் முன்,  முத்துக்குமார் என்பவர், செவ்வெண்டை விதைகள் கேட்டு மெசஞ்சரில் வந்தார். நேரில் பெற்றுக் கொள்வதாக கூறினார்.
வளசரவாக்கத்தில் இருந்த அவரை, ‘நீண்ட துாரம் அலைய வேண்டாம். அய்யப்பன்தாங்கலுக்கு வாருங்கள். விதை எடுத்து வருகிறேன்’ என்றேன்.
முறைப்படுத்தின மாதிரி, 5:00 மணிக்கு அய்யப்பன்தாங்கலில் இருந்தேன். நண்பர் நவமணி வரவேற்று, அழைத்து போனார். சிறிது நேரம் கலந்து உரையாடினோம்.
குறைந்த செலவில், சிரமம் தவிர்த்து, காய்கறி தோட்டம் அமைக்கும் வழிவகைகளை சொன்னேன். மனை உள் வளாகத்திலும், தெருவிலும் சில மரங்களை நடவு செய்ய ஆலோசனை சொன்னேன்
தெருவாசிகளுடன் கலந்து, தெரு ஓரம் நடும் பணியை  முடிவு செய்யச் சொன்னேன். குடும்பத்தில், குழந்தைகள், துணைவியாருடன் கலந்து பேசி, ஆலோசனைகளை செயல்படுத்துவது முறையாக இருக்கும் என்பதையும் உணர்த்தினேன்.
கிட்டத்தட்ட ஒரு கிரவுண்ட் மனையில், வீடு கட்டும் பரப்பளவு நீங்கலாக, ஒளிபடும் இடங்களில் தோட்டம் அமைய உரயைாடல் பயன்பட்டது. அதை முன் மாதிரி தோட்டமாக்கி, அந்த பகுதிவாசிகள் பயன்பெற வகை செய்வதாக நண்பர் வாக்களி்த்தார்.
உரையாடலின் ஊடே, முத்துக்குமாரும் வந்துவிட்டார். செவ்வெண்டை, முட்டை கத்தரி விதைகளை  பரிமாறிக் கொண்டோம். ஞாயிறு மாலை, ஆக்கப்பூர்வமாக உரையாடலுடன் நகர்ந்தது பொழுது. இயற்கை இனிது. 

Monday 25 June 2018

யாழ் புராணம் வாசிச்சிருக்கீங்களா...

பண்டைய இசைக் கருவிகளில் சிறப்பு வாய்ந்தது யாழ்.  நரம்புகளால் கட்டப்பட்டது என்பது இதன் பொருள். இசை உருவாக்கும் கருவிகளை, தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் போன்ற இலக்கியங்களில் யாழ் மீட்டுவது, பல்வகை யாழ் தொடர்பான குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகள், யாழ் பாகங்கள் பற்றியும், யாழ் நரம்புகளை சுருதி கூட்டி இசைப்பதற்கான இலக்கணமும் விரிவாக உள்ளது.
இசையில் தேர்ந்த கந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றி, சீவக சிந்தாமணி பாடல்களில் உள்ளது. யாழுடன் சேர்ந்து பாட இலக்கணமும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்கள், பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவி என  குறிக்கின்றனர்.
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர், 1947 ல் யாழ் நூல் என்ற  இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து தொகுத்துள்ளார். 9 ம் நூற்றாண்டில் கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றிக் கூறுகிறது.
வில் யாழ்  – 21 நரம்புகளை உடையது
பேரி யாழ் – 21 நரம்புகளை உடையது
மகர யாழ் – 17 முதல் 19 நரம்புகளை உடையது
சகோட யாழ் –16 நரம்புகளை உடையது
கீசக யாழ் – 100 நரம்புகளை உடையது
செங்கோட்டி யாழ் (7 நரம்புகளை உடையது)
சீறி யாழ் –7 நரம்புகளை உடையது
நாரதயாழ்  –1000 நரம்புகளை உடையது,
ஆதிகால பெரியாழ் – 100 நரம்புகளை உடையது
 தும்புருயாழ், மருத்துவயாழ் (தேவ யாழ்), ஆதியாழ்  ஆகியவை 1000 நரம்புகளை உடையது. கிளி யாழ், வல்லகியாழ், குறிஞ்சி யாழ், பாலை யாழ், மருத யாழ், முல்லை யாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
சாத்தான் குளம் அ.ராகவன் என்பவர் தனது நூலில் 24 வகை யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 ஆண்டுகள் பழைமையான சில யாழ்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அவை: செங்கோட்டு யாழ், எருது யாழ், மயில் யாழ், மயூரி யாழ்

Sunday 24 June 2018

நீங்கதான் செத்துப்போயிட்டீங்களே...

அனேகமாக, 1998 ம் ஆண்டாக இருக்கலாம். சென்னை அண்ணாசாலையில் எங்கள் அலுவலகத்துக்கு எழுத்தாளர் சுந்தரராமசாமி வந்திருந்தார். ஆசிரியருடனான சந்திப்பு முடிந்தபின் அவரை வழி அனுப்ப வெளியே வந்தோம். அங்கே ஒரு ஆட்டோ காத்திருந்தது. ‛இவர்தான் சிவதாணு, நல்ல வாசகர்’ என்று அறிமுகப்படுத்தினா் சுரா. கூடவே, ‛சென்னைக்கு எப்போது வந்தாலும், இவரது ஆட்டோவில்தான் பயணம்’ என்றார். ‛நானும் நாவுரோல்தான்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர். 
நாகர்கோவிலைத்தான் அப்படி குறிப்பிட்டார். பேரிக்காய் வடிவில் முகம். தளர்வுடன் கொஞ்சம் சடவும் தெரிந்தது. வாழ்வதற்கு கடுமையாக போராடுகிறார் என, புரிந்து கொண்டேன் . அதிகமாக பேசிக்கொள்ளவி்ல்லை.
பின்னர், அவ்வப்போது சென்னை இலக்கிய கூட்டங்களில் பார்த்துக்கொள்வோம். மறக்க முடியாத முகம். ஒருமுறை, ‛‛நான் மயிலாடியிலதான் பொண்ணு கட்டியிருக்கேன்; ஒங்களுக்கு அங்கதானே,’’ என்றார். கொஞ்சம் பேச்சு நீண்டது. 
அவரது மைத்துனர், மயிலாடி ரிங்கல்தெளபே உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர். பேச்சு நீண்டபோது, கொஞ்சம் காரசாரம் கூடியது. வழக்கமாக மனைவியின் உடன் பிறந்தோரை வசவும், ‛நாவுரோல்’ மனநிலை கரை புரண்டது. வாழ்வதற்கு நடத்தும் போராட்டத்தில், இந்த வசவு ஒலிபரப்பு அவருக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்திருக்கலாம். அவரது மைத்துனரை, எனக்கு தெரியும் என்பதால், என் வழி அவரது வலி, அவருக்கு போகும் என்பதாகவும் இருக்கலாம். 
கடும் போராட்ட நெருக்கடியை பகிர்வதன் மூலம், என் முகம் அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம்.
 பாலுமகேந்திரா உட்பட சில சினிமாக்காரர்கள் பெயர்களை அவ்வப்போது சொல்லி, அவர்கள் விரைவில் தரப்போகும் வேலை மூலம் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்ளப்போவதாக நம்பிக்கையுடன் கூறுவார்.
ஒருநாள் அதிகாலை, தரைவழியில் தொலை பேசினார். அப்போது, அசோக்நகர், ராகவன் காலனி, முரளி ஆனந்த் அபார்ட்மெண்ட் மூன்றாம் தளத்தில் வசித்துவந்தேன். அவசரமாக ஒரு உதவி கேட்டார். வீட்டு முகவரியை குறிப்பிட்டு அழைத்தேன். காலை, 9:00 மணி வாக்கில் வந்தார். என் மகனுக்கு அப்போது வயது 3, பள்ளி செல்ல புறப்பட்டு வாகன வரவை எதிர்பார்த்து மாடியில் இருந்து அவ்வப்போது எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
மாடிஏறிவந்து கொண்டிருந்த சிவதாணுவை பார்த்தும், ‛நீங்கதான் செத்துபோயிட்டீங்களே’ என்றான்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அவனை அள்ளி அணைத்து, ‛டிவி’ ல பார்த்தியா மக்கா’ என்றார். அவன் தலையசைத்தான். பொதுவாக, வீட்டில் செய்தி தவிர, வேறு எந்த நிகழ்ச்சியையும் யாரும் பார்ப்பதில்லை. விசாரித்ததில், பக்கத்து வீட்டில் விளையாடும் போது, ‛டிவி’ தொடரை பார்த்த நினைவில் அப்படி வெளிப்படித்தியுள்ளான். 
அதன்பின் எப்போது பேசினாலும், அந்த அனுபவத்தைபகிர்ந்து கொண்டு அவனை விசாரிப்பார். அதன் பின் பல முறை சந்தித்துள்ளோம். ஒருமுறை, தி.நகர் கண்ணதாசன் சிலை அருகே சிக்னலுக்காக காத்திருந்தேன். ரோகினி லாட்ஜ் பக்கம், அவர் போய்க்கொண்டிருந்தார். அழைத்தேன். குரல் கேட்டு வந்தார். பைக்கை ஓரம் கட்டி பேசினோம். கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். ‛‛ஒங்களைப் போல சிலர்தான் கூப்பிட்டு பேசிறீங்க... பலர் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிடுறாங்க... பார்த்து கூப்பிட்டாலும் அப்புறம் பார்க்கலாம் என்று பறந்துடுறாங்க,’’ என்றார். இந்தமுறை, மிகவும் அமைதியாக காணப்பட்டார். திருப்தியாக இருப்பதாக கூறினார். மகன்கள் படித்து பொருள் ஈட்டுவதாக கூறினார். ‛‛இனி நல்லா வாசிக்கலாம் பாருங்க,’’ என்றார்.
கடைசியாக, பார்த்து, ஆறு மாதங்கள் இருக்கலாம். பத்திரிகையாளர் நண்பர் ரமேஷ்வைத்யாவுக்கு நினைவு இருக்கலாம். அவரைக் காண, எங்கள் ஓயிட்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தார். சந்திப்பின் போது என்னை விசாரித்திருக்கிறார். விவரம் எனக்கு தெரியவர, அவரை சென்று சந்தித்தேன். பணி இடைவெளியில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.அகநாழிகை பொன் வாசுதேவனும் உடன் இருந்தார். அதுவே அவரை சந்தித்த கடைசி தருணம். 
எல்லா இன்னல்களுக்கு இடையேயும் வாழ்வை வாசிப்புக்கு அர்ப்பணித்த அந்த வினோத முகத்தை மறக்க முடியவில்லை. அவர் மறைந்து விட்ட செய்தி நம்பக் கூடியதாக இல்லை. என் மகன் சொன்னது போல…

Friday 15 June 2018

நீந்தும் நீர்காகங்கள்

சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், சசீந்திரம் போக வேண்டிய வேலை இருந்தது. சிறு துாறலுக்கு  ஒதுங்கி நின்ற போது  தாணுமாலையன் கோவில் தெப்பக் குளத்தில்,  நீர் காகங்களைக் கண்டேன். அவசர பணியின் போதும்,  நிதானமாக நோக்க மனம் லயித்தது. விலகி செல்ல மனம் வரவில்லை. தோதாக, துாறல் சிறு மழையானது வேறு...
கவனித்த போது, காதல் வயப்பட்டு, நீரில் ஆடிய நீர் காகங்கள் தனி அழகாய் தெரிந்து ஈர்த்தன.  அதை வர்ணிக்க சொற்கள் இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில், முதலியார்குப்பம் பகுதியில் படகு சவாரி சென்ற போது, ஒரு மரத்தில், நீர் காகங்கள் காய்ந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று நோக்க முடியவில்லை.
சுசீந்திரம், பழையாற்றில் மீனை தின்றுவிட்டு, உட்பாறைகளில் இறகை காயவைத்துக் கொண்டிருக்கும் நீர்காகங்களை, பஸ் பயணங்களில்   கண்டிருக்கிறேன். அவை போடும் எச்சம், வெள்ளை நிறத்தில் பாறைகளில் படிந்திருக்கும். கறுப்பு நிறத்தில் அதன் மேல் அமர்ந்திருக்கும்.
இப்போதுதான், இயல்பை உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நீர் நிலைகளில் தலையை மட்டும் வெளியே நீட்டி நீந்திக் கொண்டிருக்கும். அவ்வப்போது, நீருக்குள் அமிழ்ந்து எதிர்படும் மீனைப் பிடிக்கும்.
 உடலை  நீருள் வைத்து நீந்தும் போது, பாம்பு  நீந்துவது போல் தோன்றும்.
நீரில் மீனைப் பிடித்த உடன், கழுத்தை வெளியே நீட்டி, மீன் தலை, முதலில்  வாயக்குள் செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து விழுங்கும். இந்த காட்சி அபூர்வமானது.
இதன் சிறகுகளில் எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டும். வயிறு முட்ட மீன் தின்ற பின் பறக்க வேண்டுமே? சிறகுகள் நனைந்திருந்தால் பறக்க முடியுமா...  சிரமத்துடன் மெல்லப் பறந்து,  அருகில் கல்லின் மீதோ, கிளையிலோ அமர்ந்து,  சிறகுகளை விரித்து உலர வைத்துக் கொள்ளும். உலர்ந்த பின் பறந்து செல்லும். அவை, சிறகை விரித்து காற்றில் அல்லாடும் அழகே தனி...

Thursday 14 June 2018

காயம் வலியை ஏற்படுத்துவதுதானே தவிர...

கால்பந்து ஓர் அபூர்வ விளயைாட்டு. உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டது. உடலும் மனமும் ஒரே சீராக செயல்பட்டால், லட்சியத்தை அடையலாம் என்பதை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பயற்சி.
இந்த விளையாட்டு போட்டிகளில் பிரமாண்டங்களை நிகழ்த்திய பல வீரர்கள் உலக அளவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். வீரம், திறன், நெகிழ்வு, நிதானம் குழு செயல்பாடு ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுபவமாக உணர்த்தி ரசிகர்களை பிரமிக்க வைப்பது இந்த விளையாட்டின் சிறப்பு அம்சம். உற்சாக ரசிப்பு அனுபவத்தையே, பயன் சார்ந்த லட்சியம் நோக்கி இழுத்து செல்லும் வகையிலான செயல்பாட்டை கொண்டது.
கால்பந்தாட்டத்தில் உலக கோப்பைக்கான,  போட்டிகள் சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடந்தன.
 இந்த போட்டித்தொடரில் பிரேசில் நாட்டின் இளம் வீரர்  நெய்மார் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மைதானத்தில் பட்டாம்பூச்சி போல் பறந்து பந்தை லாவகமாக நோக்கி, லட்சிய வளையத்துக்குள் அடிக்கும் திறனை வியக்காதவர்கள் இல்லை. அவரது மைதான அனுபவம் சொல்லும் பாடம் மிக எளிமையானது.
`பயம் வெற்றிக்கனியை பறிக்க உதவாது; அது உங்களை வீழ்த்திவிடும்' எனபதுதான் அந்த பாடம்.
கடந்த முறை பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டித்தொடரில் கால் இறுதிக்கு முன்னேறுவதற்கு முன், ஒரு பரபரப்பான காலைவேளையில், டி.சி.எம். செய்தி நிறுவன நிருபர், நெய்மாருடன் நடத்திய பேட்டியின் தமிழ் வடிவம் இது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தவர் என் மகன் ராஜாநிகில்.
போட்டியின் தமிழ் வடிவம் இதோ...

நிருபர்: பந்தை கோல் வளையத்துக்குள் செலுத்துவதற்கு எடுக்கும் முயற்சியின் போது, ஏற்படும் சறுக்கல்கள், உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதில்லையா?

நெய்மார்: இல்லை. நான் அமைதியாகத்தான் பந்தை எதிர்கொண்டு, நகர்த்துகிறேன். பதட்டம் அடைவதில்லை. வெற்றிக்கனியை பறிக்க, பயம் ஒருபோதும் உதவாது; அது நம்மை வீழ்த்தி புதைத்துவிடும். விளையாடும் போது,  வலிமையான அணிகளை எதிர்கொள்கிறோம் என்பது மனதில் இருக்கும்; ஆனால் பயம் துளியும் இருக்காது. தொடர்ந்து வெல்ல வேணடும் என்ற உணர்வுதான் மேலிட்டு இருக்கும்.
நிருபர்:  ஆட்டத்தின்போது, கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமே?

நெய்மார்: நீங்கள் உங்கள் கனவில் உறுதியாக இருந்து, அதிலேயே வாழும் போது நெருக்கடி என்பது தெரியாது; லட்சியத்தை அடையும் வழி தான் தெரியும். நான் சிறு வயது முதலே, என்ன ஆக வேண்டும் என, கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தேன். இன்று என் கனவு நனவாக கைகூடிவருகிறது. நான் என்ன நினைத்தேனோ அதுவாக மாறிவருகிறேன். அதை நோக்கி நகர்ந்து வருகிறேன்.

நிருபர்: வீரர்கள் தங்களுக்குள் முரண்பாடுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லதல்லவா?

நெய்மார்: உண்மைதான். நாம் இருக்கும் இடம்தான் நமக்கு சொர்க்கம். நாம் எந்த அணி சீருடையை அணிகிறோமோ அதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எவ்வளவோ திறமையான வீரர்கள் உள்ளனர். அனைவருக்கும் உலக கோப்பை தொடரில் ஆடும் வா்ய்ப்பு கிடைப்பதில்லை. ஏத்தனையோ பேர் இந்த வாய்ப்புக்காக ஏங்கிக் கிடக்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும். அ்ந்த வகையில், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.

நிருபர்: தங்க காலணியை வெல்லும் ஆசை  உங்களிடம் இல்லையா?

நெய்மார்: அப்படியெல்லாம் ஆசை இல்லை. நான் சிறந்த வீரன் என்றோ, அதிக கோல் அடித்தவன் என்ற பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்ப்பது என் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான். அதுதான் என் கனவாக உள்ளது. நான் கோல் அடிப்பது மட்டும் அல்ல; என் அணியில் உள்ள வீரர்கள் கோல் அடிக்க உதவுவதும்தான் விளையாட்டு. இதை ஒவ்வொரு வீரனும் மனதில் வைத்தால், வெற்றிக்கனியை பறிப்பது சுலபம்.
நிருபர்: அனைத்து நாட்டிலும் உங்கள் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனரே?
நெய்மார்: நாங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமான அணியாகத்தான் இருக்கிறோம். எங்கள் சக்தியை முழு அளவில் பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் போட்டிகளில் எதிர் அணியை எளிதாக எதிர் கொள்ள முடிவதில்லை.

நிருபர்: சிலிக்கு எதிரான உங்கள் ஆட்டத்தைப்பற்றி கூறுங்கள்?
நெய்மார்:நாங்கள் கடுமையாக போராடினோம் என்பதுதான் உண்மை. ஆட்டம் முடிந்த பின் என் கண்களில் வடிந்த நீர், மகிழ்ச்சி என்ற கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அந்த அணியை வென்றால்தான், தொடரில் நாங்கள் முன்னேற முடியும் என்ற நிலையில் வெறியுடன் ஆடினோம்.


நிருபர்: ஆட்டத்தில் காயம் ஏற்படும் போது, தொடர்ந்து விளையாட முடியுமா என்ற  நம்பிக்கை சிதைவு ஏற்பட்டது உண்டா?

நெய்மார்: ஒரு ஆட்டத்தில் கால் தடுமாறி விழுந்து விட்டேன். சிறிய வலியாகத்தான் அதை உணர்ந்தேன். அதை கடந்து வர சிறிய ஓய்வு மட்டுமே தேவைப்பட்டது. காயம் என்பது வலியை ஏற்படுத்துவதுதானே தவிர, நம்பிக்கை சிதைவை ஏற்படுத்துவது அல்ல. அப்படித்தான் அதை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை  எதிர்கொள்ள வேண்டும்.

நிருபர்: உலக கோப்பையில் அனைத்து ஆட்டங்களையும் சொந்த மண்ணில் ஆடுவதில் ஏதாவது வித்தியாசம் கண்டீர்களா?
நெய்மார்: இது ஒருவகையில் எங்களுக்கு நன்மை என்றுதான் நினைக்கிறேன். உலகக் கோப்பையை நடத்தும் நாடாக எங்களுக்கு பெரும் நெருக்கடி உள்ளது. ஆனால், ரசிகர்களின் உற்சாகம் எங்களை வழிநடத்துகிறது.
நிருபர்: இது உங்கள் முதல் உலகக் கோப்பை ஆட்டம் அல்லவா?
நெய்மார்: போட்டி துவங்கும் முன்பே, என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பிரேசில் வீரர்களுக்கான சீருடையை அணியும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
நிருபர்: லுாயிஸ் பெலிப் ஸ்கோரி போன்ற சிறந்த பயிற்சியாளர்களை வைத்துக்கொள்வதை முக்கியமாக கருதுகிறீர்களா?
நெய்மார்: அவரை பயிற்சியாளராக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாக கருதுகிறேன். நாங்கள் அவரை மிகவும் மதித்து தினமும் தொழுகிறோம். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எப்போதும் மரியாதையை திருப்பித்தரும் பண்பு அவருடையது. அதை நாங்கள் காப்பாற்றுவோம்.

இந்த பேட்டி, கால்பந்தாட்ட வீரராக நெய்மாரின் உற்சாகத்தை மட்டும் அல்ல, கூட்டு செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

தமிழில்: ராஜாநிகில்

Saturday 9 June 2018

விழிநீர் சோர நின்றேன்


‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்,’ என்ற 72 பக்க தன் வரலாற்று புத்தகத்தை, 65 நிமிடங்களில் வாசித்து முடிந்தேன். கடைசி பக்கங்கள், பெரியார் துணைவி மணி அம்மையாரின் மறைவு சித்திரத்தை காட்டுகிறது. மணி அம்மையார் உடல் முன், ‘விழிநீர் சோர நின்றேன்,’ என்று பதிவு செய்துள்ளார் புத்தக ஆசிரியர் மா.கோபாலன்.
பெரியார் குடும்பத்துடன் இருந்த  பிணைப்பை வெளிப்படுத்த, இதை விட உருக்கமான மொழி, வேறு இல்லை என்றே தோன்றியது.
 தன், 14 வயதில் பெரியாரை சந்தித்த, மா.கோபாலன், அவருடன் பிணைந்த வாழ்க்கை அனுபவத்தை, பதிவு செய்துள்ளார். பெரியாரை மட்டுமே சுற்றி சுழலவில்லை பதிவு. திராவிடர் கழக வளர்ச்சி, சென்னை நகர மாற்றம், அரசு ஊழியர் செயல்பாடு போன்றவற்றை ஊறி வடிந்து பதிவாக்கியுள்ளார்.
குஞ்சிதம் அம்மையார் பற்றிய பதிவு நெகிழவைக்கிறது. எளிமை, கொள்கை பிடிப்பு, சகிப்பு, உறுதி போன்றவை, எப்படி ஒரு வாழ்க்கையை கட்டமைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கை, சமூகத்துக்கு உணர்த்திய பாடம், தமிழ் சமூகத்தின் வாழ்க்கை நெறியாக மாறவில்லை என்றே தோன்றுகிறது. இந்த பாடத்தை கற்றிருந்தால், தமிழர்களின் வாழ்க்கை, விரிவையும் ஆழத்தையும் தேடி, பயணப்பட்டிருக்க வேண்டும்.
நுõலாசிரியர், அரசு அதிகாரியாக பணியாற்றியவர். பெரியாரின் அன்றாட செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தவர். பிணைப்பு கொண்டிருந்தாலேயே, கோபாலன், தன் சுய கருத்தை அழித்துக் கொண்டவராக தெரியவில்லை. நடந்தவற்றை இயல்பாக்கி, தன் எண்ணப்போக்கையும் பதிவு செய்துள்ளார்.

புத்தகத்தில் இருந்து...
புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போதும் கூட, குஞ்சிதம் அம்மையார், ‘இங்கர்சால் போன்ற மேலைநாட்டு பகுத்தறவு வாதிகள்,  கடவுள் நம்பிக்கையோடு இறந்ததாக கூறினார்கள். என்னைப்பற்றியும் அவ்வாறே கூறிவிடுவார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவள். கடவுள் நம்பிக்கை இல்லாதவளாகவே இறக்கிறேன். இதை பதிவு செய்து கொள்ளுங்கள்,” என்றார்.
அப்போது, அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க தலைவராக இருந்தவர் எஸ். இராமநாதன். ராசாசி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். குஞ்சிதம் அம்மையாரின் இறுதி வாக்குமூலத்தை அவர்தான் பதிவு செய்தார். அதற்கு இரண்டு பேரின் சாட்சி கையெழுத்தும் வாங்கப்பட்டது.
குஞ்சிதம் அம்மையார், நெற்றியில் பொட்டு கூட வைத்துக் கொள்ள மாட்டார். பொட்டு வைத்துக்கொள்வது ஒரு மதத்தார் பழக்கம்; அந்த மதத்தின் சின்னம்.
திருமணங்களில் தாலியை ஒரு தட்டில் தேங்காயுடன் வைத்து, வந்திருக்கும் பெரியவர்களிடம் வாழ்த்தித் தருமாறு கேட்டுக் கொள்வார்கள். பெண்கள் உட்கார்ந்திருக்கும் பகுதிக்கு வரும் போது, குஞ்சிதம் அம்மையாரிடம் தாலியைக் காட்ட மாட்டார்கள். அவர் நெற்றியில் பொட்டு இல்லாததால், அவரை கைம்பெண் என்றும் விதவை என்றும் கருதி, அடுத்து உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் சென்று வாழ்த்து பெறுவார்கள். அதை குஞ்சிதம் அம்மையார் அவமானமாக கருதியதே இல்லை.
‘திருமண வீடுகளில் இவ்வாறுதான் நடக்கும். நான், அதை பொருட்படுத்துவதே இல்லை’ என, சிரித்துக்கெண்டே அவர் சொல்வார்.                                                      பக்கம்: 36-37
என் வாசிப்பும்... அனுபவமும்...
வாசிக்கும் அனுபவத்தை, 80 களில் இருந்து பெற்று வருகிறேன். வாசிக்கும் போது, தகவலுடன் , அதை படைத்தவர் பற்றிய மதிப்பீடும், எண்ண ஓரத்தில் அனுபவமாக பதிவாகிறது. இந்த புத்தக பதிவு, நெகிழ்வை ஏற்படுத்துகிறது. புத்தக ஆசிரியர் மா. கோபாலன், கடந்த ஆண்டு மறைந்தார். அவரை பற்றி, சில உரையாடல்களின் ஊடே அறிந்திருக்கிறேன். அவரது கையெழுத்து பிரதியை பார்க்கவும் ஒரு நேரம் வாய்த்தது. இந்த பதிவு பிரதியை அல்ல. அப்போது அவர் உயிருடன் இருந்தார். போதிய கவனம் இன்மையால், அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இந்த புத்தகத்தை வாசித்தபின், அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்ட குற்ற உணர்வு ஏற்படுகிறது.
படைப்புகளை வாசித்துவிட்டு, படைத்தவர்கள் மீது ஏற்படும் மதிப்பீடு அடிப்படையில், அவர்களை சந்திக்கும் விரும்பம் ஏற்படுகிறது. சந்திக்கும் போது, மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாவதும் உண்டு.
 வாசிப்பின் அடிப்படையில் சந்திக்க விரும்பியவர்கள் வரிசை கே. டேனியல்,  நந்தி, அதின் பந்தோபாத்யாய, வைக்கம் முகமது பஷீர் என்று நீண்டு போகிறது. வாசித்தபோது ஏற்பட்ட அதே நெகிழ்ச்சி, சந்தித்த போதும் மாறாமல் இருந்ததில் எம்.எ. நுக்மான், சுந்தரராமசாமி, ராமாமிர்தம், ஏசுதாசன், ஹெப்சிபா, பவா செல்லத்துரை, கோணங்கி, நாராயணன், மாலதி, ஞானி என, வரிசை நீழ்கிறது. யாழ்ப்பாணத்தில் நந்தி வீட்டை பார்த்த போது, நெகிழ்வும் சோகமும் கலந்து கண்ணீரை கரைத்தேன்.

கடவுளுக்கு வரம் கொடுத்த தாத்தா

பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ பேரின் வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான்.
வாழ்க்கை, இன்பத்தை நோக்கிய பயணம். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் மலர்ப் பாதையில் பயணிப்பது வெறும் கனவு. பாலை மணலும், மேடும் பள்ளமும் முட்களும் நிறைந்தது. அதில் தடம் ஏற்படுத்திக் கொள்வது சாதுாரியமானது.
இது போன்ற பாதையை எதிர்கொள்ள திராணி உள்ளவர்கள், பயணிப்பர். வெற்றி தோல்வி என்பதெல்லாம், சூழல் நிர்ணயிக்கும் அளவுகோல் சார்ந்தது
இதை உணர்த்துகிறார், செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,78.
வயது அவரது பயணத்தின் தடைக்கல் அல்ல; அவர் களைத்து கிடக்கவில்லை. உழைப்பை  மதிக்கிறார். நம்பிக்கை கொள்கிறார்.
பயணத்தில் பெரும் சோகங்களை கண்டவர்,  நிகழ்வுகளை எதிர் நோக்கியவர். பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருடன் ஒரு மதிய வேளை உரையாடல்
‘‘சின்ன வயசுல, கழனில நெல்லு, கேழ்வரகுன்னு, பயிர் வைப்போம். மனைவி லட்சுமி, ஆம்பள மாதிரி தலப்பா கட்டிக்குனு, தண்ணீர் பாய்ச்ச ஏத்தத்து மேலே ஏறி மிதிப்பா. அப்பல்லாம், கழனியிலே நல்ல வௌச்சல் கிடைக்கும். வீட்டுல தானியங்களப் போட்டு வைக்கிறதுக்கே இடம் இருக்காது. கழனி வேலையையும் செஞ்சிட்டு, கல் தச்சு வேலைக்கும் போயிடுவேன்,’’ என்றார், சரளமாக...
முதல் சோகத்தை கம்மிய குரலில், ‘‘செங்கல்பட்டு திருமலை தியேட்டர் பக்கத்துல ஒரு வீட்டுல, கல் தச்சு வேலை செஞ்சிக்கிட்டு இருந்தப்போ, என் மனைவி சாப்பாடு எடுத்து வந்திருந்தா. அப்போ...ஊர்ல இருந்து வந்த ஒருத்தர், ‘ஏம்மா இரண்டு பேரும் இங்கே வந்துட்டீங்க... அங்கே உங்க பயிருல மாடு மேயுது’ன்னு சொன்னாரு.
அத கேட்ட என் மனைவி, ஆவேசமா கழனிவெளிக்கு ஓடிப்போனா. அன்னிக்கு, இடி மின்னல் தாக்கி கழனிவெளியிலேயே செத்துட்டா. அந்த கவல, மனசுல முள்ளா குத்திட்டு இருக்கு,’’ என்றார்.
ஆளாளுக்கு கொள்கைகள் மாறலாம். சிலருக்கு கொள்கையே இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு சம்பவம், ஒரு கொள்கையை பின்பற்றும்படி வைத்து விடுகிறது.
‘‘ஐம்பது வருஷத்துக்கு முன்னால... ஒருநாள்...கழனியிலே வேலை செய்துட்டு வந்து, மதியம் வீட்டிலிருந்த கொஞ்சம் கூழ குடிச்சிட்டேன். என் அண்ணன், ‘ஏண்டா எல்லாத்தையும் குடிச்சிட்டே?’ன்னு, கொம்பால, கால், முதுகுன்னு கண்டபடி அடிச்சிட்டார். அன்னேலேருந்து இன்னைக்கு வரை, யாராவது சாப்பாடு கொடுத்து சாப்பிடச் சொன்னா மட்டுந்தான் சாப்பிடுவேன்.
‘‘எவ்வளவு சாப்பாடு முன்னாடி இருந்தாலும், எவ்வளவு பசியா இருந்தாலும், தொடமாட்டேன். இது என் மனைவிக்கு தெரியும். அவ இருந்த வரைக்கும் சாப்பாடு போடுவா. இப்ப என் மருமகள். சாப்பாடு போட்டு வச்சிருக்கேன்னு சொன்னா தான் சாப்பிடுவேன்,’’ என, நெகிழ்ந்தார்.
புத்திரசோகம், தசரதனுக்கு மட்டுமல்ல, இந்த பாலகிருஷ்ணனுக்கும் தாங்க முடியாத ஒன்று தான்.  அவர் மேலும் கூறியதாவது:
என்னை படிக்கவைக்கவில்லை. அதை குறையாகவே உணர்கிறேன். என் பசங்களுக்கு இந்த குறை வர கூடாதுன்னு, கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்.
எனக்கு, இரண்டு ஆம்பள பசங்க. பெரியவன் ஆந்திராவில் கல்லுடைக்கிற வேலை செய்யறான். சின்னவன் கம்பெனி வேலைக்கு ஆளுங்கள ஏத்தி போற வண்டியில, டிரைவரா போனான்.
இரண்டு மாசத்துக்கு முன்ன, ரவுடி பசங்க வண்டிய மடக்கி, அவன அடிச்சிட்டாங்க. இத அவங்க ஓனர்கிட்ட சொல்லிருக்கான். இதை வீட்ல சொன்னா, பெரிய கலவரம் வருமேன்னு, கவலைப்பட்டிருக்கான்.
நாலு பேரு நம்மள அடிச்சிட்டாங்களேன்னு நெனச்சி, வேதனப்பட்டு விஷம் குடிச்சி, செங்கல்பட்டுல விழுந்து கிடந்திருக்கான்.
கடைசி நேரத்தில, அவன் அண்ணங்கிட்ட, போன்ல, ‘நாலுபேரு அடிச்சிட்டாங்க. நான் ஒங்கிட்ட சொன்னா... நீங்க நாலு பேரு சோ்ந்து அவனுங்கள அடிப்பீங்க. அதனால சண்டை தான் வரும். என்னால எதுக்கு சண்டை வரணும்? உனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. நீ அவங்கள பாத்துக்க... அப்படினு சொல்லிக்கிட்டே விழுந்தவந்தான். அப்பறம் ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பிணமா எடுத்து வந்தாங்க. அது என் மனசுல ஆறாத வடுவா மாறிடுச்சு...
நான் கடவுளப் பார்த்து ஒருமுறை கேட்டேன். நான் நோ்மையா இருக்கேன், நோ்மையா உழைக்கிறேன். ஆனா, என் குடும்பத்தை இப்படி சோதிக்கிறியே அப்படின்னு. மகாபலிபுரம் கடல்ல இறங்கி, நடுக்கடல்ல நின்னு, ஒன்பது பூக்களைப் போட்டு, வணங்கி கேட்டேன். எனக்கு ஏன் இந்த சோதனைன்னு.
‘அலைகளுக்கு ஊடே ஆழ் கடலுக்கு வரக்கூடிய தெம்பை குடுத்திருக்கேன். சோகத்தை தாங்கும் மனசை கொடுத்திருக்கேன். இத விட உனக்கு என்ன வேணும்’ன்னு கடவுள் கேட்டார். நியாயம்தானே. பேசாம கரையேறி வந்துட்டேன். அதுக்கு அப்புறம் எது நடந்தாலும், சகிச்சுக்கிட பழகிட்டேன்.
என் மகனிடம், கழனில வேலை செய்து, காய்கறி பயிர் வெச்சா, நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்றேன். அவன் கேட்காம, ஆந்திராவில் கூலிக்கு கல் உடைக்கிறான்.
ஒரு சின்ன ரூம்ல தங்கி கஷ்டப்பட்டு மாசாமாசம் பணம் அனுப்புறான். அதை வச்சு என் மருமக, பேரன்களை படிக்க வைக்கிறா... இப்படித்தான் வாழ்க்கை போவுது.
அனுபவத்தை பகிர்ந்து விட்டு, சுறுசுறுப்பாக விறகு வெட்ட போய்விட்டார் பாலகிருஷ்ணன்.

வைக்கிறதும்... அடிக்கிறதும்...

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, ரிங்கல் தவுபே உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் பூமணி. அவரது, நேரடி வகுப்பில் இருக்க எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. அதே பள்ளியில், ஒரு பிரிவு வகுப்பில் நான் படித்தேன். அவர் வேறு வகுப்புக்கு தமிழ் பாடம் நடத்தினார். பள்ளி நீண்ட வளாகத்தை கொண்டது. அதை, அரங்குகளாக பிரம்பு பாய்த்தட்டிகளை நிறுத்தி,  வகுப்பறைகள் உருவாக்கப்பட்டிருந்தன. எந்த வகுப்பறையில்,  மிகைக் குரல் வந்தாலும், எல்லா வகுப்பும் கேட்கும். மிகை தொனியில் ஆசிரியர் நடத்தும் பாடம், அலையாய், பிற வகுப்பறைகளை நிறைக்கும். அந்த பாடம் இனிமையாக இருந்தால், காதுகள் அந்த வகுப்பறைக்குள் லயித்துவிடும். இருக்கும் வகுப்பறை பயனற்றதாகிவிடும்.
தமிழ் ஆசிரியர் புலவர் பூமணி, ஒலி பெருக்கி போல், குரலை உயர்த்தி பாடம் நடத்துவார். மற்ற வகுப்பறை மாணவ, மாணவியர் காதுகள் இவர் குரலுக்கு அடிபணியும். அந்த பாடம் பக்கம் போய்விடும். 
செய்யுள்களை, அதற்குரிய ஓசை நயத்துடன் பாடுவார். அவர்  ஓங்கி உயர்த்திய குரல் தான், மனப்பாட செய்யுள்களை  மனதில் பதிய வைத்தன. இப்போதும் நினைவில் நிறுத்தி வைத்துள்ளது. இரவலாக வாங்கிய பாடங்கள் இளமையாக மனதில் தங்கி நிற்கிறது.
கம்ப ராமாயணத்தில், கும்பகர்ணனை துயில் எழ வைப்பதை, வர்ணனையுடன், சுவையாக லயத்துடன், பாடி மதிய உணவு உண்ட மயக்கத்தில் சொக்கி போகும் கண்களை,  திறந்து அறிவூற்றுவார்.  பாடிக் கிறக்குவார். உலக்கையால், உரலில் நெல் குத்துவது போல், ஏற்ற இறக்கங்களுடன் குரல், நெஞ்சில் குத்தும். மனதில் பதியவைக்கும்.
குகன் படகு விடும் பாடலும் அப்படித்தான்.  விமானங்களில் பயணிக்கும் போது, மேகங்களுக்கு ஊடாக  அவரது குரல் வழி பாடல் நீந்தி வந்து உற்சாகப்படுத்தும்.
மதிய உறக்கத்தில் மாணவர்கள் கிறங்குவதைக் கண்டால், பூமணி வாத்தியாரின் உத்தி மாறிவிடும். ஒரு சிறுகதையை உற்சாக குரலில் சொல்வார். கதையை மிகவும் நுாதனமாக மாற்றி மாற்றி நிகழ்த்துவார். இது அவரது வகுப்பறையில் அவ்வப்போது ஒலிக்கும். அற்புதமான கதை சொல்லி அவர்.
ஆமையும் அணிலும் என்பது ஒரு  கதையின் தலைப்பு...
ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டு எழுத்தாளர் சினுவா ஆச்சபேய், (Chinua Achebe) எழுதிய, Things fall apart  என்ற நவீன புதினத்தின் அடிநாதமாக, இந்த கதை இருந்ததை, அந்த  நாவலை வாசித்த போது, வியந்து போனேன். அனேகமாக அவர் சொல்லிய கதைகள், திருவிதாங்கூர் நாட்டில் அதாவது தற்போதைய  கன்னியாகுமரி மாவட்டத்தில், பல தலைமுறைகள் வாய்மொழியாக கடந்து வந்தவை.
ஆசிரியர் பூமணி,  கடவுள் மறுப்பு கொள்கையாளர் என பின்னர் அறிந்தேன். அவர் பின்பற்றிய கொள்கையை, ‘தாழம்பூ’ என, கிராமத்தவர் விமர்சித்தனர்.
வாய் நிறைந்த வெற்றிலையை குதப்பியபடி, காலையில்  வயல்வேலைகளை செய்து கொண்டிருப்பார். எங்களுக்கு பக்கத்து வயல் அவருக்கு.  சில நாட்கள் தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருப்பேன். இளம் பயிர் மீது வீசும் சில் காற்றில், அவர் குரல்  அலைபோல் தவழ்வதாக நினைப்பேன்.
சுண்ணாம்பு தொட்ட ஆள்காட்டி விரல் ஆகாயம் நோக்க... இடது கையால், வேட்டியின் ஒற்றை முனையை துாக்கிப் பிடித்தபடி, கடைசி விநாடியில் அவசரமாக பள்ளி வளாகத்துக்குள் அவர் நுழைவதை பார்த்திருக்கிறேன். மாணவர்களை உற்சாகப்படுத்த, நகைச்சுவைகளை பகிர்வார். அதில் ஒன்று அவர் பெயர் சார்ந்தது... ‘கொண்டையில் வைக்கிறதும்... கோயிலில் அடிக்கிறதும்... என்னலே’ என்று அவர் கேட்பார். அது அவர் பெயர் .. பூ...மணி...யை குறிக்கும்.
ஒருநாள் கூட அவரது வகுப்பறையில் அமர்ந்ததில்லை... பல நாட்கள் அவரது பாடங்களைக் கேட்டுள்ளேன். வாழ்க்கை முழுவதும் நிரம்பும் மனிதர் அவர்.

மோர்க்களியும் வெள்ளைபூரியும்

தமிழகத்தில், சமணத்தை பின்பற்றுவோர், 40,000 க்கும் ஆதிகம். இதில், 70 சதவீதம் பேர், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வந்தவாசி பகுதி கிராமங்களில், இவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்; கும்பகோணம், மதுரை, காஞ்சிபுரம் பகுதி கிராமங்களிலும், தமிழ் சமணர்களின் வசிப்பிடம் உண்டு. 
விவசாயம் சார்ந்து வாழ்வதால், பொங்கல் முக்கிய பண்டிகை.  கொ்ணடாட்டத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினாலும்,  பிரத்யேக வழக்கங்கங்களை, சமணக்குடும்பங்களில், பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.
பொங்கலுக்கு முந்தைய நாள், போகிபண்டிகையில். வீட்டை சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை, மற்றவர்களைப் போல் கடைபிடிக்கின்றனர். ஆனால்... சின்ன மாற்றம்.
பொங்கலுக்கு முந்தைய இரவு, கிராமத் தெருக்களில், வலம்வரும் சமண பள்ளி பூசாரி பண்டிகையை அறிவித்து  நடைமுறையை துவக்குகிறார்.  சங்கு முழங்குவதுடன்,  சேமங்கலம் என்ற கருவியை இசைத்து, இயற்கையை புகழ்ந்து பாடிக்கொண்டே, தெரு வலம் வந்து பண்டிகையைத் துவக்குகிறார். இது, குதுாகலம் ஊட்டுகிறது.  இவரது பாடல்களை ரசிப்பதற்கென்றே, வீடுகளில் விழித்து காத்திருந்தவர்கள் உண்டு. இப்போது, நிலைமை மாறிவிட்டது. 
இப்போது இந்த நடைமுறை ஒரு சடங்கு போல் நிகழ்த்தப்படுகிறது. சடங்கு முறையிலாவது, பாரம்பரியம் வாழுகிறதே என ஆறுதல் படுகின்றனர் பெரியவர்கள்.
புத்தாடை உடுத்தி, உடன் ஊழைத்தோரை மகிழ்விப்பது போன்றவை நடைமுறையில் உள்ளன. ஆனால், விவசாயத்தொழில், இயந்திரமயமாகி வருவதால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. நவீன வேளாண்மையில், விலங்கு சக்திக்கு இடம் இல்லாதாதல், மாட்டுப்பொங்கல் கூட மாறி வருகிறது. 
 பொங்கல் அன்று, வீட்டு வாசலில், பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் வட மாவட்ட பகுதிகளில், கிராம கோவில்களில் சேர்ந்து பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், சமணக் குடும்பத்தினர், வீட்டு வாசலை அலங்கரித்து, அங்கேதான் பொங்கல் வைக்கின்றனர்.
 வெண் பொங்கலுக்கு, தொட்டுக் கொள்ள தோதாக, பச்சை மிளகாய் பச்சடி படைப்பது வழக்கமாக உள்ளது. இனிப்பு பொங்கல், கரும்புச்சாறு கலந்து தயாரிக்கின்றனர். தயாரித்த பொங்கலை வீட்டுவாசலில், சூரியனுக்கு படைத்து வழிபடுகின்றனர். 
 பண்டிகைக்கான பிரத்யேக உணவு வகைகள், தயாரிக்கின்றனர் அவற்றில் முக்கியமானது வெள்ளைப்பூரி.  பச்சரிசியையும், துவரம்பருப்பையும் கலந்து, இந்த உணவைத் தயாரிக்கி்ன்றனர். இத்தடன், வேர்க்கடலை சட்டினியை தொட்டுக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். 
 கால வெள்ளத்தில், இந்து உணவுகள் மறைந்து வருவதாக தமிழ்நாடு சமணர் பேரவை தலைவர் அறவாழி. கூறினார். அவர் கூறுகையில்,`` கால ஓட்டத்தில் மாற்றம் தவிர்க்க முடியாததாகவிட்டது. வெள்ளைப்பூரி போன்ற பிரத்யேக உணவுகளை, இப்போது பலர் தொடர்வதில்லை. இந்த உணவு  கிராமங்களில் வசிக்கும் மூத்தோர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது,'' என்றார்.
பொங்கலை யொட்டி, தமிழ் சமணர்கள் தயாரிக்கும் மற்றொரு பாரம்பரிய உணவு மோர்க்களி. பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மோர் கலந்து இதை தயாரிக்கின்றனர். இந்த உணவும், வழக்கத்தில் மறைந்து வருகிறது. முதியோர்களால் மட்டுமே, இப்போது தயாரிக்கப்படுகிறது; இளைஞர்களோ, இளம் பெண்களோ அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார், வந்தவாசியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஜம்புக்குமரன். 

வெள்ளைப்பூரி தயாரிக்கலாம் வாங்க
அரிசி,  3 பங்கு; துவரம் பருப்பு, 1 பங்கு எடுத்து ஊறவைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பூரி தயாரிப்பதற்கான மாவு போல் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, பூரியைப்போல் உருட்டி தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை கொதிக்கும் சமையல் எண்ணெயில், வேகவைத்து எடுத்தால், சுவையான வெள்ளைப்பூரி தயார். இதை  தொட்டு சுவைக்க வேர்க்கடலை சட்னிதான் கூட்டு

கவலையைப் போக்கும் காக்கையும் மைனாவும்

பறவைகளை தேடுவதும், அவற்றை பின் தொடர்வதும், அவற்றின் ஒலியை, நடத்தையை ரசிப்பதிலும்  தனி  சுவராசியம் உண்டு.
 உலகம் முழுவதும் ஊர்ப்புற பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு, 2014 ஜனவரி 17 ம் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டதால் தயக்கத்துடன் பங்கேற்றேன்..
 ரிஷி வேலி கல்வி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டிருந்த பறவைகள் குறித்த சில ஆங்கில நுால்களை ஒரு முறை வாசித்திருக்கிறேன்.   
பறவைகளைத் தேடி அடையாளம் காணும் ஆர்வத்தால், ஞாயிறன்று, அதிகாலை 4:00 மணிக்கே எழுந்து விட்டேன். சைக்கிள் ஓட்ட பயற்சியை முடித்துக் கொண்டு, அதிகாலை 5:40 மணிக்கு, மாடிக்கு வந்தேன். இருள் விலகவில்லை; ஆனால், பறவைகளின் குரல் தெறித்துக் கொண்டிருந்தது.  காகங்களின் கரைச்சல்தான் துாக்கலாக இருந்தது. மரங்களை மாற்றி மாற்றி அவை பயணித்துக் கொண்டிருந்தது கரைச்சல் வழி அறிய முடித்து. 
அவை, பறப்பதைக் கவனி்த்துக் கொண்டிருந்தேன். எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது குரல் மழையில் தெரிந்தது. 
 தொடர்ந்து மைனாக்கள் சத்தம் போட்டன.அந்தகுரல் ஏற்கனவே அறிமுகம் என்பதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படவில்லை.  எண்ணிக்கையை அவதானித்தேன். 
இடை்யே, மேலும் சில பறவைகளின் குரல்கள்... அந்த குரல்கள் பரிச்சயம்தான் என்றாலும்,  பெயர்களை  அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது.
 மைனாக்கள், ஐந்து விதமாக குரல் கொடுப்பதை கவனித்திருககிறேன். அவற்றில் ஒருவகை குரல் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குரல் எழுப்பும் போது, இணை மைனாக்கள் குதுாகலமாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.
 கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், மைனாக்களை வீட்டில் வளர்த்து, பேச பழக்குவது உண்டு. என் உறவினர் பெண் ஒருவர், ஒரு மைனாவுக்கு, அக்கக்கா.... கள்ளன்...கள்ளன் என்று பேசக் கற்றுக் கொடுத்திருந்தார்.  
இலங்கை தமிழர்களின், தமிழக பகுதி குடியிருப்புகளுக்கு சென்ற போதெல்லாம், பல குடியிருப்புகளில், கிளியும் மைனாவும் வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். மைனாக்கள் மிகவும் மெல்லியதாக இனிய விசில் கூட அடிககும். 
சரி... பறவைக்கு வருவோம்
தொடர்ந்து, அண்டங்காக்கைகளின் கனமான குரல் கேட்டது. எதிர்வீட்டு தென்னையில் அது அமர்ந்திருந்ததை கவனித்தேன். அதற்கு தனி்தத குரல் உண்டு. பலர் இதை ரசிப்பதில்லை. ஆனால், அரசங் காகத்தின் கரைச்சலை விட, அண்டங்காக்கையின் கனம் நிறைந்த குரல் சுவராசியப்படுத்தும். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று, பக்கத்து வீட்டுச்சுவர் மாடியில் அமர்ந்தது.
 விடியலால், வானம் பொலபொலத்தது. காகங்களின் வரவு அதிகரித்து. அவை, நக்கல் குரலிலும் ஒன்றைக் குரலிலும் கரைந்து கொண்டே இருந்தன. மைனாக்களிலும் மற்றொரு இணை வந்து, குப்பையில் இரைதேட துவங்கின.
 அந்த பகுதியை கூர்ந்து கவனித்த போது, மற்றொரு காட்சி. குப்பை சிதறிக் கிடந்த பகுதியில, ஒரு கீரிப்பிளை்ளை சுற்றித் திரிவதைக் கவனித்தேன். சற்று நேரத்தில், அதன் இணை கீரியும் உடன் சேர்ந்து கொண்டது. அவை குப்பையில் அலைந்து கொண்டிருந்தன.
 இதற்கிடையில், மேற்கில் இருந்து, கிழக்கின் சாய்வாக, சில பறவைகள் வேகமாக பறந்து மறைந்து கொண்டிருந்தன. அவை மிகவும் சிறியவை. பறக்க சிரமப்பட்டது போல் தோன்றினாலும், அதில் தனி அழகு தெரிந்தது. ஆனால், காற்றை கிழித்துக்கொண்டு பறந்தன அவை, ஒரே திசையில் பறந்து மறைந்து கொண்டிருந்தன.. 28 பறவைகள் என், தலைக்கு மேலாக பறந்து சென்றதை எண்ணிப்பார்த்தேன்.. அவற்றின் வடிவம் அழகு. ஆனால், அவற்றை இனம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
சில, பச்சைக் கிளிகள் உச்சிவானில் சத்தமிட்டபடியே, பறந்து மறைந்தன. இப்படி சென்றவற்றில், ஏழு எண்ணிக்கையை அவதானித்தேன். சில தனித்தனியாக பறந்து  கொண்டிருந்தன. எளிமையான கார்ட்டூனாக அவற்றை வரைந்து விட முடியும் என நினைத்தேன்.
அப்போது சற்று துாரத்தில், கருஞ் சிட்டுக்குருவியின் குரல்.  கொலுசு குலுங்குவது போல் இருந்தது. அந்த ஓசை பரிச்சியம் என்பதால், எளிதில் அடையாளம் காண முடிந்தது.  மாணிக்க பரல்களை சேர்த்து உருட்டி விடுவது போல் அவற்றின் ஒலி இருக்கும். அந்த சத்தம் மென்மையானது. அற்புதமானது. மனசில் ஒலித்து்க்கொண்டே உயிர்ப்புடன் இருக்கும். இநத ஒலியை அறிமுகப்படுத்தியது என் துணைவியார்தான். இந்த பறவைகள் வீட்டருகே வந்துவிட்டால், ஓ.. அற்புத சுிட்டுக்களே... என்று ஆர்வமாக சென்று கவனிப்பார். குழந்தைகளையும் அழைத்து காண்பிப்பார்.
 சிட்டுக்கள், பல விதமாக ஒலி எழுப்புவதை கவனித்திருக்கிறேன். அனேகமாக, இவற்றில் ஆண்கள்தான் நுாதனமாக ஒலி எழுப்பும். அவற்றின ஓலிக்கு ஏற்ப, பெட்டை நகர்ந்து நிகழ்வை ஒழுங்கு செய்யும்.
சிட்டு என்று நான் குறிப்பிடுவது அடைக்கலான் குருவிகளை அல்ல.
 பறவை ஆர்வலர்கள், சிட்டு என்று அடையாளம் காட்டுவதை நான், என் பெற்றோரிடம் இருந்து, அடைக்கலான் குருவி என்று அடையாளம் கணடுள்ளேன்
. அடைக்கலான் குருவியுடன் நீண்ட பரிச்சயம் எனக்கு உண்டு. என் பூர்வீக வீட்டில், பத்துக்கும் மேற்பட்ட கூடுகளில் அவை வசித்து வந்தன. விவரம் தெரிந்த நாள் முதல் அவற்றை எனக்கு தெரியும் அவை எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால், அனைத்து செயல்களுடனும் பரிச்சயம்.  எங்களுடன் அடைக்கலமாக வாழ்வதால, அவற்றை அடைக்கலான் குருவி என்று அப்பா சொல்லித்தந்திருந்தார். 
சில நேரங்களில், அவற்றின் கூட்டில் இருந்து குஞசுகள், மாடி அறைக்குள் தவறி விழுந்து விடும். அவற்றை, மிகவும் மெ்ன்மையாக எடுத்த அப்பாவிடம் காட்டுவோம். எணியை எடுத்துச் சென்று, குறிப்பிட்ட கூட்டைத் தேடி குஞ்சை அங்கு வைப்போம். அது அந்த காலம். இப்போது, அடைக்கலான் குருவி கூடுக்ளை காணமுடிவதில்லை. அவற்றின் இனிய ஒலி, என் இதயத்தின் ஓரத்தில் சிந்திக் கொண்டே இருக்கிறது.. 
பறவைகளை ரசித்து நின்ற போது...  ஒரு செண்பகம் அந்த வழியாக பறந்த சென்றது. தொடர்ந்து, மீன் கொத்தி ஒன்று, மின் கம்பியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. ‘அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்,’ என, என் கவனத்தை ஈர்த்தபடி, கருங்குருவி ஒன்று பக்கத்து வீட்டு மாடியைச் சுற்றி பறந்தபடியே சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. அந்த அற்புதத்தை ரசித்து க்கொண்டிருந்த போது, மணி, 7:30 ஐ தாண்டிவிட்டது. இப்போது நானும்இயந்திரத்தை நோக்கி பதட்டமாக நகரத் துவங்கினேன்.
பறவைகள் கணக்கெடுப்பை ஒட்டி, இணையத்தில், காக்கைகளையும் மைனாவையும் மட்டுமே பதிவிட முடிந்தது. மற்ற பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  ஆங்கில பெயர்களை இனம் காண்பதில், தடுமாற்றம் ஏற்பட்டதால், எண்ணிககையை பதிவிடாமல் தவிர்த்தேன். இப்போது, நண்பர் ஜெகந்நாதனும், ஆசையும் இணைந்து எழுதிய, பறவைகள் கையேடு புத்தகத்தின் வழி, அடையாளம் காணவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இந்த புத்தகத்தின் அடிப்படையில், மற்றொரு முறை மாடியில் பறவைகளை ரசிக்க சென்றோம். என் மகளும் உடன் வந்தார். மைனாக்களையும், காகங்களையும், புறாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உயரத்தில் ஒரு கரும்பருந்து பறந்த கொண்டிருந்தது.
 இறக்கையை ஆட்டாமல், எளிமையாக, அது பறந்து சென்ற விதத்தை வியந்து எனக்கு அதன் பறப்பு வனப்பை  விளக்கினார் மகள். இதற்கிடையில், ஒரு மைனா கூட்டையும் பார்த்துவிட்டோம். சிறித நேரத்தில், கரும்பருந்து மீண்டும் வட்டமடித்தது. அதை ஒரு காகம் மேலும் கீழுமாக பறந்து விரட்டியடித்துக் கொண்டிருந்தது.   

Thursday 7 June 2018

இசை... மாற்றம் நிகழ்த்தும்; மாற்றத்தில் முகிழ்க்கும்...

ஜப்பான் நாட்டின் தேசிய அருங்காட்சியக, இன மரபியல் இசை அடையாளத்துறை போராசிரியர் டாக்டர் தெரிதா யாக்சிதாகா. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில், இசையில் உயர்கல்வி முடித்தவர். நாதஸ்வர இசையில் மயங்கி, அது பற்றி தமிழகத்தில் ஆய்வு செய்தவர்.
 பிரபல நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் வாழ்க்கை மற்றும் இசைப்பயணம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியவர். நாதஸ்வரமும், வீணையும் முறையாக கற்றுத்தேர்ந்தவர். கச்சேரி நடத்தும் திறன் பெற்றவர். சென்னை வந்திருந்த அவருடன் உரையாடியதிலிருந்து...
இசையை முதலில் எப்படி புரிந்து கொண்டீர்கள்?
மகிழ்ச்சியை அனுபவித்த தருணம் என்று சொல்லலாம். அதன் அடிப்படையில்தான் இசையை புரிந்து கொண்டேன். ஜப்பானில் கல்லுாரியில் படித்த நாட்களில், வழக்கமான ரசனையுடன் தான் என் இசை ஆர்வம் வளர்ந்தது. ஜப்பானிய இசையுடன் மேற்கத்திய இசையையும் கேட்க முடிந்தது. அதில் பேரானந்தம் அடைந்தேன். அந்த ரசனைதான் எனக்குள் ஆர்வமாக வளர்ந்தது.
இசை ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி
இசையை ரசிக்கும் மனலைதான், அது தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபடத்துாண்டியது. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக்கழக மரபியல் இசைக் கல்லுாரியில் படித்த போதுதான், கலாசாரங்களுக்கும் இசை க்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொண்டேன். அங்கு, பல நாட்டு இசைக் கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் இசை அறிவை விரிவு படுத்தியது.
பல நாட்டு கலைஞர்களும் வந்து இசை நிகழ்த்துவர்... பாடுவர். இது என் அறிவுத் தளத்தை மேலும் விரிவாக்கியது. இந்த விரிவாக்கம்தான், இசை ஆய்வுகளுக்குள் என்னை கொண்டு போய் சேர்த்தது என, நினைக்கிறேன்.
எங்கள் கல்லுாரியில் பலநாட்டு இசைத் தட்டுக்கள் இருந்தன. அதில் ஒருமுறை நாதஸ்வர இசையைக் கேட்டேன். அது என்னை கவர்ந்தது என்படைவிட, அதற்குள் ஐக்கியமாகிவிட்டேன் என்று சொல்ல வேண்டும்.

இன மரபு இசையை தனி அடையாளமாக கண்டீர்களா?

இசை என்பதே மரபில் இருந்து வருவதுதான். அமெரிக்காவில் நான் படித்த போது, ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குலிங்டாங் என்ற இசை மரபைச் சேர்ந்த கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவின் பல பகுதிகளில் வசிப்போரும் வந்திருந்தனர்.
அங்கு வந்திருந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அந்த இசையை மிகவும் விரும்பினர். அதில் லயித்து இசைக்குள் கரைந்து போய்விட்டனர். அவர்களின் அந்த லயிப்பும் ரசிப்பும் வினோதமாக இருநதது.
அப்படி லயித்து போயிருந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அமெரிக்க பூர்வீகர்கள் அல்ல. பல தலைமுறைகளுக்கு முன், அங்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்‌ந்தோர். அவர்களின் முன்னோர், பிலிப்பைன்ஸ் அருகே உள்ள மிட்லாநாட் என்ற தீவுப்பகுதியில் வசித்தவர்கள் என்று கூறினர். இது எனக்கு வியப்பாக இருந்தது.
அன்று நடந்த இசை நிகழ்ச்சி, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாசார மரபுகளை உள்ளடக்கியிருந்தது. அவர்களின் லயிப்புக்கு காரணம், இன மரபியல் என, புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு இனத்தின் மரபு சார்ந்த இசை, அந்த இன மரபுக்குள் ரத்தத்தில் கலந்துள்ளதாக உணர்ந்தேன். மற்றெல்லாவற்றையும் விட, இன மரபிசை, இனத்தின் உள்ளார்ந்த லயிப்புக்கு உரியது என்பது தெளிவானது.

மரபிசையில், மற்ற ஒரு இனத்தை இழிவுபடுத்தும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
ஒரு இனத்தின் மரபிசை மற்றொரு இனத்தை முழுமையாக ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால், இழிவுபடுத்தும் என்று சொல்ல முடியாது.
மரபிசை மண் சார்ந்த பண்பாட்டுடன் உருவாவதாக கொள்ளலாமா?
அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; வேறு வகயைில் இருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் உங்கள் இசை ஆய்வுகள் பற்றி...?

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது, தமிழக இசைத்தட்டு ஒன்றை ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது, மதுரை இசைக் கலைஞர்களின் நாதஸ்வர இசை. அதில் லயித்துப் போய்விட்டேன். அது பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டது.
அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த விவேகவாகினி என்ற கலைஞர், எங்கள் கல்லுாரியில், வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அவரது இசையும் என்னை கவர்ந்து லயிக்க வைத்தது. அவரிடம் தமிழகத்தில் மரபு இசை குறித்து கேட்டேன்.
அவர்தான், தமிழகத்தில் உள்ள இசை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்; தமிழ் கற்றுக் கொண்டால்தான், இசை ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்றார். அவரது அழைப்பை ஏற்று சென்னை வந்தேன்.
இங்கு சங்கீத மேதை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையில் கரைந்து போனேன். அவரைப்பற்றி, அவரின் இசை வாசிப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என முயற்சி எடுத்தேன். என் முயற்சிக்கு, ஆய்வு உதவி கிடைத்தது.
ஆய்வு உதவியால், வீணையும், நாதஸ்வரமும் கற்றுக்கொண்டேன். நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை பற்றி, விரிவாக தகவல்களை சேகரித்தேன். பெரும் முயற்சி செய்து பல இடங்களுக்கு அலைந்து, ஏராளமான தகவல்களை சேகரித்து ஆய்வு செய்தேன்.
அவற்றில் முக்கியமானது. நாதஸ்வர இசைக் கருவியை, ராஜரத்தினம் பிள்ளை தன் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்த விதம். அது என்னை வெகுவாக கவர்ந்தது. அது பற்றி விரிவாக தகவல்களை சேகரித்துள்ளேன். நாதஸ்வரத்தை உருவாக்கிய கலைஞர்கள், அதை மீட்டிய வித்வான்கள் என, பலரை சந்தித்து தகவல்கள் திரட்டினேன். இந்த இசைக்கருவியை இசைக்க எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை அப்போது உணர்ந்தேன்.
ஜப்பானில் இன மரபிசை தாக்கம் பற்றி?
ஜப்பானில் இன மரபிசை நெருக்கடியில் உள்ளது. அதை, ஆதாயம் தேடாத சில இசைக்குழுக்கள் காப்பாற்றி வருகின்றன. கொரியாவில் இருந்து, ஜப்பானில் குடியேறியவர்களும் இன மரபிசையை பாதுகாத்து வருகின்றனர்.
தமிழக இன மரபிசையை எப்படி பார்க்கீறீர்கள்?
தமிழகத்தில், இனக்குழுக்களுக்குள் ஏராளமான வகை இசை போக்குகள் உள்ளதாக அறிகிறேன். அது பற்றி விரிவாக ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழகத்தில் பரவலாக சினிமா இசைதானே உள்ளது?
உண்மைதான். அது கொண்டாட்டமாகவும் உள்ளது. அதை இனமரபிசை என்று எடுத்துக்கொள்ள முடியுமா என, ஆராயவில்லை. ஆனால், அந்த இசையால் பாதகம் இருப்பதாக தெரியவில்லை

சினிமா இசை என்பது விற்பனை சரக்குத்தானே?
உண்மைதான். உலகம் முழுவதும், இசை விற்பனை சரக்காகத்தான் உள்ளது. மரபு சார்ந்த அடையாளமாகவும் உள்ளது.
தற்போது அரசியல்,பொருளாதார மாற்றங்கள் விரைந்து நடக்கிறதே.. இதில், மரபியல் இசை அடையாளம் எதை சார்ந்து நிற்கும்?
மரபிசை அடையாளம், மாற்றங்களை ஏற்படுத்தும். மாற்றங்களுடன் நிகழும். மாற்றங்களுக்கு பின்னும் உயிர்ப்புடன் நிற்கும் என, நம்புகிறேன். மரபு இசை என்பது ஒரு இனத்தின் உயிரில் கலந்தது.

தமிழை தாய்மொழியாக கொண்டோர் இசை மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கணிக்கிறீர்களா?

தமிழகத்தில் ஏராளமான இசை கலைஞர்கள் இருப்பதை காண்கிறேன். இசை பள்ளிகளைக் காண்கிறேன்; இசை கற்போரை காண்கிறேன். அதைவிட மேலாக, புலம் பெயர்ந்து, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இசையை தங்கள் அடையாளமாக கொண்டிருப்பதை காண வியப்பாக உள்ளது.
கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் மட்டும், 100 க்கும் அதிகமான இசை ஆசிரியர்களை சந்தித்தேன். அவர்களிடம், 3000 க்கும் அதிகமான மாணவர்கள் இசையை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இது வியப்பான புள்ளி விபரம். புலம்பெயர்ந்து வாழுவோரை, இன மரபிசை உயர்ப்புடன் வைத்திருக்கிறது. இதை நிரூபிக்க வேறு புள்ளி விவரங்கள் எதுவும் அவசியமில்லை என, நினைக்கிறேன்.

                                                                                                         

Wednesday 6 June 2018

பல எலிகளும் சில விவசாயிகளும்

சந்திக்க வருபவர்களுடன், மனமாச்சரியம் இன்றி நேரடியாக, எளிமையாக பேசும் பண்பை கடைப்பிடிப்பவர்களை தமிழகத்தில் காண்பதரிது. தமிழ் படைப்புலகத்தில் இத்தகைய பண்பு உள்ளவர்களை பார்க்கவே முடியாது. ராஜவல்லிபுரம் வல்லிக்கண்ணன், இதில் மாறுபட்டவர்.
நாகர்கோவிலில் வெளியான குடிசை மாத இதழில், தமிழ் – தமிழ்நாடு – தமிழர்கள் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணன், 80களில்  தொடர் கட்டுரை எழுதிவந்தார். நகர எல்லையை மிதித்த காலத்தில் படித்த தொடர் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. அந்த கட்டுரை பற்றி, ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்.  உடனே, பதில் எழுதியிருந்தார். அந்த பதிலை படித்தது அறபுதமான கணம். அதை சொற்களில் விவரிக்க முடியாது.
இலக்கியம், சமூகம் என்று பல தளங்களில் வெளிவந்த புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த நாட்கள் அவை. எழுத்துபவர்களை சந்திப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. தொடர்ந்து, அவருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தேன். படிப்பதற்கு பல புத்தகங்களை பரிந்துரைத்தார்.
இப்போது உள்ள இலக்கிய அரசியல் அவரிடம் இல்லை. எந்த குழுவையும் துக்கிப்பிடிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் பார்க்கமுடிகிறது.
படைப்பாளர் பட்டறை ஒன்றை, சோலை இயக்கம், 1986 ல், திருச்சியில் நடத்தியது. அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களுடன்  இருந்ததார். மூன்று நாட்கள், நேரடியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.
பட்டறை நிகழ்வு நேரம் தவிர, யாராவது ஒரு எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிகமும் செலவிட்டது வல்லிக்கண்ணனுடன்தான். பின்னர்,  சென்னை ராயப்பேட்டையில் தங்கியிருந்த அவரை, குடிசை ஆசிரியர் இரத்தினசுவாமி அவர்களுடன், சென்று ஒருமுறை பார்த்தேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். முதிர்ந்த நிலையில் உடல் தளர்வுடன் காணப்பட்டார்.
உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். முதுமையில் தனிமையின் வாட்டம் பேச்சின் ஊடே வெளிப்பட்டது. நீண்ட அனுபவமும், அதை முறைப்படுத்தி நினைவில் வைத்திருந்த திறனும் மிகவும் ஆச்சரியப்டுத்தியது. எளிமையாக வாழ்வது பற்றி அவரிடம் கற்றேன்.
அபூர்வ மனிதர். வாசிப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்திய விதம் விரும்பத்தக்கது.  எழுத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணி்ததவர். தமிழக அரசியல் வாதிகளை எலிகளாக உருவகப்படுத்தி நையாண்டியுடன் அவரது  இளமை நாட்களில் எழுதிய கட்டுரை தொகுதி, ஒன்றை வாசித்தேன். எழுத்தின் பல இடங்கள், பிரபல ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் செக்கவ் பாணியை நினைவு படுத்தியது. விவசாயிகளைப் பற்றி பேசும் போது, எலிகளைப் பற்றியும் கண்டிப்பாக பேச வேண்டிய அவசியம் இருப்பதை புரிந்து கொண்டேன்.

Tuesday 5 June 2018

எதை சாப்பிடுகிறேம் நாம்?

இயற்கை முறையில் சாகுபடி உலகளவில், 30 மில்லியன் எக்டேரில் நடக்கிறது. விஷமற்ற உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு, 117 வது இடம். உலக அளவில், அதிக வேளாண் பரப்பைக் கொண்ட நாடுகள் இந்தியாவும், சீனாவும் தான்.
இந்தியா அளவில், தமிழகத்தின் இயற்கை வழி வேளாண்மை, ஐந்து சதவீதம் நிலத்தில் மட்டுமே நடக்கிறது. பளபளப்பை ரசிப்பதிலும் புசிப்பதிலும் தமிழர்களக்கு ஆர்வம் அதிகம்.
கத்தரிக்காயும், தக்காளியும் குண்டு குண்டாக இருந்தால், துாக்கி வைத்து மகிழ்ந்து கொண்டாடுவோம். உடல்நலம் பற்றி, மனசு எந்த கேள்வியும் எழுப்புவதில்லை.
இயற்கையாக விளைந்த காய் கனிகளில் பளபளப்பு அவ்வளவாக இருக்காது. ஆனால், பாதுகாக்கும் பண்பு இருக்கும்.
விஷத்தை சேர்த்து தினமும் சாப்பிடுகிறோம். பலசரக்கு கடையில் பொருள் வாங்க, மாதாந்திர பட்டியல் போடுவது போல, மெடிக்கல் ஸ்டோருக்கு வாரந்திரம், பட்டியல் தயாரித்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வந்துவிட்டது.
நஞ்சை கலப்பதால், இந்திய திராட்சை, கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கண்டு வெளிநாட்டவர் அஞ்சி ஓடுகின்றனர்.
சரி… கொஞ்சம் யோசிப்போம்.
விவசாயத்தில் இயற்கை முறை பூச்சி விரட்டிகளை பாருங்கள். உங்கள், முன்னோரிடம் இருந்தவற்றை நினைவில் கொண்டு வாருங்கள். அறிவும் தெளிவும் எவை என புரியும்.
பயிர் விளைச்சலை பாதுகாத்தவை பாம்பு, பறவை, குளவி, தேனீ, தவளை, பூனை, பூச்சி என இப்படி ஏராளம்.
சாரைபாம்பு வயல்வெளியில் தினமும், எலிகளை பிடித்து தின்று இயற்கையை சமப்படுத்தியது. அவற்றின் தோலை உரித்து விட்டோம். சமர்த்துக்கள் நாம். பேஸ்… பேஸ்…
கோழிகள் கரையான்களை தின்று சமன் படுத்தி வந்தன. பிராய்லர் கோழி போதும் என, வீட்டில் நாட்டுக்கோழியை கண்ணில் படாமல் ஒழித்து விட்டோம்.
ஆந்தைகளும் கோட்டானும் இரவு வயல் வெளியில் அமர ஒற்றை கம்பு நட்டு வைத்தோம்…
தாவர பூச்சிவிரட்டிகளாக அரளி, தும்பை, நொச்சி, துளசி, இலுப்பை, புங்கம், வேம்பு பயன்படுத்தினேம்
எண்ணெய் காகிதமும், கருவாட்டு பொடியும் பயன்படுத்தி, பூச்சி பொடிகளை கட்டுப்படுத்தினோம்
கத்தரி, வெண்டையில் காய்ப்புழுவை தடுக்க உயிர் ஒட்டுண்ணிகளை பயன்படுத்தினோம். குழல் விளக்கு அருகே எண்ணெய் தடவிய காகிதத்தை கட்டும் முறையை மறந்துவிட்டோம்
மஞ்சள் நிற காகித ஒட்டுப்பொறியை வைத்தால், அஸ்வினி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஒட்டி அழிந்து விடும் என்பது மறந்து போய்விட்டது.
பாட்டிலில் துளையிட்டு கருவாட்டுப் பொடி வைத்தால் கொய்யா தோட்டம், மாந்தோப்பில் தீமை செய்யும் பழ ஈக்களை கவர்ந்து அழிக்க முடியுமே.
மயில், கிளிகளை விரட்ட அக்னி அரக்கனை உருவாக்கி கட்டினோம்.
தலைவலி, காய்ச்சலுக்கு மளிகை கடையில் அலோபதி மருந்து வாங்கித்தின்றவுடன் எல்லாம் மறந்து போச்சு.
சிந்தித்து பார்த்தோமா?.
வயலுக்ககுள் எந்த பயிரை சாகுபடி செய்கிறோமோ, அதை பாதுகாக்க வரப்பில் செடிகளை தேர்வு செய்து நட்ட காலம் மலை ஏறிவிட்டது.
வயல் வெண்டைக்கு, வரப்பு ஆமணக்கு பாதுகாப்பு
வயல் தக்காளிக்கு, வரப்பு மரிக்கொழுந்து பாதுகாப்பு
வயல் கத்தரிக்கு, வரப்பு மணத்தக்காளி பாதுகாப்பு,
வயல் மிளகாய்க்கு வரப்பு அகத்தி பாதுகாப்பு
காலிபிளவர், முட்டைகோசுக்கு கடுகு செடியே பாதுகாப்பு
தட்டான், ஊசிதட்டான், பொறிவண்டு, நாவாப்பூச்சியினங்கள், பயிர்களுக்கு, 60 சதவீத பாதுகாப்பை தருவதாக இயற்கை விஞ்ஞானிகள் அறிவு தந்துள்ளனர்.
ஆமணக்கு, துவரை, செண்டுமல்லி, கொத்தமல்லி, சூரியகாந்தி, தட்டைபயறு செடிகளில் மலரும் பூக்கள், நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். இவை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை தின்றுவிடும். பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிளும் அழிந்து விடுமே…
இயற்கை வழியில், தீர்வுகளை தேடுவோம். உலக உயிர் சூழலை பாதுகாப்போம்.
மருத்துவமனைகளை மூடுவோம்.

உரையாடல் வரி வடிவமாகுமா... தொழில்நுட்பம் என்ன சொல்கிறது

தமிழ் மொழியை அறிவியல் ரீதியாக மேம்படுத்தும் தமிழ் மென்பொருள் தயாரிப்பு தொடர்பாக லண்டனில் ஆய்வு செய்து வரும்  திரு. விக்னேஷ் ராஜ் பேட்டி
உங்களைப் பற்றி...
சென்னையில் பிறந்தேன், இந்தியாவின் கிழக்கு மாநில பகுதியில் வளர்ந்தேன். என் பெற்றோர்  டாடா நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். வட மாநிலங்களில் படித்த போது, பள்ளிப் படிப்பில் இந்தி கட்டாயமாக இரண்டாம் மொழியாக படிக்க வேண்டும்; சமஸ்க்ருதத்தை மூன்றாம் மொழியாக படித்தாக வேண்டும் என்ற சூழல் இருந்தது.
என் பெற்றோர், வீட்டில் தமிழ் கற்றுக் கொடுக்கத்  தொடங்கினர். தமிழ் என்  தாய் மொழியாக இருந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பை, அப்போது உணர முடியவில்லை. தமிழ் கற்க பல ஆண்டுகள் எடுத்தேன்.
பிறகு, இங்கிலாந்தில் உள்ள ஷேபீல்த் ஹாலம் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப் படிப்பை முடித்தேன் அதன் பின் , முனைவர் பட்டப் படிப்பிற்கான ஆராய்ச்சிக்கு, 'கணினித் தமிழ்' என்ற  தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன்.
இங்கிலாந்தில், நான் படித்துக் கொண்டிருந்த போது, நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் இந்த ஆராய்ச்சிக்கான தொடக்கப் புள்ளி என்று சொல்லுவேன். ஒரு முறை, வகுப்பை முடித்து வீட்டிற்கு திரும்பினேன். அப்போது ஒரு ஆங்கிலேய நண்பர் முன்னிலையில்,  என் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தேன் - ஆங்கிலம் கலந்த தமிழில். 'breakfast, lunch, room, class, three, afternoon, morning' போன்ற சொற்கள் என் உரையாடலில் இடம் பெற்றது.
அப்போது மொழி மீது, நான் அதிக கவனம் செலுத்தியதில்லை. என் உரையாடலை கவனித்த ஆங்கில நண்பர்,  ‘நீங்கள் பயன் படுத்திய ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் இல்லையா’ என்றார்.
இருக்கிறது என்று பதிலளித்தேன். ‘பிறகு ஏன், அந்த சொற்களை பயன்படுத்தவில்லை’ என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு, அப்போது என்னிடம் பதில் இல்லை. என்றாலும் அந்த கேள்வி சிந்திக்க வைத்தது. பிறகு என் சுய ஆர்வத்தில், நான் அடிக்கடி பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை தமிழில் பேசி பழக்கத்தில் கொண்டு வர முயற்ச்சித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின், எளிமையான சொற்களை பயன்படுத்தி தமிழகத்தில்  என் நண்பர்களிடம் பேசிய போது, ‘ஏன் ரொம்ப தூய்மையா தமிழை பேசுற... சாதாரணமா பேசலாமே’ என்று கேட்டனர்.
 இவர்கள் குறிப்பிடும், ‘சாதாரணத் தமிழ்’ என்பது ஆங்கிலம் கலந்தத் தமிழ் என்று பிறகு அறிந்தேன். அப்போது தான் மொழி சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை, தமிழில் கொண்டு வர, என்ன சிக்கல் உள்ளது என யோசித்தேன்.
 தமிழ் மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கு ஆங்கிலம், அரபிக் மண்டரின் போன்ற மொழிகள் போல, சந்தையும் வரவேற்ப்பும் இல்லையா என்று என்ற கேள்வி வந்தது. அந்த கேள்வியை ஆராய்ச்சியாக மாற்றியுள்ளேன்.

தமிழ் மொழியை நவீனப்படுத்துவது தொடர்பான ஆய்வில் முன் தொடர்ச்சிகள் உள்ளதா
மொழி  சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி, உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த ஆராய்ச்சி இலக்கியங்களை படிக்கும் போது, மொழியை பயன்படுத்தும் பயனர் சமூகத்திற்காக தான் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
அதே போல தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் ஆங்கிலம், மண்டரின், டொச் போன்ற மொழிகள் போல தமிழ் மொழிக்கான ஆராய்ச்சி வளர்ந்திருக்கிறதா என்ற கேள்வி மிகவும் அவசியமானது.
 குரல் அடையாளப்படுத்துதல், பேச்சை அடையாளப் படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் இன்று அம்மொழிகளில் ஓரளவிற்கு பயனில் உள்ளது. ஆனால் தமிழ் மொழியை பொறுத்த வரை, அது தொடக்க நிலையில் இருக்கிறது என்றே சொல்வேன்.
இது போன்ற ஆராய்ச்சிகளில் தமிழர்களால், தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களால் மட்டுமே ஈடுபட இயலும்.

அறிவியலில் நவீனத் தமிழ் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதாக கருதுகிறீர்கள்...
தொழில்நுட்பங்களில் மொழி வளருவதற்கு உள்ளீடு மிக முக்கியமானது. தமிழில், எளிமையாக உள்ளீடு செய்ய வசதி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று,  தமிழ் 99 விசைப்பலகை, ஒலிபெயர்வு மென்பொருள் போன்றவை, உள்ளீடு செய்வதற்கு வழி வகுத்து கொடுக்கிறது. அதில், ஒலிபெயர்வின் மூலம் உள்ளீடு செய்வது அறிவுப்பூர்வமானது அல்ல என்ற என் ஆய்வு சார்ந்த முடிவுகள், சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ஏற்கப்பட்டது. அந்த ஆய்வு, ஆஷிக் அலி மற்றும் முனைவர் பாபக் கசையுடன் இணைந்து சமர்பிக்கப்பட்டது.
இணையத்தில், 0.1% விழுக்காடு தகவல்கள் மட்டுமே தமிழில் உள்ளதாக, மொழி ஆராய்ச்சி இலக்கியங்கள் கூறுகின்றன. இன்று பலவிதமாக தமிழ் உள்ளீடுக்கான வசதி இருந்தபோதிலும், இளைஞர்கள் ரோமன் எழுத்துருவத்தில் தமிழை உள்ளீடு செய்து எழுதுகின்றனர். தொழில்நுட்பத்தில் மொழியின் வளர்ச்சி அந்த மொழியை தாய் மொழியாக பேசும் மக்களை பொறுத்து இருக்கிறது என்றே சொல்வேன்.

தமிழ்  மொழியை நவீனப் படுத்தும் போது  ஏற்படும் சிக்கல்கள் என்ன...
ஒரு மொழி தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைய வேண்டுமெனில், அது மக்களால் நன்கு பேசப்பட வேண்டும். தமிழை பொறுத்த வரை சில சிக்கல்கள் இருப்பதாக கருதுகிறேன்:
* மொழி மீதான மக்களின் மனப்பான்மை : என்னை பொறுத்த வரை இது தான் அடிப்படை. மக்கள்,  தம் தாய் மொழியை எப்படி பார்கிறார்கள் ? அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம்.
* உச்சரிப்பு: மொழி சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு உச்சரிப்பு மிக முக்கியமானது. தமிழுக்கு இது மிகவும் பொருந்தும். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். ‘மல பேயுது’ என்று சொல்லிவிட்டு,  ‘மழை பெய்யுது’ என்று எழுத இயலாது. எப்படி உச்சரிக்கப்படுகிறதோ, அப்படியே எழுதியாக வேண்டும்.
*மொழி கலப்பு: மொழி கலப்பிற்கு பல காரணங்கள் உள்ளன என்னை பொறுத்த வரை,  மொழி கலப்பை,  'காலத்தின் புதுநடை' என்று கருத முடியாது.  பேச்சை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தில், ஒரு மொழியே சாத்தியம். இரு மொழி பதிவுக்கான ஆராய்ச்சியும் நடைபெற்றுவருகிறது . ஆனால், பல மொழிகளை கலந்து பேசும் சூழலில், இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவது கடினமானது என்பது என் கருத்து.
* எழுத்துருவம்: பொதுவாக,  மொழிக்கான எழுத்துருவத்தில் எழுதப்பட வேண்டும். ஆனால், தமிழ்ச் சூழலில், குறிப்பாக ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சூழலில் எழுத்துருவமும் மாறுவதை என் பல ஆய்வுகளில் கண்டேன். தமிழை, ‘ரோமன் எழுத்துருவத்தில் எழுதுவது இயல்பாகவே மாறிவிட்டது.
மொழியில் தொழில்நுட்பங்களை அணுகும் போது, அந்த மொழி சார்ந்த சமூகவியல் பார்வை மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

உலக மொழிகளில் தொழில் நுட்பங்களுக்கும்  தமிழில் தொழில் நுட்பம் உருவாவதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று நினைக்கிறீர்கள்...
எல்லா மொழிகளையும் போலவே, தமிழுக்கும் பல வண்ணங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பேச்சுத் தமிழ் மாறுபடுகிறது. இருப்பினும் தமிழில் உள்ள சிறப்பு, அடிப்படையான 'ஒலி' உச்சரிப்பு எங்கு வாழ்ந்தாலும் ஒரே மாதிரியாக உள்ளது.
இன்று இந்திய மொழிகளில், தமிழ் சர்வதேச மொழி என்று குறிப்பிடலாம். இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது.  மோரீஷியஸ், ரீயுனியன், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் தமிழுக்கு அங்கீகாரம் உண்டு. எனவே இந்நாடுகளில் தமிழ் வேறுபட்டிருப்பது அதிசயம் இல்லை. ஆனால், ரீயுனியன் போன்ற நாடுகளில்  தமிழர்களாய் அடையாளப்படுத்துபவர்களுக்கு, தமிழ் எழுதப் படிக்க தெரியாது, ஓரளவிற்கு மட்டுமே பேசத் தெரியும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்ததாகத்தான் உள்ளது.
சிங்கப்பூரில் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தி இருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் பெரும்பாலும் கலப்பில்லாமல் பேசுவதை நான் கண்டேன். இலங்கையில் தமிழ் பயிற்று மொழியாக மட்டுமல்லாமல் தமிழை முதன்மைப்படுத்தி இருப்பதால், பெரும்பாலும் தமிழை தமிழாக தனித்து பேசக்கூடிய திறன் இருப்பதாக கருதுகிறேன்.
இருப்பினும் பெரும்பாலானத் தமிழர்களுக்கு, ‘ழ’ ,‘ள’ வை உச்சரிப்பதில் சிக்கல் இருப்பதை காண முடிந்தது.
உரையாடலை வரிவடிவமாக உருவாக்கும்  மென்பொருள் தொழில்நுட்பம் உலகளவில் எந்த அளவு வளர்ந்துள்ளது.  தமிழில் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறதா...
ஆங்கிலம், அரபிக், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இத்தகையான தொழில்நுட்பம் மிகுந்த வளர்ச்சி அடைந்து வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. தாய், இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் இது போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழில், இது தொடக்க நிலையில்தான் இருப்பதாக  கருதுகிறேன். இதை அடுத்தக்  கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை.

 இதில் எழும் சிக்கல்களை தீர்க்க வழிவகை உண்டா?
என் ஆராய்ச்சியை மொழி மற்றும் சமூகம் சார்ந்தத் தொழில்நுட்ப ஆராய்ச்சி என்றே பார்க்கிறேன். எனவே இதில் மொழின் மதிப்பு,  பொருளாதார முக்கியத்துவம், மொழி மீதான, மக்களின் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன. சிலவற்றுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண முடியும் ஆனால் சிலவற்றுக்கான தீர்வு, சமூகத்தில் இருந்து வர வேண்டி இருக்கும்.

 உங்கள் ஆராய்ச்சி எந்தளவிற்கு தமிழ் மொழிக்கு உதவும்?
இந்த கேள்விக்கு  உடனடியாக பதில் கொடுக்க முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! என் ஆராய்ச்சி கண்டிப்பாக மக்களை சிந்திக்க வைக்கும். மொழியை தொழில்நுட்பத்தில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல,  தமிழ் சூழலில் ஒரு புதிய துறையை உருவாக்கும் என்று  நம்புகின்றேன்.
மொழியின் மதிப்பை மட்டுமின்றி அதை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு கொண்டு செல்லலாம், அதுனால் சமூகத்திற்கும் மொழிக்கும் ஏற்படும் பயன்  போன்றவற்றை எடுத்துக்கூறும் விதமாக அமையும் என்று எண்ணுகிறேன்.
தமிழ்ச் சூழலில் என் ஆராய்ச்சி, ஒரு புதிய முயற்சி என்று கருதுகிறேன். இதில் தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களை கண்டுப்பிடித்து அதற்கு சில தீர்வுகளை முன் வைப்பேன். அடிப்படையில் அது மக்கள் மத்தியில் மொழி மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதுவே தமிழில் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் வெற்றிக்கான முதல் படியாக இருக்கும் என்பேன்.
என் ஆராய்ச்சி பணிகள் பற்றி பல மாநாடுகளில் கட்டுரை சமர்பித்து இருக்கின்றேன். 2014ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் என் ஆய்வுக் கட்டுரை சிறந்த ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஷிக் அலி மற்றும் முனைவர் கசாயுடன் இணைந்து என் ஆய்வுக்கட்டுரை,  2015ம் ஆண்டு சிங்கப்பூரில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த, 2015 ல் கணினித் தமிழுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்னை கௌரவித்தார்.  என் ஆராய்ச்சி ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றிருப்பதாக கருதுகிறேன் எனினும் இன்னும் செல்ல  வேண்டிய துாரம் அதிகம் இருப்பதாக எண்ணுகிறேன்.
 இந்த தருணத்தில் தமிழின் அருமையும் பெருமையும் எடுத்துச் சொல்லி வளர்த்த  என் பெற்றோருக்கும், தமிழை மிக எளிமையாக ஊட்டிய என் பாட்டிக்கும், வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சியில் தவறுகளை செய்ய அனுமதித்து அதை, திருத்தி என்னை ஊக்குவிக்கும் ஆஷிக் அவர்களுக்கும், நான் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கடினங்களை பொறுத்திருக்கும் என் மனைவிக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.











                                                                                                                                                                               

பார்வையாளர் அல்ல... மாணவன்

தமிழகத்தில் மனிதர்களை சந்திப்பது அபூவமான நிகழ்வாகி வருகிறது. ஒரு முன்மாதிரியை சந்திக்க வேண்டுமானால், நீண்ட முயற்சி எடுக்க வேண்டும். கடும்யைாக மெனக்கெட வேண்டும்.  அப்படியே சந்தித்தித்து விட்டாலும், பன்மயத்திலும் திட்டவட்டமாக பொருத்திவிட முடியாது. அங்காங்கே கோணல் மாணல்கள், அதிருப்திகள் தவிர்க்க முடியாது

அதிகாரத்துக்காக வளைவது, பணத்துக்காக கருத்தை மாற்றுவது, பதவிக்காக துதிபாடுவது, சுயமரியாதையை பேசிக் கொண்டே அதை மறந்து விடுவது,  புறம் பேசுவதற்காக சொற்களை இழுத்த இழுப்புக்கு பயன்படுத்துவது... 
இப்படி தமிழக வகை மாதிரிகள் பற்றி, சொல்லிக் கொண்டே போகலாம். 
அரசியல், அதிகார வர்க்கம், தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்ல. இப்போது கல்வித்துறை இதில் முன்னிலை வகிக்கிறது. கற்பனைக்கு எட்டாத இழிவையும் ஒரு நொடியில் கண்முன் கொண்டு நிறுத்தி விடுவர் கல்வியாளர்கள்.
இப்படிப்பட்ட சூழல்களை, என் தொழில்  பயணத்தில் நெருக்கமாக சந்தித்து வந்திருக்கிறேன். இந்த சூழலில்தான் சுயம் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கும் ஒருவரை சந்திக்க  நேர்ந்தது. அவர்தான் பேராசிரியர் ரவீந்திரன். சென்னை பல்கலைக் கழக இதழியல் துறை தலைவர். அவருடனான அனுபவம் இனிமையானது... நெகிழ்வானது.
 ஓரு விநோத அனுபவத்தை பகிர்கிறேன்.
சென்னை பல்கலையில் ஒரு டிசம்பர் மழைநாள். யாழ்ப்பாண பல்கலைக் கழக இதழியல் மாணவர்கள் நுட்ப பயிற்சிக்காக வந்திருந்தனர். பயிற்சியின் இறுதிநாள். மாணவர்கள் கற்ற வித்தைகளை காட்ட வெளி அரங்கும், பிரிவு உபசார நிகழ்வுக்கு உள் அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மணிக்கூண்டு அரங்கில் வெளி அரங்க நிகழ்வு மாலையில் துவங்கி, இரவு, 7:00 மணிக்குள் முடிக்கும் வகையில் நிரல் படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் பிரிவு உபசாரம் முன்னிரவில் நிரல் செய்யப்பட்டிருந்தது.
மாலையில் நிகழ்வுக்கு முன் மேகம் கலைந்து ஓடிக்கொண்டிருந்தது. லேசான துாறல் வருவதும், அது பல்கலைக்கழக புல்தலைகளை வருடி, வங்கக்கடலை நோக்கி பாய்ந்து கொண்டே இருந்தது. 
பயிற்சியின் கடைசி நாள் என்பதால், யாழ்ப்பாண மாணவர்கள் சென்னையை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டனர். அவர்களின் நிகழ்ச்சிக்காக நிரல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், மணிக்கூண்டு அரங்குக்கு வரவில்லை.
 நேரம் கடந்து கொண்டிருந்தது. திட்டமிட்ட நிரல்ப்படி, நிகழ்ச்சிகள் முடியம் நேரத்தில்தான் யாழ் மாணவர்கள், அரங்குக்கு வந்து சேர்ந்தனர். 
பேராசிரியர் ரவீந்திரன் புன்னகையுடன் அரங்கில் காத்திருந்தார். மாணவர்களும் அவருடன் இருந்தனர். மாணவர்கள் முகங்களில் பல்வேறு சந்தேகங்கள் தெரிந்தன.
எந்த பரபரப்பும் இல்லை. மழை லேசாக துாறிக் கொண்டிருந்தது. நிகழ்வு நடக்குமா அதுவும் திட்டமிட்டபடி... அதாவது நிரல்ப்படி. சந்தேகம்தான்.
இப்போது யாழ் மாணவர்கள் மணிக்கூண்டு முற்றத்துக்கு வந்துவிட்டனர். திட்டமிட்டபடி நிகழ்வு துவங்கியது. பார்வையாளர் முன் வரிசையில் பேராசிரியர் ரவீந்திரன் குடும்பத்தினருடன். நீரலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலைகளை வெளிப்படுத்தினர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். 
துாறலாக விழுந்த மழை துளிகளானது. அது விழிநீரில் தங்கி பார்வையை மறைத்தது. துளிகள் தடித்து வெள்ளிக் கோடுகளாக விழுந்தன. நீர் திவலைகள் சிதறி துடித்தன. அவை, மணிக்கூண்டு முற்றத்தில் விழுந்து தகித்தன.
 பார்வையாளர்கள்,  இருக்கைகளை விட்டு எழுந்து, சுற்றிலும் உள்ள திண்ணைகளில் புகுந்தனர். நிகழ்வை இந்துடன் முடித்து விடுவர்களா?. பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு இது.
எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
 பேராசரியர் ரவீந்திரன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. மழைத்துளிகளை தடுக்க, மாணவர்கள் குடை வழங்கினர். அதை பிடித்தபடி, இருக்கையை விட்டு அசையாமல் ரசித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். கொட்டும் மழையில் தடங்கல் இன்றி மாணவர்கள் ஆடினர், பாடினர், நடித்தனர். மகிழ்ந்தனர். 
கடும் மழை... கொட்டோ கொட்டென்று கொட்டியது. முற்றத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.  சூழலே மாறிவிட்டது. பேராசிரியர் எந்த சலனமும் இன்றி நிகழ்ச்சியை அவதானிப்பதிலேயே கவனமாக  இருந்தார். பெருமிதம் கொண்ட மாணவ, மாணவியர் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
 நள்ளிரவு 11:00 மணி வரை. தடங்கலை தாண்டி, நிரல்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டபடி நடந்தது.
நிகழ்வு முடிந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி, முறையான பிரிவு உபசார நிகழ்வும் நடந்தது. நள்ளிரவில் நிகழ்வு நிறைவு அடைந்தது. இது  நிகழ்வல்ல... பாடம்... இது பொது இடம் அல்ல... வகுப்பறை... நான் பார்வையாளர் அல்ல... மாணவன்.
 அனுபவ பாடங்களை அள்ளி வழங்கும்  பேராசிரியர் ரவீந்திரனின் ஒவ்வொரு சந்திப்பும் நெகிழ்வு நிறைந்தவை. வாழவும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளவும்  அவரிடம்  நிறைய இருப்பதாக உணர்கிறேன். 
                                                                                                            


இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது...


மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன் நடித்த சினிமாவைப்பார்த்து ஒருவர் மதுப்பழக்கத்தை வெறுக்க முடியுமா? அவரின் நிழல் ஆட்டத்தை புரிந்து புகைப்பதை பகைக்க முடியுமா? முடியும் என்பதை அனுபவமாக எடுத்து சொல்கிறது ஒரு தன் வரலாற்று புத்தகம். அது, பேராசிரயர் மு. ராமசாமியுடையது.
தமிழர் வாழ்வில் திரைப்படம் புகுந்து ஆட்டம் போட்டதன் விளைவு பெரும் கதையாக தொடர்கிறது. அதன் ஒரு பகுதியை,  கால ஓட்டத்தை புறக்கணிக்காமல்  நிகழ்வை உயர்த்துடிப்புடன் பதிவு செய்துள்ளது திரை வளர்த்த நான்... நான் வளர்த்த திரை எனராசிரியர் மு. இராசுவாமி அனுபவங்களை பதிவு செய்ததுள்ளார்.  பதிவுகள் என்ற முதல் இயலில் ஒவ்வொரு வரியும் உண்மை சார்ந்து  உள்ளத்தில் உறைந்து உதைத்துக் கொண்டே இருக்கிறது. சார்ந்த அனுபவத்துடனோ, இந்த புத்தகத்தில் பதிவு செய்யவில்லை. அந்தந்த வயதில், அப்போது இருந்த புறவயத்துடனும் அது சார்ந்த  உள்ளடக்கங்களை  உண்மை சார்ந்து அணுகி, பதிவு செய்து, அனுபவ  வௌியை உருவாக்கியுள்ளது.
 தமிழ் சினிமாவின் செயல்பாடு, சாதாரண ரசிகனின் அனுபவ வௌியில் ஏற்படுத்திய மாற்றங்களை  தடயங்களாக பதிவு செய்துள்ளது. புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் உயர்ந்த விழுமியத்தை தருகிறது. இந்த அனுபவ உலகில் போலிகளே இல்லை அல்லது காணமுடியவில்லை; பாசங்கை பார்க்க முடியவில்லை; கர்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை; வெட்கமும்  கூச்சமும் கூட, வேண்டாதவையாக வெளியில் நிற்கின்றன. 
அனுபவங்களில் விவரிப்புகள் இல்லை. அது காலத்துடன் சங்கமித்து கருக் கொள்கிறது.  எல்லாம் இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது என்ற அளவில்  எல்லையற்ற உண்மையை  பதிவு செய்துள்ளது. இங்கே  வண்ணப்பூச்சிகள் இடம் மாறி வந்து சிறகடிக்கவில்லை. தோப்பு துரவு பசுமையை நிகழ்த்த வில்லை. எல்லாம் அதனதன் வௌியில்  பார்வைக்கு எளிதாக நிற்கின்றன. 
சினிமா தியேட்டர் வாசலில் நிகழும் மூன்று சீட்டு சூதாட்டம் தரும் அனுபவம் சார்ந்து, அகமனம் எடுக்கு்ம் சபதம் மனிதனின் அகவெளியில் நிரம்பியிருக்கும் உண்மை. இதுபோன்று வாழ்வின் நேர்மையை வௌிப்படுத்தும் தளங்கள்  ஏராளமாக கிடக்கின்றன.
நிழல் அசைவில் அறம் கற்று, அதை வாழ்க்கையில் செயலாக்கும் அற்புதம் இந்த புத்தகத்தில் நிகழ்ந்திருக்கிறது. சினிமாவை பார்த்து உள்வாங்கிய அறத்தை, சினிமாவுக்குள் சென்றபோது அழிக்க முயலும் இடத்தில், இயல்பாகி போன செயல்பாட்டை, பின்பற்றி நிற்பதில் உள்ள உறுதி  உன்னதமாக மலர்கிறது.
சினிமா கலை, தனிமனித வாழ்க்கை, சமூக செயல்பாட்டு தளத்தில் ஏற்படும் மாற்றம், வரலாற்றுப்போக்கு என்று இந்த புத்தகத்துக்குள் புதைந்து கிடப்பவை ஏராளம். ஒன்றை ஒன்று சார்நது அவை எப்படி உருவாகின்றன என்பதை இந்த நுால்  இயல்பாக  பேசுகிறது. இவற்றுக்கு எல்லாம் அச்சாக  தாங்கி பிடித்துள்ள தத்துவம் இறுதியில் வௌிப்படுகிறது, உண்மையின் சாயல் எப்படி இருக்கும் என்பதை இந்த அனுபவங்களின் வெளியில் இருந்து அறிய முடிகிறது. வாசிக்கும் போது நெகிழ்வும் வியப்பும் மாறி மாறி மனதில் தவழ்ந்து, உறங்கிக் கிடக்கும் உப்புகரைசலை வௌியேற்றுகிறது. 
தமிழ் மொழியில் இயல்பான வாசிப்புக்கு ஏற்ற சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. நுட்பமான அனுபவத்தை தரும்.
பேராசிரியர் மு. ராமசாமியின் புத்தகம் குறித்த அறிமுகம்



Monday 4 June 2018

பிள்ளை கொம்பும் எள்ளல் நிழலும் – மனசின் கதை...2

மனசில் கதை 2
இந்த குடும்பம் தவிர, பெரும்பாலான சபை உறுப்பினர்களுக்கு, தமிழ் எழுத வாசிக்க தெரியாது. ஆனால், அனைவரும் புத்தகங்கள் சுமந்து வருவர். முகத்துக்கு நேராக விரித்து பிடித்தபடி சேர்ந்து பாடுவர். எல்லாம் கேள்வி ஞானம்தான். சபையில்  ஹார்மோனியம், பேண்ட்கள், தாளக்கட்டை, ஜிங்ஜான் என இசைக்கருவிகள் உண்டு.
ஹார்மோனியத்தை, சாமானியன் தொட முடியாது. உபதேசியார் பாலஸ் தான் வாசிப்பார். அவர், வெள்ளையும் சொள்ளையுமாக திரிவதாக ஊரில் பேசிக் கொள்வர். வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து சைக்கிளில் வருவார். மிகவும் எளிமையாக இருப்பார். சொற்களை அளந்து பேசுவார். பின் கழுத்தில் கைக்குட்டை சுற்றியிருப்பார். ஒரு மடக்கு குடை வைத்திருப்பார். அந்த சபையில் பல உபதேசி்களை பார்த்திருக்கிறேன். அனைவரிடமும், வளைந்த கம்பு பிடியுடன், மடக்கு குடை இருக்கும். வெயில், மழை என, எல்லா பருவத்திலும் வைத்திருப்பர்.
என் பாரம்பரிய குடும்ப வீட்டின் முகப்பு, தெற்கு முகமாக, மருந்துவாழ்மலை நோக்கி இருக்கிறது. அதன் எதிரே, பாசனக்கால்வாய் தாண்டி, மேற்கு முகமாக கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. என் வீடு வளாகத்துடன், நீண்டு அகண்ட மதில் சுவருக்குள், 11.25 சென்ட் நிலப்பரப்பில் பெரிய முற்றத்தை உள்ளடக்கியது. முன் மதில் ஓரம், வாசலை ஒட்டி பெரிய புளியமரம். அது, மதிலைத் தாண்டி வெண்கலராஜன் சாலையில் நிழல் பரப்பி, மருந்துவாழ்மலை பாசனக்கிளைக் கால்வாய்க்கு அப்பாலும் விரிந்து பரந்து  நிற்கிறது. வழிப்போக்கர்கள், அந்த நிழலை நுகர்வர். புளி காய்ப்பு பருவத்தில், பல குடும்பங்களின் புளித்தேவையை வெளிப்புற கிளைகள் நிறைவு செய்யும்.
நெல் அறுவடை பருவத்தில், யாசகம் கேட்டு குடும்பத்துடன் பாடி வரும் குழுக்கள், சாலையில் படர்ந்துள்ள புளியமர நிழலில் ஓய்வெடுப்பர்.  இலக்கியங்களில் குறிப்பிடும், பாணர் அல்லது விரலியரின் தொடர்ச்சியாக இவர்கள் இருக்கக்கூடும். ‘குளுவர்’ என ஒருவித புறக்கணிப்பின் எள்ளலுடன், கிராமத்தவர் மதிப்பிடுவர். மருண்ட தெலுங்கை உச்சரிப்பர். நீளமாக ஒரு பாட்டை இசைக்க துவங்குவார், ஒருவித இசைக்கருவி வாசிப்பர். பாம்புக்கூடை கக்கத்தில் தொங்கும். குழந்தைகளை நுாதனமாக கட்டி, பின்புறமாக தொங்கவிட்டிருப்பர். எந்த சூழநிலையிலும், குழந்தை பாதிக்கா வண்ணம் செய்யும் ஏற்படாக அது அமைந்திருக்கும். பயம் துளியும் முகத்தில் தெரியாது. அவச்சொற்களை கேட்டு பழகிப் போன காதுகள் இயல்பாக இருக்கும். வசைகளுக்கு எதிர்வசை இருக்காது. ஏகாந்தமான வாழ்க்கை. ஆமையை வேட்டியாடி, புளிய நிழலில் சமைத்து உண்டு களிப்பர். எலி வேட்டையும் நடத்துவர். அப்பாவுக்கு இவர்கள் மீது தனிப்பரிவு உண்டு. குளுவர்கள், சாமிதோப்பு அய்யா, பிச்சைக்காரர்கள் என, தனித்தனியே  கொஞ்சம் நெல்லை சாக்கில் மூட்டை கட்டி போட்டிருப்பார். அவர்கள், வரும்வரை அது திண்ணையில் காத்திருக்கும்
மின் தடங்கல் ஏற்படுத்துவதாக,  தமிழக மின் ஊழியர்கள், புளிய மரக்கிளைகளை, அவ்வப்போது வெட்டி வீழ்த்துவர். அந்த கிளை தளிர்களை மேய, வெள்ளாடுகள் போட்டிப்போட்டு தாவும்.
எங்கள் வளாகத்தில் புளியமர வரிசையில் கிழக்கு முகமாக, சிவப்பேறிய வேப்பமரங்கள், இரண்டு உண்டு. அவற்றின் கிளைகள், புளி போல் அகல விரிவதில்லை. அதற்கு காரணம் உண்டு.
கிராமத்தை சுற்றி,  நெல் பாசனம் அதிகம். தோவாளைச் சானல் புரவில்,  இரண்டு பருவங்களில் நடக்கும். புத்தனாறு போன்ற குளத்து புரவில், மூன்று பருவம்.  முதல் பருவம் , வைகாசியில், தென் மேற்கு பருவ மழையுடன் துவங்கும். அதை, ‘சம்பாபூ’ என்பர். அந்த பருவம், மானாவாரியில் துவங்கும். பெரும்பாலும் பங்குனியில் அவ்வப்போது, பெய்யும் மழையில் கிடைக்கும் பருவத்துக்கு ஏற்ப கரட்டு  உழவு உழுது நிலத்தை பண்படுத்த ஆரம்பிப்பர்.  வறண்ட நிலத்தை பண்படுத்தி, மண்ணை  பொடியாக்கி, பருவ மழைக்கு ஏற்ப, கரட்டில் விதைப்பு செய்வர். அந்த பருவத்தை தவற விடும் விசாயிகள் மட்டுமே, நாற்று விட்டு நடவு செய்வர்.
அந்த பருவத்தில், அடியுரமாக, குளத்து வண்டலை குவிப்பர். எங்கள் ஊரை சுற்றி உள்ள புத்தனாறு குளம், துலுக்கன் குளம், நாராயிணி குளம், இரட்டைகுளம், வாயிலாள் குளம் ஆகியவை, கோடையில்  வறண்டு கிடக்கும். அவற்றில் படிந்துள்ள, வண்டலை சுரண்டி எடுத்து, மாட்டு வண்டியில் ஏற்றி, நடை கணக்கில் வயிலில் குவிப்பர்.
கரட்டு விதைப்புக்கு பின், ஆட்டுகிடை போடுவதும் உண்டு. கிடையில், முன் கிடை, முளைகிடை, மஞ்சள்முளை கிடை என பல வகைகள் உண்டு. என் அப்பாவுக்கு மஞ்சள்முளை கிடையில் விருப்பம் அதிகம். அதை மிகவும் நம்புவார். இயற்கை விவசாயத்தில் அது பெரிய நுட்பம். அதை பயன்படுத்தும் விவசாயிகள் குறைவு. மூன்று மாதத்தில் அறுவடை நடக்கும். குண்டு சம்பா என்ற சிவப்பு ரக நெல்தான், பிரதான நெல்.
அடுத்த பருவம், ஆவணி,  புரட்டாசியில் துவங்கும். அதை, ‘வாசுரமிண்டான்பூ’ என்பர். பேச்சு வழக்கில், வசிரண்டான்பூ. அதில் பிரதான, நெல் ரகமாக வாசுரமிண்டான் என்ற வெள்ளை நெல் இருக்கும். இதன் காலம், ஆறு மாதங்கள்.
முதல் பருவம் முடிய மூன்று மாதங்கள் என்பதால், இயற்கை உரக்குண்டு நிறைந்திருக்காது. இரண்டாம் பருவம், மழையில் புரளும். வடகிழக்கு பருவமழையை ஒட்டியது. எனவே, தண்ணீர் தாராளமாக இருக்கும். முழுக்க தொழி விதைப்பும், நடவும் தான் நடக்கும்.  இயற்கை எரு உரம் குறைவு என்பதால், வயலில் இலை தளைகளை நிறைப்பர். இதற்காகவே, மரங்களை நட்டு வளர்ப்பர், வேம்பு, பூவரசு, புங்கன், வாராட்சி, வாகை, பன்றிவாகை போன்ற மரத் தழைகள் உரமாகும். அந்த பருவத்தில், குளை அரக்குதல் என்பது பிரதானமாக நடக்கும். அதாவது,  கிளைத்து, செழித்து நிற்கும் மரக்  கிளைகளை,   வெட்டி வீழ்த்தி, தழைகளை ஆராய்ந்து, கட்டுகளாக்கி வயலுக்குள் சுமப்பர். வயலில், தறிகுத்தி என்ற வெட்டு கருவியை ஊன்றி, துண்டுகளாக கூறுபோட்டு, வயல் முழுவதும் பரப்புவர். பின், தொழியுடன் புகுத்தி ஒரு உழவு போடுவர். அவை, மண்ணில் மூழ்கி,  அழுகி உரமாகும்.
கொப்புகளுடன் வெட்டுவதால், மர வளர்ச்சி பாதிக்கும். தொடரும் வடகிழக்கு பருவமழையால்,  மரங்கள் பசுமையாகிவிடும்.  இந்த அரக்கும் வைபோகத்தில் , ஓர் உத்தியும் கடைபிடிப்பர். அரக்கும் மரங்களில், கண்டிப்பாக ஒரு பெரிய கொம்பை, வெட்டாமல் விட்டுவைப்பர். அதை, பிள்ளை கொப்பு என்பர். அது, அந்த பருவத்தில் தனித்துவத்துடன் வளர்ந்து, மரத்தின் இருப்பை உறுதி செய்யும்.
இது போன்ற அரக்குதலால் தான், எங்கள் வீட்டு வளாக வேப்பமரங்கள், சுற்றுச்சுவருக்குள் அடங்கி நின்றன. ஆனாலும், வெண்கலராஜன் சாலையில் அவற்றின் நிழல் விழுந்து, வழிப்போக்கர்களுக்கு அவ்வப்போது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்து கொண்டுதான் இருந்தது.

என் மனசின் கதை....1

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, சிற்ப வடிப்புக்கு புகழ்பெற்ற ஊர். சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் கட்டும் பணிக்கு  அழைத்துவரப்பட்ட ஸ்தபதிகள்,  இங்கு தங்கி நிலை பெற்றுவிட்டதாக செவி வழியில் அறிவேன். அவர்கள் வசிக்கும் பகுதி சேந்தன்புதுார். சேர்ந்தபுதுார் என்பாரும் உளர். பேச்சுமொழியில், ‘சேந்தம்பூரு’ என்பர் அதிகம். 
மயிலாடியுடன் சேர்ந்து உருவான பகுதி என்பதால், சேர்ந்தபுதுார் ஆனது என பெயர் காரணம் சொல்லவார்  பிரபல தமிழ் வித்துவான் பூமணி. இங்குள்ள தெங்கம்பொற்றை என்பது சிறிய பாறை குன்று. இந்த கல், சிற்பம்  வடிக்க தோதானது என்பதால் சிற்ப தொழில் வளர்ந்ததாக சொல்வோர் உண்டு. இந்த பொற்றையை உடைத்து எடுத்த கல்லில்  செதுக்கிய சிற்பங்கள், பல நாடுகளில் நிற்கின்றன. இந்தியாவிலும் சென்னை மெரினாவிலும் கூட நிற்கிறது.
மயிலாடிக்கு தெற்கே, 3 கி.மீ., துாரத்தில், மருந்துவாழ்மலை, இந்திய துணைக் கண்டத்தின் தென்முனையில் உள்ள பாறைக்குன்று. இதன் வடக்கு அடிவாரத்தில் ஆலடிவிளை கிராமம். இது, என் தந்தை வழி குடும்பத்தினர் வசிக்கும் ஊர். இந்த ஊர் பெயருக்கு, சமூக அந்தஸ்து குறைவு என்று கருதி,  பெருமாள்புரம் என்றுதான் பலரும் குறிப்பிடுவர். அரசு பதிவிலும் அப்படித்தான் உள்ளது. சாதி இழிவு போல், ஊர் பெயரிலும் இழிவு உண்டு என்பதை இதனால் அறிக. இதை புரிந்து கொள்ள பல நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும்.
 ஊரில், முத்தாரம்மன் கோவிலும் அதை இணைக்கும் தெருவும், ஜெர்மனியில் இருந்து, 1800 களில் புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தவுபே பெயரில் தேவாலயமும் அதை சுற்றி, றிங்கல்றோபிபுரம் என்ற பெயரில் கிறிஸ்தவ குடியிருப்பும் உருவாகியுள்ளது. ஊரின் கிழக்கே சற்று தொலைவில்  சிறிய குடியிருப்பு தனியாக உள்ளது. அது பொன்னம்மாள்புரம் என்று அழைக்கப்படுகிறது. வினோபாஜியின் பூமிதான இயக்க நடை பயணத்தின் விளைவால் உருவான குடியிருப்பு அது. ஒவ்வொரு குடியிருப்பும், 5 செண்ட் நிலத்தைக் கொண்டது.
ஊரின் நீர் ஆதாரமாக, பேச்சிபாறை அணையில் இருந்து நீர் கொண்டு வரும், தோவாளை பாசனக்கால்வாய் உள்ளது. அது மருந்துவாழ்மலை பாசனக் கிளைக்கால்வாயாக ஆலடிவிளை கிராம எல்லை வரை பாய்கிறது. பொற்றையடி கிராமம் அருகே, குன்றுகள் சூழ்ந்த இடைவற்று குண்டில் அது நிறைவு பெறுகிறது. கிட்டத்தட்ட, 980 ஏக்கர் ஆயக்கட்டு இந்த கிளைக்கால்வாயால் பாசனவசதி பெற்றது. பாசனக்கால்யை ஒட்டி, பழைய சாலை உள்ளது. அது,  வெண்கலராஜன் சாலை என அழைக்கப்பட்டது. அந்த சாலையில் சங்கு முத்திரை பதித்த மைல்கற்கள் உண்டு.
என் குடும்ப வீடு, பாசனக்கால்வாயை ஒட்டி உள்ளது. மயிலாடியை மையமாகக் கொண்டு, 1806 முதல் புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த  ஜெர்மனி நாட்டு பாதிரியார் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தேளபே  பெயரிலான தேவாலயம், என் வீட்டின் எதிரே, பாசனக் கால்வாய் மறுகரையில் உள்ளது. அந்த ஆலயம் முழு அளவில் இயங்க  போதுமான உறுப்பினர்கள் அப்போது இல்லை. எனவே அதை சபை என்பர். ஞாயிற்றுக்கிழமைகளில், ரிங்கல்தெளபே சபையில், உபதேசம் நடக்கும். அதற்கு இரண்டு முறை, மணி அடிப்பர். அது வட்டமாக தோசைக்கல் போல் இருக்கும், வெண்கலத்துடன் சில உலோகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. லண்டனிலோ, ஜெர்மனியிலோ தயாரித்து பரிசாக கொண்டு வரப்பட்டதாக சொல்வார்கள். ஒரு ஐரோப்பிய பெண் பரிசாக கொடுத்தது என்பர். அதன்  விட்டத்தில் ஒரு ஓரம், சிறிய இரண்டு ஓட்டைகள் உண்டு. அதில் சிறிய கொச்சங்கயிறு நுழைத்துக் கட்டி, ஆலயத்தின் வலது புற வாசல் அருகே வளைந்த கம்பியில் தொங்கவிட்டு, கொட்டபுளியால் அடிப்பர். இனிமையான அதன் ஓசை, கிட்டத்தட்ட நான்கு கி.மீ., வரை கேட்கும். அதை மணி அடித்தல் என்பர்.  அப்போதைய சபை டீக்கனார் வேதக்கண் என்பவர் நிறைவேற்றுவார்.  மணி அடிப்பதற்கும் ஒரு முறை உண்டு. காலை, 8:00 மணிக்கு முதல் மணி. அதை ஒற்றை மணி என்பர். குறிப்பிட்ட எண் வரை எண்ணிக்கொண்டே, ஒற்றை எண்ணிக்கையில் மணியை அடிப்பார். அடுத்து, 8:30 மணிக்கு இரண்டாம் மணி ஒலிக்கும். அதை இரண்டை மணி என்பர். குறிப்பிட்ட நெடி இடைவெளியில், இரட்டை நிரலில் மணியை அப்போது அடிப்பார். அந்த மணி அடிப்பதற்கு முன், சபை உறுப்பினர்கள், ஆலயத்துக்குள் சென்றுவிட வேண்டும். ஆராதனை துவக்கம்தான் இரட்டை மணி. அந்த மணி ஒலிக்கும் போது, சபையில் குறும்புக்கார ஊறுப்பினர்கள், ‘ வந்தால் வா... வராவிட்டால் போ’ என்ற தொனியில் மணி ஒலிப்பதாக எங்களிடம் கிண்டலாக சொல்வர். 
 சபையில் உபசேதம் செய்ய உபதேசியார் பாலஸ் என்பவர் மயிலாடியில் இருந்து வருவார். அவரை, ‘ஒதேசியார்’ என்று அழைப்பர். கிண்டலாக, ‘ஓதேசி’ என்பாரும் உண்டு. சபையில், இசையுடன் பாட்டும், காணிக்கை சேகரிப்பும் உபதேசமும், கண்ணீர் மல்க ஜெபமும், கெஞ்சி மன்றாட்டும் நடக்கும்.
குளித்து, சுத்தமான ஆடை உடுத்தி, ஆண்களும் பெண்களும், குழந்தைகளுடன் சபைக்கு போவார்கள். பெண்கள் சேலை தலைப்பால் முக்காடிட்டிருப்பர். வாசல் படிக்கல் அளவில் பைபிள், ஞானப்பாட்டு கீர்த்தனை மற்றும் இசைப்பாடல் புத்தகங்கள் வைத்திருப்பர். முக்காடு குலைந்துவிடாமல் கவனமாக இருப்பர். கலைந்தால், உடனே சுட்டுவிரல்கள் நீளும். வாயை குவித்து, ‘உச்...’ என, ஓசை எழுப்பி, முக்காட்டை சரி செய்ய சைகை வைப்போரும் உண்டு. அன்று சபை முடிந்ததும், ‘ஏட்டி... ஓர்ம இல்லாமயா இருக்க...’ என்று துவங்கி கடும் வசவுகள் சுற்றிவளையும். எனவே, முக்காடில் கவனமாக இருப்பர் பெண்கள். சில நேரம் அது குடும்பங்களுக்குள் பெரும் சண்டையாக மூண்டு, அடிதடியாகி பகையானதும் உண்டு. 
சிலநேரம் முக்காட்டை, குழந்தைகள் இழுத்து குலைத்துக் கொண்டே இருப்பர். தாய் எரிச்சலில் இருந்தால் முதுகில் நாலு சாத்து வைப்பார். அது, கண்ணீருடன் மறுகித்திரிந்து ஒரு தனி்ப்பாடல் பாடும். 
பல பெண்கள் கருணையுடன் குழந்தைகளை விலக்குவர். அருகே பார்த்திருக்கும் பெண் சும்மா இருக்காமல், ‘முதுகுல ஒண்ணு போட்டு... அந்தால வெரட்டி வுடாமுட்டி...’ என்று முணுமுணுப்புடன் அறிவுரை சொல்வதும் உண்டு.
அந்த ஊர் சபை குடும்பங்களில், முதலில் மதம் மாறியவர் ஞானப்பூ மகள் லேயாள். இவரது கணவர் இசக்கிமுத்து. மந்திர தந்திரத்தில் பயிற்சி பெற்றவர் என கூற அறிவேன். மனைவி மதம் மாறியதை எதிர்த்து, நீண்ட போராட்டம் நடத்தி தோற்றவர். இவர்கள் வழி குடும்பம்தான் அந்த ஊரில் ஆதி கிறிஸ்தவர்கள். 

ஒரு மரணத்தின் இயல்பு

ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டதாக காலையில் செய்தி வந்தது. இந்த மரணம் யாரையும் பாதித்திருக்க வாய்ப்பில்லை. யாரும் அஞ்சலிக் குறிப்பும் எழுதப்போவதுமில்லை. அக்கம் பக்கத்தவர் சொல்லும், ‘ கிடையில் விழுந்து அழுந்தாமல் போனாரே’ என்ற வார்த்தைகள் மட்டுமே அவருக்கு அனுகூலமானவை. .
உலகத்துக்கோ, இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ, கன்னியாகுமரி மாவட்டத்துக்கோ, ஆலடிவிளை ஊருக்கோ, அவர் மரணத்தால் இழப்பு எதுவும் இல்லை. சொல்லப்போனால், தமிழக அரசுக்கு கொஞ்சம் அனுசரணைதான். ஆம்... இனி அவருக்கு வழங்க வேண்டிய, மாதாந்திர உதவித்தொகையை, அரசு வழங்க வேண்டியதில்லை. அவர் குறித்த ஆவணங்கள் எதையும் பராமரிக்க வேண்டியதில்லை. 
உலகமோ அல்லது அவர் வாழ்ந்த வட்டாரமோ நன்மை பெற அவர் செய்த சேவை ஏதாவது உண்டா... ஏராளம்... ஏராளம்...
செல்லம் என்ற செல்லம்மா, இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு அனேகமாக, 87 வயதுக்குள் இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம், ஆலடிவிளை ஊரில், மருந்துவாழ்மலை வலது பாசனக்கால்வாய் ஓரம், பொதுப்பணி்த்துறை புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்தார். 
நீண்ட தனிமையான வாழ்க்கை.
மண வாழ்க்கை முறையாக அமையவில்லை. கிட்டத்தட்ட 16 வயதில் கன்னிமேரி கதைபோல் ஒரு பெண் குழந்தை. 
அப்போது நான் பிறந்திருக்கவில்லை. கதையை பிறர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். 
தன்னந்தனியாக வாழ்க்கை.விவசாய துணை வேலைகள் செய்வார். நாற்று நட, களை எடுக்க என்று, கூலி வேலைக்கு செல்வார்.
சிறுவனாக இருந்த போதே, அவரது வேலை ஒருங்கிணைப்பு ஆளுமை கண்டு வியந்திருக்கிறேன். 60 முதல் 70 பெண்கள் கொண்ட குழுவை, மிகச் சிறந்த ஆளுமையுடன் வழிநடத்துவார். விவசாய பணிகளை ஏற்பது, பணி பகிர்வது, சம்பளம் பெற்று பிரித்துக் கொடுப்பது, கண்காணிப்பது, வழி நடத்துவது என, அவரது ஆளுமை பரந்து விரிந்து கிடப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
ஒருங்கிணைப்பு பணியை மட்டுமே செய்யாமல், அவர்களில் ஒருவராக களத்தில் சேர்ந்து பணியாற்றுவார். எங்கள் வயல்களில் வேலைக்கு அவரது குழுவினர்தான்.
செயல்கள் எல்லாம் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாக கறாராக இருக்கும். கனிவானவர், கடும் முன் கோபி, கோபம் எழுச்சி பெ றும் போது, வார்த்தைகளுக்கு பொருள் தேட சிரமப்பட வேண்டியிருக்கும். எல்லாம் அத்துடன் முடிந்துவிட்டதாக வசவுகள் அமையும். 
மறுநாள் எல்லாம் மறையும்...
பணி ஒருங்கிணைப்பில், உழைப்பு சுரண்டல் அதிகம் இருப்பதை, அரசு மற்றும் தனியார் நிர்வாக மேல் மட்டத்தில் இருந்து சாதாரண கூலி பணிகளில் வரை பார்த்திருக்கிறேன். இவரது உழைப்பு குழுவில் ஒரு முறை கூட, உழைப்பு சுரண்டல் நடந்ததாக அறிந்ததில்லை.
நடத்தை விஷயத்திலும் அப்படித்தான். உடல் இச்சைக்காய் அவர் ஓடித்திரிந்ததாக ஒரு விரல்கூட சுட்டியதில்லை. 
ஒரே ..உறவு... ஒரே குழந்தை... அதன் பின் இறுக்கமான மனநிலையுடன் வாழ்க்கை.
சுற்றித்திரிந்த ஆண் குரங்குகளிடம், பிடிபடாமல் கிட்டத்தட்ட, 70 வருடங்களை கடந்துள்ளார் என்பது வியப்பாக இருக்கிறது. 
அவரது வாழ்க்கை போராட்டமானது... ஆனால் நம்பிக்கை நிறைந்தது. பேச்சு வாக்கில் பல முறை, அவரது நம்பிக்கையின் அடிநாதம் பற்றி கேட்டுள்ளேன்; ஒருமுறை கூட வாழ்வு சார்ந்த நிகழ்வுகளை, இழித்தோ, பழித்தோ பேசியதில்லை. எதையும் விமர்சனப் பூர்வமாக அவர் கொண்டதில்லை. சிந்திக்க மறுக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.
அவரது வியப்பான தோல்வி, ஒரு சிலையாக நிற்கிறது. அதை வணங்கவும் அவர் தயங்கவில்லை. ஒருமுறை இது பற்றி கேட்டேன். எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. அதை நம்பிக்கையாக பார்ப்பதாக சொன்னார்.
அவரது வாழ்வு வியப்பானது... அவரது நம்பிக்கையும், உறுதியும் மேன்மையானது... உற்பத்தியில் அவரது உழைப்பு அளவிட முடியாதது.
அவர் நீண்ட துயிலுக்கு போய்விட்டார். அவரது, உடல் மற்றொன்றாய் மாறிக் கொண்டிருக்கிறது. கண்ணீர் அஞ்சலிகள்.