Tuesday, 5 May 2026

காக்கை மீது கல்லெறிந்தால்...

காக்கை மீது கல்லெறிந்தால்... சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet) என்பதே தமிழகத்தில் கிளி என அழைக்கப்படும் பறவையினம். இலங்கை பேச்சு வழக்கில், பயற்றங்கிளி எனப்படுகிறது. பச்சை நிறத்தில், வளைந்து சிவந்த அலகுடன் காணப்படுகிறது. கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு கலந்த கழுத்து வளையம் ஆண் பறவைக்கு இருக்கும். பெண்கிளி எல்லா வகையிலும் ஆண் போல இருந்தாலும் கழுத்து வளையம் மட்டும் இருக்காது. மனிதர்கள் பேசும் சொற்களைக் கேட்டு, பழகி திரும்பச் சொல்லும் திறன் பெற்றுள்ளது. அஞ்சுகம், தத்தை கிள்ளை என்ற பெயர்களிலும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. பெரிய மரங்களில் இயற்கையாக அமைந்த பொந்துகளில் வசிக்கின்றன. சொந்தமாக கூடு கட்டுவதில்லை. சித்தாசிடே விலங்கின குடும்பத்தைச் சேர்ந்த பறவை கிளி. உலகின் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. பத்து கிராம் அளவில் இருந்து, நான்கு கிலோ வரை எடை இருக்கும். ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க காடுகளில் அதிக வகை உள்ளன. தமிழ்நாட்டில் சிவப்பு ஆர கிளிகள் அதிகம் உள்ளன. விதை, பழம், பூக்கள் தான் கிளியின் முக்கிய உணவு. ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் கியா என்ற இனக் கிளி, அழுகிய மாமிசத்தையும் உண்ணும். உலகின் மிகப்பெரிய கிளி இனம் ககாபோ. இதற்கு பறக்கும் திறன் இல்லை. குதித்து மரங்களில் ஏறும். உலகில் அருகி வரும் அரிய பறவைகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது. மனிதன் உச்சரிப்பது போல் ஒலி எழுப்ப வல்லது பச்சை கிளி. பயிற்சி அளித்தால் சில சொற்களை திரும்ப உச்சரிக்கும். வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் உண்டு. நான்கு வயது குழந்தைக்கு சமமாக, ‘ஐகியூ’ இருப்பதாக, பறவையியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஆப்ரிக்க காடுகளில் வாழும் சாம்பல் நிறக் கிளி, 100 சொற்கள் வரை, நினைவில் நிறுத்தி பேசும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கிளி மட்டுமே உண்பதற்கு கால்களை பயன்படுத்தும் திறன் கொண்ட பறவை. இதன் ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் உள்ளன; இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்நோக்கியும் இருக்கும். மனிதன் கைகளால் உணவைப் பற்றுவது போல உணவு பொருளை காலில் பற்றி வாயில் சாப்பிடுகிறது கிளி. இதைப் பிடித்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதும் உண்டு. பேச வைக்க முடியும் என்ற தவறான நம்பிக்தையே இதற்கு காரணம். கிளியை பிடித்துப் பழக்கி, ஜோதிட தொழில் செய்வோர் ஏராளம். கிளி ஆருடம் தமிழகத்தில் பிரபலமாக இருந்தது. சென்னை கடற்கரை, மாமல்லபுரம் போன்ற சுற்றலா இடங்களில், கிளி ஆரூடம் சொல்வேரை காண முடிகிறது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் தீவிமாக அமல்படுத்தப்பட்டு வருவதால் கிளி ஜோதிடர் நடமாட்டம் குறைந்துள்ளது. தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே, கிளியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதற்கு இலக்கிய சான்றுகள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் சிலை கரத்தில் கிளி உள்ளது. இது வழிபாட்டு மரபில் கிளியின் முக்கியத்தும் பற்றி குறிக்கும் ஆவணம். அழகிய நிறமும், வண்ண அலகும் அமைதியான தோற்றமும், மனிதனுக்கு இதன் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக உள்ளன. இலங்கையில் தமிழர் குடியிருப்பு பகுதிகளில் கூண்டில் கிளியை வளர்ப்பதை சாதாரணமாக காணலாம். தமிழகத்திலும் சில ஆண்டுகளுக்கு முன் இதே நிலைமை இருந்தது. இது போன்ற செயல்களை தடுக்க இந்தியாவில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம், இதுவரை ஏழு முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட அமலாக்க அடிப்படையில், தமிழக நிலப்பரப்பில் வன உயிரினங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டப்படி தான், கிளியை பிடித்து வைத்திருப்பதும் குற்றமாக கருதப்படுகிறது. கூண்டில் அடைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி, ஒருவரை குற்றம் சாட்டி சிறை பிடித்தால், அதை அமல்படுத்திய விசாரணை பிரிவு குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஆனால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில், குற்ற வழக்கில் சிக்கியவர், தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும். இந்த சட்டம், இந்தியாவில் பல்லுயிரினங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் தயாரித்துள்ள செம்பட்டியலில், தீவாய்ப்பு கவலை குறைந்த பறவையினமாக கிளி பட்டியலிடப்பட்டு உள்ளது. இதனால் தான் இத்தனை காலமும், கிளி விஷயத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் தீவிரமாக அமல் படுத்தப்படவில்லை. தமிழகத்தில் இயற்கை பல்லுயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அது போற்றத்தக்க பண்பாடாக மலர்ந்து வருகிறது. பறவையை பாதுகாப்பதில் பல குழுக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வப்போது நடக்கும் பறவை கணக்கெடுப்பு நிகழ்வுகளில் பொதுமக்களை ஆர்வமுடன் பங்கேற்க வைப்பதில் தீவிரம் காட்டுகின்ற அந்த குழுக்கள். இந்த விழிப்புணர்வால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை, தீவிரமாக அமல்படுத்த வேண்டிய கட்டாயம், தமிழக வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக, கிளியை கூண்டில் அடைப்பதை தடுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் கிளிகள் மீட்கப்பட்டு, வனத்தில் சுதந்திரமாக விடப்பட்டுள்ளன. கிளியை பழக்கி கூண்டில் அடைத்து, சுற்றுலா இடங்களில் ஆருடத்துக்கு பயன்படுத்துவோர் மீது தற்போது கிடுக்கிப்பிடி விழுந்துள்ளது. ஆருடத்துக்கு பயன்படுத்தும் கிளியை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறைத் தண்டனையும் உறுதி என, எச்சரித்துள்ளது தமிழக வனத்துறை. கிளியை கூண்டில் அடைத்து துன்புறுத்தினால் மட்டுமல்ல, காக்கை மீது கல்லெறிந்தாலும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் பாயும். காக்கையும் இந்த சட்ட பாதுகாப்பு வரம்புக்கு உட்பட்ட உரியினமாக உள்ளது. சட்டத்தின் கடுமை மட்டும் சற்று வேறாக இருக்கும். பல்லுயிரினங்களை பேணி பாதுகாத்து சூழலுடன் இணைந்து வாழ்வதில் இது போன்ற சட்ட நடைமுறை உதவுகிறது. சமூக, அரசியல் கல்வியில் பின் தங்கிய நிலையில் வாழும் மக்கள் மீது சட்டம் சார்ந்து கடுமை காட்டுவதை தளர்த்துவதுடன், அவர்கள் விழிப்பு பெற உதவும் கல்வியை வழங்க வேண்டும். அது தான் பல்லுயிரின சூழல் பண்பாடு தமிழகத்தில் மலர்வதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்தும்.

கனவை திறக்கும் சாவி

கனவை திறக்கும் சாவி வாழ்வில் கனவு என்பது ஒரு புதிர். உளவியல் அறிஞர்களும், மனநல மருத்துவர்களும், இதை ஆராய்ந்து வருகின்றனர். மனப்பிறழ்வு, தற்கொலை, முன்னேற்றம் போன்றவற்றுக்கு அடிப்படையில் ஒன்று மனதின் புதிர் விளையாட்டு. இது பற்றி ஆராய்ந்து வருகிறார், உளவியல் வல்லுனர் எஸ்.சுவாமிநாதன். பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ‘ஒருவரின் கனவு அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டதாவே இருக்கும். ஒருவரின் கனவு விளக்கத்துக்கு திறவுகோல் அவரிடம் மட்டுமே உள்ளது’ என முடிவு கொண்டு ஆராய்ந்து வருகிறார். உள்மனதில் ஏற்படும் ஆர்வம், கொந்தளிப்பு எல்லாம் கனவு மூலமே வெளிப்படுகிறது. அதை புரிந்து மனதை சரி செய்தால் வாழ்க்கை பாதை சீராகும் என கணித்துள்ளார். உளவியல் வல்லுனர் சுவாமிநாதனுடன் நடத்திய உரையாடல்... கேள்வி: கனவுக்கு பொதுவான விளக்கம் சொல்ல முடியுமா... சுவாமிநாதன்: கனவுகளுக்கு பொதுவான விளக்கம் சொல்ல முடியாது. ஒருவருக்கு ஏற்படும் கனவு என்பது, அவர்களின் நிஜ வாழ்வின் பின்னணியைக் கொண்டே அமைந்திருக்கும். உப்பு வணிகர் ஒருவர் மழை பெய்வதாக கனவு கண்டால், அவருக்கு வர இருக்கும் இழப்பை உணர்த்துவதாக அது இருக்கும். அவரது முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதை குறிக்கும். மாறாக, உழவர் ஒருவர் மழையை கனவு கண்டால், அவரது வாழ்வில் நற்பலன் விளைவிப்பதைக் காட்டும். கேள்வி: இந்த கருத்தை விளக்க முடியுமா... சுவாமிநாதன்: பள்ளியில் படித்த போது, விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்வேன். பெரும்பாலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்த முன்பே இது நடக்கும். எனவே, வீட்டுப்பாடம் எழுதுவது, பாடப்புத்தகம் படிப்பது என எந்த இறுக்கமும் அழுத்தமும் இருக்காது. பாட்டியின் அரவணைப்பு என்பதால் மிகவும் சுதந்திரமாக உணர்வேன். பிடித்த உணவுகளை சமைத்து தருவார். உண்பது சொர்க்கமாக இருக்கும். அந்த நாட்களில்தான், கிராமத்தில் திருவிழாக்கள் நடக்கும். அதற்கு யானை கொண்டு வரப்பட்டிருக்கும். அது கிராமத்தில் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும். புதிய நண்பர்களும் கிடைப்பர். அவர்களுடன் முன்நிபந்தனையின்றி விளையாடுவேன். யானை கட்டப்பட்டிருக்கும் இடத்திலே நங்கூரமிட்டிருப்போம். பாகன்களை காக்காய் பிடித்த வைத்துக் கொள்வோம். பாகன்களிடம் யானைகள் பற்றிய அரிய செய்திகளை, கதையாக கேட்டு அறிவோம். யானைகளுக்கு உள்ள பொதுவான குணங்கள், பாகன்களுடன் பழகுவது, அதனால் வரும் இன்னல்கள் என செய்திகளை அறிய ஆர்வம் காட்டுவேன். அது மகிழ்ச்சியாக தருணம். நான் படித்த பள்ளி அருகே பெரிய காடு இருந்தது. காட்டின் ஓரம் இருந்த கிராமங்களை சேர்ந்த பலர் உடன் படித்தனர். அவர்களுக்கு காட்டிலே, விளை நிலங்கள் இருந்தன. அவற்றில் வாழை, தென்னை, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். காட்டில் வாழும் யானைகள் கூட்டமாகவோ, தனியாகவோ அந்த தோட்டங்களில் புகுந்து விடும். தோட்டங்கள் அழியும். யானைக் கூட்டத்துக்கு பலியானோரும் உண்டு. அந்த கிராமப்புற மாணவர்கள், நான் யானைகளை ஆவலுடன் பார்த்து மகிழ்வதை வினோதமாக பார்ப்பர். நான் படித்த பள்ளி அருகே ஒரு காவல் நிலையம் இருந்தது. அங்கு பாரம் ஏற்றிய லாரி நின்று கொண்டிருந்ததை ஒரு நாள் பார்த்தேன். லாரியின் முன்னும் பின்னும் மூங்கில்கள் நீட்டியபடி இருந்தன. ஓட்டுனர் குனிந்து சிரமத்துடன் தான், இருக்கைக்கு செல்ல வேண்டியிருந்தது. இது விந்தையாக தெரிந்தது. அது குறித்து காட்டின் ஓரத்தில் வசிக்கும் மாணவர்களிடம் விசாரித்தேன். இது போல் லாரியில் கட்டினால் தான், யானைகளிடமிருந்து ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றனர். லாரியில் பழுது ஏற்பட்டால், உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைதான் ஏற்படும் என்பதையும் அறிந்தேன். அது மட்டுமின்றி, யானைகள் பற்றிய அச்சமூட்டும் கதைகளும் சென்னார்கள் என் பள்ளி தோழர்கள். ஆண் யானை பருவம் அடையும் போது, மதங்கொண்டால் அதனிடம் இருந்து தப்பும் வழிமுறை பற்றிய சாகச கதைகளை சொன்னார்கள். இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ளலாம். நான் யானையை கனவில் காண்பதற்கும், என் பள்ளி நண்பர்கள் அதை கனவில் காண்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். கேள்வி: இதற்கும் கனவுகளை பகுத்தாய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது... சுவாமிநாதன்: கனவில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும், பொருளுக்கும், நம் பின்னணி, நமக்கிருக்கும் அபிப்ராயம் பற்றி அடிப்படையிலே விளக்கம் தேட வேண்டும். இந்த தத்துவத்தை பின்பற்றினால் ஒரு உண்மை புலப்படும். நாம் காணும் கனவுகளுக்கு நம்மால் மட்டுமே விளக்கம் தேட முடியும். கேள்வி: அப்படியானால், உளவியல் வல்லுனர், மனநல மருத்துவரின் பணிகள் தான் என்ன... சுவாமிநாதன்: கனவை பகுத்தாய்வு செய்யும் உளவியல் வல்லுனர், நாம் கனவில் கண்ட காட்சிகள், மனிதர்கள், பொருட்களை, நம் நிஜ வாழ்வில் நம்மிடம் என்ன தாக்கத்தை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன என்றே அறிய முயல்வர். அந்த தத்துவத்தின் அடிப்படையில் நாமே பொருள் தேட வழி ஏற்படுகிறது. உலகில் பல துறைகளில் சங்கேத மொழி பயன்படுத்தப்படுகிறது. சில கிராமங்களில், கறுப்பு, வெள்ளை என சங்கேத மொழியில் குறிப்புடன் பேசுவர். உண்மையில் கறுப்பு என்பது, கள்ளையும், வெள்ளை என்பது சாராயத்தையும் குறிக்கும். மாடு வியாபாரத்தில் விலை விதிப்பதில் இது போல் சங்கேதம் உண்டு. அது பொன்ற சங்கேத சொற்கள் கனவில் வந்தால், அதன் உட்பொருளை அதை பயன்படுத்துவோர் மட்டுமே அறிய முடியும். கேள்வி: கனவுகளை ஏன் பகுப்பாய்வு செய்ய வேண்டும்... சுவாமிநாதன்: உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டால், உடலும், உள்ளமும் இயைந்து செயல்பட வழி கிடைக்கும். அமைதியான உள்ளம் நிறைவான வாழ்வை தரும். வாழ்வில் எடுக்கும் முடிவுகள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அமையாது. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன... நம் மனநிலைக்கு குறிப்பிட்ட வேலை ஒத்து வருமா... போன்ற கேள்விகளை எழுப்பி விடை அறிந்து செயல்பட முடியும். உறுதியான உடல்வாகு கொண்டவர்களே காவல்துறை போன்ற பணிகளுக்கு உகந்தவர்கள். அவர்களின் உள்ளமும் உறுதியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், காவலர்களில் தற்கொலை அதிகம் நடக்கின்றன. உடல், உள்ளம் நலனில் விழிப்புணர்வு பெற்ற மருத்துவர்களும் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு காரணம் என்ன... உடல் நலத்துக்கு கொடுக்கும் அக்கறையை, உள்ள நலத்துக்கு கொடுக்கவில்லை என்பேதேயாகும். கனவுகளை பகுப்பாய்வு செய்வது உள்ளத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கு தெளிவான ஒரு வழிமுறை. அது சூழலுடன் ஒன்றி வாழ உதவுகிறது.

பற்றிக்கொள்ள கரங்கள் கிடைத்தால்...

பற்றிக்கொள்ள கரங்கள் கிடைத்தால்... தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும். தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்கள் அதிகம். தொழில் செய்ய முன்வருவோர் குறைவு. முறையான பயிற்சி, தொழில் சார்ந்த அறிவு இன்மை போன்ற காரணங்களால் புதிய தொழில் துவங்க முன்வருவதில்லை. தொழில் சார்ந்த அறிவும், பயிற்சியும், அயராத முயற்சியும், பற்றிக்கொள்ள கரங்களும் கிடைத்தால் வெற்றி சுலபமாகும். இந்த அடிப்படையை மனதில் ஏந்தி, தமிழகத்தின் பாரம்பரிய சுவையான கருப்பட்டியில் உணவுகள் தயாரிக்கும் தொழிலை குடும்பத்துடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஸ்டாலின். விருதுநகர் காரியாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். பொறியியல் கல்வியை முடித்து, பிரபல நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றினார். அது, திருப்தியையோ, முழுமையையோ தரவில்லை. தேடலுக்குள்ளானது மனம். பயணத்தின் ஒருபகுதியாக, ஜவ்வாதுமலை அடிவாரத்தில் குக்கூ காட்டுப்பள்ளியில் சில நாட்கள் தங்கியிருந்தார். அங்கு, பாரம்பரியத்தை போற்றும் புதுமை சிந்தனைப் போக்குள்ள இளைஞர்களை சந்தித்தார். கேள்வி எழுப்பும் புத்தகங்களை வாசித்தார். பிரபல காந்திய பொருளாதார நிபுணர் குமரப்பா எழுதிய நுால்களும் அதில் அடக்கம். அவை, புதிய ஒளியை பாய்ச்சி, தேடலின் திசையை தெளிவுபடுத்தின. அந்த நேரத்தில் மனதில், ஒரு விதையை போட்டார், குக்கூ காட்டுப்பள்ளி முதன்மையாளர் சிவராஜ். மனதில் விழுந்த விதை, ‘தாய்வழி கருப்பட்டி கடலை மிட்டாய்’ என்ற தொழில் நிறுவனமாக வளர்ந்தது. மரபுச்சுவையை கொடுத்துவருகிறது. அந்த விதை முளைத்து, மரமாகி, கிளை பரப்பியுள்ள கதையை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின். அவருடன் நடத்திய உரயைாடல்: கேள்வி: கருப்பட்டி சுவையை பின்புலமாக கொண்டு தொழில் செய்யும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது... பதில்: தமிழகத்தில் பாரம்பரிய சுவையான கருப்பட்டியில் உணவு தயாரிப்பது பற்றி எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எதுவுமே தெரியாது. பொறியியல் படித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, மனம் அதில் லயிக்கவில்லை. எதையோ தேடிக் கொண்டே இருந்தது. குக்கூ காட்டுப்பள்ளியில், சிவராஜ் அண்ணா மூலம் அதற்கு ஓர் விடை கிடைத்தது. கேள்வி: தொழில் செய்வதற்கு என்ன வகையான முன் தயாரிப்பில் ஈடுபட்டீர்கள்... பதில்: குக்கூ காட்டுப் பள்ளி அந்த விதையை என் மனதில் போட்டதும், அது தொடர்பான தேடலில் ஈடுபட்டேன். கருப்பட்டியை முன்னிறுத்தி நடந்த தொழில்களை அறியும் ஆர்வம் ஏற்பபட்டது; தேடினேன். தொழிற்கூடங்களை நேரடியாக பார்த்தேன். அது, இயந்திரமயமாகவும் இருந்தது; மனித வளத்தை நம்பியும் இருந்தது. மனித வளத்தை முன்னிறுத்தி தொழிலை துவங்கும் எண்ணத்துடன், அது போன்ற நிறுவனங்களை தேடி அலைந்தேன். நண்பர் ஒருவரிடம் பயிற்சி பெற்றேன். கேள்வி: மூலப்பொருட்கள் கிடைப்பதில் பிரச்னை இருந்ததா... பதில்: கடலை மிட்டாய் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருட்கள், வேர்க்கடலையும், கட்டுப்பட்டியும்தான். கருப்பட்டி என்பது தமிழகத்தின் மரபுச்சுவை. அதற்கு தனித்த அடையாளமும், மதிப்பும் உண்டு. தமிழர்கள் அதை நெகிழ்வுடன் பயன்படுத்தியதை அறிந்து வியந்து போனேன். அது, கடந்த தலைமுறையின் முழுமையான உணவாக இருந்தது. பின், தொடர்ச்சி விட்டு போயிருந்தது. அதை, நம்பகமான தொடர்ச்சியாக மாற்ற வேண்டிய நிலை இருந்தது. கருப்பட்டி தயாரிப்பில் கட்டுப்பாடுகளும், தரத்தில் சமச்சீரற்ற சூழலும் நிலவியதை உணர்ந்தேன். அதன் தரம் பேண தீவிரமாக யோசித்தேன். கருப்பட்டி போன்ற சுவை மூலப்பொருட்களை தரமாக தயாரித்து வழங்கும் அமைப்புகள் எதுவும் தமிழகத்தில் இல்லை. முன்பு, அரசின் துறையே அதுபோன்ற ஒருங்கிணைப்பு பணியை செய்தது. இப்போது, அந்த நடைமுறை முழுமை பெற்றதாக இல்லை. அதனால், தரம் நிறைந்த கருப்பட்டியை கண்டறிவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. விடா முயற்சியால் அந்த சிரமத்தை போக்கினேன். கேள்வி: தொழில் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. எண்ணிய திசையை அடைந்து விட்டீர்களா... பதில்: ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. முதல் நான்கு ஆண்டுகள், தரத்துடன் பாரம்பரிய சுவையை உறுதி செய்வதில் அதிகம் கவனம் செலுத்தியதால், புதிய திட்டங்கள் குறித்து யோசிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளில் என் பயணம் இசைவாக நடப்பதாக நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர், புதிய மூலப்பொருட்களைக் கொண்டு, புதிய சுவைகளை உருவாக்க முயன்று வருகிறேன். எல்லாமே, கருப்பட்டியை முன்னிறுத்தியே நடக்கிறது. கேள்வி: புதிய மூலப் பொருட்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்... பதில்: ஆளி விதை மற்றும் சியா விதைகளை, கருப்பட்டி பாகில் சேர்த்து, புதிய இனிப்புகளை உருவாக்கியிருக்கிறோம். அவற்றுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களின் கவனத்துக்கு இந்த சுவை பற்றிய தகவல் எட்டியுள்ளது. அவர்களும் வாடிக்கயைாளராவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. கேள்வி: தொழில் வளர்ச்சி பற்றி... பதில்: தற்போது, இரண்டு யூனிட்களில் உற்பத்தி நடக்கிறது. சந்தையின் தேவைக்கு ஏற்ப, நான் பயிற்சி பெற்ற நிறுவனத்துடன் இணைந்தும், பகிர்ந்தும் பணியாற்றுகிறோம். இதனால், சுணக்கம் இன்றி உணவுப்பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. தரத்திலும் சமரசமற்ற நிலையை நிறுத்துகிறோம். தற்போது, எங்கள் தொழில் கூடத்தில், 13 பேர் பணி செய்கின்றனர். நான் உட்பட, குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் உழைப்பை பகிர்ந்து கொள்கிறோம். கேள்வி: உற்பத்தியில் திருப்தி ஏற்படுகிறதா... பதில்: கண்டிப்பாக... நாங்கள் தயாரிப்பது பாரம்பரிய சுவை தரும் இனிப்புகள். தரத்தில் அதை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம். அதன் சுவை மாறாமல் வாடிக்கயைாளர் நாவில் படர வேண்டும் என விரும்பியே பிரார்த்தனையுடன் பணியை மேற்கொள்கிறோம். ஒரு குழந்தை... ஒரு தாய்... எங்கள் தயாரிப்பின் மரபுச்சுவையை வியப்புடன் குறிப்பிடும் போது, மனம் மகிழ்கிறது. சரியான பாதையில் பயணிப்பதாக நிறைவு ஏற்படுகிறது. கேள்வி: உங்கள் எதிர்பார்ப்பு என்ன... பதில்: குமரப்பா எழுதிய, தற்சாற்பு பொருளாதாரம் சார்ந்த புத்தகம்தான், என் பயணத்தைத் துாண்டி, வளர்ச்சிக்கு துணை வருவதாக கருதுகிறேன். மூலப் பொருட்கள் உற்பத்தியாகும் கிராமங்களிலே, அது சார்ந்த உணவுப் பொருள் உற்பத்தியும் சிறு தொழிலாக நடக்க வேண்டும். அந்த பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. தன்னிறைவை தரும் வகையில் உள்ளது. அரசின் உதவிகள் இது போன்ற தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய சுவையை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு, குறைவாக உள்ளது. அது மேம்பட வேண்டும். ஆர்வப்படும் இளைஞர்களுக்கு நுட்பங்கள் எளிதில் கைகூடும் வகையில் திட்டங்கள் வேண்டும். அப்போதுதான், கிராமங்கள் சார்ந்து புதிய தொழில்கள் மிளிர்ந்து வளரும். சிறு தொழிலை நவீனமாக, தொழில்நுட்பம் சார்ந்து வளர்க்க முடியும் என்று நிருபித்து வருகிறார் ஸ்டாலின். இவரது தயாரிப்புகளை விற்பனை செய்ய, இணைய வழி விற்பனையகம் ஒன்று சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.

அறிவில் நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது

அறிவில் நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது கவிஞர் இந்திரன், தமிழகத்தில் வசிக்கும் மிக முக்கிய கலை விமர்சகர்; மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்கள் உடையவர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதிவருகிறார். புதுச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இவர் சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், தமிழக அரசு திருவள்ளுவர் சிலையை, 2000ல் திறந்த போது திருக்குறளில், 133 அதிகாரங்களுக்கு, 133 ஓவியர்களின், வித்தியாசமான ஓவியப் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சில் பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியக் கலைப் பொருட்கள் பற்றி கூர்மையாக ஆய்வு செய்தவர். தற்போது வெளியிட்டுள்ள, ‘பிரபஞ்சத்தின் சமையல் குறிப்பு புத்தகம்’ என்ற கவிதை நுாலை, ‘எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என பதிப்புரிமையை துறந்துள்ளார். இது தமிழக படைப்புத்துறையில் முதலில் வெளிவந்துள்ள அறிவிப்பு ஆகும். ஒடிய மொழி கவிஞர் மனோரமா பிஸ்வால் மஹபத்ரா எழுதியக் கவிதைகளை, ‘பறவைகள் ஒருவேளை துாங்கிப் போயிருக்கலாம்’ என்ற தலைப்பில் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது படைப்புப் பணியைக் கவுரவிக்கும் விதமாக, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை, 2012ல் வழங்கியது இந்திய அரசு. கவிதை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, கலை விமர்சனம், ஓவியம், ஆவணப்படம் இயக்கம் என பன்முகமாக இயங்கும் இந்திரன், மானுட வளர்ச்சியில் ஏற்படும் தடைகளையும் தடங்கல்களையும் பற்றி மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவர். பாகுபாடற்ற மானுட வளர்ச்சிக்காக முன் நின்று குரல் கொடுத்துவரும் இந்திரனுடன் நடத்திய உரையாடல்: கேள்வி: சம நோக்கு வளர்ச்சி அடிப்படையில் அமைந்த சிறுவர் இலக்கியம் தமிழகத்தில் எப்படி இருக்கிறது... பதில்: தமிழகத்தில் சிறுவர் இலக்கியம் எங்கு இருக்கிறது? தற்காலத்தில் அது அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கேள்வி: வாசிப்பை முன்னிலைப் படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டவர் நீங்கள். உங்கள் இளமைப் பருவம் எப்படி அமைந்திருந்தது... பதில்: அப்போது எனக்கு, 10 வயது இருக்கும். புதுச்சேரி, கொம்பாட்டம் கிராமத்தில் என் உறவினர் நுாலகராக பணியாற்றி வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில், சைக்கிளில் நுாலகத்துக்கு அழைத்து செல்வார். அங்கு மனம் போனபடிப் புத்தகங்களை வாசிப்பேன். அப்படி கண்ணில் பட்டது, கல்வி கோபாலகிருஷ்ணன் எழுதிய நுால்கள். அவை தான், உலகம் பற்றிய பார்வையை அறத்துடன் விரிவு படுத்தின. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ‘பறக்கும் பாப்பா’ என்ற தலைப்பிலான ஒரு நுால். அது இன்றும் நினைவில் பதிந்துள்ளது. அதில் வரும் குழந்தை திடீர் என பறக்கும் திறன் பெற்றுவிடும். பறந்தபடி பல நாடுகளுக்கு செல்லும். அங்குள்ள செய்திகளை சுவாரசியம் குன்றாமல் சொல்லும். அதுபோல் ‘எறும்பு உலகம்’ என்றொரு நுால். எறும்புகளின் வாழ்க்கை, உணவு சேகரிப்பு, தற்காப்பு, கூடி வாழும் பண்பு, முன் எச்சரிக்கை போன்றவற்றை மிக அழகாக விவரிக்கும். அதுபோன்ற நுால்களை வாசித்ததால் ஏற்பட்டப் புரிதல் தான் என்னை உயர்த்தியது. கேள்வி: சிறுவர், சிறுமியருக்கு ஓவியம் கற்றுக் கொடுப்பது அவசியமான ஒன்று தானே.. பதில்: பிரபல ஓவியர் பிகாசோ ஒருமுறை, ‘குழந்தைகள் ஓவியராகத்தான் பிறக்கிறார்கள்... வளர வளர ஓவியத் திறன் மறைந்து போகிறது’ என பொன்மொழியாக சொல்லியுள்ளார். சிறுவர்களின் திறனை துலக்கி விட்டாலே போதுமானது. சிறந்த ஓவியங்களை படைப்பர். கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் ஓவியத்தில் எப்படி பயிற்சி கொடுக்கின்றனர்... பதில்: பல ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப்பெரிய லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. அங்குள்ள சுவரில் பிரபல ஓவியர்கள் வரைந்திருந்த பெரிய அளவிலான ஓவியங்கள் இருந்தன. அவற்றின் முன் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவியர் அதில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அந்த ஓவியத்தின் அடிப்படை கூறுகளை விளக்கி கொண்டிருந்தார் ஆசிரியர். ஓவியத்தின் வகை, வரைந்தவர் பற்றிய விவரங்களை கதை போல் விவரித்துக் கொண்டிரு்நதார். மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். சிறு சலிப்பு கூட தென்படவில்லை. உற்சாகமாக உள்வாங்குவதை கண்டேன். அது, ஒருவகை பயிற்சி. அது போன்று எல்லாம் இங்கு எதுவும் நடக்கவில்லை. கேள்வி: சிறந்த ஓவியங்கள் உருவாக வேண்டுமெனில் பயிற்சி அவசியமல்லவா... பதில்: அவசியம் தேவை. அந்த பயிற்சி எப்படி அமைய வேண்டும் என்பது முக்கியம். கணிதம் கற்று கொடுப்பது போல், ஓவியமும் கற்பிக்கப்பட வேண்டும். வரைய உதவும் கருவிகளான பென்சில், கிரையான், தாள், பிரஷ் போன்றவற்றை கையாள்வதற்கு முறையாகப் பயிற்சி தரவேண்டும். கற்பனையும் அனுபவமும் அவர்களுக்குள் இருக்கிறது. அவை சிறந்த படைப்புகளை இயல்பாக உருவாக்கிவிடும். பிரபல ஓவியர் வான்கா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது ஓவியம் தொடர்பாக, லண்டன் மியூசியத்தில் நடந்த பயிற்சி வகுப்பை காணும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஓவியம் எந்த சூழ்நிலையில் வரைப்பட்டது என்று தான் கற்பித்தார்கள். ஓவியம் வரையும் போது, ஓவியர் வான்கா மனச்சோர்வில் இருந்தார் என்பதை மென்மையாக அறிவுறுத்தினர். வான்கா வரைந்த, சைப்ரஸ் மர ஓவியம் மிகவும் பிரபலமானது. சைப்பரஸ் மரத்தின் வளர்ச்சியை உள்வாங்கியபடி தீட்டிய அவரை, மன அழுத்தத்தில் இருந்து விடுவித்தது அந்த ஓவியம். இது போன்ற செய்திகளை போதிக்க வேண்டும். கேள்வி: ஓவியம் தீட்டுவதில் உங்களுக்கு துாண்டுகோலாக இருந்தது எது... பதில்: சென்னை, கோடம்பாக்கம் அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு கறுப்பு நிறத்தில் கம்பீரமான தோற்றத்தில் ஒர் ஓவிய ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் பி.பெருமாள். மிகவும் கண்டிப்பும், நெகிழ்வுமாக காணப்படுவார். ஒருநாள் ஆப்பிள் ஓவியம் வரையச் சொன்னார். வகுப்பில் எல்லாரும் வரைந்திருந்தனர். என் ஓவியத்தை வித்தியாசப்படுத்தும் வகையில், ஆப்பிள் அருகே சிறு ஈ ஒன்றும் வரைந்திருந்தேன். அதைப் பார்த்தவர், என்னை உற்சாகப்படுத்தினார். ஓவியனாகும் சகல திறனும் இருப்பதாக நம்பிக்கையூட்டினார். அந்த நிகழ்வு பெரும் துாண்டுகோலாக அமைந்தது. ஆர்வத்தை ஏற்படுத்தியது. பின் நிறைய வரைய ஆரம்பித்தேன். கேள்வி: தமிழகத்தில் ஓவியர்களின் நிலை எப்படி உள்ளது... பதில்: தமிழகத்தில் நிறைய ஓவியர்கள் உள்ளனர். அவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லை. ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை அறவே இல்லை. போட்டி பொறாமையில் உழல்கின்றனர். அதனால் ஓவிய படைப்பகள் சிறப்பாகப் பிறப்பதில்லை. போட்டியும் பொறாமையும் படைப்பூக்கத்தைக் குறைத்துவிடும். இதை என் நேரடி அனுபவங்களில் இருந்த உறுதி செய்கிறேன். தமிழகத்தில் அறிவு நேர்மை என்பது துளி கூடயில்லை. இந்த நேர்மை இலக்கியம், ஓவியம் போன்ற கலைப்படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களுக்கு மிகவும் அவசியம். ‘இன்டலக்சுவல் இன்டிகிரிட்டி’ என்ற பண்பு குறைந்தால், முதுகெலும்பை முறையாக நிமிர்த்தி நிற்க முடியாது. எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்க தோன்றும். அப்படி வளைந்து கொடுப்பவரிடம் நல்ல படைப்புகளை எதிர்பார்க்க முடியாது. அந்த நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. கேள்வி: இந்த நிலையை மாற்றியமைக்க முடியுமா... பதில்: தமிழக ஓவிய கல்லுாரிகளில், கலை வரலாறு என்ற பாடமே கற்பிக்கப்படுவதில்லை. பள்ளிகளில் அற நெறிகள் குறித்தோ, தார்மீக பொறுப்பு குறித்தோ பாடங்கள் ஏதுமில்லை. சிறுவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இவை மிகவும் அவசியம். பள்ளிகளில் எண், எழுத்து பயிற்சி மட்டுமே கொடுக்கப்படுகிறது; மனசாட்சியடன் எதையும் அணுக வேண்டும் என்பதை வலியுறுத்தி உணர்த்துவதில்லை. சட்டக்கல்லுாரியில், மாணவ மாணவியர் சட்டங்கள் படிக்கிறார்கள்; சமூக நீதி பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அதற்கான அறங்களை கற்பிக்கும் நிலை எதுவும் அங்கில்லை. மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவம் படிப்பவர்கள், மனசாட்சியுடன் அந்த தொழிலை செய்ய வேண்டும் என்று படிப்பதில்லை. இயந்திர மனிதன் என்ற ‘ரோபாட்’ உருவாக்கும் போது கூட, மூன்று அறங்களை முதலில் போதிக்கின்றனர். அதில் முதல் போதனை, மனிதனுக்கு தீங்கு செய்யக்கூடாது என்பதாகும். பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, ‘ஆட்டிடியூட்’ மட்டும் கற்றுக் கொடுத்தால் போதும் என்கின்றனர் பெற்றோர். இது, ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மையைத்தான் வளர்க்கும். அறிவு மேன்மைக்கு பயன்படாது. ஆணவத்தை உண்டாக்கும். இது போன்று மாற்றியமைக்க வேண்டியவை பல உள்ளன. அப்படி அமைந்தால் தமிழகத்தில் சிறந்த படைப்புகள் மலரும். கவிஞர் இந்திரனுடன் நடத்திய நேர்காணலில் இருந்து... ***