Tuesday, 5 May 2026
காக்கை மீது கல்லெறிந்தால்...
காக்கை மீது கல்லெறிந்தால்...
சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet) என்பதே தமிழகத்தில் கிளி என அழைக்கப்படும் பறவையினம். இலங்கை பேச்சு வழக்கில், பயற்றங்கிளி எனப்படுகிறது. பச்சை நிறத்தில், வளைந்து சிவந்த அலகுடன் காணப்படுகிறது. கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு கலந்த கழுத்து வளையம் ஆண் பறவைக்கு இருக்கும். பெண்கிளி எல்லா வகையிலும் ஆண் போல இருந்தாலும் கழுத்து வளையம் மட்டும் இருக்காது. மனிதர்கள் பேசும் சொற்களைக் கேட்டு, பழகி திரும்பச் சொல்லும் திறன் பெற்றுள்ளது.
அஞ்சுகம், தத்தை கிள்ளை என்ற பெயர்களிலும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. பெரிய மரங்களில் இயற்கையாக அமைந்த பொந்துகளில் வசிக்கின்றன. சொந்தமாக கூடு கட்டுவதில்லை.
சித்தாசிடே விலங்கின குடும்பத்தைச் சேர்ந்த பறவை கிளி. உலகின் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. பத்து கிராம் அளவில் இருந்து, நான்கு கிலோ வரை எடை இருக்கும். ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க காடுகளில் அதிக வகை உள்ளன. தமிழ்நாட்டில் சிவப்பு ஆர கிளிகள் அதிகம் உள்ளன. விதை, பழம், பூக்கள் தான் கிளியின் முக்கிய உணவு. ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் கியா என்ற இனக் கிளி, அழுகிய மாமிசத்தையும் உண்ணும். உலகின் மிகப்பெரிய கிளி இனம் ககாபோ. இதற்கு பறக்கும் திறன் இல்லை. குதித்து மரங்களில் ஏறும். உலகில் அருகி வரும் அரிய பறவைகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது.
மனிதன் உச்சரிப்பது போல் ஒலி எழுப்ப வல்லது பச்சை கிளி. பயிற்சி அளித்தால் சில சொற்களை திரும்ப உச்சரிக்கும். வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் உண்டு. நான்கு வயது குழந்தைக்கு சமமாக, ‘ஐகியூ’ இருப்பதாக, பறவையியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஆப்ரிக்க காடுகளில் வாழும் சாம்பல் நிறக் கிளி, 100 சொற்கள் வரை, நினைவில் நிறுத்தி பேசும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கிளி மட்டுமே உண்பதற்கு கால்களை பயன்படுத்தும் திறன் கொண்ட பறவை. இதன் ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் உள்ளன; இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்நோக்கியும் இருக்கும். மனிதன் கைகளால் உணவைப் பற்றுவது போல உணவு பொருளை காலில் பற்றி வாயில் சாப்பிடுகிறது கிளி.
இதைப் பிடித்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதும் உண்டு. பேச வைக்க முடியும் என்ற தவறான நம்பிக்தையே இதற்கு காரணம்.
கிளியை பிடித்துப் பழக்கி, ஜோதிட தொழில் செய்வோர் ஏராளம். கிளி ஆருடம் தமிழகத்தில் பிரபலமாக இருந்தது. சென்னை கடற்கரை, மாமல்லபுரம் போன்ற சுற்றலா இடங்களில், கிளி ஆரூடம் சொல்வேரை காண முடிகிறது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் தீவிமாக அமல்படுத்தப்பட்டு வருவதால் கிளி ஜோதிடர் நடமாட்டம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே, கிளியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதற்கு இலக்கிய சான்றுகள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் சிலை கரத்தில் கிளி உள்ளது. இது வழிபாட்டு மரபில் கிளியின் முக்கியத்தும் பற்றி குறிக்கும் ஆவணம். அழகிய நிறமும், வண்ண அலகும் அமைதியான தோற்றமும், மனிதனுக்கு இதன் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக உள்ளன.
இலங்கையில் தமிழர் குடியிருப்பு பகுதிகளில் கூண்டில் கிளியை வளர்ப்பதை சாதாரணமாக காணலாம். தமிழகத்திலும் சில ஆண்டுகளுக்கு முன் இதே நிலைமை இருந்தது. இது போன்ற செயல்களை தடுக்க இந்தியாவில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம், இதுவரை ஏழு முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட அமலாக்க அடிப்படையில், தமிழக நிலப்பரப்பில் வன உயிரினங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டப்படி தான், கிளியை பிடித்து வைத்திருப்பதும் குற்றமாக கருதப்படுகிறது. கூண்டில் அடைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டப்படி, ஒருவரை குற்றம் சாட்டி சிறை பிடித்தால், அதை அமல்படுத்திய விசாரணை பிரிவு குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஆனால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில், குற்ற வழக்கில் சிக்கியவர், தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும். இந்த சட்டம், இந்தியாவில் பல்லுயிரினங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் தயாரித்துள்ள செம்பட்டியலில், தீவாய்ப்பு கவலை குறைந்த பறவையினமாக கிளி பட்டியலிடப்பட்டு உள்ளது. இதனால் தான் இத்தனை காலமும், கிளி விஷயத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் தீவிரமாக அமல் படுத்தப்படவில்லை. தமிழகத்தில் இயற்கை பல்லுயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அது போற்றத்தக்க பண்பாடாக மலர்ந்து வருகிறது. பறவையை பாதுகாப்பதில் பல குழுக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வப்போது நடக்கும் பறவை கணக்கெடுப்பு நிகழ்வுகளில் பொதுமக்களை ஆர்வமுடன் பங்கேற்க வைப்பதில் தீவிரம் காட்டுகின்ற அந்த குழுக்கள்.
இந்த விழிப்புணர்வால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை, தீவிரமாக அமல்படுத்த வேண்டிய கட்டாயம், தமிழக வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக, கிளியை கூண்டில் அடைப்பதை தடுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் கிளிகள் மீட்கப்பட்டு, வனத்தில் சுதந்திரமாக விடப்பட்டுள்ளன. கிளியை பழக்கி கூண்டில் அடைத்து, சுற்றுலா இடங்களில் ஆருடத்துக்கு பயன்படுத்துவோர் மீது தற்போது கிடுக்கிப்பிடி விழுந்துள்ளது. ஆருடத்துக்கு பயன்படுத்தும் கிளியை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறைத் தண்டனையும் உறுதி என, எச்சரித்துள்ளது தமிழக வனத்துறை.
கிளியை கூண்டில் அடைத்து துன்புறுத்தினால் மட்டுமல்ல, காக்கை மீது கல்லெறிந்தாலும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் பாயும். காக்கையும் இந்த சட்ட பாதுகாப்பு வரம்புக்கு உட்பட்ட உரியினமாக உள்ளது. சட்டத்தின் கடுமை மட்டும் சற்று வேறாக இருக்கும். பல்லுயிரினங்களை பேணி பாதுகாத்து சூழலுடன் இணைந்து வாழ்வதில் இது போன்ற சட்ட நடைமுறை உதவுகிறது. சமூக, அரசியல் கல்வியில் பின் தங்கிய நிலையில் வாழும் மக்கள் மீது சட்டம் சார்ந்து கடுமை காட்டுவதை தளர்த்துவதுடன், அவர்கள் விழிப்பு பெற உதவும் கல்வியை வழங்க வேண்டும். அது தான் பல்லுயிரின சூழல் பண்பாடு தமிழகத்தில் மலர்வதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஒளைவையின் தனிப்பாடல் ஒன்றின் துவக்க வரி இது. இரண்டு வாரங்களாக, இந்த கவிதை, உரிய இடைவெளியில் அதிகாலை, காலை, முன்இரவு, பின்னிரவு, நள்ளிரவு எ...
-
ஏழைகளுக்கான நிலப்பகிர்வில் முன்னிலை வகிக்கும் களப்போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். பூமி தான இயக்கத்தில் இணைந்து, இந்தியாவில் ஏராளமான போர...
-
நினைவிடத்தை, குழிவாசல் என அழைக்கும் வழக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்டு. மையக்குழி என்றும் அழைப்பர். பங்குனி உத்திர நாளில், சில குழுக...
No comments:
Post a Comment