Wednesday 4 July 2018

ஒரு அரசு பள்ளி வளாகமும், 214 தந்திகளும்

அது, 1991 ம் வருடம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி செய்துவந்தேன். புதுவை பதிப்புக்கு உட்பட்டது.  சின்னக்கடைத் தெருவில் மாஜி அமைச்சர் ப.உ.சண்முகம் வீட்டுக்கு எதிரே அலுவலகம். தங்கும் வசதியுடன் கூடியது. கிராமங்களில் நேரடியாக தகவல் பெற, மக்களைத் தேடி, சந்தை, கோயில், காடு கரை கழனி  என,  அலைந்து கொண்டிருந்தேன்.
கலெக்டர் அலுவலகம், அரசு துறை அலுவலகங்கள், போலீஸ்துறை, நீதிமன்றம், விழாக்கள், கோயில்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசியல் பிரமுகர்கள் என்று, செய்தி சேகரிக்கும் பணியை நிருபர்கள் வழக்கமாக முடித்துக் கொள்வர். இந்த வழக்கத்தை மீறுவதால் மற்ற நிருபர்களுக்கு கொஞ்சம் குமுறல் இருக்கும்.
 அண்ணாமலை கோயிலைச் சுற்றி மட்டுமே அப்போது நகரம். இப்போது, மலை சுற்றும் பாதையில் கஞ்சா புகையும் இத்யாதியும் உண்டு. அவ்வளவு சுலபமாக அந்த வழியில் போக முடியாது. ஜல்லி பெயர்ந்து கிடக்கும் அழிவுற்ற பாதை  உண்டு. அதுவும், சீனிவாசா உயர்நிலைப் பள்ளி வழியில் இருப்பதால். அந்த பள்ளி நிறுவனர் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் வல்லவர் என அறிவேன். அவரைத் தேடிக் கொண்டு கிராமமக்கள் அங்கு அவ்வப்போது வந்து செல்வர்.
 செய்திக்கு பஞ்சம் வரும் நாட்களில், அந்த பகுதிக்குள் சுற்றியலைந்து எழுதுவேன். அடுத்து சில நாட்களுக்கு அந்த பகுதியில் போலீஸ் நடமாட்டம் அதிகமிருக்கும். எனக்கும் கொஞ்சம் மிரட்டல் வரும்.
செய்தி பஞ்சமாக இருந்த ஒருநாள். ஒருவரை, அண்ணாமலை கோவில் முகப்பு மண்டபத்தில் சந்தித்தேன். முன் அறிமுகம் இல்லாதவர்தான். பேச்சின் போது கலசபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மூடிக்கிடப்பதாக சொன்னார். அந்த ஊர் எனக்கு புதுசு. போட்டோகிராபர் சோலையிடம் வழி கேட்டு பஸ்சில் போனேன். தி.மலை – போளூர் மெயின் ரோட்டில் ஆற்றைத் தாண்டி இறங்கி, அங்கிருந்த சைக்கிள் கடையில் வழி விசாரித்தேன். அடையாள அட்டையை காட்டி வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, அங்கு போனேன். வகுப்பறைக்குள் வாத்தியார்கள் சீட்டாடிக் கொண்டிருந்தனர். விசாரித்தேன். தலைமை ஆசிரியரை கடுமையாக விளாசினர். வாங்கிக் கொண்டேன்.
தலைமை ஆசிரியர் தனித்திருந்தார். சந்தித்து விபரம் கேட்டேன். சில தகவல்களை சொல்லிவிட்டு, கிராமத்தில் பெற்றோரை சந்திக்கச் சொன்னார்.ரேண்டமாக, 15 பேரை வீடுகளில் சென்று சந்தித்து பேசினேன். ஆசிரியர்கள் மீது கடும் குற்றச்சாட்டு கூறினர். அவை:
கந்துவட்டிக்கு பணம் விடுகின்றனர்.
வட்டி பிரிக்க மாணவர்களை அனுப்புகின்றனர்.
முறையாக வகுப்புக்கு வந்து பாடம் நடத்துவதில்லை.
வீடு, விவசாய வேலைக்கு மாணவர்களை பயன்படுத்துகின்றனர்.
இவற்றை தடுக்க முயன்ற தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி வகுப்பு புறக்கணிப்பு நடத்தினர். வகுப்பை புறக்கணிக்கும் ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளியை புறக்கணித்திருந்தனர்.
இதை செய்தியாக்கி அனுப்பினேன். நாளிதழில் முக்கால் பக்கம் வந்தது. மறுநாள் கல்வி அதிகாரிகள் எல்லாம் பள்ளிக்கு விரைந்தனர். தொடர்ச்சியாக அது பற்றி செய்தி போட்டேன். ஊர்மக்களே திரண்டு வந்து, நடப்பதை சொல்லிவிடுவர்.
மறுநாள், புதுவை தலைமை அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது. செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்த திரு ஹரியை சந்தித்தேன். சிரித்துக் கொண்டே, ‘ரிக்கார்ட் பிரேக்’ என்றார். புரியாமல் முழித்தேன். நிர்வாகியை பார்க்கச் சொன்னார்.
நிர்வாகி அறைக்கு போனேன். அவர் முன்,  தந்தி காகிதங்கள் அடுக்கப்பட்டிருந்தது. சிரித்துக் கொண்டே நிர்வாகி சொன்னார்... ‘எத்தனை தந்தின்னு எண்ணிப் பாருங்க... உங்கள ஒடனே அங்கிருந்து மாத்தச் சொல்லி கம்ளயிண்டு அனுப்பியிருக்காங்க... எடுத்துட்டு போயி ஒங்க மேஜையில வைங்க. நாளைக்கு வாத்தியாரு எல்லாம் அங்க வருவாங்க... பாக்கட்டும்’ என்றார். அவற்றை கட்டாக எடுத்துக்கொண்டு வெளியே வந்தனே். ஹரி அறையில் அமர்ந்து எண்ணினோம். 214 இருந்தது. ‘அவ்வளவு வாத்தியாருங்க அங்க இல்லையே...’ என்று ஹரியிடம் சொல்லி விடை பெற்றேன். அவர் சிரித்துக் கொண்டே இருந்தார்.
இன்று ஹரியின் நினைவு தினமாக இருக்கலாம்.  

No comments:

Post a Comment