Saturday 12 December 2020

மானுடத்தில் புதுமை கண்ட திரைக்கலைஞன்

 மானுடத்தில் புதுமை கண்ட திரைக்கலைஞன் 

‘என் கதைகள், உலகம் முழுவதும் வாழும் மனிதர்களின் பொதுமைப் பண்மை அடிப்படையாகக் கொண்டவை. பொருளற்ற சுயகர்வம் பிடித்த கொரியர்களுக்கு இது புரியாது. அவர்கள் உலகம் முழுதும் பயணம் செய்தால் மட்டுமே இதை புரிவர். மனிதர்களின் தனித்தன்மையை என் படத்திற்குள் கொண்டு வருகிறேன்...’ 

ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார் திரைப்பட இயக்குனர் கிம் கி டக். 

கிழக்காசிய நாடான கொரியாவை சேர்ந்தவர். உலக சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். இவரது, ‘ஸ்டாப்’ என்ற படம், கிழக்காசிய நாடான ஜப்பான் புகுஷிமா அணுமின் உலை விபத்து பயங்கரத்தை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தை, 241 பேர் மட்டுமே பார்த்தாக, கொரிய திரைப்படக் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த படம், 8541 டாலர் செலவில் தயாரானது.

கொரியாவில் அணு உலை வெடிப்பு என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு, மற்றொருவரால் எடுக்கப்பட்ட, ‘பண்டோரா’ என்ற படத்தை, 1.78 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது, 8.5 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டது. 

கிம் கி டக் பதிவு செய்த காட்சிகள் தயக்கமற்றவை. யதார்த்தத்துக்கு நெருக்கமானவை.

கடந்த, 20 ஆண்டுகளில், 23 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில், ‘பியடா’ என்ற படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – 69ல், ‘தங்க சிங்கம்’ விருது வென்றது. மற்றொரு படம், ‘3- அயர்ன்’ வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – 61ல் சிறந்த இயக்குனருக்கான, ‘வெள்ளி சிங்கம்’ விருது பெற்றது. 

கொரியா டைம்ஸ் இதழுக்கு, டிசம்பர் 14, 2016ல் கிம் கி டக் அளித்த பேட்டியிலிருந்து... 

கேள்வி: ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்து பற்றி படம் எடுக்க காரணம் என்ன?

கிம்: பூமியை பல இயற்கை பேரழிவுகள் அச்சுறுத்தி வருகின்றன. ஆனால், அணுஉலை வெடிப்பு பாதிப்பு முற்றிலும் வித்தியாசமானது. கதிர்வீச்சு கசிவு, அதன் பக்கவிளைவுகளை நேரடியாகவேப் பார்க்கிறோம். நாட்கள் செல்லச் செல்ல அதன் கோரம் அதிகமாகிறது. கொரியா, சீனா போன்ற நாடுகள் அணு மின் நிலைய எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் அணு சக்தியைச் சார்ந்தே இயங்குகின்றன. இந்த செயலை நிறுத்த விரும்பினேன். அதன் அடிப்படையில் இந்த படத்தை எடுத்தேன். 

என் படம் உலகப் பார்வையாளர்களுக்கானது. எனவே கதை ஜப்பானில் நடைபெறுவது போல் எடுத்தேன். ஜப்பானியர்களையே பயன்படுத்தியுள்ளேன். 

கேள்வி: பேரழிவுகளை தனியாக படமாக்கும் போது கிடைக்கும் அனுபவம் என்ன?

கிம்: இதை பேரழிவுத் திரைப்படம் என்றால் சங்கடமாக உணர்கிறேன். முதலில் கணினியில் கிராபிக்ஸ் முறையில் சில காட்சிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். ஆனால், நான் நினைத்தபடி அது இல்லை. எனவே, ‘டிராமா’ அடிப்படையில் முடிவு செய்தேன். 

அணு உலை வெடிப்பு, கதிர்வீச்சு கசிவுகளால் பக்க விளைவு, தனிப்பட்ட இழப்பு, பொருளாதார இழப்பு மற்றும் தேசிய அளவிலான பாதிப்புகளைக் காட்டாமல், மனித மனங்களில் ஏற்படும் தடுமாற்றத்தை திரையில் காட்டவேண்டியிருந்தது. ஒருவேளை, கதையை இன்னும் ஆழமாக அணுகியிருக்க வேண்டும். இந்த அனுபவம் சற்று கடினமானது. 

கேள்வி: பார்வையாளர்கள் தந்த பின்னூட்டம் என்ன?

கிம்: ஜப்பானிய திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே, ’ஸ்டாப்’ திரையிடப்பட்டது. உள்ளூர் ரசிகர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பதை புரிந்திருந்தனர். வடிவத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றனர். 

கேள்வி: உங்கள் கதாபாத்திரங்கள் உளவியல் மீது கவனம் செலுத்த என்ன காரணம்?

கிம்: இருபது ஆண்டுகளுக்கும் மேலாக படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை திரும்பிப் பார்த்தால் எல்லாமே மனிதர்களின் கதைகள் என புரியும். அனைத்தும் செலவில்லாதவை. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்ற தொழில் நுட்பங்களுக்கு பணம் செலவு செய்வதில்லை. இதனால், கதாபாத்திர செயல்பாட்டில் அதிகக் கவனம் செலுத்துகிறேன். என் படத்தைப் பார்த்தால், சொல்லவரும் செய்தியை உணர்வீர்கள். 

கேள்வி: உங்கள் படங்கள், உடலுறவு மற்றும் சங்கடம் தரும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து அவற்றைக் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

கிம்: என் படங்களில் பொய் சொல்ல விரும்பவில்லை. மேம்படுத்திய எண்ணத்துடன் தான் புதிய படத்தை எடுக்கிறேன். ஒவ்வொரு முறையுமே, இது போன்ற காட்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன். 

எந்த சிந்தனையுமே தராத பல திரைப்படங்கள் உள்ளன. என் படங்கள் அது போலானவை அல்ல. கதைக்குள், மக்கள் பொருந்திப் போவது அல்லது, பொருந்தி போக வைப்பது போன்ற திரைப்படத்தை என்னால் உருவாக்க முடியாது. என் சொந்த உலகம் தான் கதை மையமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் என் படத்திற்குள் வரும் ரசிகர், அதே கதையை வேறுவிதமாக உணர முடியும். 

கேள்வி:  திரைப்படம் உருவாக்கும் போது, எதை முக்கிய அம்சமாக உணர்கிறீர்கள்?

கிம்: நான், நானாக இருக்க வேண்டும். நேர்மையான திரைப்படத்தை உருவாக்க இது மிகவும் அவசியம். பார்வையாளரின் ரசனையை மனதில் வைத்தோ, உலக சினிமா சந்தையை மனதில் கொண்டோ, பிரபல நடிகர்களை எண்ணியோ செயல்பட்டால், உண்மையும், நேர்மையும் காணாமல் போய்விடும். நான் எடுக்கும் திரைப்படங்களில் என் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க விரும்புகிறேன். 

கடந்த, டிசம்பர் 11, 2020 ரஷ்யாவில் மறைந்தார் கிம். அவருக்கு புகழஞ்சலி.

நன்றி: Koriya times Issue dated December 14, 2016.

#kimkiduk

Monday 27 July 2020

இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனை

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், பக்கிங்ஹாம் அரண்மனை மிகவும் புகழ்பெற்றது. இங்கு, பிரிட்டிஷ் அரச குடும்பம் வசித்து வருகிறது.  தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியாளராக உள்ளார். 
 இங்கிலாந்து மகாராணியாக விக்டோரியா, 1837ல் அரியணை ஏறியதும் இந்த அரண்மனை, மன்னர் குடும்ப வசிப்பிடமாக மாற்றப்பட்டது. இவர், 63 ஆண்டுகள் ஆட்சி செய்தார்; இரவது சிலை, அரண்மனை முதன்மை வாயில் அருகே நிறுவப்பட்டுள்ளது. 
பக்கிங்ஹாம் அரண்மனை, 39 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 77ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் கட்டடங்கள் உள்ளன. கட்டடங்களில், 7468 வாசல் கதவுகளும், 760 ஜன்னல்களும் உள்ளன. ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் வளாகத்தை நிர்வகிக்கிறது.
அரண்மனையில்...
விசாலமான, 19 விருந்து கூடங்கள்
படுக்கை வசதியுடன் கூடிய, 52 அறைகள்
பணியாளர்களுக்கு, 188 அறைகள்
அலுவலக பணிக்காக, 92 கூடங்கள் உள்ளன.  
இவற்றில், ஆறு கூடங்களை மட்டும் பயன்படுத்துகிறார் ராணி எலிசபெத். அவற்றில், ‘எம்பையர் கூடம்’ என்பதும் ஒன்று. இது, முக்கிய விருந்தினர்களை சந்திக்கும் இடம். இங்கு, இங்கிலாந்து பிரதமர், அரசு அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களை சந்தித்து பேசுவார். ராணியின் பிரத்யேக வளாக பகுதியில் நுழைய சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில், ஸ்காட்லாந்தில் உள்ள, பால்மோரால் அரண்மனைக்கு, ஒய்வெடுக்க செல்வார் ராணி. செப்டம்பர் வரை அங்கு தங்கியிருப்பார். இந்த கால கட்டத்தில், பக்கிங்ஹாம் அரண்மனையில், 19 கூடங்கள், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.
அரண்மனை முன், ‘தி சேஞ்ஜிங் ஆப் கார்ட்ஸ்’ என்ற நிகழ்ச்சி நடக்கும். இது, பாதுகாவலர்கள், பணி மாறும் வண்ணமயமான நிகழ்ச்சி. இசையுடன், காவலர் அணிவகுப்பு பிரமாண்டமாக நடக்கும். சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் நிகழ்வு இது.
அரண்மனை முற்றத்துக்கு அடியில், டைபர்ன் என்ற ஆறு பாய்கிறது. பின்புறம், மிகப்பெரிய தோட்டமும், குதிரைகள் பராமரிக்கும் லாயமும் அமைந்துள்ளன. 
தோட்டத்தில், ‘கார்டன் பார்ட்டி’ என்ற முக்கிய விருந்து, ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். இதில், 8000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். பங்கேற்போருக்கு, ராணி மற்றும் அரச குடும்பத்துடன் பேச வாய்ப்பு கிடைக்கும். உயர்தரமான ராயல் விருந்தும் அளிக்கப்படும்.
இரண்டாம் உலகப்போரின் போது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி, ஒன்பது முறை, இந்த அரண்மனை மீது குண்டு வீசியது. இதில், அரச குடும்ப வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட தேவாலயம் சேதம் அடைந்தது. 
பக்கிங்ஹாம் அரண்மனையின் மதிப்பு, 5 பில்லியன் டாலர். 1 பில்லியன் என்பது, 7468 ஆயிரம் கோடி ரூபாய். கூட்டி, பெருக்கி, இந்த சொத்தின் இந்திய பண மதிப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 
கொரோனா தொற்று காரணமாக, அரண்மனையில், தற்போது விருந்து உட்பட முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர் அனுமதியும், ஆண்டு இறுதிவரை இல்லை.
வரலாறும் வாழ்வும்!
பக்கிங்ஹாம் அரண்மனை அமைந்துள்ள இடம் முற்காலத்தில், ‘மேனர் ஆப் எபரி’ என்ற விவசாயப் பண்ணையாக இருந்தது. டைபர்ன் நதியால் வளம் பெற்றது. இப்போதும், அரண்மனை முற்றத்தின் அடியில் பாய்ந்து ஓடுகிறது நதி
இங்கிலாந்து பணக்காரரான பிரபு ஒருவர், 1703ல் ஒரு இல்லத்தை இங்கு கட்டினார். கட்டடக்கலை நிபுணர் வில்லியம் வின்டே அதை வடிவமைத்திருந்தார் 
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ், இதை, 1761ல் வாங்கினார். ராணி சார்லோட் வசிக்க, தனிப்பட்ட மாளிகையாக பரிசளித்தார்
கட்டடம், 1762ல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது 
மன்னர் நான்காம் ஜார்ஜ், 1820ல் அரியணை ஏறியவுடன், இதை, அரண்மனையாக மாற்ற எண்ணி, கட்டடக்கலை நிபுணர் ஜான் நாஷினை நியமித்தார். அவர் ஆலோசனைப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முகப்பு தோற்றம், பிரெஞ்சு கட்டடக்கலை மரபு சார்ந்து அமைக்கப்பட்டது. சீரமைப்பு செலவு அதிகமானதால் கோபம் கொண்டார் மன்னர். ஊதாரித்தனம் செய்வதாக, 1829ல் ஜான் நாஷின் பணி பறிக்கப்பட்டது
நான்காம் ஜார்ஜ் மறைவுக்கு பின், கட்டடக்கலை நிபுணர் எட்வர்ட் பிலோர் ஆலோசனைப்படி, அரண்மனைக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, இங்கிலாந்து பார்லிமெண்ட் விடுதியாக மாற்றவும், மன்னர் குடும்பம் விரும்பியது
அரண்மனையில் மின்சார வசதி, 1883ல் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 40 ஆயிரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
ராணி எலிசபெத்!
பங்கிங்ஹாம் அரண்மனையில் அதிக காலம் கோலோச்சுபவர் என்ற புகழை, தற்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்.
இவர், ஏப்.,21, 1926ல் பிறந்தார். அன்று வழக்கப்படியும், ஜூன் இரண்டாவது சனிக்கிழமை, அதிகாரப் பூர்வமாகவும் இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
பத்து வயதில் குதிரை ஏற்றம் கற்றார். இந்த கலையில் தீவிர ஈடுபாடு கொண்டு, இங்கிலாந்து குதிரைப்படையில் பணியாற்றினார். பந்தயங்களிலும் ஆர்வம் காட்டுவார். இப்போது அவரது வயது, 94. இந்த வயதிலும், அரண்மனை வளாகத்தில் குதிரை சவாரி செய்வதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இவர், 1952ல் அரியணை ஏறியதிலிருந்து, இங்கிலாந்தில், 15க்கும் மேற்பட்ட பிரதமர்களுடன் பணியாற்றியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நீண்ட காலம் ஆட்சி புரிபவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 
வட அமெரிக்க நாடான கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் நிரந்தர அதிபராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்தியா உட்பட, 54 நாடுகளை உள்ளடக்கிய காமென்வெல்த் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். கடந்த, 1961, 1984, 1997ம் ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம், இங்கிலாந்து மக்கள் வரிப்பணித்தில் தான், நடந்து வந்தது. இந்த நடைமுறையை, 2012ல் தடைசெய்தார். இந்த உத்தரவு வரலாற்றில் எலிசபெத்தை முக்கியத்துவம் பெற வைத்துள்ளது.
 இவருக்கு, 88 பில்லியன் டாலர் சொத்து உள்ளதாக, போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.

உடல் கூறியல் வல்லுனர்

மனித உடற்கூறு பற்றி, மிகச் சரியாக ஆராய்ந்து எழுதிய மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூஸ் வெசாலியஸ். இவரது நினைவு சின்னம், ஐரோப்பிய நாடான இத்தாலி அருகே, அயோனியன் கடல் தீவு ஒன்றில் உள்ளது. 
கிரேக்க மருத்துவர் காலென் எழுதிய நுால் தான், உலகின் முதல் உடற்கூறு புத்தகமாக, 1,300 ஆண்டுகளாக போற்றப்பட்டது. அதில் கூறியிருந்த கருத்துக்களை பின்பற்றியே மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்தன. அதை தாண்டி, அந்த துறை வளரவில்லை.
இந்த சூழலில், உடற்கூறியல் பற்றிய ஆய்வில் புதிய தடம் பதித்தார் ஆண்ட்ரூஸ் வெசாலியஸ். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் வாழ்ந்த மருத்துவக் குடும்பத்தில், கி.பி., 1514ல் பிறந்தார். லத்தீன், கிரேக்க மொழிகளில் புலமைப் பெற்றார். மனித உடற்கூறு பற்றி ஆராய்வதில் நாட்டம் கொண்டார். ஆரம்பத்தில், சிறு உயிரினங்களின் உடல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிஸ் நகர மருத்துவக்கல்லுாரியில், 19ம் வயதில் சேர்ந்தார். நாய், பன்றி போன்றவற்றின் உடல்களை ஆராய்ந்தார். அவற்றின் உடற்கூறு, அறிஞர் காலெனின் கருத்துப்படி இல்லை. இதை எடுத்துக் கூறி விவாதித்தார்.
பன்றி, நாய் போன்றவற்றுக்கும், மனித உடலமைப்பிற்கும் வேறுபாடு உண்டு என, மறுத்தார் அவருக்கு உடற்கூறியல் கற்பித்த பேராசிரியர். இந்நிலையில், புதிதாக கற்க வாய்ப்பு ஏதும் இல்லை என, மனம் நொந்து சொந்த ஊருக்கு திரும்பினார் ஆண்ட்ரூஸ்.
ஒரு நாள் –
 நண்பருடன் உலாவச் சென்றார். வழியில், பயங்கரக் குற்றவாளி ஒருவனை, அந்த நாட்டு அரசர் உத்தரவுப்படி, மரத்தில் கட்டி தொங்க விட்டிருந்தனர். உயிர் பிரிந்து, எலும்புக்கூடு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து, உடற்கூறு பற்றி ஆராய துவங்கினார் ஆண்ட்ரூஸ். உண்மையில், காலென் கூறியபடி அது இல்லை என தெளிவு பெற்றார். 
ஆய்வில் கண்டறிந்த உண்மைகளை, புத்தகமாக எழுதினார்; அதுபற்றி மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்தார். யாரும், அவரது கருத்துக்களை ஏற்க முன்வரவில்லை. இந்தநிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில், 1543ல் மனித உடற்கூறு பற்றிய நுாலை வெளியிட்டார். அது, 700 பக்கங்களில், விளக்கப்படங்களுடன் அமைந்திருந்தது.
அந்த நுாலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அவரது மருத்துவ நண்பர்களே எதிரிகளாயினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண்ட்ரூஸ், மனம் நொந்தார்; கண்டுபிடிப்புகளை தீயிட்டு கொளுத்தினர். இனி, ஆராய்ச்சியே வேண்டாம் என முழுக்கு போட்டார். ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு திரும்பி, மன்னரின் அரண்மனை மருத்துவராக பணியில் சேர்ந்தார். 
அப்போது, இத்தாலி, பாதுவா பல்கலைக் கழக பேராசிரியர் கேப்ரியஸ் பாலோபியஸ், ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில், ஆண்ட்ரூஸ் கண்டுபிடித்த உடற்கூறு கொள்கை தான், துல்லியமானது என, பாராட்டி எழுதியிருந்தார். அவற்றில் சில கருத்துக்கள் மீது விளக்கம் கேட்டிருந்தார். 
எதிர்ப்பு குரல்களையே கேட்டு பழகிய ஆண்ட்ரூசிற்கு இது உற்சாகம் தந்தது. கேட்டிருந்த சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க, இத்தாலி புறப்பட்டார். ஆனால், கேப்ரியல் திடீர் மரணம் அடைந்ததால் ஏமாற்றமடைந்தார்.
பல்கலையில், கேப்ரியல் பணி புரிந்த இடம் காலியாக இருந்தது. அந்தப் பதவியை ஏற்ற ஆண்ட்ரூஸ், மூன்றாண்டுகள் பணியாற்றினார். 
பின், மத்திய கிழக்கு பகுதியில் ஜெருசலம் நகருக்கு புனித யாத்திரையாக சென்றார். அந்த யாத்திரையை முடித்து திரும்பிய போது, அவர் பயணம் செய்த கப்பல், புயலில் சிக்கி கவிழ்ந்தது. இத்தாலி அருகே அயொனியன் கடல் அருகே ஒரு தீவு பகுதியில், பயணியர் உடல்கள் ஒதுங்கின. அந்த வழியாக சென்ற மற்றொரு கப்பல் இதை கண்டது.
ஒதுங்கிக் கிடந்த உடல்களை அங்கேயே அடக்கம் செய்தனர் கப்பால் மாலுமிகள். ஒரு உடலில் இருந்த சட்டைப் பையில், சில புத்தகங்கள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்தார் கப்பல் தலைவர். ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தில், ‘ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் அவர்களுக்கு, அன்புடன் கேப்ரியல் பாலோபியஸ்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம், அது, ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் உடல் என, அடையாளம் கணப்பட்டது.  உடலை அங்கேயே அடக்கம் செய்து, ‘ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் நினைவிடம்’ என, ஒரு கல்லில் பொறித்தனர். அவர் நினைவாக இன்றும் அந்த கல் அங்கு உள்ளது.
மனித உடற்கூறு பற்றி முறையான கண்டுபிடிப்பு நிகழ்த்தியவர் வெசாலியஸ். அவர், 53 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். அற்புத கண்டுபிடிப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மருத்துவ உலகின் வளர்ச்சிக்கு வழிகாட்டியவரின் புகழ் என்றும் நிலைக்கும்!

புலிக்கறியும் மான் குட்டியும்

மருந்துவாழ்மலை காட்டில், ஒரு நரி வாழ்ந்து வந்தது. வயது முதிர்ந்து விட்டதால் ஓடியாடி, வேட்டையாட முடியவில்லை. இளம் வயதில் நடத்திய வேட்டையின் போது, அதன் கால் ஒன்று ஊனமடைந்தது. பற்களும் உதிர்ந்து விட்டன. இரையை பிடிக்க முடியாததால், திணறியது. ஒரு மரத்தடியில் படுத்து ஆலோசனை செய்தது.
 அவ்வழியாக வந்தது கம்பீரம் மிக்க புலி. அதைக் கண்டவுடன், ‘பெருமைகுரியவரே... வணக்கம்...’ என, குட்டிக்காரணம் அடித்து முன்னங்கால்களை துாக்கி வணங்கியது நரி.
‘யாரப்பா நீ... என்னை ஏன், வணங்குகிறாய்...’
‘ஐயா உங்க அருமை, பெருமைகளை அறிந்தவன். அதனால்தான் வணங்குகிறேன்...’
 ‘அப்படியா... மகிழ்ச்சி...’ என்ற புலி சற்று கர்வத்துடன் நடந்தது. 
விடமால், பின் தொடர்ந்தபடி, ‘தினமும் இரை தேடி, இப்படி நீங்க அலைவது பாவமாக இருக்கு...’ என்றது நரி.
‘உழைத்தால் தானே உணவு கிடைக்கும்...’
‘சரிதான்... உங்களைப் போன்ற வலிமை மிக்கவர்களுக்கு சேவகம் செய்ய, என்னைப் போல் பலர் காட்டில் இருக்கிறோமே... அப்புறம் ஏன் அலையுறீங்க...’
பல்லிளித்த நரியின் பேச்சைக் கேட்டு, ‘இப்போ நான் என்ன செய்யணும்...’ என்றது.
 ‘இனி... இதுபோல் அலைந்து திரிய வேண்டாம்; குகையிலே சுகமாக இருங்க; இரை இருக்கும் இடத்தை அறிந்து வந்து துப்புச் சொல்றேன்... அலைந்து திரியாமல் அமுக்கிவிடலாம் அல்லவா...’ 
‘சரி... அதுவும் நல்லாத்தான் இருக்கு...’
வஞ்சக நரியின் வார்த்தைகளை ஒப்புக் கொண்டது புலி. கூட்டணி வைத்தவுடன் கும்மாளம் அடிக்க துவங்கியது கிழநரி.
காட்டில் மான், மாடு, காட்டெருமை போன்ற மிருகங்கள் இருக்கும் இடத்தை அறிந்த நரி, யாருக்கும் தெரியாமல், புலியிடம் சொல்லியது. ஓடிக் களைக்காமல் பதுங்கியபடி சென்று, அவற்றைக் கொன்று, தின்றது புலி. தின்று போக மீதியை ருசித்துச் சாப்பிட்டு வாழ்வை நகர்த்தியது நரி.
ஒரு நாள் –
குட்டியைக் காணாமல், காடு முழுக்க தேடியலைந்தது மான்; கடைசியாக, புலி குகை வாசலில் அது விளையாடிக் கொண்டிருப்பதை கண்டது. ஆபத்தை உணர்ந்து குட்டியை எச்சரித்தது. பாதுகாப்புடன் குட்டியை அழைத்து செல்ல முயன்றது. அப்போது, குகை நோக்கி புலி வருவதைக் கண்டது.
கடும் அதிர்ச்சி அடைந்தது மான். ஆனாலும் தைரியத்தை கைவிடவில்லை. கலங்காமல் சிந்தித்து வழி தேடியது. 
மிக அருகில் வந்துவிட்டது புலி. 
அப்போது, திடீர் என ஓர் உபாயம் நினைவுக்கு வந்தது. குட்டியை ஓங்கி அடித்தது மான்; வலி தாங்காமல் அழுதது குட்டி. மீண்டும் அடித்தது மான். இப்போது, மிகவும் சத்தமாக கத்தி அழுது புரண்டது குட்டி.
அதன் அழுகை சத்தத்தின் ஊடாக, ‘புலிக்கறி வேணும்... புலிக்கறி வேணும்... என்று ஏன் அடம் பிடிக்கிறாய் இன்று, இரண்டு புலிகளை அடித்துக் கொடுத்து விட்டேனே... போதாதா... கொஞ்சம் பொறு; இந்த குகைக்கு வரும் புலியை அடித்து தருகிறேன்... அதை சாப்பிட்டாவது திருப்தி படு...’ என்று கம்பீரமாக சொன்னது மான்.
இதைக் கேட்டதும் பயத்தில் நடுங்கியது புலி. அதன் கால்கள் தள்ளாடின. பீதியில் முழித்தபடி ஒரு புதர் நோக்கி ஓடியது. அங்கு பதுங்கியிருந்த நரி சந்தேகத்துடன், ‘புலியோரே... குகை்குப் போகாமல் ஏன் ஓடுகிறீர்...’ என கேட்டது.
‘நண்பா... உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்...’
‘அப்படியா... என்ன செய்தி!’
‘என் குகையில், ஏதோ மிகப் பயங்கர மிருகம் ஒன்று குட்டியுடன் பதுங்கி முற்றுகையிட்டுள்ளது...’
‘உங்களை விடப் பெரிய பயங்கர மிருகமா...’
‘ஆமாம்... அப்படித்தான் இருக்க வேண்டும். இரண்டு புலிகளை அடித்துக் கொடுத்தும், அதன் குட்டிக்குப் பசி அடங்கவில்லையாம்; மேலும், புலிக்கறி கேட்டு அடம் பிடித்து அழுது கொண்டிருக்கிறது அதன் குட்டி... இதைக் கண்டதும் நடுங்கி ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்...’
‘அடடே... குட்டியே, இரண்டு புலிகளைச் சாப்பிட்டால்... தாயின் பலத்தை ஊகிக்க முடிகிறது. அது எதை எல்லாம் சாப்பிடுமோ...’
‘அத நெனச்சுத்தான் ரெம்ப பயமாயிருக்கு...’
‘அந்த மிருகத்தை பார்த்தீரா புலியாரே...’
‘பார்க்கவில்லை... குரலைத்தான் கேட்டேன்...’
‘வாருங்க... பதுங்கி சென்று பார்த்து வருவோம்...’
‘ஐயோ... விஷப்பரிட்சை வேண்டாம்... அந்த பொல்லாத மிருகத்திடம் மாட்டினா அவ்வளவுதான் நரியாரே...’
‘எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது...’
‘என்ன...’
‘நீண்ட கயிற்றை எடுத்து அதில், இருமுனையிலும் பிணைத்துக் கொள்வோம்...’
‘இருவரும் கழுத்தில் ஏன், கட்டிக் கொள்ளணும்...’
‘வாழ்விலும், சாவிலும் இணை பிரியாத நண்பர்கள் அல்லவா நாம். அதைக் காட்டத்தான்... பொல்லாத மிருகம் துரத்தினால், இருவரும் தப்பி ஓடிவிட வசதியாக இருக்கும்...’என்றது நரி.
அதன்படி கயிற்றில் பிணைத்தபடி நடந்தன. பயந்தபடி பதுங்கி வந்த புலியையும், நரியையும் துாரத்திலேய பார்த்து விட்டது மான். உடனே, குட்டியை மறுபடியும் ஓங்கி அடித்தது; அழுதது குட்டி.
‘அழாதே என் செல்லமே... நண்பன் நரி, என்னிடம் ஓர் உறுதி கூறி சென்றான். அதற்கிணங்க, ஒரு புலியைக் கூட்டி இழுத்து வருகிறான்; உனக்கு நல்ல வேட்டை தான்...’ என்று, மிகவும் உரக்க சொன்னது.
இதைக்கேட்டதும் நடுநடுங்கியபடி, பீதியில் ஓட ஆரம்பித்தது புலி. கயிற்றின் மறுமுனையில் பிணைக்கப்பட்டிருந்த நரி, அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உருண்டது. அதன் உடல் சின்னா பின்னமாக சிதறியது.
அன்பின் செல்லங்களே... இந்த கதையில் இரண்டு நீதியை தெரிஞ்சிகிட்டீங்க தானே... ஒன்று, ஆபத்துவரும் போது, பயந்து நடுங்காமல் புத்தியை பயன்படுத்தி சாதுரியமாக தப்ப வேண்டும்; மற்றொன்று, எளிய மிருகங்களை காட்டிக் கொடுத்து வாழ நினைத்த நரிக்கு ஏற்பட்ட கதியை பார்தீங்களா... உறுதியிடன் வாழ பழகுங்க சரியா!

Saturday 25 July 2020

அறுவை மருத்துவமும் ஆட்டு மயிரும்

போர் மற்றும் விபத்தில் காயம்பட்டவரை காப்பாற்ற தான் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை முறை அறிமுகமானது. துவக்கத்தில் சிகிச்சை முடிந்ததும், 55 சதவீதம் நோயாளிகள் உயிரிழந்தனர். அறுவை சிகிச்சை காயத்தில் சீழ் பிடித்து, தொற்று ஏற்பட்டதால் பெருவாரி மரணங்கள் நிகழ்ந்தன. இதை அறிய முடியாமல், திணறியது மருத்துவ உலகம்.
காயத்தில் சீழ் பிடிப்பதை கண்டறிந்து, அதை தடுக்க, ‘ஆன்டிசெப்டிக்’ என்ற, தொற்று தடுப்பு முறையை புகுத்திய மருத்துவமேதை, ஜோசப் லிஸ்டர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், ஏப்ரல் 5, 1827ல் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.  
அறுவை சிகிச்சை மருத்துவ துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ஜேம்ஸ் சைம். இவருடன் இணைந்து, ஸ்காட்லாந்து, எடின்பரோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுகள் மேற்கோண்டார். அவரது மகளையே திருமணம் செய்தார். அறுவை சிகிச்சையில் புதுமைகள் நிகழ்த்தினார்.
அந்த காலத்தில், அறுவை சிகிச்சை முடிந்த சில நாளிலேயே, நோயாளிகளில் பலர் இறந்தனர். இதை தடுக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. இது பற்றி ஆராய்ந்தார் லிஸ்டர். அறுவை காயத்தில், நுண் கிருமிகள் தொற்றி, சீழ் பிடிப்பதால், மரணங்கள் நிகழ்வதை உறுதி செய்தார்.  
நுண்ணுயிரியலின் தந்தை லுாயி பாஸ்டர் கண்டுபிடித்திருந்த தொற்றுநோய் நுண்கிருமி கோட்பாட்டை, 1865ல் அறிந்தார். அறுவைப் புண்ணில் தொற்றும் நுண் கிருமிகளை அழித்து விட்டால், நோயாளியை காக்கலாம் என நம்பினார்.
நகர சாக்கடையில் துர்நாற்றத்தை தடுக்க, கார்பாலிக் அமிலத்தை, துப்புரவு தொழிலாளர்கள் பயன்படுத்துவதைக் கண்டார். அதை ஆராய்ந்த போது விடை கிடைத்தது. அறுவை சிகிச்சை அறையில், கார்பாலிக் அமிலத்தை தெளித்தார். அறுவை சிகிச்சை புண் மீதும், அமிலத்தில் நனைத்த துணியால் கட்டுப்போட்டார். 
இந்த முறையில், முதல் அறுவை சிகிச்சை, குதிரை வண்டியால் காயம் பட்ட, ஏழு வயது சிறுவனுக்கு, ஆகஸ்ட், 1865ல் நடந்தது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே ஆறியது காயம். சீழ் பிடித்து நோய் தொற்றவில்லை. 
ஆராய்ச்சி வெற்றி பெற்றதால் புகழ் பரவியது. ஆனால், அந்த கண்டுபிடிப்பை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். பல சோதனைகள் மூலம் கடுமையாக போராடி மீண்டும் மீண்டும் நிரூபித்தார். பின், உலகம் முழுவதும் இந்த முறை பரவியது.  
அறுவை சிகிச்சையில், உடல் பாகங்களில் தையல் போட, ஆட்டு ரோமம் பாதுகாப்பானது என்பதையும் கண்டுபிடித்தார் லிஸ்டர். இதுவும், மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மருத்துவ துறையில் பயன்பாட்டில் உள்ளது.
லிஸ்டரைத் தேடி பதவி, பரிசுகள் வந்தன. இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் அந்தரங்க மருத்துவராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து ராயல் ஆராய்ச்சி கழக தலைவராக பதவி வகித்தார். மதிப்பு மிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் அவரை பாராட்டின.  
மருத்துவ ஆராய்ச்சிகளில் உறுதுணையாக, ஆய்வுக்கூடத்தில் உதவிகள் செய்து வந்தார் அவரது மனைவி ஏன்ஸ். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திடீர் என இறந்தார். துடிதுடித்த லிஸ்டர் சோகத்தில் ஆழ்ந்தார். ஆராய்ச்சி பணிகளில் கவனம் குறைந்தது. சோகம் விலகாமல், 1912ல் காலமானார். 
ஆன்டிசெப்டிக் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார் ஜோசப் லிஸ்டர். மனித உயிர்களை காக்க, அரும்பணியாற்றிய அவர் புகழ் என்றும் நிலைக்கும்.
குழந்தைகளே... மருத்துவ மேதை லிஸ்டரை மனதில் கொண்டு லட்சியத்துடன் செயல்படுங்கள்.

தெளிப்புக்கருவி!
அறுவை சிகிச்சை அறையில், பாதுகாப்பாகவும், எளிமையாகயும்,கார்பாலிக் அமிலத்தை தெளிக்கும் வகையில் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார் லிஸ்டர். மிகவும் நுட்பமாக இயங்கி, மெல்லிய துாவலாக பெய்யும் வகையில் வடிவமைத்துள்ளார். 
இதுதான், அறுவை மருத்துவத்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த எளிய இயந்திரம், ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ பல்கலைக் கழக ஹன்டேரியன் அருங்காட்சியத்தில், இன்றும் பாதுகாப்பாக உள்ளது. மருத்துவ மாணவர்கள், இதை பார்த்து வியக்கின்றனர்.



நினைவுச்சின்னம்!
லிஸ்டரின் பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறையை, மருத்துவ உலகம் முதலில் ஏற்க தயங்கியது. ஆன்டிசெப்டிக் முறையை பல இடங்களில் நிரூபிக்க வேண்டியிருந்தது. சலிப்பின்றி அதை செய்தார். அவரது காலத்திலே உலகம் முழுவதும் பரவியது. 
லிஸ்டரின் நினைவை போற்றும் வகையில், உலகின் பல இடங்களில் நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் முதன் முதலில் ஆன்டிசெப்டிக் முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் காட்சியை, ஒரு சிற்ப தொகுப்பாக உருவாக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலி, ரோம் நகரில் நினைவு சின்னமாக, அது வைக்கப்பட்டுள்ளது.
 ஆன்டிசெப்டிக்!
கிரேக்க மொழியில் பிறந்த சொல், ஆன்டிசெப்டிக். ஆன்டி என்றால், எதிர் என பொருள். செப்டிக் என்றால் அழுகுதல் என்ற பொருள். அழுகலைத் தடுக்கும் அமிலம் மற்றும் பொருள், ஆன்டிசெப்டிக் மருந்தாக பயன்படுகிறது. தமிழில், அழுகல் தடுப்பு மருந்து என்று கொள்ளலாம்.
பண்டைய போர்களங்களில் வீரர்களுக்கு ஏற்பட்ட புண், குறிப்பிட்ட நாளுக்குள் ஆறாமல், அழுகி துர்நாற்றம் எடுத்ததைக் கண்ட கிரேக்கர்கள், புளித்த திராட்சை ரசத்தையும், வடித்த சாரயத்தையும் பூசினர். அழுகல் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின், பிராந்தி, பாதரசம், டர்பண்டைன் போன்றவற்றையும் பயன்படுத்தினர். 
ஐரோப்பிய நாடான ஹங்கேரி மருத்துவர் இக்னஸ் செமல் வெய்ஸ், 1800ல், லைம் குளோரைடு அமிலத்தை பயன்படுத்தினார்; ஆங்கிலேய மருத்துவர் ஜோசப் லிஸ்டர், கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்தினர். இவர்கள் நவீன மருத்துவத்துக்கு வழி காட்டினர்.
புண் மீது, சுத்தமான தேனை தடவும் வழக்கம், தமிழர்களிடம் நீண்ட நாள் வழக்கமாக உள்ளது. கைகழுவ பயன்படுத்தும் சோப், கைகளில் பூசிக்கொள்ளும், ‘சானிடைசர்’ திரவம் போன்றவையும், ஆன்டிசெப்டிக் வகைகள் தான். இவை வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமி செயல்பாட்டை அழிக்கின்றன. 
தீநுண்மி நோயான கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இன்று நாம் இவற்றை பயன்படுத்துகிறோம்.

Monday 15 June 2020

யுனஸ்கோ கூரியர் – கனவும் நினைவும்

இளமையில், விரும்பி படித்த இதழ்களில் ஒன்று, யுனஸ்கோ கூரியர். நாகர்கோவில் குடிசை மாத இதழ் வாசகசாலையில், 1984ல் முதலில் கண்டேன்.  தமிழ் கிராம சமுதாயம் குறித்த கட்டுரை ஒன்றை, எழுத்தாளர் சுந்தர ராமசாமி, எழுதியிருந்தார். அதைத்தான் முதலில் வாசித்ததாக நினைவு. தொடர்ந்து, விரும்பி வாசித்து வந்தேன். என் விருப்ப தேர்வில் முலிடம் பெற்ற இதழ்.
இதன் அலுவலகம், சென்னை, சேத்துப்பட்டு, உலக பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கியது. சென்னை வந்தபின், அந்த அலுவலகத்தை  நாடி சென்றேன். இதழின் தமிழ் பதிப்பின் ஆசிரியர்  தமிழறிஞர் மணவை முஸ்தபாவை சந்தித்தேன். 
எளிமையும், அன்பும், அறிவாற்றலும், செயலுாக்கமும் நிரம்பியவர். அவருடன் நிகழ்ந்த சந்திப்பின் ஒவ்வொரு நொடியும், வாழ்வின் முக்கியமான தருணங்களாக கருதுகிறேன். 
தமிழ் மொழியை அறிவியல் பார்வையுடன்  மேம்படுத்த அவர் போல் உழைத்த அறிஞர் இல்லை. அறிவியல் தமிழின் தந்தை என்ற புனை மொழி வெறும் புகழ்ச்சியில்லை. 
அவர் உருவாக்கிய சொல்லகராதிகள், தமிழ் மொழியின் ஆயுளை நீட்டிக்கும் அரிய சாசனங்கள்.
அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி போன்றவை, அவரது உயர்ந்த  உழைப்பை காட்டுபவை. சிறுவர் அறிவியல் கலைக்களஞ்சியமும் மிக முக்கியமானது.
தமிழில், 31 புத்தகங்களை ஆக்கியுள்ளார். ஆங்கிலத்தில் இருந்து, ஏழு நுால்களை மொழியாக்கம் செய்துள்ளார். மலையாளத்தில் இருந்து, மூன்று நுால்களை பெயர்த்துள்ளார். 
இவை தவிர, மூன்று தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். அவை, வெற்றுச் சொற்களால் நிரம்பியவை அல்ல. தமிழ் மொழியை, சமூகத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் பசுவை வனங்கள்.
எளிய பின்னணியில் பிறந்து, தமிழ் சமூகத்துக்கும், மொழிக்கும் அருங்கொடைகள் வழங்கிய பேரறிஞர் மணவை முஸ்தபா பிறந்த தினம் இன்று. 
வெற்று வேட்டுகளுக்களுக்கும், கள்ளச்சாராய வியாபாரக் கும்பலுக்கும் ஆர்பரித்து அடங்கும் தமிழகம், கடும் உழைப்பாலும், செயலாலும் தமிழையும், தமிழ் சமூகத்தையும் உயர்த்திய, எளிய அறிஞரைக் கண்டு கொள்ளாமல் விடுவதில் வியப்போதும் இல்லை.
சிறுவர் இதழ் தயாரிப்பில்,  அவர் உருவாக்கிய அறிவியல் சொற்கள் பலவற்றை பயன்படுத்தி வருகிறேன். பயன்படுத்தும் போதெல்லாம் அவர் நினைவை போற்றத் தவறியதில்லை. அவரது சொற்கள், தமிழ் எண்ணத்தையும், சிந்தனை மரபையும் விரிவு படுத்தும். தமிழ் சமூகத்தை பண்படுத்தும்.
தமிழ் சமூகம், அறிவியல் ரீதியாக சிந்திக்க துவங்கும் போது, முஸ்தபாவின் புகழ் முதன்மை இடத்தில்  மலரும். 
படக்குறிப்பு: என் சேகரத்தில் உள்ள யுனஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பு இதழ் இது. பராமரிக்க இயலாமல் பல பாழாகின. வானொலி பற்றிய சிறப்பிதழ் என்பதால், என் இனிய நண்பர் பேராசிரியர் ஜெயசக்திவேல் வசம் ஒப்படைக்க விரும்பினேன். உலக அளவில் வானொலி ஒலிபரப்பு குறித்து ஆராய்ந்து வரும் முக்கிய அறிஞர்களின் ஒருவர். வானொலி தொடர்பான பல அரிய தொகுப்புகளை பேணி வருகிறார். சென்னை பல்கலைக் கழக இதழியல் துறையில் பேராசிரியாக உள்ளார்.  

Friday 12 June 2020

இயற்கை நோக்கிய நகர்தல்


துணி சலைவையில், Bio Enzyme என்ற உயிர் நொதி கரைசலை இன்று பயன்படுத்த துவங்கினோம்.
நந்தவனம் தோட்டம் திருமிகு சரோஜா குமார் அவர்களின் முகநுால் பக்கத்தில் கற்ற தொழில் நுட்பம் இது.
கடந்த, 2018 ஆகஸ்ட் 18ல், ‘பயோ என்சைம்’ கரைசல் பற்றி,  முகநுால் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார் சரோஜா குமார். அதில், செய்முறை, உபயோகித்த அனுபவம் பற்றி தெளிவாக்கியிருந்தார். அதை, வாசித்து கடந்திருந்தேன்.
இயற்கையை விரும்புவோருக்கு, இது போன்ற அனுபவ பகிர்வுகள், நம்பிக்கை ஊட்டும்.  
செங்கல்பட்டு, தமிழ்நிலம் தமிழ்பண்ணையில், சரோஜா அவர்களை சந்தித்த போது, சொல் போல் செயலிலும் மேன்மையாளராக அறிந்தேன். தமிழகத்தில் மிக அரிதான, எளிமையில் புதுமை,  நவீன சிந்தனை, தெளிந்த லட்சியம் எல்லாம் அவரிடம் கண்டேன்.  
சலவைக்கு அவர்  பயன்படுத்தி வரும், பயோ என்சைம் கரைசல் தொழி்ல் நுட்பத்தை, கடந்த மே 18ம் தேதி கேட்டுப் பெற்றேன். இணையர் வளர்மதி, அதை பயன்படுத்தி, உயிர் நொதி கரைசலை தயாரித்துள்ளார்.
எங்கள் அனுபவத்தில் தயாரிப்பு விபரம்:
தேவையான பொருட்கள்:
நாட்டு சர்க்கரை  – 100 கிராம்
எலுமிச்சை பழம்  – 1
தண்ணீர்  – 500 மில்லி.
ஞெகிழி குப்பி  – 1 லிட்டர் கொள்ளளவு.
செய்முறை:
தண்ணீரில், நாட்டு சர்க்கரை மற்றும் அரைத்த எலுமிச்சையை சேர்த்தோம். நன்கு கரைத்து, நெகிழி குப்பியில் அடைத்து நிழலில் பாதுகாத்தோம். தினமும், ஒருமுறை குப்பி திறந்து, வாயு வெளியேறியதும் மூடினோம். எழு நாட்கள் இது போன்று செய்து வந்தோம்.
எட்டாவது நாள் கரைசல் தயார்.
தொழில் நுட்பத்தை தந்து உதவிய திருமிகு சரோஜா அவர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் விதமாக, நந்தவன கரைசல் என்றே அழைக்கிறோம்.
முதலில், பருத்தியால் ஆன முகக்கவசத்தை, இந்த கரைசலில் அலசி, வெயிலில் உலர்த்தி பயன்படுத்த துவங்கினோம். நறுமணத்துடன் மிளிர்ந்தது. தொடர்ந்து, உள்ளாடைகள் சலவைக்கு பயன்படுத்தினோம். அது விரும்பத்தக்கதாக இருந்தது. மகிழ்ச்சி தந்தது.
இன்று காலை, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவந்தோம். இயந்திர துவைப்பானில், நீர் நிரம்பி,  அழுக்கு துணிகளுடன், 100 மி.லி., கரைசலை கலந்து, 30 நிமிடங்கள் ஊறிய பின், துவைக்க விட்டோம். வழக்கம் போல் துவைத்தது. அழுக்கை நீக்க, ரசாயனத்துக்கு பதிலான, இயற்கை கரைசல். அவ்வளவு தான் வேறுபாடு.
சலவைக்கு, ஒரே அலசல் போதும் என்று பரிந்துரைந்திருந்தார் சரோஜா. தானியங்கி இயந்திர கட்டளை நிரலை மாற்ற முடியாததால் அதற்கு வழியில்லை. வழக்கம் போல் துவைத்து பிழிந்தது இயந்திரம்.
பிழிந்த துணிகள், நறு மணத்துடன் மிளிர்கின்றன. தொழில் நுட்பத்தை செயலாக்கியதில் இணையருக்கு மிகுந்த மகிழ்ச்சி. எளிய, செலவு குறைந்த, இயற்கைக்கு நெருக்கமாக மற்றொரு நகர்தல்.