Thursday 21 March 2019

அடைக்கலம் வரும் குருவிகள்

அது, இந்திய –சீன போர் முடிந்திருந்த காலம். இந்தியாவின் தென்முனையில் உள்ள எங்கள் கிராமத்திலும், போர் பீதி நிறைந்திருந்தது. பகலில், விமானச் சத்தம் கேட்டால் ஒருவகை பதட்டம் நிலவும். இரவில் என்றால், விளக்கை அணைக்கை சொல்லி பதட்டமாக சமிஞ்சை செய்வர். குரலற்ற சொற்களை காற்றி்ல் ஏற்றுவர்.
அனேகமாய், அது 1965 ம் ஆண்டு என  நினைக்கிறேன். எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. புன்னைக்காய் எண்ணெய் விளக்குகள் தான் அதிகம். தெரு விளக்குகளுக்கு மண்ணெண்ணெய். எங்கள் வீட்டு மாடியில் சீட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. அவற்றை நாங்கள் அடைக்கலான்குருவி என்போம். மனதில் எப்போதும் அடைக்கலமாக இருக்கும்.
அந்த குருவிகளை சலனப்படுத்த என் பெற்றோர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவை, எங்களுடன் வாழ்ந்தன. மாடியில் உலரும்  புழுக்கிய நெல், அறுவடையாகி களத்தில் விழும் நெல், மாட்டு சாணத்தில் நெளியும் புழுக்களை உண்டன. மாடிக்கும், களத்துக்கும், தொழுவத்துக்கும் மாறி மாறி பறந்து கிறங்கடித்தன.
கிட்டத்தட்ட, 60 குருவிகள் வரை இருக்கலாம். முகத்தில் கரியை பூசியது போல் ஆண்குருவிகள் அழகு காட்டும். மாடி எறவாணம் முழுக்க அவற்றின் கூடுகள் தான். ‘சிட் சிட்’ என, குழாங்கற்களை உரசுவது போல் அவை அன்பைப் பரிமாறிக் கொள்ளும்.
ஒருநாள், ஒரு குஞ்சு கூட்டிலிருந்து நழுவி, மாடியில் விழுந்து கிடந்தது. அதை அப்பாவிடம் காட்டினோம். வரிசை கட்டி கூடுகள் இருந்ததால், அடையாளம் காண முடியவில்லை. கூட்டில் நழுவியது மீண்டும்  அங்கு சேர வாய்ப்பில்லை என, அப்பா சொன்னார்.
அடைக்கலான் குருவிகளின் மகிழ்ச்சியை, காதலை, கோபத்தை நான் நன்கு அறிவேன். அதன்பின், 91 வரை தொடர்ந்தும், இடைவெளிகளிலும் அவற்றை கவனித்துள்ளேன். எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் இருந்ததில்லை. சீராகவே வாழ்ந்தன.
93 ல், அப்பா மரணத்துக்குப்பின்,  விவசாய உற்பத்தி,  குறைய ஆரம்பித்தது. தொழுவத்தில் மாட்டின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. இரை கிடைப்பதில், சிட்டுகளுக்கு பிரச்னை ஏற்பட்டது. அவையும் படிப்படியாக குறைந்தன. உற்பத்தி சார்ந்த பகுதிகள் நோக்கி அவை நகர்ந்திருக்கலாம். ஆனால், மனதின் விளிம்பில் அவற்றின் சிறகசைப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
சென்னை, மவுண்ட் ரயில்நிலையம் அருகே, உடற்பயிற்சிக்காக, இரண்டரை ஆண்டுகளாக அதிகாலையில் சென்றுவருகிறேன். பயிற்சி மைய ஜன்னலை திறந்தால் சுற்றிலும், மூன்று மொபைல் டவர்கள் தெரியும். மையத்தை ஒட்டிய ஒரு வீடு மிகவும் பழமையானது. அங்கு, ஆறு மாடுகள் உள்ளன. அவை உலவுவதற்கு கொஞ்சம் பரப்பு காலியாக உள்ளது. அதில் சிறு புதரும், சில மரங்களும் உள்ளன.
அந்த வளாகத்துக்கு, தினமும் இரண்டு உண்ணி கொக்குகள் வரும். மாடுகளிடம் அவற்றுக்கு இரை கிடைக்கிறது. புதரில் சிட்டுக்குருவிகள் உண்டு. கிட்டத்தட்ட, 30 குருவிகள் இருக்கலாம். அவற்றுக்கு மாட்டுச் சாணத்தில் புழுக்கள் கிடைக்கின்றன. தினமும் பார்க்கிறேன். எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இல்லை.
பயிற்சி நாட்களில், சில நிமிடங்களாவது இவற்றை பார்க்கும் அனுபவம் பெறுவேன். அப்போது, அணில்களுக்கு பயந்தது போல், பரபரப்பாக பறந்து கலகலக்கும் சிட்டுகளை கவனிக்க தவறுவதில்லை. அந்த காட்சி விரிந்து மொபைல் கோபுரங்களையும் விலகவிடுவதில்லை.      

உத்திர பட்டையும் பாயாசக் கஞ்சியும்

நினைவிடத்தை, குழிவாசல் என அழைக்கும் வழக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்டு. மையக்குழி என்றும் அழைப்பர். பங்குனி உத்திர நாளில்,  சில குழுக்களுக்கு குழிவாசல் முக்கியத்துவம் பெறும்.
அன்று, நினைவிடத்தை துலக்கி, சுண்ணாம்பு தெளித்து வெற்றிலை, பாக்கு, பூக்களால் படையல் வைத்து, அந்த குடும்பத்தினர் வழிபடுவர். தொடர்ந்து, அரைப்பத இனிப்பில் கஞ்சி காய்ச்சி, முற்பகல் முதலே விநியோகிப்பர். கஞ்சி குடிக்க, பனை ஓலை பட்டைகள் தயாராக இருக்கும்.
நினைவிடத்தில் கஞ்சி காய்ச்சி விநியோகிக்க வழி இல்லாத ஏழைகள், அண்டை அயலில் ஊற்றும் கஞ்சியை, பட்டைகளில் குடித்து விட்டு, பாத்திரங்களில் வாங்கியும் செல்வர்.
ஒரே பிரிவை சேர்ந்தர்கள் வசிக்கும் ஆலடிவிளை கிராமத்தில், காலசுவாமி, மன்னர் ராசா ஆகியோரை முதன்மை தெய்வமாக வழிபடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இது போன்ற, ‘கஞ்சி வார்த்து  ஊற்றும்’ நடைமுறையைப் பின்பற்றுவர்.
கஞ்சி காய்ச்சுவதற்கு, ‘குட்டுவம்’ என்ற வெண்கல கலங்கள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் வீட்டில் இரண்டு குட்டுவங்கள் உண்டு. அவற்றைக் கேட்டு உத்திரத்துக்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, போட்டி போட்டு முன்பதிவு செய்ய வருவதை பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்வரை கடைபிடித்த  நடைமுறை இது. கலாசாரமும், நம்பிக்கையும் எவ்வளவு வேகமாக மாறிவருகிறது. 
#மாறும்கலாசாரம்

Thursday 14 March 2019

அறிவைப் போற்றும் காலம்

சென்னை, அண்ணாசாலையில் அப்போது பணி செய்துகொண்டிருந்தேன். ஒரு பிற்பகல் என்று நினைவு. எங்கள் அலுவலக முகப்பில் சிறு புல்வெளியில் ஆ.இரா.வெங்கடாசலபதியைச் சந்தித்தேன். பாரதியின் ஆக்கங்களைச் செம்பதிப்பாகக் கொண்டு வருவது தொடர்பான பணிக்காக வந்திருந்தார். திட்டத்தை எளிமையாக சொன்னார். குறைந்த பேச்சும், அதிகம் உள்வாங்கும் திறனும் அவரிடம் இருப்பதை உணர்ந்தேன். அது மிகக்குறைந்த நேர சந்திப்பு.
தொடர்ந்து சில இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். உரைகளை கேட்டிருக்கிறேன். சென்னை பல்கலைக்கழக இதழியல் துறையில், கருத்தரங்கங்களில் சந்தித்திருக்கிறோம்.
அவரது எழுத்துக்களை ஊன்றி வாசித்திருக்கிறேன்; பயனுள்ள தகவல்களை பெற்றுள்ளேன். அவருடனான சந்திப்புகள் சில கணங்கள்தான் என்றாலும், நுட்பமாக பதிந்துள்ளன. சொற்கள் குறைவு... அவற்றில் கிடைத்த அனுபவம் நிறைவு.
ஒருமுறை, பிரிட்டீஷ் ஆட்சியில் நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ் பற்றிய தகவல்களை திரட்டி வந்திருந்தார். உரிய ஆதாரங்களைத் தந்து ஒரு செய்திக்கட்டுரை வெளியிடக் கேட்டார். சிறு செய்திக்கட்டுரையாக எழுதியிருந்தேன். தகவல்களை தொகுத்திருந்த விதம் அவருக்கு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். பொதுவாக, என் பணியில் இது போன்ற பின்னுாட்டங்கள் கிடைப்பது அரிது.
ஒருமுறை சென்னை பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ.ரவீந்திரன் அறையில் பேசிக் கொண்டிருந்தோம். ‘ஸ்கூட்டர்’ என்ற சொல்லை, தமிழ் படுத்தி, ‘எப்படி எழுதலாம்...’ என்று கேட்டேன். மடைதிறந்த வெள்ளம் போல், ‘குதியுந்து’ என்றார். அது காட்சியாக மனதில் படிந்தது.
அந்த சொல் அருளியதையொட்டி, ஒரு நாள் அண்ணாசலையில் தேவர்சிலையை ஒட்டி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். அருகே குதித்து பாய்ந்து ஓடிய காட்சி நிரம்பியது. அது ஒரு குதியுந்து. என் மன நிழலில் அவர் எப்போது வந்தாலும், ஒரு குதியுந்துவுடன் இணைத்து பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது. அவரது அறிவுக்கூர்மை இணக்கமானது. அவரது எளிமையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவரது சிந்தனை வழித்தடம் எனக்கு உகந்தது.
சமீபத்தில், அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவையொட்டி, சென்னை பெசண்ட்நகரில் நடந்த இறுதி நிகழ்வின் போது சந்தித்தேன். அவருடன் வந்திருந்த நண்பரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘தகவலை சரியாக உள்வாங்கி, செய்தியை மிகையில்லாமல் எழுதுபவர்’ என்று குறிப்பிட்டார். அவர் மனதில் என் மீதான எண்ணப்படிமத்தை புரிந்து கொண்டேன்.
அவரது பங்களிப்புகள் தமிழை செழிமைப்படுத்தியுள்ளது. அரிதிலும் அரிதான செயல்களை நுட்பமாக, முழுமையாக செய்யும் அறிஞர் அவர். அவரது அறிவுலக உழைப்பை பாராட்டி, விரிவும் ஆழமும் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்க நிகழ்வு சிறக்க வாழ்த்துகிறேன். சான்றோரைப் போற்றுதல் நம் தலைக்கடனே...

நிலம் பயன் உயிர்ப்பு

ஏழைகளுக்கான நிலப்பகிர்வில் முன்னிலை வகிக்கும் களப்போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். பூமி தான இயக்கத்தில் இணைந்து, இந்தியாவில் ஏராளமான போராட்டங்களை வெற்றியாக்கியவர், தஞ்சை வெண்மணி கொடூர சம்பவத்தை தொடர்ந்து களப்பணி ஆற்றியவர். 90 வயதைக் கடந்தும், அயராது மக்கள் பணி ஆற்றி வருகிறார். அவரது பயன் வாழ்க்கையை, தோழர் மலர்விழி ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை, எடிட் செய்து செம்மையாக்கி இறுதி வடிவம் செய்துள்ளேன்.
புத்தகத்தில் இருந்து...
கூனி குறுகி வேலை செய்தாலும் அரைவயிறு கஞ்சிக்கு தான் கூலி கிடைக்கும். கூலி நெல்லை ஊற வைத்து உலர்த்தி அரைக்க நேரமில்லாமல், ஊற வச்ச உடனே அப்படியே குத்தி, கும்ப வாசனையோடு கஞ்சி காய்ச்சி குடிக்க வேண்டும். உயிர காப்பாற்றிக்க, மறுநாள் வேலைக்குப் போவார்கள்.
சமயத்தில், கஞ்சிக்கு வெங்காயம், காணப்பயிறு துவையல், வயலில் பிடித்த நண்டு போன்றவை வெஞ்சணமாக இருக்கும். பண்டிகை நாட்களில் எஜமான் வீட்டில் வடித்து போடும் கும்பச்சோறு தான் நெல் சோறு.
இந்த நிலை எல்லாம் ஏதோ இருநூறு, முன்னூறு ஆண்டுகால வாழ்க்கை அல்ல... நம் பாட்டி தாத்தா காலத்தில் ஏறக்குறைய, 50 ஆண்டுகளுக்கு முன் வரை, தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் நிலவிய கொடுமை. உழைத்து வாழ்ந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் நிதர்சன வாழ்வு இது.

வசந்தராணியின் வனப்பு

என் பணி அலுவலகம், சென்னை, ஒயிட்ஸ் சாலையில் உள்ளது. இதன் இடது பின்புறம் டி.வி.எஸ்., பணியகமும், இடது முன்புறம் அமிதீஸ்ட் வளாகமும் உள்ளன. இந்த வளாகங்களின் மதில் ஓரம் ஓங்கி உயர்நந்துள்ளன பல மரங்கள்.
இளைப்பாறுதல்களில் இந்த மர நிழல்களும், அவை தரும் வான் காட்சியும் இனிமையாக நிறைக்கும். அவற்றை அடையாளம் காண ஆர்வம் நிறைந்திருந்த போதும், தகவல் தேட வாய்ப்பில்லாமல் இருந்தது.
மஞ்சாடி என்ற ஆனைக் குன்றிமணி மரம் ஒன்றுள்ளதை, கடந்த ஆண்டு அறிந்தேன்.
இன்று காலை, அலுவலகத்தில் நுழையும் முன், பூக்களால் குலுங்கி ஈர்த்தது, ஒரு மரம். தினமும் பார்க்கிறேன். நேற்றும் கூட பார்த்தேன். சில பூக்கள் மட்டுமே இருந்தன. இன்று, மரம் முழுக்க வெளிர் ஊ:தா நிறம் குலுங்குகிறது.
இந்த மரத்துக்கு, டிரம்பட் (Trumpet tree) என்று பெயர். அறிவியல் வகையில் Tabebuia Rosea என்று பெயர். தென் அமெரிக்கா, கரீபியன் பகுதியை தாயகமாக கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் வரை வளரக்கூடியது. இலையுதிர் காடுகளில், 25 மீட்டர் வரை வளரும். வறட்சியை தாங்கும். வசந்த காலத்தில் பூத்து, மனதை குலுங்க வைக்கும்.
Flickr ல், சவுந்தரபாண்டியன் என்பவர், இதன் பெயரை, ‘வசந்தராணி’ என்று குறித்துள்ளார். வேறு தமிழ் பெயர் அடையாளத்தை காண முடியவில்லை. இந்த மரத்தில், 99 ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பு உள்ளது. இந்த மாதம் முழுவதும், வெளிர் ஊதா வண்ண பூக்களில் நனையலாம்.

வளர்ச்சியின் பொறி... ஒரு இசையாக


சற்று தாமதமாகிவிட்டது. கூட்டம் நடக்கும் பகுதியை கண்டுபிடித்து சேர்ந்து கொண்டேன். ஒருங்கிணைப்பாளர் அனுாப்குமார் பேசிக் கொண்டிருந்தார். முகநுால் போட்டோ அடையாளத்தைக் கெண்டு அனுமானித்துக் கொண்டேன். அவர் உட்பட அங்கு கூடியிருந்த யாரையும் முன் பின் தெரியாது. பெயர் அடையாளமும் தெரியாது.
ஆங்கிலத்தில் துவங்கி, தமிழுடன் இயல்பாக விளக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே, இனிய மலையாளம்.
அது, சென்னை, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா. முகநுாலில், இயல்பு விவசாயம் பற்றி தகவல் பரிமாறிக் கொள்ளும் ‘சென்னை ஆர்கானிக் டெரஸ் கார்டன்’ (Chennai organic terrace gardeners) உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.
மாடியில் காய்கனி, மலர் செடிகள் வளர்ப்பது பற்றி எளிய உரையாடல் நிகழ்ச்சி அது. செடிகள் வளரும் விதம், சூழலுடன் அவற்றுக்கு உள்ள உறவு, இயற்கையை பேண வேண்டிய அவசியம் போன்றவற்றை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கினார், அனுாப். அவரது, அனுபவமும், ஆர்வமும், நிபுணத்துவமும் உரையில் வெளிப்பட்டது. அதில் உள்ளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
இடைஇடைய சிறிய கேள்விகள். அவற்றுக்கு எளிய தீர்வு தரும் விளக்கங்கள். கூட்டத்தை யாரும் முறைப்படுத்தவில்லை. மிக முறையாக கச்சிதமாக நடந்தது. இனிய உரையாடல்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தன.
தோட்டம் அமைப்பதில், துவக்க நிலையாளர்கள், பெரும் அனுபவம் நிறைந்தவர்கள் என, இரண்டு நிலையிலும் இருந்தவர்கள் உண்டு. அனைவருக்கும் ஒரு பொதுவான நிறைவுப் புள்ளி இருந்தது. அது தான், நலம் மிக்க வாழ்க்கைக்கான தேடல். உணவு உற்பத்தி சார்ந்த நுாண் அறிவைத் தேடியக் கூட்டம்.
சமூக வளர்ச்சியின், மிக முக்கிய செயல்பாடாக இதைக் கருதுகிறேன். இது போன்ற இயல்பூக்க அடிப்படையில், பொருட்செலவு இன்றி, காலவிரயம் இன்றி, அறிவுத்தேடல் நடக்கும் போது, சமநிலையான சமூகம் வளரும்.
இதில் பங்கேற்ற, 49 பேரில், 28 பேர் பெண்கள். கூட்ட இறுதியில், விதைகளும், செடிகளும் பறிமாறிக் கொள்ளப்பட்டன. ஆர்வமுடன், விதைகளையும் செடிகளையும் காட்சிக்கு வைத்து அன்புடன் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டனர். கிட்டத்தட்ட, இரண்டு மணி நேரம்... இனிய கலைஞர் லோபமுத்ரா மித்ரா பாடும், ‘ஹரீத் மாஜ்ஹரி...’ இசையை ரசிப்பது போல் காலம் கனிவாக நகர்ந்தது.

கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா...

ஒளைவையின் தனிப்பாடல் ஒன்றின் துவக்க வரி இது. இரண்டு வாரங்களாக, இந்த கவிதை, உரிய இடைவெளியில் அதிகாலை, காலை,  முன்இரவு, பின்னிரவு, நள்ளிரவு என... வீட்டில் ஒலித்துக் கொண்டே இருந்தது. வழக்கமான வகுப்பு பாடத்தை படித்து முடித்த பின், இந்த பயிற்சியை மேற்கொள்வார்.
முதலில்  ஒப்புவித்தல் பாணியில் துவங்கி, கல்யாணி ராகத்தில் இசை வடிவமாக்கி பயற்சியை கூர்மையாக்கிக் கொண்டிருந்தார் மகள். அவரது பயற்சி வடிவம்... ஓரிலையாய், கொம்பாய், உயர் மரமாய் – சீரிய வண்டு போல் கொட்டையாய், வன்காயாய்ப் பின் பழமாய்... என  காட்சியாக மனதில் பதிந்தது.
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்...
என,
வளர்மதியிடம், முதலில் ஒப்புவிக்க துவங்கியவர், பின்னர் பொருத்தமான இசை வடிவத்தைக் கண்டறிந்து நிகழ்த்தத் துவங்கினார். பள்ளி பாடத்தை முடித்து  அவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ந்தது. அதிகாலை எழுந்ததும், இரவில் துாங்கப் போகும் முன் என, தொடர்ச்சியாக நடந்தது. 
அந்த நிகழ்த்துதல் வீட்டை  நிறைத்து நெகிழ வைத்து. மனங்களைப் புதிப்பித்துக் கொண்டே இருந்தது.
ஒளவையின் பாடல் வரிகள் சொல்லும் பொருள் போல, இயல்பாக அவரின் பயிற்சியை புரிந்து கொண்டேன்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான, ஒளவை பாடல் ஒப்புவித்தல் போட்டிக்கு அவர் தயாரான இரண்டு வாரங்களும், நாட்கள் இப்படித்தான் நடந்தது.
இது போன்ற போட்டிகள் பற்றி ஒரு தெளிவை  உருவாக்கியுள்ளோம்.  போட்டியில் பங்கேற்பு என்பது மட்டும் தான் முக்கியம். பயிற்சியை நிறைவு செய்யும் களம் அது.  அங்கு, ‘பயிற்சியால் பெற்ற திறனை முன்னுணர்த்துவது மட்டுமே நடக்க வேண்டும்; எந்த எதிர்பார்ப்பும் கூடாது...’ என்பது தான் அந்த தெளிவு.
அந்த தெளிவின் அடிப்படையில் செயல்பட்டார். அவரது நிகழ்த்துதல், முதல் பரிசாக தேர்வானது. ஆண்டு தோறும் இது போன்ற ஒன்றிரண்டு பயிற்சிகளில் பங்கேற்று, அறம் கற்று வருகிறார். திருக்குறள் பேரவை நடத்திய, பொருளுடன் குறள் ஒப்புவித்தல் போட்டியிலும் முதன்மை பரிசுக்கு தேர்வாகியுள்ளார். 

ஒளவை இயற்றி, கல்யாணி ராகத்தில் நிகிதா நிகழ்த்திய கவிதையின் வரி வடிவம்:
கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின் பழமாய்ப்
பண்டுபோல் நிற்கப் பணி
vvvv
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்ய
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு
vvvv
தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலால், தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளது கொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே!

ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கள்
வாலை நிமிர்க் வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீராக்க லாமோ...

துயரற்ற தும்பிகள் – இயற்கையின் இன்ப விளையாட்டு

தும்பிகள் பறக்கும் காலம் இது. தட்டான், தட்டாரப்பூச்சி, புட்டான் என, இதை அழைக்க  இன்னும் பல பெயர்கள் உண்டு. நுாதனமான அதன் வண்ணங்கள், கவர்ச்சியானது.   
தும்பிகள் ஏன் பறக்க வேண்டும். உயிர் சூழலை சமன் படுத்த என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் சூழல் சமமாக இல்லையா? இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது. 
சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்காவிட்டால், கொசு போன்ற ரத்தக்காட்டேரிகள் பெருகும். சூழலில் அவற்றின் ஆதிக்கம் அதிகமாகும். அவை உணவு தேடி ரத்தம் குடிக்கும். அப்போது, நோயைப் பரப்பும். டெங்கு போன்ற நோய்கள் பரவும். உயிர் சூழல் சமநிலை கெடும்.
மழைக்காலம் துவங்கும் போது உள்ளாட்சி ஊழியர்கள் மழைநீர் கால்வாயை துார்வாருவர். சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்துவர். கொசு தடுப்பு மருந்து  தௌிப்பர். தெருவில், சுண்ணாம்பு கோலம் போடுவர்.
இவை எல்லாம், சூழலை சரி செய்வதற்கு தான். நாமும் இது போன்ற செயல்களுடன் இணையலாம். பொது இடங்களில் என்று இல்லை;  நம் வீட்டின் சுற்றுப்பகுதியில்... 
இயற்கையும், சூழலை சமன் செய்கிறது. எப்படி... நம்மை சுற்றி பறக்கும் தும்பிகளை கூர்ந்து கவனிக்கலாம்.
 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இது. மழை அறிகுறி தென்படுகிறது. லேசான ஈரப்பதத்துடன் சமநிலையில் வெப்பம் கவிகிறது. இந்த சூழ்நிலை பூச்சிகளுக்கு சாதகம். அவை பெருகுகின்றன. கொசுக்கள் பெருகுவதால் சூழல் சமநிலை கெடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, தும்பிகள் பெருகுகின்றன. தும்பிகளுக்கு உணவு கொசு மற்றும் அவற்றின் முட்டை. கொசு வாழும் அதே சூழலில் தும்பிகளும் வாழுகின்றன. ஆனால் ஒரு வித்தியாசம். கெசுக்கள் இரவிலும் சஞ்சரிக்கின்றன. தும்பிகள் பகலில் மட்டுமே பறக்கின்றன. வினோதமான வண்ணக்கலவையால் நம்மை நிரப்புகின்றன. கற்பனையை துாண்டி  ஆர்வம் ஊட்டுகின்றன.
சரி இனி தும்பிகள்...
* தும்பி உடலை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலில் தலை; அடுத்து நெஞ்சு; கடைசியாக வால் போல் உள்ள வயிறு.
தலைப் பகுதியில் பெரிய இரண்டு கூட்டுக்கண்களும், வாயும், இரண்டு உணர்விழைகளும் உண்டு. பறக்கும் போதே, இரையைக் கண்காணிக்கும். உடல் பகுதியில் ஆறு கால்கள் நான்கு இறக்ககைள் உண்டு. கால்களில் மெல்லிய மயிர் போன்ற இழைகள் உண்டு. பறக்கும் போது ஆறு கால்களையும் சிறு கூடை போல் வைத்துக்கொள்ளும். அப்பொழுது அதில் சிக்கும் கொசு , ஈ, பட்டாம்பூச்சி போன்ற பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.
* நான்கு சிறகுகளால் பறக்கிறது. இலையில் பச்சையத்தை சுரண்டினால் எப்படி தெரியும். அதுதான் இறகுகள் வடிவம். மணிக்கு 70 முதல் 90 கி.மீ. கேவகத்தில் பறக்கும் திறன் பெற்றது. இரை பிடிக்கும் போது, வேகம் இன்னும் அதிகம். ஆண்டுக்கு, 14000 முதல் 18000 கி.மீ. வரைப் பறக்கக்கூடியவை. முன் இறக்கைகள் உடலோடு சேரும் பகுதி அகலம் குறைவானது. பின் இறக்கையின் அடிப்பகுதி சேரும் இடம் அகலமானது. வினோதமான இந்த வடிவமைப்பை, ‘சீரிலாயிறகி’ என்கின்றனர். பறந்த நிலையில் ஒரே இடத்தில் நிற்கும். இதை, ஞாற்சி என்பர். பறக்கும் போது திடீர் என, 180 டிகிரி திரும்பி பறக்கும் திறனும் உண்டு.
* இதுவரை, 6000 வகை தும்பிகளை அறிந்துள்ளனர். இந்தியாவில், 503 இனங்கள்  உள்ளன.
* உலகில், 32.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை உள்ளதாக கணித்துள்ளனர்.
*பெண் தும்பி,  முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகிறது. முட்டைகள் வெப்ப நாடுகளில் ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் நாடுகளில், இரண்டு மாதம் முதல், ஏழு மாதங்கள் வரை எடுக்கும். அந்த முட்டைகளில் இருந்து பிறப்பது சிறகில்லாத தும்பி. இது, ஐந்து ஆண்டுகள் வரை, நீருக்குள் வசிக்கிறது. அதன் பின், சிறகு முளைத்து, நம் கற்பனையை பெருக்க பறக்கத் துவங்குகிறது. பின், இரண்டு மாதங்கள் வரை பறந்து திரிந்து மடிகிறது.
சரி, இவை தும்பி பற்றிய பொதுத்தகவல். தும்பி உங்களுக்கு பிடித்த பூச்சி. பார்க்கும் போது மகிழ்ச்சியை தருகிறது. நல வாழ்வுக்கான சூழலை உருவாக்குகிறது. பயிர் விளைச்சலில் உதவுகிறது. இனி தும்பிகளை அதிக கவனத்துடன் ரசியுங்கள்.
 தும்பியை ஒரு ஹெலிகாப்டராக நினைவு படுத்த முடியும்; விமானமாக நினைக்க முடியும். ஆனால் தும்பி பறக்கும் தொழில் நுட்பம் வேறு. அதை அறிய முயலுங்கள்; கற்பனை செய்யுங்கள். புதிய வழியிலான தொழில் நுட்பத்தை உருவாக்குங்கள். அதை பயன்படுத்தி நாம் பறந்து திரியலாம். தும்பிகளையும் பாதுகாக்கலாம். தும்பிகளைப் பற்றி பாட்டுக்களையும் எழுதலாம்.
தும்பியின் தம்பி
காத்தட்டான்
தும்பித்தட்டான்
தம்பி வர்ரான்
நின்னுக்கோ


புதிய சொற்கள்
ஞாற்சி – பறந்து கொண்டே ஓர் இடத்தில் நிற்பது
சீரிலாயிறகி – சீரற்ற இறக்கைகள் கொண்டது
–அமுதன்

ஒரு மரணமும் கொஞ்சம் நன்றியும்

நாகர்கோவிலில் ரயிலை விட்டு இறங்கிய போது, கடும் மழை. ஏற்பாடு செய்திருந்த வாகனம் வரவில்லை. காத்திருந்தேன். அருகே, ஐதராபாத் நகர தம்பதி. கன்னியாகுமரி போகும் பஸ் பற்றி விசாரித்தனர். ‘அதே ரயிலில் போக வேண்டியதுதானே...’ என்றேன். விவேகானந்தபுரத்தில், குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்தள்ளதாக கூறியவர், ஆட்டோ அடாவடி பற்றி அச்சம் தெரிவித்தார். மிகவும் திட்டமிட்ட அவரது பயண நோக்கம்  புரிந்தது.
ஒரு ஆட்டோக்காரர் வந்தார். இடலாக்குடி செல்ல நச்சரி்த்தார். மொழி தெரியாத அந்த தம்பதி, புரியாமல் நடுங்கியபடி நின்றனர். ஆட்டோ சுற்றி சுற்றி துரத்தியது. நான் தடையாக இருப்பதாக கருதிய டிரைவர், எனக்கு சில வசவுகளை வழங்கினார். சிரித்து வாங்கிக் கொண்டேன். வாழ்வதற்கான போராட்டம். சுவாரி பணத்தில் அவருக்கு எத்தனை திட்டமோ...
வழியெல்லாம் மழை. வீட்டு முற்றத்தில், கணுக்கால் அளவு தண்ணீர். அவசரமாக புறப்பட்டு, நாகர்கோவில் வந்தேன். மருத்துவமனை நோக்கி சென்ற போது அவசர அழைப்பு.  தாயார் மரணத்தை உறுதி செய்தார் டாக்டர். நேரத்தை உறுதி செய்யவில்லை.
மரணம் திட்டமிட முடியாதது. அந்த நிகழ்வை, முடித்து கடப்பது எளிதாக இல்லை. காத்திருந்தேன். சிந்திக்க முடியவில்லை. என்ன தகவலை யாரிடம் பகிர்வது. எதுவும் புரியவில்லை. நண்பர் கென்னடி, ‘சமாளிக்கலாம்...’ என்றார்.
சுகாதார அதிகாரி நண்பர் மதன்குமார், சில ஆலோசனைகளை வழங்கினார்.
பிற்பகலில், மரணம் நடந்தது.
மழை தீவிரமாகியிருந்தது. என் சிந்தனையைப் போல், மொபைல் போனும் இயங்கவில்லை.
ஒரு வழியாக, கோவைக்கு போன் பேசினேன். தங்கை கணவரிடம் தகவல் சொன்னேன். ஆலடிவிளை ஊர்த்தலைவர் தம்பி ஜேம்ஸ், தாய் வழி உறவினர்கள் என சொல்லிக் கொண்டே வந்தேன். நண்பர்களுக்கு, கென்னடி தகவல் சொன்னார். மரத்து போனது மனது. அடுத்து என்ன செய்வது...
தந்தை வழி உறவினர் சிலரை அழைத்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. தம்பி பிரபு லைனில் வந்தான். ஊரில் எல்லா ஏற்பாட்டுக்கும் பொறுப்பேற்றான். மருத்துவமனையில் எனக்கு உதவியாக, தம்பிகள், பாலசந்திரன், சுபாசை அனுப்பினான்.
மழை சற்று ஓய்ந்த மாதிரி இருந்தது.
நண்பர் மதன்குமார் மருத்துவமனைக்கு வந்தார். நிகழ்வை முழுமையாக ஒருங்கிணைத்தார். தேவைகளை தகவலாக தந்தார். மாலை, 6:00 மணிக்குள் உடலை அலங்கரித்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுவது வரை உடனிருந்து வழிகாட்டினார். செயல்பட்டார்.
மழை ஓய்ந்திருந்தது. உடலை கொண்டு வந்தோம். வீட்டு முற்றத்தில் பல நுாறு பேர் அஞ்சலி செலுத்தினர். அடுத்த சிலமணித் துளிகளில், நெடுவிளையில் அப்பாவின் உடல் அருகே, புதைக்கும் பணி நடந்த போது, வடக்கில் மழையின் இரைச்சல் அதிர்ந்தது. அங்கு அஞ்சலி செலுத்தியோரை குளிப்பாட்டியது. மழையின் ஈர சுவட்டில் முகிழ்த்தபடி திரும்பிக் கொண்டிருந்தேன்.
டாக்டர் ரூபி, மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள் கென்னடி, மதன்குமார், தம்பிகள் பிரபு, பாலச்சந்திரன், சுபாஷ், ஊர்த்தலைவர் ஜேம்ஸ், தம்பி ஆல்பிரைட் சலோமன், நண்பன் அதிசய அருள்மணி என, மனத்திரையில் வந்து போயினர். என் கவனத்துக்கு வராத பலர் இருக்கலாம். அவர்களுக்கு  கைமாறாக என்ன செய்வேன்.
கடும் மழையை பொருட்படுத்தாமல் காத்திருந்து அஞ்சலி செலுத்திய, நண்பர் ஜெயா வைகுண்டராஜ், வக்கீல் கனகமணிராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள், நண்பர்கள்...
செய்தி பணியாற்றி இரட்டை குடியுரிமை போல் வாழும் என் போன்றோர் என்ன செய்ய முடியும்... நன்றி என்ற ஒற்றை சொல் பகிர்வதைத் தவிர...
மழையில் நனைந்து கொண்டே திரும்பிய போதும், வீட்டில் நண்பர்கள் கூடி சிறு அஞ்சலி நிகழ்வை வடிவமைத்தனர். இதில் பங்கேற்ற குடிசை ஆசிரியர் திரு. இரத்தினசுவாமி, அவரது அன்பு மகன் பகத்சிங், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுாரி முதல்வர் திரு. எட்வர்டு, வரலாற்று ஆய்வாளர் நண்பர் தினகர், பத்திரிகையாளர் கென்னடி ஆகியோரையும் நினைவில் கொள்கிறேன்.
என் முகமறியா நட்பு வட்டாரத்தில், முகநுால் தகவலால் துயரத்தை பகிர்ந்து ஆறுதல் சொன்ன பல நுாறு  தோழர், தோழியருக்கு என் மனம் திறந்த நன்றிகள்.
நேரில் வரமுடியமால், தகவல் தெரியாமல், தொலைபேசியில் ஆறுதல் பகிர்ந்த நண்பர்கள் என அனைவருக்கும் என் நிறைவை சொல்வதைத் தவிர... என்ன  செய்ய இயலும்.

வரலாற்றின் சிதைவு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்கள், கிராமங்களில் சிதைந்தும், அழிக்கப்பட்டும் வருகின்றன. 
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பூவியூர் கிராமத்தில், ஒரு அம்பலம் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்வரை பொது கூடுகைக்கான மையமாக இருந்தது. பனங்கையை இணைத்து உருவாக்கும், கூரை கட்டுமானத்தின் சிறப்பை விளக்கும் அற்புத வடிவம். பொலிவை இழந்து, சிதைந்து வருகிறது.
ஒரு சிறு மூச்சு விடும் இடைவெளியில், தோழர் குடிசை இரத்தினசுவாமி, பத்திரிகையாளர் கென்னடியுடன், அம்பலத்தை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் இயக்கம், பற்றி அந்த ஊர்  முதியவரிடம் சிறிய பேட்டியும் கிடைத்தது.

மழை லில்லியும் வளர் மதியும்

கடந்த ஞாயிறன்று இரவு, உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது,  மின்னல் கீற்றுகளுக்கு இடையே இடி முழங்கியது. சென்னையில் லேசான மழை. நகரவாசிகளுக்கு இது பெரும்மழை. விவசாயிக்கு, கால்பதம் கூட தேறாது.
இடைவெளி விட்டு, இடி முழங்கிக் கொண்டே இருந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள், மழை லில்லி செடி பூக்கும் என்றார் வளர்மதி. விளக்கம் கேட்ட மகளுக்கு, அனுபவமாக பெற்ற இயற்கையின் ரகசியத்தை சுவாரசிய பாடமாக்கினார். அவரது அனுபவ அறிவு வியப்பூட்டியது.
வீட்டின் பின்புறம் இரண்டு தொட்டிகளில் மழை லில்லி செடிகளை, ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கிறார் வளர்மதி. அவை, இளம்சிவப்பு அதாவது, ‘பிங்க்’ வண்ணத்தில் மழையை ஒட்டிய நாட்களில் பூப்பதை கவனித்துள்ளோம்.
குஜராத் நண்பர் பெர்ல்ஷா, வெள்ளை வண்ண மழை லில்லி விதை குமிழ் தண்டுகள் இரண்டை, கடந்த மேமாதம் அனுப்பியிருந்தார். அவற்றை மாடித்தோட்டத்தில் விதைத்து மூன்று இலைகள் விட்டு வளர்ந்துள்ளன.
சொன்னபடியே, வீட்டின் பின்புற தோட்டத்தில் உள்ள மழை லில்லி செடிகளில் இளம் சிவப்பு வண்ண பூக்கள் நேற்று காலை மலர்ந்தன. மின்னல் இடியால் எழுச்சி பெற்ற மொட்டுக்கள் மலர்ந்தன. அந்த பூக்களைத்தான் பதிவிட்டுள்ளேன்.
பருவ மாற்ற சூழலில், செடிகளின் எழுச்சி வியப்பூட்டுகிறது.
மழை லில்லி செடி, லத்தீன் அமெரிக்கா கண்டத்தை தாயகமாக கொண்டது. பெரு, கொலம்பியாவில் அதிகம் உள்ளது. வெள்ளை, சிவப்பு, இளம் சிவப்பு, மஞ்சள், இளம் மஞ்சள், அடர் மஞ்சள் என பல வண்ணங்களில் பூக்கும் ரகங்கள் உள்ளன. இதன் குமிழ்தண்டு, நீரிழிவுக்கு மருந்தாக பயன்படுகிறது. பல்வேறு மருத்துவமுறைகளிலும் உதவுகிறது.
நீண்ட ஓரிதழ் இலை கொண்ட செடிகள், 15 முதல் 20 செ.மீ., உயரம் வரை வளரும். புல் போல் அடர்ந்து காணப்படும். தொல்காப்பியர் குறிப்பிடும் புல் இலக்கண வரம்புக்குள் இந்த செடி வருமா என்பதை அறிஞர்கள் தான் விளக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் Magic lily, Cuban zephyrlily, rosy rain lily, rose fairy lily, rose zephyr lily or the pink rain lily என, அழைக்கின்றனர். தாவர இனப் பெயர் Zephyranthes rosea. முற்றிய தண்டு குமிழ்தான் விதையாக பயன்படுகிறது. அமேசான் விற்பனை தளத்தில், மழை லில்லி தண்டு குமிழ் விதை விற்பனைக்கு கிடைக்கிறது. 
நடை பழகாத நாளில்...
அதிகாரத்துக்கு வர ஆசை
புலனாய்வு செய்தி நிருபராக அப்போது இருந்தேன். மாம்பலம், அண்ணாமலை நகரில் முதல் மாடியில் குடியிருந்தோம். தகவல்தொடர்புக்கு, பேஜர் கருவி வைத்திருந்தேன்.
மகன் பிறந்து, 10 மாதம் ஆகியிருக்கும். என் பைக் சத்தத்தை மிக துல்லியமாக அறிவான். பைக் சத்தம் கேட்ட உடன், தவழ்ந்து வந்து மாடி தடுப்பு வழியாக தலையை வெளியே நீட்டி பார்ப்பான். மாடி ஏறியதும் பேஜர் கருவியை எடுத்துக் கொள்வான். அதை அரையாடையில் தொங்கவிட்டு, சுற்றி சுற்றி வருவான். பைக் சத்தம் விஷயத்தில் அவன் ஒருமுறை கூட ஏமாந்தது இல்லை.
பக்கத்து வீட்டில், குழந்தை சிஜித். இவனைவிட, 7 மாதம் மூத்தவன். அச்சனின் பேஜரை துாக்கி விளையாடுவான். நிரம்பிய குடத்தில், பேஜரை போட்டு சிரித்தான். அன்று முதல், என் பேஜர் கருவியை, ‘காக்காவுக்கு’ போட்டுவிட்டார் வளர்மதி. அவன் விடவில்லை. மாற்று வடிவம் எடுத்தான்.
செய்திகளை விரைந்து பரிமாறவும், இருந்த நிலையிலே ரிமோட் கான்பரன்ஸ் நடத்தவும் வசதியாக ‘வாக்கி டாக்கி’ என்ற கருவியையும் பயன்படுத்தி வந்தேன். அது, 21 சதுர கி.மீட்டருக்குள் இயங்கும் அலைத் திறன் கொண்டது. காலநிலை தெளிவாக இருந்தால், 28 கி.மீ., வரை மங்கலாக சிக்னல் கிடைக்கும்.
ஒருமுறை, பூந்தமல்லி, செந்நீர்குப்பத்தில் நடந்த முக்கிய கொலை நிகழ்வு செய்தியை, அங்கிருந்து, இரைச்சல் மிகுந்த மங்கலான வாக்கிடாக்கி ஒலியில் கொடுத்தேன்.
இரவில், 10:00 மணிக்கு பின்தான் அனேகமாக ரிமோட் கான்பரன்ஸ். அதிகாலை வரை கூட சில நேரம் நீளும். பேசிக் கொண்டே இருப்போம். மகனும் உடன் இருந்து கவனிப்பான். அவ்வப்போது, வாக்கி டாக்கி ஆண்டெனாவை பிடித்து துாக்கியபடி, பேசுவது போல் இமிடேட் செய்வான்.
கான்பரன்சுக்கு இடையே நள்ளிரவில் கிடைக்கும் செய்தியை, பிரசுர வடிவில் எழுதி, இரவு பணியில் இருக்கும் சப் எடிட்டரிடம், வாக்கி டாக்கியில் வாசிப்பேன். அதையும் பார்த்துக் கொண்டு இருப்பான். சில நேரம் பேனாவை பறித்து எழுதுவது போல் கோடு போடுவான். நான் வீட்டில் இல்லாத நேரத்திலும், குறிப்பு நோட்டில், கோடுகள் வரைவதை நடைபழகாத அந்த நாளில் வழக்கமாக்கியிருந்தான்.
ஒருநாள் அவன் வரைந்த கோடுகளால் குறிப்பு நோட்டை பார்த்தேன். சிலாகித்து பேசிக் கொண்டோம். சிலாகிப்பு அடங்கும் முன், ஒரு நிகழ்வு நடந்தது.
அந்த வருட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆசிரியர் கையெழுத்து போட்ட பார்ம்:16 படிவத்தை, மேஜையில் வைத்திருந்தேன். அந்த படிவத்தில், ஆசிரியரின் கையெழுத்துக்கு கீழ், கவுண்டர் கையெழுத்து போல் கோடுகள் போட்டிருந்தான்.
ஆசிரியரிடம் தயங்கி தயங்கி இதை சொல்லி புதிய படிவம் வழங்க கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘அதிகாரத்துக்கு வர ஆசைப்படுகிறான்’ என்று கூறி, மற்றொரு படிவம் தயார் செய்து கொடுத்தார்.
அவன் வரைந்த கோடுகளையும் அவனையும், 21 வருடங்களாக பத்திரமாக பாதுகாத்து வருகிறார் வளர்மதி. புத்தகங்களை கலைத்து போட்ட போது கிடைத்த வெகுமதி.  

காற்றில் கரைந்த கலையரசி -க.மலர்விழி

அன்று, அமுதன் தொலைபேசியில் அழைத்தார். ‘ஒருவரை சந்திக்கப் போகிறோம். விரிவுரையாளர் அருள்செல்வியுடன், பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுங்கள்...’ என்று மட்டும் சொன்னார். பயணத்தின் போது, மற்ற கதைகளைத்தான் பேசி சென்றோம்.  யாரை சந்திக்க போகிறோம் என்பது தெரியாது.
குறுகலான தெருவில், ஒரே வகை வாசற்படி அமைந்த வீடுகள். இந்த தெருவில், கட்டாந்தரையாக இருந்த  இடத்தில், காய்ந்த சருகுகள் விரவிக் கிடந்தன. ஒரு, 20 அடி தூரம் நடந்தால், இடப் பக்கம், இரண்டு ஆட்டு குட்டிகள்   இலைகளை மென்று கொண்டிருந்தன.
அதை, குடிசை என்று கூற இயலாத ஒரு குடியிருப்பு. பக்கத்து வீட்டில் இருந்த பெண், உள்நோக்கி, ‘பாட்டி உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க’ என்று குரல் கொடுத்தாள்.
உள்ளிருந்து, உடல் குறுகி, தள்ளாட்டம் இன்றி மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். ரவிக்கையும், பாவாடையும்  மட்டும் போட்டிருந்தவர்,  எங்களை, ‘வாருங்கள்’ என்று கூட அழைக்காமல், திரும்பி சென்று, சில நொடிகளில் வெளியே வந்தார். இப்போது, அந்த பாவாடை, ரவிக்கை மேல், ஒரு துண்டு தாவணி இருந்தது.
அமுதனை பார்த்ததும், ‘வா மக்கா...’ என, வாஞ்சையுடன் அழைத்தார். உள்ளே சென்றோம். நான் அமர ஒரு  நாற்காலியை காட்டினார். அருகே, கட்டிலில் அருள்செல்வியை அமர்த்தி, உடன் அமர்ந்து கொண்டார். வீட்டின் மூலையில் மண்மேடு போன்ற இடத்தில், அமுதன் அமர்ந்தார். நான், மூதாட்டியை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
எங்களை, அமுதன் அறிமுகப்படுத்தினார். சிரித்த முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். கொள்ளை அழகு. மூதாட்டியைப் பற்றி, ‘இவர் தான், வில்லிசைக்க வந்த  இரண்டாவது பெண்  கலைஞர்... 1980 வரை மிகவும் பிரபலமாக இருந்தார்’ என்று  எங்களிடம் சொன்னார். 

‘தென் தமிழகத்தில், மிகவும் பிரபலமாக இருந்த ஒரே பெண் கலைஞர். மிகப் பிரபலமாக இருந்த ஆண் கலைஞர்களைவிட, 10 மடங்கு சன்மானம் பெற்றவர். இவரது கலை காலம், களிப்புடன் நகர்தது. இவரது  நிகழ்ச்சி என்றாலே இளைஞர்கள் மேடையை சூழ்ந்து விடுவர்.
‘கலை நிகழ்ச்சிகளின் போது, இவர் அணியும் புடவை, வளையல், கம்மல் ரகங்கள் எல்லாம் இவரது பெயர் ஒட்டுடன் நாகர்கோவில் கடைவீதிகளில், விற்பனைக்கு வரும். பெண்கள் விரும்பி கேட்டு வாங்குவர். இவரது வீச்சுகோல் சுழற்சியும், குரலும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும்’ என, அமுதன் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை, ரசித்து புன்னகைத்து கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த அதி அற்புத கலைஞரை ஆழ்ந்து உற்றுநோக்கினேன். சுருக்கங்கள் விழுந்து உடல் பொலிவிழந்திருந்தது. ஆனால், முகம் கலையிழக்கவில்லை. வயோதிகத்தில் வறுமை; தனிமையால் ஏற்பட்ட தளர்வு.  இவற்றின் மொத்த உருவமாய்  அமர்ந்திருந்தார் பூங்கனி.
அவரை, ‘பாட்டி’ என்று அழைத்தேன். உடனே, ‘கலகல’ என சிரித்தபடி, கட்டிலில் இருந்து எழுந்து அருகில் வந்தார். என் முகத்தை தடவி, ‘நீ பொம்பளபிள்ள தானா... உன்னை ஆம்பிளன்னு  நெனச்சு தான்  தாவணியை எடுத்து போட்டுட்டு வந்தேன்...’ என்று கூற அனைவரும் சிரித்தோம்.
என் கன்னத்தை, கைகளால் வருடி எடுத்து முத்தமிட்டார். பின், ‘வா... மக்கா, என் பக்கத்துல வந்து இரு...’ என்று அழைத்தார்.
‘ஏன் பாட்டி... நீங்க  வயசானவங்க தானே... நான் ஆம்பிளையா இருந்தா என்ன.. மேலாக்கு போடாம வரலாம் இல்லையா...’ என, கேட்டேன்.
‘இல்ல மக்கா... எத்தன வயசானாலும், ஆண்கள் கண்ணுக்கு நாம பெண்ணாதான் தெரிவோம்...’ என்ற பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறிந்து கொள்ள பெரும் அனுபவம் அவரிடம் இருப்பதை உணர்த்தியது.

ஒன்பது வயதில், வில்லிசை கற்க ஆரம்பித்தார். 12 வயது முதல் நிகழ்ச்சி நிகழ்த்த துவங்கிவிட்டார். மனப்பாடமாக, 250 கதைப்படால்களுக்கு மேல் தெரியும். எங்கும்  எழுதி வைத்தது இல்லை. அதற்குரிய கல்வியறிவை பெற வாய்ப்புமில்லை. அந்த கதைப் பாடல்களில் சிலவற்றை, சுவை குறையாமல், நினைவில் வைத்து, கணீர் என, எங்களுக்காக பாடினார்.
கலைஞர்கள், தங்களுக்கு என, ஒரு தனி முத்திரை  வைத்திருப்பர். இவரது தனித்த திறமை, வில்லின் வீச்சுக் கோலை கண்ணிமைக்கும் நேரத்தில் அனயாசமாக சுழற்றுவதில் தான். அந்த வீச்சுக்கோல் சுழற்சி, ரசிகர்களை சொக்கிப்போக வைத்தது.
ஒரு கலைஞர் பெண்ணாக, அழகும், அனயாச திறமையும் மிக்கவராக  இருந்தால், எவ்வளவு  இடர் வரும் என்பதற்கு, இவரது கலை வாழ்க்கையே சாட்சி.
ஆம்... இவர் மேடையேறி நிகழ்ச்சி நடத்திவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்ததே இல்லை. அந்த  ஊர் செல்வந்தன்  தூக்கி  சென்று, ஆசைநாயகியாக வைத்திருப்பான். இவரது குழுவினர் அந்த செல்வந்தனிடம் மோதி அவ்வப்போது மீட்பது நிகழும்.
‘எப்படி பாட்டி, அப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்தீர்கள்...’ என்றதும், நீண்ட பெருமூச்சு விட்டு சிரித்தார். அந்தச் சிரிப்பில் களிப்பில்லை; கசிந்தோடிய வலி தெரிந்தது. கனத்த மெளனம் அறையில் நிலவியது.
தலையை ஆட்டிக் கொண்டே, ‘ஒரு, 13 பேர் கூட இப்படி வாழ்ந்திருக்கேன். ஒரு கட்டத்தில் இனி இப்படி வாழ இயலாது என்று முடிவு செய்து  குழுவில் இருந்த ஒருவரை திருமணம்  செய்துக் கொண்டேன்.  திருமணத்திற்குப்பின் யாரும் தூக்கிச் செல்லவில்லை. வயசும் கூடிட்டது இல்லையா...
ஆரம்பத்தில் இளம் வயதில், மிகவும் கஷ்டமாகவும், வலியாகவும், வேதனையாகவும் இருந்தது. பின் பழக்கமாகிவிட்டது. கவர்ந்து செல்பவனுக்கு உயிராக தெரியமாட்டேன்; உடலாக  மட்டுமே தெரிவேன்...’ பெருமூச்சுடன் சொன்னார்.
பாட்டியை இறுகக் கட்டிக்கொண்டேன்.  உடல் நடுக்கத்தை, என் முதுகை தடவி நிறுத்தினார். ‘அந்த காலம் எல்லாம் முடிஞ்சு, 30 வருசம் தாண்டிருச்சு மக்கா... கலங்க வேண்டாம்...’ என்றார்.
82 வயதிலும் உணவை தானே சமைத்துக் கொள்வதும், வேலைகளை தானே செய்துக் கொள்வதும் மட்டுமே அவரை ஆரோக்கியமாக வைத்திருந்தது. அவரிடம் விடைபெற்று  வந்த இரவு, மிக நீண்டதாக கழிந்தது.
அன்று, 2018 நவம்பர் மாதம் 2ம் தேதி. காலை 9:30 மணியளவில் அமுதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு... பூங்கனி  இறந்துவிட்டார் என்ற தகவலை சொன்னது அந்த அழைப்பு. ‘ஊரிலா இருக்கிறீர்கள்’ என்றேன். சென்னையில் இருப்பதாக சொன்னார். அக்கம் பக்கத்தவர் தான் இறுதி ஊர்வலம் நடத்துவதாக சொன்னார்.
கைபேசி இணைப்பை துண்டித்த மறுகணம், பாட்டியின் நினைவுகள் நிழலாடத் தொடங்கியது. மனதுக்குள் சிறு நடுக்கம். கனத்த மெளனம். ‘பரவாயில்லை. அவருக்கு நல்ல இறப்புதான். அவர் வீழ்ந்து கெடந்தா பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் சுகமா  இறந்தாரே...’ என்ற எண்ணம் ஆசுவாசப்படுத்தியது.
பாட்டியை, அவரது ஊரில் சந்தித்து  வந்த பின், மறைந்த கலைஞர் ஓம் முத்துமாரி பெயரால் நிறுவிய வாழ்நாள் சாதனையாளருக்கான  முதல் விருதை பூங்கனி பாட்டிக்கு வழங்க, சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை  திட்டமிட்டிருந்தது.
உடல்நலக்குறைவால், பூங்கனி அந்த நிகழ்வில் பங்கேற்க சென்னை வர இயலவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட விருதை, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு வழங்க, பூங்கனி பாட்டி சார்பாக, நான் பெற்றுக் கொண்டேன். அந்த சம்பவமும் கண் முன்னே நிழலாடியபடியே உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மாணவர்களுக்கு, வில்லிசை வித்தையை கற்பித்து கொடுக்கவும், நிகழ்த்திக் காட்டவும் சென்னை வந்து, இதழியல் துறையில் கவுரவ ஆசிரியராக சில நாட்கள் இருந்தார். அப்போது, அவருடன்  கழித்த நேரங்கள்  மனதில் வந்து அலைமோதின.
இந்த நினைவுகளுடன், சென்னை பல்கலைக் கழக இதழியல் துறை பூங்கனி மறைவை ஒட்டி நடத்திய, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

சில சொற்களும் 52 லட்சம் ரூபாயும்

போலீஸ், குண்டர்கள் வன்முறையால் சமூக பொருளாதாரத்தில் பின்னடைந்திருந்த ஊர் சூணாம்பேடு. காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ளது. அங்குள்ள பெண்கள் நிலை பற்றி, தோழர் ஜோதி ஒத்துழைப்புடன், தரவுகளை திரட்டி, 2006 ல் ஒரு கட்டுரை எழுதினேன். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை படித்து, 52 லட்சம் ரூபாய் வரை வளர்ச்சி நிதியாக ஒதுக்கினார்.
அந்த கட்டுரை பற்றி, விசாரித்த பானோஸ் கல்வி நிறுவன பிரதிநிதி, Ms Tungshang Ningreichon என்பவர், Dalit Women Health and Rights Fellowship க்காக விண்ணபிக்க ஆலோசனை சொன்னார். விண்ணப்பித்தேன். டில்லியில் நேர்முகத்தேர்வு நடந்தது. பிரபல Dr. Imrana Qadeer  தலைமையில்,  எழுத்தாளர்கள் Ms. Manimala, Ms. Urvashi Butalia, பத்திரிகையாளர் Ms. Kalpana Sharma, Professor Kancha Illiah ஆகியோர் குழுவாக நேர்முகம் செய்து, தமிழ்நாட்டில் என்னை தேர்வு செய்தனர்.
ஆய்வை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, கட்டுரையை சமர்ப்பித்தேன். டில்லியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், என் கட்டுரையை பாராட்டிய டாக்டர் இம்ரானாவும், ஊர்வசி புட்டாலியாவும், பிரசுரத்துக்கு தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
அதன்பின், நீண்ட நாட்களாக எந்த தொடர்பும் இல்லை. பல பணிகளால் மறந்தும் விட்டேன். கடந்த, 2015 ல், பென்குயின் புக்ஸ் நிறுவனம், இந்த புத்தகத்தை தபாலில் அனுப்பியிருந்தது. தமிழில் எழுதி, ஆங்கிலத்தில் சமர்பித்து, இந்தியில் பிரசுரமாகியுள்ளதை அறிந்தேன். பிரத்யேக கவனத்துடன் வளர்மதி அதை பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இப்போது, வீட்டு சுவருக்கு வண்ணம் பூசும் பணி நடந்த வருகிறது. பொருட்களை மறு சீரமைப்பு செய்து வருகிறோம். அதற்காக புத்தகங்களை கலைத்து போட்டிருந்தோம்.
இந்தி மொழியில் கிடந்த புத்தகம் மகள் கவனத்தை ஈர்க்க வாசித்தவர், அது உருவான அனுபவங்களை கேட்டார். அவருக்கு சொன்னதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
‘பென்குயி்ன் இந்தியா புக்ஸ்’ வெளியிட்டுள்ள இந்த தொகுப்பில் உள்ள கட்டுரை, சூணாம்பேடு கிராமம் பற்றியது அல்ல. வட தமிழ்நாட்டில் தலித் மற்றும் பழங்குடியின பெண்களின் சுகாதார உரிமை சம்பந்தமான பொது கட்டுரை.
பின் குறிப்பு:
சூணாம்பேடு கட்டுரை வெளியான போது ஆலோசித்த முதல்வர் கருணாநிதிக்கு, மழுப்பலான பதிலை அதிகாரிகள் சொன்னார்களாம். அதை நிராகரித்த முதல்வர், கட்டுரையின் நம்பகத்தன்மையை சுட்டிக்காட்டி கடிந்து கொண்ட தகவலை, ஒரு அரசு செயலாளர்  பகிர்ந்து கொண்டார். நீண்ட உழைப்பை நெகிழ்ச்சியாகவும், கவனமாகவும் திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.
About the book... In Dr Imrana Qadeer’s words, “ Being part of this process has been an enriching experience…This process brought out the complexity of the issue of Dalit women’s health and rights, which requires deep insight and sensitivity towards structural, social, economic, cultural, gender and technological constructs to understand the well-being and collective rights of the most marginalized. For this reason, other than the journalists who were awarded the Fellowships, we decided to invite scholars engaged in Dalit studies or those engaged in evolving a comprehensive vision of health, especially of the marginalized. These scholars agreed readily and were spontaneous in their support. This has helped in creating a thin cloud over the blinding glare of ‘India Shining’ with a silver lining that helps see things otherwise not visible, and contributes towards making better ideological and strategic choices in the future.”

புத்தரும், ஆர்ப்பாக்கம் தம்மமும்

பேராசிரியர் தமிழ்ப்பரிதி அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு திட்டம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள், உத்திரமேரூர் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு போனோம். அங்குள்ள ஆதிகேசவபெருமள் கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். கோயிலுக்கு இடப்புறம் முள்புதரில், சில சிலைகள் கிடந்தன. ஒன்றின் தலை உடைக்கப்பட்டிருந்தது. அவற்றை தமிழ்ப்பரிதி போட்டோ எடுத்தார்.
அதிகமும்  புத்தர் சிலைகள். ஒன்று மிகவும் கம்பீரமாக இருந்தது. ஒரே கல்லில் இருபுறமும் முகம் செதுக்கப்பட்டிருந்தது. மிகவும் அபூர்வ சிலை. கிராமத்தவரிடம் விசாரித்த சில தகவல்களை தெரிந்து கொண்டோம். பல நாட்டு பவுத்த ஆர்வலர்களும் அந்த சிலையை கண்டு செல்வதாக தெரிவித்தனர்.
கோயில் முன்புறம் உள்ள ஒரு சமண வழிபாட்டிடத்தில் மிகவும் பிரமாண்டமான மகாவீர் சிலை உள்ளது.  அருகே பவுத்த சமண ஆய்வு மையம் என்ற அமைப்பு தென்பட்டது. அதன் நிறுவனர்  ராஜகோபாலனை சந்தித்து பேசினோம். பவுத்தம், சமணம் தொடர்பாக சில புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். ஒரு மாத இதழும் நடத்தி வந்தார். நீ்ண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஆய்வு மையத்தின் தலைமையகம், சென்னை, அயனாவரத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
அந்த சிலைகள் குறித்து ஒரு செய்தி கட்டுரை தயாரிக்க, சில தரவுகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் அதிகாலை புத்தர் சிலையைக் காணவில்லை என, ஒருவர் தகவல் கொண்டு வந்தார். நான் போனபோது, தடயங்கள் அழிந்திருக்கவில்லை.  ஊர் மக்கள் கூடி, கவலையை வெளிப்படுத்தினர். போலீசார் வந்திருக்கவில்லை.
சிலையை, தமிழ்பரிதி போட்டோ எடுத்திருந்த அதே கோணத்தில், சிலை இல்லாத வெற்றிடத்தை போட்டோ எடுத்தோம். என் பணிஒழுங்கு வரிசைப்படி தகவல் சேகரித்தேன். ஆர்ப்பாக்கம் ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக தலைவர், போலீசார், பவுத்த சமண ஆய்வாளர் ராஜகோபாலன் என, பல தரப்பிலும் தகவல் வாங்கி செய்தி அனுப்பினேன். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ச்சியாக சில செய்திகளை பிரசுரித்தேன். சிலை கடத்தலுடன், அந்த பகுதியில் பணியாற்றும், என்.ஜி.ஒ.,வுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தை , கிராம மக்கள் எழுப்பினர். போலீசார் எதையும் கண்டு கொள்ளவில்லை.
சில நாட்களுக்கு பின், நிலைமையை அறிய மீண்டும் ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு போனேன். ஏற்கனவே தகவல் தந்தவர்களை சந்தித்து, வழக்கின் முன்னேற்றம் குறித்து கேட்டேன். ஒன்றும் நடந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. பவுத்த சமண ஆய்வாளர்  ராஜகோபாலனையும் சந்திக்கப் போனேன்.
அவர் வீட்டுக்கதவை தட்டிய போது, ஒரு பெண் திறந்தார்.  விவரத்தை கூறி, சந்திக்க விரும்புவதாக சொன்னேன். அவர் உள்ளே சென்றார். நான் தெருவில் நின்று கொண்டிருந்தேன். நீண்ட நேரம், பதில் எதுவும் வரவி்ல்லை. நீண்ட காத்திருப்புக்குப் பின், ராஜகோபாலன் வெளியே வந்தார். முன் அறிமுகம் இல்லாதவர் போல் நடந்த கொண்டார்.  மீண்டும் என்னை அறிமுகப்படுத்தியபடி, விவரத்தை சொன்னேன். அவர் முகத்தில் அலட்சியம் தெரிந்தது.
என் பேச்சு எதையும் அவதானிக்கவில்லை என, உணர்ந்து கொண்டேன். புத்தர் சிலை காணாமல் போன விவகாரம் குறித்து என் உரையாடலை நகர்த்தினேன். அப்போதுதான், ‘ அந்த செய்தியில என் பெயருக்கு முன்னே முதல்லே... அவன் பேரை போட்டிருந்தே... நீயும் அவரும் ஒரே சாதியா...’ என்று தொடங்கி, அவரது சாதி அபிப்ராயத்தை கொட்டினார். சிரித்துக் கொண்டே, ‘நான் பத்திரிகை தொழில் செய்றேன். நீங்கெல்லாம் யாருன்னே எனக்கு தெரியாதே...’ என்றேன். ‘நக்கல் பண்றியா...’ என்று துவங்கி வசவுகளை தந்தார். வாங்கி வைத்துக் கொண்டேன்.
அந்த புத்தரை கண்டுபிடிக்க பல முறை செய்தி தயாரித்துள்ளேன். ஒருமுறை விசாரித்த போது, வழக்கை மூடிவிட்டதாக தெரிவித்தனர். முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம், அதன்  பண்பாட்டு தொன்மை குறித்து பேசி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டினேன்.  நண்பர் போதி தேவவரம் காஞ்சிபுரம் கலெக்டரை நேரில் சந்தித்து, சிலை குறித்து ஒரு புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழக பண்பாட்டு அடையாளம் அந்த புத்தர் சிலை. அதில் ஆர்ப்பாக்கத்தின் வரலாற்று தொன்மை உள்ளது. நான் மதங்களை போற்றுபவன் அல்ல... பண்பாட்டை பேணுபவன். அதற்கு பக்தி அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

மனதை உருக்கும் மரபிசை : பூங்கனி ஒரு கனவு

நண்பர் பேராசிரியர் எட்வர்டு சென்னை வந்திருந்தார். சந்தித்த போது, வில்லடி கலைஞர் பூங்கனி மறைவுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டம் நடத்துங்கள் என்றேன். அதற்கு பரிசாக, தலைமை பொறுப்புக்கு அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
பேராசிரியர் அ.காக்கும் பெருமாளை  சிறப்புரைக்க அழைத்துள்ளதாக சொன்னார். மகிழ்ச்சி அடைந்தேன். பண்பாட்டு மானுடவியல் அறிஞர்கள், தமிழகத்தில் மிகக் குறைவு. அந்த துறையில் அ.காக்கும் பெருமாள் அவர்களின் ஆய்வு, எழுத்து, பதிப்பு பணி  என, நீண்ட பயணத்தை அறிவேன். அவருடன், இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்கிறேன்.
ஒருவரது நினைவை போற்ற தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும். கலைஞர் பூங்கனி மறைந்துவிட்டார். அவரது வாழ்க்கையை, இசையை நினைவில் கொண்டு இங்கு கூடியுள்ளோம்.
ஏன் அவரை நினைக்க வேண்டும்.
வாழ்ந்த காலத்தில் அவரது பணி என்ன
 எனக்கு தெரியாது. நேரில் பார்த்தவன் இல்லை.
என் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் முன்பே, பாடுவதை நிறுத்திவிட்டார்.  அந்த காலத்தில் அவரது ஒரு நிகழ்ச்சியைக் கூட நான் பார்த்தது இல்லை. பார்த்திருந்தாலும், அவரது பாடலை, அதன் உயிரூட்டத்துடன் கவனிக்கும், ரசிகத்தன்மை  அப்போது வந்திருக்குமா என்பது கேள்வி. கண்டிப்பாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
என் இளமை காலத்தில் பொதுவாக, வில்லிசை நிகழ்ச்சி, கிராமங்களில் தாய் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. அம்மன் கோவில் கொடை நிகழ்வுகளில் தான் அது நிகழ்த்தப்படும். பூங்கனியின் நிகழ்ச்சி நடத்தும் அளவு என் கிராம கோவில் பொருள் வசதி படைத்தது அல்ல.
பின், எப்படி அவர் நினைவு நிகழ்வுக்கு வந்திருக்கிறேன் என்று கேட்பீர்கள். கோடையில் அறுவடைக்கு பிந்திய நாட்கள் ஓய்வானவை. களிப்பானவை. என் போன்ற விவசாயத்தை பின்புலமாக கொண்ட குடும்பங்களில், அப்போதுதான் உரையாடல் அதிகமாக இருக்கும்.
அந்த உரையாடல்களில், பெரும்பாலும் வில்லடிக் கலைஞர் பூங்கனி இருப்பார். அவரது ஒவ்வொரு அசைவும் விமர்சனத்துடனோ, லயிப்புடனோ பேசப்படும். அவரது அணிகலன் பற்றி அறியும் ஆர்வத்தில், வீட்டில் இருக்கும் இளம் பெண்கள்,  கேள்வி எழுப்புவர். அவரது தனி வாழ்க்கை, ஒழுக்கம், ஒப்பனை எல்லாம் அலசப்படும்.
இப்படி குடும்ப உரையாடல்கள் மூலம் தான் நான் அவரை அறிவேன். இதழியல் பணிக்கு சென்ற போது, செய்தி உலகுக்கும்  புனைவு உலகுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக கண்டேன். அந்த வெற்றிடத்தை நிரப்ப, சிந்தித்துக் கொண்டிருப்பேன்.
நாட்டுப்புற இசை நிகழ்வுகளுக்கு போகும் போது, இவர் போன்ற கலைஞர்கள் நினைவு வரும். ஒப்பிட்டு பார்க்கும் மனம் வரும்.
அப்படித்தான், சேலம், பெரியார் பல்கலைக் கழகத்தில், நடந்த இதழியல் ஆய்வுக் கருந்தரங்கில் வளர்ச்சி செய்திகள் சம்பந்தமாக ஒரு கட்டுரை வாசிக்க  போயிருந்தேன். அங்கு, லண்டன் பி.பி.சி., தொலைக்காட்சிக்கு, இசை தொடர்பான டாகுமெண்டரிகள் தயாரிக்கும், மார்க் கியூரெக்ஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. உடுக்கை இசை பற்றிய பேச்சு வந்தது. அதை இசைக்கும் கலைஞர்களை பற்றி அறியும் வகையில் தகவல்கள் கேட்டார்.
தமிழகத்தில் அந்த இசைக்கருவியின் பயன்பாடு பல  வகைமையாக உள்ளதை சொன்னேன். அதன் இசை தொனியில் உள்ள நடத்தை, நம்பிக்கை வேறுபாடுகளையும் சொன்னேன். ராப்பாடுதல், குறிசொல்தல், வில்லிசையுடன் சேர்ந்திசைத்தல் என, வழிபாட்டுடன் சேர்ந்த, வகைமைகளை விளக்கினேன்.
மிகவும் ஆர்வமான அவர், கருத்தரங்கம் முடிந்ததும், சேலம் பகுதியில் உடுக்கு அடிக்கும் சிலரை  சந்திக்க விரும்பினார். மேட்டூர் பகுதியில், சிலரை அறிமுகப்படுத்தினேன். அந்த சிறு உலாவில்,  அமெரிக்கா லுாசியானா நியூ ஆர்லேண்டில்  நடிப்புத்துறையில் பேராசிரியையாக உள்ள டாக்டர் ஆர்டிமீஸ் பிரீசல்  கலந்து கொண்டார்.
தொடர்ந்த நாட்களில், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை பகுதிகளில் சில கலைஞர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தில், வில்லிசையுடன் சேர்ந்திசைக்கும் உடுக்கை கலைஞர்களை சந்திக்க, மூன்று நாட்கள் பயணமாக வந்தார். என்னையும் உடன் இருக்க கேட்டு அழைத்தார்.
ஓட்டலில்  குழுவினருடன்,  அவர் தங்கியிருந்தார். நான் என் ஊருக்கு போய்விட்டேன்.  முதல் நாள் சிலரை சந்தித்தோம். மறுநாள் காலையிலே, என் வீட்டைத் தேடி வந்துவிட்டார். முற்பகல் வரை பல விஷயங்கள் பற்றி பேசினோம். வில்லிசை பற்றியும் கேட்டார்.
அப்போதுதான், பூங்னியை சந்திக்க அழைத்து போனேன். கொட்டாரத்தில், கல்லடி புறம்போக்கில் ஒரு குடிசையில் இருந்தார். எனக்கும் அதுதான் முதல் சந்திப்பு. பூங்கனி பெரும் மகிழ்ச்சி அடைந்தார். மார்க் கியூரெக்ஸ் விரும்பியதால், கிட்டத்தட்ட,  60 நிமிடங்கள் தனியாக கதைப் பாடல்களில் சில பகுதிகளை பாடினார். அவை, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அப்போது அவருக்கு வயது, 78 என்று சொன்னார்.
அந்த பாடல் ரசனையில் கரைந்து போன, மார்க் கியூரெக்ஸ், பூங்கனி பற்றி, பி.பி.சி.,க்காக ஒரு ஆவணப்படம் தயாரிக்க திட்ட அறிக்கை அனுப்பப் போவதாக சொன்னார்.  ஏற்கனவே, கிராமி விருது பெற்ற புகழ் பெற்ற பல இசைக் கலைஞர்கள் வாழ்வை, டாகுமெண்டரியாக எடுத்திருந்தார் மார்க், என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
அதன்பின், பணி காரணமாக நான், இலங்கை சென்றுவிட்டேன். எப்போதாவது, நாகர்கோவில் வந்தால், பூங்கனியை சந்திப்பேன்.
சென்னை பல்கலை இதழியல்துறையில்,  பிரபல நாட்டுப்புற கலைஞர் ஓம் முத்துமாரி பெயரில், வாழ்நாள் சாதனையாளர் விருது ஒன்றை ஏற்படுத்தினர்.  பல்கலை கல்விக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர் என்ற முறையில், விருதுக்கான தேர்வு குழு கூட்டத்தில் என்னையும் சேர்த்திருந்தனர். பூங்கனியை விருதுக்கு பரிந்துரைத்தேன். அவர் தொடர்பான, சிறிய வரைவு ஒன்றையும் சமர்ப்பித்தேன். அதை ஏற்று, இதழியல் துறை தலைவர் டாக்டர் ரவீந்திரனை தலைவராக கொண்ட குழு, பூங்கனிக்கு விருது வழங்க ஒப்புதல் அளித்து அறிவி்த்தது.
உடல்நிலை சரியில்லாததால், விருதை வாங்க அவரால் நேரடியாக வரமுடியவில்லை. அவர் சார்பில், மானுடவியலாளர் மலர்விழி பெற்றுக் கொண்டார். அதன்பின் டாக்டர் ரவீந்திரன் கொட்டாரத்துக்கு வந்து, அவரை கவுரவித்து சென்றார்.
பின்னர், 2015 ல், சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ ஆசிரியராக கவுரவிக்கப்பட்டார். அப்போது, கிட்டத்தட்ட, 5 மணி நேரம் வில்லிசைத்தார். அது, பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிப்பு உள்ள அனைத்து ஆங்கில இதழ்களும் பூங்கனியின் தனிப்பேட்டியை, பெரிய அளவில் வெளியிட்டன. சிறப்பு கட்டுரைகளையும் வெளியிட்டன.
அதை தொடர்ந்து, சிங்கபூரைச் சேர்ந்த லேடி காஸ் என்ற கலைவாணி, தன் இசை தொகுப்பு ஒன்றை பூங்கனியை மையமாக்கி வெளியிட்டார். இது தான் எனக்கு தெரிந்த அவரது வாழ்க்கை பயணம்.
சரி இனி அவரது இசையில் ஆழத்துக்கு போவோம்.
பூங்கனி பாடியதை, நிகழ்த்தியதை மரபிசையாக நான் பார்க்கிறேன். அந்த அடிப்படையில்தான், அவருக்கு அஞ்சலிக் கூட்டமும் ஒரு நினைவரங்கமும் நடத்த பரிந்துரைத்தேன்.
ஒருமுறை, டாக்டர் முத்துக்குமாரசாமி, சென்னை மியூசியம் அரங்கில், இசை சங்கமம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். மூன்று நாட்கள் நடந்ததாக நினைவு. பல மாநில கலைஞர்களும், பல இசை வடிவங்களை அங்கு நிகழ்த்தினர். அதில் ஒரு நிகழ்ச்சியாக, வில்லிசையும் இருந்தது. வில்லிசை நிகழ்ந்த போது, ஏற்பட்ட ஆரவாரமும், அதிர்வும் அளப்பரியது. அதை சொற்களால் விவரிக்க முடியவில்லை. எல்லாமே இசைதான்... இதற்கு மட்டும் அத்தனை சிறப்பு ஏன் என்று சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை.
ஒருமுறை, ஜப்பான் தேசிய மரபியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தெரிதா யட்சிதகா என்பவரை, சென்னையில் சந்தித்தேன். ஒரு கட்டுரைக்காக, கிட்டத்தட்ட, 3 மணி நேரம் உரையாடினோம். அவர், மரபிசையியலில் அறிஞர். அவர்தான், எத்னோ மியூசிக் என்ற பதத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம், 3 மணி நேரம் படித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மரபிசை பற்றி அவர் தெளிவாக வரயைறுத்தார்.
இடம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் பிலிப்பெய்ன்ஸ் நாட்டு பழங்குடி பாரம்பரியத்தை, இந்த இசை மூலம், அமெரிக்காவில் கண்டு பிடித்த தகவலையும் கூறினார். அப்போதுதான், சென்னை அருங்காட்சியக அரங்கில், வில்லிசைக்கு கிடைத்த வரவேற்பை புரிந்து கொள்ள முடிந்தது.
என்னை ஈர்க்கும் இசை அமைப்புகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். குரவை இசை, கணியான்களின் மகுட இசை, நவீன இசை கருவிகள் சேராத வில்லிசை, நையாண்டி மேளம் போன்றவை ஈர்ப்பவை. அவை, வழி வழியாக வருவதால் மரபோடு சம்பந்தப்பட்டுள்ளதாக எண்ணினேன்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியினரின் மெல்லிசை  ஈர்த்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில்  வசிக்கும் பழங்குடிகளின் இசையை விரும்பி கேட்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதில், கோச் என்ற பழங்குடியினரின் நடனத்துடன் கூடிய பாடல்களில் லயிப்பேன். அவற்றில் வழிபாடு தொடர்பான பாடல்கள், குரவை இசையுடன் துவங்கும். அவற்றை பல முறை கேட்டாலும் அலுக்காது.
அதைத் தொடர்ந்து, அந்த பழங்குடியினத்தவர் பற்றிய கலாசார, பண்பாட்டு பின்னணி பற்றி அறிந்து கொள்ள சில புத்தகங்களை வாசித்தேன். அவர்களின் கலை நடவடிக்கை கள், இயற்கையுடன் தொடர்புடையவை. உழைப்புடன் தொடர்புடயவை. வழிபாட்டு பாடல்கள் கூட உழைப்புடன் தொடர்புடையவையாக உள்ளன.
அந்த பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய பாடல்களை, புதிப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. அது கலையிலும் எதிரொலிப்பதைக் காண்கிறேன். அவர்கள் வாழ்வுடன் இசை, நடனக்கலை ஒன்றிணைந்து வளர்ந்து வருகிறது.
அந்த பழங்குடியினர், திபேத் பர்மிய மரபை சேர்ந்தவர்கள். அவர்களின் இசை வெள்ளமாக பிரவாகித்து பரவியுள்ளது. மரபான பாடல்கள், புதுப்பொலிவுடன் மாறாத சுவையுடன் புதிப்பித்து பாடப்படுகின்றன. அவை மேடைகளில், வழிபாட்டு இடங்களில் நிகழ்ச்சியாக அரங்கேறுகின்றன. தனியாகவும், நடனத்துடனும் அருவியாக கொட்டுகின்றன. அது போன்ற மரபில் வந்தவர் பூங்கனி. இவர் போன்ற இசைக்கலைஞர்களை, அந்த மரபுக் கலையை உயிர்ப்பிக்கப்போவது யார் என்ற கேள்வியை முன்வைக்கும் ஒரு அறிவுத்தளமாக இதை எடுத்துக்கொள்கிறேன்.
என் பரிந்துரையை ஏற்று, கூட்டத்தை ஏற்பாடு செய்த, நாகர்கோவில் ஸ்காட்கல்லுாரி முதல்வர் பேராசிரியர் எட்வர்டு மற்றும் அனக்கம் குழுவினருக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். என் உரையைக் கேட்ட உங்களுக்கும்... நன்றி
(நாகர்கோவில் அனக்கம் 84 வது கூட்டத்தில், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லுாரி வளாகத்தில் பேசியது)

வண்ணங்களை பூசிய வால்காக்கை

சென்னை பெசண்ட் நகர் உ.வே.சா., வாசிப்பகம் பக்கம் ஒரு வேலையாக போயிருந்தேன். கலாசேத்ரா பள்ளி வளாகத்தில் தனித்தீவு போல் உள்ளது. தனிமையும் அமைதியும் நிறைந்த இடம். வளாகத்தில், மைனா, கிளி, வால்காக்கை,  துடிச்சிட்டு, பூணியல் என, பறவைகள் சுதந்திரமாக திரிந்தன. கொஞ்ச நேரம் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த படிப்பகத்தில் மிகச்சிறந்த சுவடியகம் உள்ளது. சங்க இலக்கிய மூலச் சுவடிகள் பலவற்றை பார்த்தேன். மூலிகை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் மூலிகை கலவை நெடிக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. பழந்தமிழ் சுவடிகளை, மின்னுாலாக்கும் பணி நடந்து வருகிறது.
வாசிப்புக்கு வசதியான வடிவமைப்புடன் கூடம் உள்ளது. மேற்கோள் புத்தகங்கள்  பல ஆயிரம் உள்ளன. படிக்கத்தான் ஆட்களை காணோம்.
இந்த இடத்துக்கு போனதும்,  ருக்மிணி தேவி அருண்டேல் பற்றிய நினைவு வந்தது. அவரது மறைவு தினம், பிப். 24 ம் தேதி. மறைந்த வருடம், 1986. என் அஞ்சலியை பதிவு செய்தேன்.
அவர் பிறந்தது,  1904  பிப்., 29 ல். அவரது பிறந்த நாளை முறைப்படி நினைவு படுத்த வேண்டுமானால், நான்கு வருடத்துக்கு ஒருமுறை தான் முடியும். 
மதுரையில் பிறந்தவர். புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியை நிறுவியவர்.
சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே ஆடிவந்த சதிர் என்ற நடனத்தை, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பரவலாக்கியவர்.
மொரார்ஜி தேசாய், இந்திய பிரதமராக இருந்த போது, 1977 ல் இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார். ‘கலை மற்றும் கலைசார்ந்து  பணிபுரிவதே விருப்பம்’ என்று கூறி மறுத்துவிட்டார்.
மதுரயைில், நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு,  பிறந்தார். அன்னி பெசண்ட் துவக்கிய,  தியசோபிக்கல் சொஸைட்டியில், நீலகண்ட சாஸ்திரி ஈடுபாடு கொண்டவர். பணி ஒய்வுக்கு பின்,  சென்னை அடையாரில், குடும்பத்துடன் குடியேறினார்.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, மாலினி என்ற நாடகத்தில் அங்குதான் ருக்மிணி தேவி நடித்தார். அவரது பாடல்களையும் பாடினார். தந்தையின் ஊக்குவிப்பால் கிரேக்க நடனம் கற்றுக் கொண்டார்.
கல்விபணிக்காக வந்த இங்கிலாந்தை சேர்ந்த  ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை, 1920 ல்  அன்னிபெசன்ட் முன்னிலையில் மணந்தார்.
இது, அக்காலக் கட்டத்தில், பிரமாண குடும்பங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய நாட்டு பாலே கலைஞர்கள் அன்னா பாவ்லோவா, கிளியோ நார்டி  ஆகியோரிடம், பாலே நடனம் கற்றார். இந்திய பாரம்பரிய நடனத்தையும் கற்கும் படி, பாப்லோவா பரிந்துரைத்தார்.
சென்னை மியூசிக் அகாதெமியில், 1933 ல் தேவதாசிகளின், சதிர் நடன நிகழ்ச்சி நடந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அக்கலையை  கற்க விரும்பினார். பல தடைகளுக்கு பின், மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் கற்றார். பின்னர் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் பயின்றார்.
சதிர் என்ற பரதநாட்டியம், கற்பிக்க, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியைத் துவக்கினார். அந்தக் காலக்கட்டத்தில்,  பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்ற சமூகத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவியிருந்தது. அதை மாற்ற அயராது உழைத்தார்.
சதிராட்டம், ஆபாசங்களை அள்ளி வீசுவதை மட்டுமே குறியாக கொண்டிருந்தது. ருக்மிணி, அந்த தளத்தை மாற்றினார். அதில் இருந்து மேலெழுந்து, மிகச்சிறந்த ஆடல் அனுபவத்தை வெளிப்படுத்தி ரசிக்க வைத்தார்.
தேவதாசிகள், சதிராடிய போது, சேலை, நகைகள் என பலவற்றையும் அணிந்திருந்தனர். ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் பின் தொடர்ந்தனர். இதனால் நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக கருதிய ருக்மிணி சில மாற்றங்களை செய்தார்.
பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஓரமாக அமரச் செய்தார். பாரம்பரிய சிற்பக் கலை ரசனையில் தோய்ந்து, இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியுடன் புதுவித உடைகளையும், ஒப்பனையையும்  வடிவமைத்தார்.  நடன மேடையின் பின்புலத்தை மாற்றியமைத்தார். 
கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால், மேடை ஒளியமைப்பையும் மாற்றினார்.  சதிராட்டதுக்கு, பரதநாட்டியம் என பெயர் சூட்டினார்.
வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களை நடன காட்சியாக அமைத்தார்.
இந்திய பாரம்பரியக் கலைகளில் முழு ஆர்வம் கொண்டிருந்தார்.  நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலை, ஊக்குவிக்கும் பொருட்டு  கண்கவர் வண்ணங்களில்,  வேலைப்பாடுகளுடன் கைத்தறி ஆடைகளை தயாரித்தார்.
கமலாதேவி சட்டொபத்யா உதவியுடன், துணிகளுக்கு இயற்கை சாயங்களை பயன்படுத்தும் முறையை பயின்றார். கலம்கரி என்ற துணிகளில், இயற்கை சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளை ஊக்குவித்தார். இயற்கையுடன் வாழ்ந்த பேராளர் அவர்.
பத்ம பூசன் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவை இவரை அலங்கரித்தவை. வண்ணங்களை பூசிய வால் காக்கை போல் பறந்து திரியும் அவரது நினைவை போற்றுகிறேன்.

இருளுக்குள் ஒளியும் நிலவு

தண்டரை, மிகப் பழமையான ஊர். தண்மை உறையும் இடம் என்று பொருள் கொள்ளலாம். செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், குறுங்காடுகளின் ஊடே சற்று உள்ளடங்கி உள்ளது. சிறு குன்றுகளால் சூழ்ந்துள்ளது. இங்கு, 10 ஏக்கர் பரப்பில் இருளர் பழங்குடி இனப் பெண்கள், சிறு காடு உருவாக்கியுள்ளனர். பல்லுயிர் பெருகி நிறையும் காடு. மரங்களும், பறவைகளும் மனதை இதப்படுத்தும். மூலிகை செடிகள் நிறைந்த பண்ணையும்  உள்ளது.
மிக எளிய, இனிய அனுபவத்தை தரும் இடம். இது உருவாகும் போது பலமுறை சென்றுள்ளேன். இருளுக்குள் ஒளிந்திருக்கும் நிலவுகளைக் கண்டுள்ளேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தண்டரைக்கு... பழங்குடி மக்களுக்கான இதழியல் பற்றி பேசுகிறேன்.