Monday 18 February 2019

தமிழ் சிறுகதைகளின் போக்கு... கவனிப்பும் கணிப்பும் – 2018

அது, அலுவலக தேநீர் இடைவேளை நேரம். வழக்கமாக நண்பர் எழுததாளர் ரமேஷ்வைத்யாவுடன் அப்போது தான் பேச வாய்க்கும். எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் நினைவாக, 2018 ல் வெளிவந்த முதல் சிறுகதை தொகுதிகளின் படைப்பாளர்களை, உற்சாகப்படுத்துவம் வகையில் ஊக்கப்பரிசு வழங்குவதற்கான சிறுகதைகளை தேர்வு செய்யும் பணி பற்றி சொன்னார். சற்று நேரம் யோசித்து விட்டு, ஒருநாள் அவகாசம் கேட்டேன். 
அந்த அவகாச காலத்தில், என் வாசி்ப்பு திறன் பற்றிய கேள்வியை எழுப்பி, தகுதியை மறுவாசிப்பு செய்தேன்.  எனக்கிருந்த மற்ற பணிகள் பற்றியும் சிந்தித்தேன். 
கிட்டத்தட்ட, 10 நாட்கள் அவகாசம். மொத்தம், 15 புத்தகங்கள். அவற்றில், 170 கதைகள். மொத்த வாசிப்பையும் மனம் ஏற்குமா என, கேள்வி எழுந்தது. 
இது ஒருவகையான பணி. சற்று சவாலாக இருக்கும்.  முன் பயிற்சி ஏதும் இல்லை. ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்பதால் ஒப்புக் கொண்டேன். 
வாசிப்பை, மூன்று விதமாக ஒழுங்கு படுத்தினேன். தொகுதியின் முதலில் துவங்கி பின்நோக்கி போவது, இறுதியில் துவங்கி முன் நோக்கி நகர்வது, இடையில் துவங்கி, முன்னும் பின்னுமாக நகர்வது... இவை, அதீத வாசிப்பால் ஏற்படும் சடவு மனநிலையைத் தவிர்க்கும் என்று நம்பினேன்.  எழுத்தாளர்கள் சுந்தரராமசாமி, வல்லிக்கண்ணன் போன்றோரிடம் அறிந்தது. 
முதல் வாசிப்பின் போது தனிமையை தவிர்த்தேன். பெரும்பாலும், என் குடும்பத்துடனோ, அலுவலக பணியாளர்களுடனோ தான் இருந்தேன். மறுவாசிப்புகளுக்கு மட்டும் நள்ளிரவு, அதிகாலை என, தனிமையை தேர்வு செய்தேன்.
ஒரு கதையை வாசித்த பின் உரிய இடைவெளி விட்டேன். வாசித்ததை  நினைவு படுத்திப் பார்த்தேன்.  சுவாரசியங்களை  அசைபோட்டேன். அந்த எழுத்தின் பரப்புக்குள் உலாவிப்பார்த்தேன். மன ஒழுங்கில் பதியாதவற்றை மறுவாசிப்பு செய்து உள்வாங்க முயன்றேன். 
மூளை திணறி மறுத்த போது,  இசையால் நெகிழ்த்த முயன்றேன். இசை கலைஞர்கள் மிரண்டா சவுத்திரி, பர்னாலி பர்மன், டாரித்ரி ராய், சுபேன் கார்க், லஷ்மண் தாஸ் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்து மீண்டும் வாசிப்பைத் தொடர்ந்தேன்.  
ஒரு தொகுதியை வாசித்து முடித்ததும், சில கதைகளை தேர்வு செய்து, என் மனைவியிடம் வாசிக்க கொடுத்து கருத்து கேட்டேன். அவர் எளிமையாக சில கேள்விகளை முன்வைத்தார். அந்த கேள்விகளில் பல என்னிடமும் எழுந்திருந்தன. விவாதிக்கவில்லை.
வாசிப்பின் மன ஒழுங்கை புரிந்து கொள்ள முயலும் ஒரு வகை உத்திதான் அது.
என்னை நெகிழ்த்திய தொகுப்பை வாசித்து முடித்ததும், நீண்ட இடைவெளி விட்டேன். அடுத்த படைப்பை,  உள்வாங்கும் திறனை குறைத்து விடும் என நம்பியதால் அப்படி செய்தேன்.  
சுடுநடை, குளிர்நடை, கடும்நடை, புயல் நடை, மென்நடை என, வாசிப்பின் அனுபவத்தை ஒரு பயணமாக உணர்ந்தேன். மொழி ஆளுமையின் முதிர்ச்சியை தேடினேன். சொற் சேர்க்கைகளில் அனுபவச்சுவடுகளை அறிய முயன்றேன். வாழ்வின் பரப்பை, இயற்கையின் அற்புதங்களை வகை பிரித்த எழுத்து முறைமையை அறிய முயன்றேன். கதைகள் பேசிய பரப்பின் ஊடாக நடந்து, நம்பகத்தன்மையை தேடினேன். 
கலை வழியாக நெகிழ்ச்சியை தேடி, சுயம் சார்ந்த வளர்ச்சியைத்தேடுபவன் நான். ஒரு உயர்வை, மேன்மையை பிசக விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். அதன் அடிப்படையில், ஏழு தொகுப்புகளை தேர்வு செய்தேன்.
முதல்கட்ட தேர்வாளனாக மட்டுமே நான் இருந்தேன். இறுதி வடிவத்தை தேர்வு குழு முடிவு செய்தது. இந்த தேர்வில், பல ஒற்றுமைகளும் முரண்களும் உண்டு. அவை விவாதத்துக்கு உரியவை அல்ல.  
ரசனைக்கு பல வடிவம் உண்டுதானே.  எப்போதும் மேன்மையானது. மனதின் உள்வாங்கும் தன்மை வேறு வேறானது. அதனால் தான், பல வண்ணங்களை நேசிக்கிறோம்.
ஒரே மூச்சிலான 15 தொகுதிகளின் வாசிப்பு அனுபவம் இப்படித்தான் இருந்தது.
வாசித்த கதைகளை பற்றி சொல்ல வேண்டாமா...
ஒரு கதை,  ஒருவரை எப்படி கவரும். அதை பதவுரை, பொழிப்புரை சொல்லி விளக்க  முடியுமா. சிறுகதை என்பது ஒரு சிறு நினைவுப் பயணம். ஒரு மெல்லிய எழுத்து நிகழ்த்துதல். மொழி ஆசானை உள்வாங்கி எழுதுபவர்கள், காற்றில் கம்பு சுற்றுகின்றனர். ஒரு  பயணம் செய்து, அந்த அனுபவத்தில் கற்றதை முறைப்படுத்தி வடிவமைக்கிறார்கள்.  
அவர்களின் பயண முறை தான் உள்வாங்கும் திறனையே உருவாக்குகிறது.
சிலர் விமானத்தில் பயணிப்பார்கள். சிலர் ரயிலில்... சிலர், காரிலும், மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் மாறி மாறி... இந்த பயணங்களில் வேகம் முக்கியமல்ல... உள்வாங்கும் அனுபவம் மிக முக்கியமானது. அதுதான் உள்ளடக்கத்தை உருவாக்குகிறது.
பயணத்தில் சிலர் எளிய மென் நடை பயில்வர். இது போன்ற பயணியரின் அனுபவத்தை நான் விரும்புகிறேன். இந்த கதைத் தொகுதிகள் தேர்விலும் அப்படித்தான் முடிவு செய்தேன். நின்று நிதானமாக நடப்பவர்களை விரும்பி தேர்வு செய்துள்ளேன்.
இந்த கோணத்தில், ஒருமுறை  ஒரு புத்தகத்தை வாசித்து பாருங்கள். ஒரு படைப்பூக்கம் எப்படி இயங்குகிறது என, பிடிபட வாய்ப்பு உண்டு. 
நான் வாசித்தவற்றில்  வாழுங்காலம் இருக்கிறது. உயர்ந்த அற விழுமியங்கள் உள்ளன. அது சார்ந்து  வாழும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை சார்ந்துதான், நானும் இயங்குகிறேன். அதை தொட்டோ, உணர்த்தியோ செல்லும்  படைப்புகள்  கவர்கின்றன. 
என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு வாசிப்பு அனுபவத்தை ஒரு உதாரணத்துக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன், மலையாள எழுத்தாளர் பெரும்படவம் ஸ்ரீதரன் எழுதிய, ‘ஒரு சங்கீதம் போல...’ என்ற நுாலை, ஒரு பஸ் பயணத்தின் போது வாசித்தேன். அது என்னை ஆட்கொண்டது. ஒரு வகை தகிப்பு மனநிலையை ஏற்படுத்தியது. பயணத்தின் போது, இருக்கையில் அமரவே சிரமம் ஏற்பட்டது. என் ரத்த ஒட்டம் எதிர்திசையில் நகர்வது போல் உணர்ந்தேன். மிகவும் எளிய மனநிலைக்குள் தள்ளப்பட்டேன். 
இந்த அனுபவம் பற்றி, அந்த எழுந்தாளருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 
அவர் ஒரு பதில் எழுதினார். அந்த புத்தகத்தை எழுதும் போது, அதே போன்ற மனநிலையில், மூன்று மாதங்கள் இருந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 
உலகத்தின் பல பகுதிகளிலும் இது போல் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். 
எழுதும் போது ஒருவன் தண்மையை பாய்ச்சுகிறான்; மற்றொருடன் வெம்மையை பாய்ச்சுகிறான். ஒருவன் இரண்டையும் கலந்து முறையான விகிதத்தில் பாய்ச்சுகிறான். மற்றொருவனோ, முறையற்ற விகிதத்தை கலந்து, வாசிப்பு அனுபவத்தை ஒரு சுமையாக ஏற்றிவிடுகிறான்.
நான் எழுத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்துபவன். என் தொழிலும் அதுதான்.  வளர்ச்சிப் போக்கை  நம்பித்தான் வேலை செய்து வருகிறேன். 
படைப்பாளிகளை, வளர்ச்சி்த் தொடர்பியலில் பங்கேற்பவர்களாக பார்க்கிறேன். நான் வாசித்த, 15 தொகுதிகளிலும், ஏதோ ஒரு வழிமுறையில் வளர்ச்சி ஆர்ப்பரிக்கிறது. அவற்றின் அலை வரிசை வேகம் தான் வித்தியாசப்படுகிறது. 
ஒரு படைப்பு,  நான் நிற்கும் கரையில் என் மீது வேகமாக மோதி இழுக்கிறது. இன்னொன்று என் காலை தொட்டு  போகிறது. காலடியில் மணல் பரப்பு கரைந்து, உப்புக்குத்தி உள் இறங்கி ஒரு வகை உணர்வை பெருக்குகிறது. இன்னொரு அலை, நெருங்கி வந்து நுரை நாக்கை நீட்டுகிறது. சில, அலைகளுக்குள் அலையாக ஆர்பரித்து மறைகின்றன. சில பாறைகளில் மோதி அகங்கார ஓசை எழுப்பி மடிகின்றன. நான் வாசித்த, 15 தொகுப்புகளின் அலைவரிசையை இப்படித்தான்  கணிக்கிறேன். 
என் தொழில் சார்ந்த தொடர்பியல் மொழி தட்டையானது.  அதில் படைப்பு உண்டு. உணர்ச்சி இல்லை. ஆனால் வளர்ச்சிக்கான துாண்டுதல் உண்டு.
படைப்பு அப்படியானது அல்ல. அது எல்லாம் கலந்தது. மொழி நெகிழ்வானது; உணர்ச்சி மயமானது; வாழ்க்கை பாதையை அறியும் அறம் அவற்றில் உண்டு.
இவ் உலக வாழ்வு என்பது, பல உயிர்களின் கூட்டு செயல்பாடு. இதை உள்ளடக்கிய அனுபவங்களே சிலாக்கியமானவை. 
வாசிப்பின் மூலம் நெகிழ்ச்சியை தந்தவை அவைதான்.
நெகிழ்வை தந்தவர்களுக்கும், நெகிழ வைக்க முயன்றவர்களுக்கும் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்.
நம்மை சுற்றி, கிட்டத்தட்ட, 753 கோடி பேர் இந்த பூவுலகில் வசிக்கின்றனர். மரம், புல், பூண்டு, நடப்பன, பறப்பன, ஊர்வன என, பல லட்சம் கோடி உயிர்கள் வாழ்கின்றன. அவை நாம் வாழும் சூழலை மேம்படுத்துகின்றன. அனுபவத்தை, உணர்வை, தோழமையை தருகின்றன. பாடங்கள் சொல்கின்றன. அந்த அனுபவ செறிவுகளை உள்வாங்கி வடிவமைக்கும் படைப்பாளர்களை வணங்குகிறேன்.   
எழுதும் கலை மிக கடுமையானது. நீண்ட இடையறாத மொழி பயிற்சியால் தான், அதை அடைய முடியும். வாசிக்கும் கலையும் அதே அளவு திண்மையானது. இவற்றை உள்ளடக்கிய வாழ்க்கையை  கொண்டவர்கள் எழுத்தாளர்கள். இந்த புத்தகங்களை எழுதியவர்களுடன்  எனக்கு நேரடி அனுபவம் ஏதும் இல்லை. அவர்களை வாசிக்க  வாய்ப்பை வழங்கிய நண்பர்களுக்கும், பொறுமையுடன்  உரையை அவதானித்த உங்களுக்கும் மனதை திறக்கிறேன். நன்றி.

(எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் நினைவாக, 16.02.2019 அன்று, சென்னை, சி.ஐ.டி.நகர், கவிக்கோ மன்றத்தில் நடந்த நிகழ்வில் நான் பேசியதன்  உரைநடை வடிவம்)
வாசித்த புத்தகங்கள்:
1. கனா திறமுரைத்த காதைகள் – சித்ரன்
2. நீலம் பூக்கும் திருமடம் – ஜா.தீபா
3. நாம் ஏன் அந்தத் தேனீரைப் பருகவில்லை –உமா பார்வதி
4. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி
5. பாகேஸ்ரீ – எஸ். சுரேஷ்
6. காரிச்சாமியும் செவலக்காளையும் – நா.சிவராஜ்
7. பதிலடி – அரிசங்கர்
8. கல்நாகம் – சுரேஷ்மான்யா
9. பூர்ணிமை – க.வீரபாண்டியன்
10. வருகைக்கான ஆயத்தங்கள் – இதயா ஏசுராஜ்
11. சர்வேஷின் கதைகள் – சத்யா GP
12. காளி – விசயலட்சுமி
13. திருக்கார்த்தியல்  – ராம்தங்கம்
14. பிள்ளையார் சுழி – ப்ரணா
15. புதிய வேர்கள் – கலையரசி