Thursday 14 March 2019

மனதை உருக்கும் மரபிசை : பூங்கனி ஒரு கனவு

நண்பர் பேராசிரியர் எட்வர்டு சென்னை வந்திருந்தார். சந்தித்த போது, வில்லடி கலைஞர் பூங்கனி மறைவுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டம் நடத்துங்கள் என்றேன். அதற்கு பரிசாக, தலைமை பொறுப்புக்கு அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
பேராசிரியர் அ.காக்கும் பெருமாளை  சிறப்புரைக்க அழைத்துள்ளதாக சொன்னார். மகிழ்ச்சி அடைந்தேன். பண்பாட்டு மானுடவியல் அறிஞர்கள், தமிழகத்தில் மிகக் குறைவு. அந்த துறையில் அ.காக்கும் பெருமாள் அவர்களின் ஆய்வு, எழுத்து, பதிப்பு பணி  என, நீண்ட பயணத்தை அறிவேன். அவருடன், இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்கிறேன்.
ஒருவரது நினைவை போற்ற தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும். கலைஞர் பூங்கனி மறைந்துவிட்டார். அவரது வாழ்க்கையை, இசையை நினைவில் கொண்டு இங்கு கூடியுள்ளோம்.
ஏன் அவரை நினைக்க வேண்டும்.
வாழ்ந்த காலத்தில் அவரது பணி என்ன
 எனக்கு தெரியாது. நேரில் பார்த்தவன் இல்லை.
என் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் முன்பே, பாடுவதை நிறுத்திவிட்டார்.  அந்த காலத்தில் அவரது ஒரு நிகழ்ச்சியைக் கூட நான் பார்த்தது இல்லை. பார்த்திருந்தாலும், அவரது பாடலை, அதன் உயிரூட்டத்துடன் கவனிக்கும், ரசிகத்தன்மை  அப்போது வந்திருக்குமா என்பது கேள்வி. கண்டிப்பாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
என் இளமை காலத்தில் பொதுவாக, வில்லிசை நிகழ்ச்சி, கிராமங்களில் தாய் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. அம்மன் கோவில் கொடை நிகழ்வுகளில் தான் அது நிகழ்த்தப்படும். பூங்கனியின் நிகழ்ச்சி நடத்தும் அளவு என் கிராம கோவில் பொருள் வசதி படைத்தது அல்ல.
பின், எப்படி அவர் நினைவு நிகழ்வுக்கு வந்திருக்கிறேன் என்று கேட்பீர்கள். கோடையில் அறுவடைக்கு பிந்திய நாட்கள் ஓய்வானவை. களிப்பானவை. என் போன்ற விவசாயத்தை பின்புலமாக கொண்ட குடும்பங்களில், அப்போதுதான் உரையாடல் அதிகமாக இருக்கும்.
அந்த உரையாடல்களில், பெரும்பாலும் வில்லடிக் கலைஞர் பூங்கனி இருப்பார். அவரது ஒவ்வொரு அசைவும் விமர்சனத்துடனோ, லயிப்புடனோ பேசப்படும். அவரது அணிகலன் பற்றி அறியும் ஆர்வத்தில், வீட்டில் இருக்கும் இளம் பெண்கள்,  கேள்வி எழுப்புவர். அவரது தனி வாழ்க்கை, ஒழுக்கம், ஒப்பனை எல்லாம் அலசப்படும்.
இப்படி குடும்ப உரையாடல்கள் மூலம் தான் நான் அவரை அறிவேன். இதழியல் பணிக்கு சென்ற போது, செய்தி உலகுக்கும்  புனைவு உலகுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக கண்டேன். அந்த வெற்றிடத்தை நிரப்ப, சிந்தித்துக் கொண்டிருப்பேன்.
நாட்டுப்புற இசை நிகழ்வுகளுக்கு போகும் போது, இவர் போன்ற கலைஞர்கள் நினைவு வரும். ஒப்பிட்டு பார்க்கும் மனம் வரும்.
அப்படித்தான், சேலம், பெரியார் பல்கலைக் கழகத்தில், நடந்த இதழியல் ஆய்வுக் கருந்தரங்கில் வளர்ச்சி செய்திகள் சம்பந்தமாக ஒரு கட்டுரை வாசிக்க  போயிருந்தேன். அங்கு, லண்டன் பி.பி.சி., தொலைக்காட்சிக்கு, இசை தொடர்பான டாகுமெண்டரிகள் தயாரிக்கும், மார்க் கியூரெக்ஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. உடுக்கை இசை பற்றிய பேச்சு வந்தது. அதை இசைக்கும் கலைஞர்களை பற்றி அறியும் வகையில் தகவல்கள் கேட்டார்.
தமிழகத்தில் அந்த இசைக்கருவியின் பயன்பாடு பல  வகைமையாக உள்ளதை சொன்னேன். அதன் இசை தொனியில் உள்ள நடத்தை, நம்பிக்கை வேறுபாடுகளையும் சொன்னேன். ராப்பாடுதல், குறிசொல்தல், வில்லிசையுடன் சேர்ந்திசைத்தல் என, வழிபாட்டுடன் சேர்ந்த, வகைமைகளை விளக்கினேன்.
மிகவும் ஆர்வமான அவர், கருத்தரங்கம் முடிந்ததும், சேலம் பகுதியில் உடுக்கு அடிக்கும் சிலரை  சந்திக்க விரும்பினார். மேட்டூர் பகுதியில், சிலரை அறிமுகப்படுத்தினேன். அந்த சிறு உலாவில்,  அமெரிக்கா லுாசியானா நியூ ஆர்லேண்டில்  நடிப்புத்துறையில் பேராசிரியையாக உள்ள டாக்டர் ஆர்டிமீஸ் பிரீசல்  கலந்து கொண்டார்.
தொடர்ந்த நாட்களில், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை பகுதிகளில் சில கலைஞர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தில், வில்லிசையுடன் சேர்ந்திசைக்கும் உடுக்கை கலைஞர்களை சந்திக்க, மூன்று நாட்கள் பயணமாக வந்தார். என்னையும் உடன் இருக்க கேட்டு அழைத்தார்.
ஓட்டலில்  குழுவினருடன்,  அவர் தங்கியிருந்தார். நான் என் ஊருக்கு போய்விட்டேன்.  முதல் நாள் சிலரை சந்தித்தோம். மறுநாள் காலையிலே, என் வீட்டைத் தேடி வந்துவிட்டார். முற்பகல் வரை பல விஷயங்கள் பற்றி பேசினோம். வில்லிசை பற்றியும் கேட்டார்.
அப்போதுதான், பூங்னியை சந்திக்க அழைத்து போனேன். கொட்டாரத்தில், கல்லடி புறம்போக்கில் ஒரு குடிசையில் இருந்தார். எனக்கும் அதுதான் முதல் சந்திப்பு. பூங்கனி பெரும் மகிழ்ச்சி அடைந்தார். மார்க் கியூரெக்ஸ் விரும்பியதால், கிட்டத்தட்ட,  60 நிமிடங்கள் தனியாக கதைப் பாடல்களில் சில பகுதிகளை பாடினார். அவை, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அப்போது அவருக்கு வயது, 78 என்று சொன்னார்.
அந்த பாடல் ரசனையில் கரைந்து போன, மார்க் கியூரெக்ஸ், பூங்கனி பற்றி, பி.பி.சி.,க்காக ஒரு ஆவணப்படம் தயாரிக்க திட்ட அறிக்கை அனுப்பப் போவதாக சொன்னார்.  ஏற்கனவே, கிராமி விருது பெற்ற புகழ் பெற்ற பல இசைக் கலைஞர்கள் வாழ்வை, டாகுமெண்டரியாக எடுத்திருந்தார் மார்க், என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
அதன்பின், பணி காரணமாக நான், இலங்கை சென்றுவிட்டேன். எப்போதாவது, நாகர்கோவில் வந்தால், பூங்கனியை சந்திப்பேன்.
சென்னை பல்கலை இதழியல்துறையில்,  பிரபல நாட்டுப்புற கலைஞர் ஓம் முத்துமாரி பெயரில், வாழ்நாள் சாதனையாளர் விருது ஒன்றை ஏற்படுத்தினர்.  பல்கலை கல்விக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர் என்ற முறையில், விருதுக்கான தேர்வு குழு கூட்டத்தில் என்னையும் சேர்த்திருந்தனர். பூங்கனியை விருதுக்கு பரிந்துரைத்தேன். அவர் தொடர்பான, சிறிய வரைவு ஒன்றையும் சமர்ப்பித்தேன். அதை ஏற்று, இதழியல் துறை தலைவர் டாக்டர் ரவீந்திரனை தலைவராக கொண்ட குழு, பூங்கனிக்கு விருது வழங்க ஒப்புதல் அளித்து அறிவி்த்தது.
உடல்நிலை சரியில்லாததால், விருதை வாங்க அவரால் நேரடியாக வரமுடியவில்லை. அவர் சார்பில், மானுடவியலாளர் மலர்விழி பெற்றுக் கொண்டார். அதன்பின் டாக்டர் ரவீந்திரன் கொட்டாரத்துக்கு வந்து, அவரை கவுரவித்து சென்றார்.
பின்னர், 2015 ல், சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ ஆசிரியராக கவுரவிக்கப்பட்டார். அப்போது, கிட்டத்தட்ட, 5 மணி நேரம் வில்லிசைத்தார். அது, பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிப்பு உள்ள அனைத்து ஆங்கில இதழ்களும் பூங்கனியின் தனிப்பேட்டியை, பெரிய அளவில் வெளியிட்டன. சிறப்பு கட்டுரைகளையும் வெளியிட்டன.
அதை தொடர்ந்து, சிங்கபூரைச் சேர்ந்த லேடி காஸ் என்ற கலைவாணி, தன் இசை தொகுப்பு ஒன்றை பூங்கனியை மையமாக்கி வெளியிட்டார். இது தான் எனக்கு தெரிந்த அவரது வாழ்க்கை பயணம்.
சரி இனி அவரது இசையில் ஆழத்துக்கு போவோம்.
பூங்கனி பாடியதை, நிகழ்த்தியதை மரபிசையாக நான் பார்க்கிறேன். அந்த அடிப்படையில்தான், அவருக்கு அஞ்சலிக் கூட்டமும் ஒரு நினைவரங்கமும் நடத்த பரிந்துரைத்தேன்.
ஒருமுறை, டாக்டர் முத்துக்குமாரசாமி, சென்னை மியூசியம் அரங்கில், இசை சங்கமம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். மூன்று நாட்கள் நடந்ததாக நினைவு. பல மாநில கலைஞர்களும், பல இசை வடிவங்களை அங்கு நிகழ்த்தினர். அதில் ஒரு நிகழ்ச்சியாக, வில்லிசையும் இருந்தது. வில்லிசை நிகழ்ந்த போது, ஏற்பட்ட ஆரவாரமும், அதிர்வும் அளப்பரியது. அதை சொற்களால் விவரிக்க முடியவில்லை. எல்லாமே இசைதான்... இதற்கு மட்டும் அத்தனை சிறப்பு ஏன் என்று சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை.
ஒருமுறை, ஜப்பான் தேசிய மரபியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தெரிதா யட்சிதகா என்பவரை, சென்னையில் சந்தித்தேன். ஒரு கட்டுரைக்காக, கிட்டத்தட்ட, 3 மணி நேரம் உரையாடினோம். அவர், மரபிசையியலில் அறிஞர். அவர்தான், எத்னோ மியூசிக் என்ற பதத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம், 3 மணி நேரம் படித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மரபிசை பற்றி அவர் தெளிவாக வரயைறுத்தார்.
இடம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் பிலிப்பெய்ன்ஸ் நாட்டு பழங்குடி பாரம்பரியத்தை, இந்த இசை மூலம், அமெரிக்காவில் கண்டு பிடித்த தகவலையும் கூறினார். அப்போதுதான், சென்னை அருங்காட்சியக அரங்கில், வில்லிசைக்கு கிடைத்த வரவேற்பை புரிந்து கொள்ள முடிந்தது.
என்னை ஈர்க்கும் இசை அமைப்புகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். குரவை இசை, கணியான்களின் மகுட இசை, நவீன இசை கருவிகள் சேராத வில்லிசை, நையாண்டி மேளம் போன்றவை ஈர்ப்பவை. அவை, வழி வழியாக வருவதால் மரபோடு சம்பந்தப்பட்டுள்ளதாக எண்ணினேன்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியினரின் மெல்லிசை  ஈர்த்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில்  வசிக்கும் பழங்குடிகளின் இசையை விரும்பி கேட்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதில், கோச் என்ற பழங்குடியினரின் நடனத்துடன் கூடிய பாடல்களில் லயிப்பேன். அவற்றில் வழிபாடு தொடர்பான பாடல்கள், குரவை இசையுடன் துவங்கும். அவற்றை பல முறை கேட்டாலும் அலுக்காது.
அதைத் தொடர்ந்து, அந்த பழங்குடியினத்தவர் பற்றிய கலாசார, பண்பாட்டு பின்னணி பற்றி அறிந்து கொள்ள சில புத்தகங்களை வாசித்தேன். அவர்களின் கலை நடவடிக்கை கள், இயற்கையுடன் தொடர்புடையவை. உழைப்புடன் தொடர்புடயவை. வழிபாட்டு பாடல்கள் கூட உழைப்புடன் தொடர்புடையவையாக உள்ளன.
அந்த பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய பாடல்களை, புதிப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. அது கலையிலும் எதிரொலிப்பதைக் காண்கிறேன். அவர்கள் வாழ்வுடன் இசை, நடனக்கலை ஒன்றிணைந்து வளர்ந்து வருகிறது.
அந்த பழங்குடியினர், திபேத் பர்மிய மரபை சேர்ந்தவர்கள். அவர்களின் இசை வெள்ளமாக பிரவாகித்து பரவியுள்ளது. மரபான பாடல்கள், புதுப்பொலிவுடன் மாறாத சுவையுடன் புதிப்பித்து பாடப்படுகின்றன. அவை மேடைகளில், வழிபாட்டு இடங்களில் நிகழ்ச்சியாக அரங்கேறுகின்றன. தனியாகவும், நடனத்துடனும் அருவியாக கொட்டுகின்றன. அது போன்ற மரபில் வந்தவர் பூங்கனி. இவர் போன்ற இசைக்கலைஞர்களை, அந்த மரபுக் கலையை உயிர்ப்பிக்கப்போவது யார் என்ற கேள்வியை முன்வைக்கும் ஒரு அறிவுத்தளமாக இதை எடுத்துக்கொள்கிறேன்.
என் பரிந்துரையை ஏற்று, கூட்டத்தை ஏற்பாடு செய்த, நாகர்கோவில் ஸ்காட்கல்லுாரி முதல்வர் பேராசிரியர் எட்வர்டு மற்றும் அனக்கம் குழுவினருக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். என் உரையைக் கேட்ட உங்களுக்கும்... நன்றி
(நாகர்கோவில் அனக்கம் 84 வது கூட்டத்தில், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லுாரி வளாகத்தில் பேசியது)

No comments:

Post a Comment