Tuesday 16 April 2019

கனவை பெருக்கும் கதலி மலர்

வசந்தத்தை வனப்பாக்குகிறது, கதலி மரம். இளம் சிவப்பு – ஊதா கலந்த மென் வண்ணத்தில், கோடையில் பூத்து குலுங்கும். அடர் பச்சை இலைகளைக் கொண்டது. குளிர்காலத்தில் உதிர்க்கும். அடர் நிழல் தரும்.
தாவரவியல் பெயர்: லகர்ஸ்டிரோமியா ஸ்பீசியோஸா  –Lagerstroiemia Speciosa. ஆங்கிலத்தில், Giant crepe-myrtle, Queen's crepe-myrtle, Bride of India என்றும், பிலிப்பைன் நாட்டில், பானபா, இலங்கை, சி்ங்களத்தில், முருதா என்றும்  அழைக்கின்றனர். முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள்.
உயிரின நவீன வகைப்பாட்டியலை உருவாக்கிய இயற்கையியல் அறிஞர் காரேலஸ் லின்னோயஸ் (1707 – 1778) இந்த தாவரத்தை வகைப்படுத்தி பெயரிட்டுள்ளார். இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர். சுவீடன் அகாடமியை நிறுவியவர்.
கதலி மரம், தெற்கு ஆசியாவை தாயகமாக கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து, 1200 முதல், 2400 மீட்டர் உயரத்தில் வரை வளரும் இயல்புள்ளது. வெப்ப மண்டலக் காடுகளில், 20 மீட்டர் உயரம் வரை வளரும். இந்தியா, தைவான், பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
ஆண்டின் ஒருமுறை வசந்த காலத்தில் மட்டும் பூத்து குலுங்கும். அப்போது, தேனி, வண்டுகள் உட்பட ஏராளமான  உயிரினங்கள் தேன் பருகி சார்ந்து வாழும். பல்லுயிர் பெருகும். இங்கு பதிவிட்டுள்ள படம், சென்னை, நந்தனம், சி.ஐ.டி., காலனியில் எடுத்தது.
இந்த மரத்தை சிறப்பிக்க, இந்திய அரசின் தபால்துறை, ஒரு தபால் வில்லை வெளியிட்டுள்ளது.
மரபு வழி புத்தமார்க்கமான தேரவாத பிரிவில், கதலி மலர் புனிதமாக கருதப்படுகிறது. கேரளாவில் சித்திரை விசு தினத்தில், சரக்கொன்றைக்கு உள்ள முக்கியத்துவம், வங்காள புத்தாண்டில், கதலி மலருக்கு உண்டு. இன்று, ஏப்ரல் 15, வங்காளிகள், அசாமியர், மலையாளிகளுக்கு புத்தாண்டு.
முற்றிய மரத்தடியில், ஜன்னல், கதவு, உழவுக் கருவிகள் செய்யலாம். சில நாடுகளில் படகு செய்வதாக கூறப்படுகிறது.
இலைகளை பயன்படுத்தி, ஜப்பான், தைவான் நாடுகளில் தேனீர் தயாரிக்கின்றனர். இளம் இலைகளை, உணவாக வியட்நாம் நாட்டில் பயன்படுத்துகின்றனர்.
சங்க இலக்கியத்தில், வாழைக்கு கதலி என்று பெயர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவகை வாழை, இப்போதும் கதலி என்றே அழைக்கப்படுகிறது. வழிபாடுகளில் படையலுக்கு பயன்படுகிறது.

முள் அரசும் உயிர் அம்பும்

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை, ராஜீவ்காந்தி சாலை என அழைக்கப்படுகிறது. அடையாறு மத்திய கைலாசில் துவங்குகிறது. சென்னை வந்த போது, இங்கெல்லம் முறையான சாலை வசதி கிடையாது. ஏதாவது செய்தி என்றால் தகவல் திரட்ட சிரமப்படுவோம். இரவில் கேட்கவே வேண்டாம்.
இப்போது, கடும் நெரிசல். கவனம் சிதறினால் அவ்வளவுதான். இந்த சாலையில் இந்திராநகர் ரயில்நிலையம் எதிரே, ரோஜா முத்தையா நுாலகத்துக்கு பிரிகிற உதவிச்சாலை நடுவே ஒரு மரம் உள்ளது. அதன் அடையாளத்தைக் கேட்டிருந்தார், ஜீனத் நிஷா.
அலுவலக வழியில், காலை அந்த மரத்தை பார்த்தேன்.
ரோஜாமுத்தையா நுாலகம், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம், சாமிநாதன் பவுண்டேஷன் என, அந்த வழியில் பலமுறை போயிருக்கிறேன். கவனம் பிசகியது ஆச்சரியமாக இருந்தது.
அடிமரம், கிளை  என, முழுக்க முட்கள் நிறைந்துள்ளது. அவை, சிறிய யானைத் தந்தம் போல் வளைந்துள்ளன. பூனை நகம் போல் என்றும் சொல்லலாம். முட்களின் நடுவிலும், அணில்கள் ஓடித்திரிந்தன. அருகே தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் வேப்பம் பூவை மேய்ந்துவிட்டு, குதித்து சாடி, முள்மர மேனியில் ஓடித்திரிகின்றன.
முள் நிறைந்த அடிமரமும் கிளைகளும், யானை கறுப்பு நிறத்தில் உள்ளன. இதய வடிவில், குறுவால் கட்டிப் பச்சை இலைகள். அரசு இலைகள் போல் உள்ளன. இதழ்களற்ற பூக்கள், அடர் மங்கலான சிவப்பு வண்ணத்தில், சிறிய லிங்கமாய் எழுந்து நிற்கின்றன. பெண் பூக்கள், புல்லிகள் குவிந்து, சிறிய பூசணி போல் உள்ளன.
இதன் தமிழ் பெயர், முள் அரச மரம். ஆங்கிலத்தில், Sandbox tree, Passumwood, Jabillo, Monkey dinner ball, Monkey's pistol, Monkey no climb என, அழைக்கின்றனர். தென் அமெரிக்கா அமேசான் காட்டைத் தாயகமாக கொண்டது. தாவரவியல் பெயர்: Hura Crepitans. மித வெப்ப மண்டல பகுதிகளில், 70 மீட்டர் வரை வளரும். அமேசான் காடுகளில், 100 மீட்டர் வரை வளர்ந்துள்ளதாக, தாவரவியல் அறிஞர் ஹக்ஸ்லே பதிவு செய்துள்ளார்.
மரத்தில் ஊறும் பால் பட்டால், பார்வை இழப்பு ஏற்படும். விஷ முனை கொண்ட அம்பு தயாரிக்கவும், மண்ணில் துளையிடவும் மரத்தையும், பாலையும் பயன்படுத்துகின்றனர்.
 மிகவும் எச்சரிக்கையுடன் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் வளர்க்க ஆப்ரிக்காவில் தடை உள்ளது.
பழம் புளிப்பு சுவையுள்ளது. உண்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
சிதறல் மூலம் விதை பரவுகிறது. உலர்ந்த விதை, வெடிக்கும் போது பயங்கர சத்தம் வரும். மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் விதை சிதறுவதாக, தாவரவியல் அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். சிதறும் போது, அருகிருந்தால் காயம் பட வாய்ப்பு உண்டு. 100 மீட்டருக்கு அப்பால் கூட, விதைகள் சிதற வாய்ப்பு உண்டு. ஒரு பழத்தில், 16 விதைகள் வரை இருக்கும். விதை, வளரும் ஏழாம் நாள் மதி வடிவில் இருக்கும்.
விதை, மரத்துண்டில் ஆபரணம் உருவாக்கி அணிகின்றனர் லத்தீன் அமெரிக்கர்கள். முறையான வழிகாட்டுதல் இன்றி அணிந்தால், தோல் பாதிப்பு ஏற்படும்.
அணுக சற்று கடினமாக தெரிந்தாலும், மருத்துவ பயன் அதிகம். மனித குலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழுநோய் உட்பட பலவற்றை தீர்க்கும் மருந்து இந்த மரத்தில் உள்ளது. ‘இந்திய மருத்துவ தாவரங்கள்’ என்ற பேரகராதியில், சி.பி.காரே, முள்ளரசன் என்ற தமிழ் பெயரை, பதிவு செய்துள்ளார்.

Tuesday 9 April 2019

பாசடி மலர் வண்ண அந்திவானம்

சென்னை, ஒயிட்ஸ் சாலையில் என் பணி அலுவலக பின்புறம் டி.வி.எஸ்., அலுவலக வளாகம் உள்ளது. அங்கு, பல வகை மரங்கள் உள்ளன. அவை, எங்கள் வளாகத்துக்குள்ளும் தலை நீட்டும். சில வான் காட்சி தரும்.  இவற்றில் சில மரங்களைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இங்கு, வசந்தத்தை வனப்பாக்கும், பாசடி மரங்கள் இரண்டு உள்ளன.  ஆங்கிலத்தில், African Tulip tree, Fountain tree என்கின்றனர். மலையாளத்தில், ஆப்ரிக்க பூமராம்.
தாவரவியல் பெயர்: Spathodea Campanulata. ஆப்ரிக்காவை தாயகமாக கொண்டது. அங்கோலா, எத்தோப்பியா, கானா, கென்யா  நாடுகளில் அதிகம். வெப்ப மண்டல வறண்ட காடுகளில், 25 மீட்டர் வரை வளரும்.
கொத்து இலை தாவரம். கொத்தில், 15 மற்றும் 17 என, ஒற்றைப்படையில்  இலைகள் இருக்கும். சிவப்பில் சற்று மஞ்சள் துாக்கலான வண்ணத்தில் பூக்கள். அதிகாலை சூரியனை நினைவு படுத்தும்.
மஞ்சளில் சற்று சிவப்பு துாக்கலான வண்ண ரகமும் உண்டு. இது, அந்தி மாலையை நினைவூட்டும் வகையில் வெளிர் மஞ்சளாக பூக்கும். மொட்டுக்கள் கொத்தாக முயங்கும். தனியாக மலர்ந்து கவரும். நுதன வடிவில் சிறிய குப்பி போல், பூ இருக்கும். அழகிய வேல் வடிவத்தில் அதாவது வாழை மொட்டு போல் விதைப்பை இருக்கும்.
ஆப்ரிக்க சிறுவர்களுக்கு, சிறந்த விளயைாட்டு பொருள். அடர்த்தியான நிழல் தரும். மரப் பலகை மிருதுவாக உள்ளதால், பொந்துகள் அதிகம் விழும். பறவைகள் வசிக்க ஏதுவானது.
தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ளன. சென்னையில், உயர் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில், அதிகம் காணலாம்.  பூங்காக்களிலும் அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது. இப்போது பூத்து குலுங்குகிறது.
உதிர்ந்த மலர் ஒன்று, என் அலுவலக வளாகத்தில் கடந்தவாரம் கிடைத்தது. என், கணினி முன்  வைத்திருக்கிறேன். உலர்ந்த பின்னும் கவர்ச்சியை தருகிறது. மனதுக்கு நெருக்கமாக உள்ளது.
ஆசியா கண்டத்துக்கு வந்த வரலாறு தெரியவில்லை. மரத்தின் பயன்  விவரமும் கிடைக்கவில்லை.

Thursday 4 April 2019

பன்றியால் வாழும் சரக்கொன்றை

வசந்தத்தை வரவேற்பதில் கொன்றைக்கு முக்கிய பங்கு உண்டு. ஏப்ரல் துவங்கினால், மஞ்சள் கொத்துக்கள் மலர்ந்து மனதை அள்ளி வசந்தத்தை உணர்த்தும்.  மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்து, குலைக்குலையாய் மலர்கள் குலுங்கும். கொன்றைக்கு, இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களும் உண்டு.
என் வீட்டருகே ஆதம்பாக்கம், குன்றக்குடி நகர் பிரதான தெருவில் ஒரு கொன்றை மரம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நடைபயிற்சியின் போது கண்டேன். ஏப்ரல் மாதங்களில் தவறாமல் எட்டிப் பார்க்க வைக்கும்.
இப்போதும் மார்ச் இறுதியில் அந்த மரம் பற்றிய நினைவு வந்தது. நேற்று காலை யோகப்பயிற்சிக்கு சென்ற வழியில் கவனித்தேன். வெறும் கிளைகளாக உள்ளது. அடியில் சில சுள்ளி கொப்புகள் உயிர் இருப்பதை உணர்த்தின. சில நாட்களில் பூக்க வாய்ப்பு உள்ளது.
நிலமங்கை நகர், இளங்கோ தெரு முனையில் ஒரு சிறிய மரம் உள்ளது. அதில் இரண்டு குலை பூத்துள்ளது. நான் பயிற்சி செய்யும் ஆதம்பாக்கம் மனவளக்கலை மன்ற வளாகத்தில் சிறிய கொன்றை நிற்பதை கவனித்தேன். அது பூத்து குலுங்கி ஈர்த்தது. அந்த வளாக காவலாளியை அழைத்து காட்டினேன். வியந்து பார்த்து, ‘இங்கே தான் இருக்கேன். பார்க்க கிடைக்கலியே...’ என்று சிரித்தார்.
‘பொன் என கொன்றை மலர...’ என்கிறது நற்றிணை. பொன் ஆபரணங்களை கோர்த்தது போல் கொன்றை  மிளர்வதைக் கண்டால் பரவசம் தோன்றும்.
‘மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே...’ என்று சிவனை சுட்டுகிறது, ஏழாம் திருமுறை: 239 வது பாடல்.
சில ஆண்டுகளுக்கு முன், திருப்போரூர் – திருக்கழுக்குன்றம் சாலையில், சென்றுகொண்டிருந்தேன். இடையில் நீண்ட குறுங்காடு. குரங்குகள், புளிய மரத்தில் தாவியது கண்டு, காரை ஓரங்கட்டினேன். காட்டில் மஞ்சளாய் மிளிர்ந்தது. சரைக்கொன்றை சிரித்தது. நீண்ட நேரத்தை அங்கு கழித்தேன். அதன் பின் அந்த குறுங்காட்டை ரசிப்பது வழக்கமாகிவிட்டது.
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மூயச் சூரானைத்
தன்னேர் பிறனில் லானைத் தலையால் வணங்குவார்க்
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே...
என்கிறது, இரண்டாம் திருமுறை : 668 ம் பாடல்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்சைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிலிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே...
என்கிறது, ஏழாம் திருமுறை : 239 ம் பாடல்
முல்லையில் பேயனார் பாடலில் கொன்றை மலரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. காட்டில் மலர்கள் பூத்திருப்பதை கண்டு காதலியிடம் கூறுவதாக அமைந்த இப்பாடலில், கொன்றை மலர் பற்றிய குறிப்பு உள்ளது.
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றாற் புறவே -
பேரமர்க் கண்ணி ஆடுகம், விரந்தே...
என்கிறது, ஐங்குறுநூறு : 412 வது பாடல்.
காட்டில் நடந்து வரும் ஒருவன், காதலியின்  உடல் அழகுக்கு பல மலர்களை உவமையாக உணர்கிறான்.  உடல், கொன்றை மலர் போல், பொன்வண்ணத்திலும், கூந்தல், காயா மலர் போலவும், அணிந்துள்ள நகைகள் வெண்மலர் போலவும் மிளிர்வதாக எண்ணி இந்த பாடலை பாடுகிறான்.
பொன்னென மலர்ந்த கொன்றை; மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னல மெய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், நாமே-
வாணுதல்அரிவையோ டாய்நலம் படர்ந்தே...
ஐங்குறுநூறு : 420 வது பாடல்.
ஒருவன் காட்டு வழியில் பூத்திருக்கும் கொன்றை மற்றும் குருந்த மலர்களை ரசித்து செல்வதை உணர்த்தும் பாடல்.
நன்றே, காதாலர் சென்ற ஆறே
நன்பொன் அன்ன சுடரிணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே...
 –ஐங்குறுநூறு : 436 வது பாடல்.

கொன்றை மரத்தின் தாவரவியல் பெயர் Cassia Fistula. Fabaceae குடும்பத்தைச்  சேர்ந்தது. ஆங்கிலத்தில், Golden Shower, Indian-Laburnum, Pudding Pipe Tree எனவும் அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை தாயகமாக கொண்டது.
பத்து மீட்டர் வரை வளரும். தாய்லாந்து நாட்டின் தேசிய மரம், மலராக அங்கீகாரம் பெற்றுள்ளது. மஞ்சள் மற்றும் மஞ்சள் ஆரஞ்சு கலந்த வண்ணப் பூக்களை கொண்டது. கேரளாவில் மாநில மலராக அங்கீகரித்துள்ளனர். சித்திரை புத்தாண்டு அன்று, மலையாள மொழி பேசுவோர், கொன்றை மலரை கொண்டாடுவர்.
இதன் பழம்,  கறுப்பு வண்ணத்தில் ஊது குழல் போல், 60 செ.மீ., நீளம் வரை இருக்கும். பழத்தை குடைந்து எடுத்து, தோட்டை, தீ மூட்டும் குழலாகப் பயன்படுத்திய மரபும் தமிழகத்தில் இருந்தது. இதை, ‘கொன்றையம் தீம்குழல்’ என்பர்.
கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயிற்
கொன்றையம் தீம்குழல் கேளாமோ தோழீ
என்கிறது சிலப்பதிகாரம்.
துணர்க்காய்க் கொன்றை குழற்பழம் ஊழ்த்தன;
அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தன
மாணலம் இழந்தவென் கண்போன் றனவே
என்கிறது ஐங்குறுநூறு, 458 வது பாடல்.
பல மொழிகளிலும் சொல் விளங்கி இனிமை வளர்க்கிறது கொன்றை.
அரபு மொழியில் கியார் சாம்பார்.
 அசாமில் சொனாரு, வங்காளத்தில் சொனாலு, பண்டார் லத்தி, பர்மிய மொழியில்  ஙூ வு என்றும், சீனாவில் ஆ போ லே என்றும், குஜராத்தியில் கர்மாலோ, இந்தியில் பெந்த்ரா லத்தி, இந்தோனேசியத்தில் தெங்குலி, சாவகத்தில் திரெங்குலி,  கன்னடத்தில், கக்கே என்றும், மலையாளத்தில்  கனிக்கொன்னா என்றும்,  சிங்களத்தில் எகெல என்றும், தெலுங்கில் ரெயீலா என்றும், உருதுவில் அமல்தாஸ் என்றும் அன்புடன் பெயர் பெற்றுள்ளது.
கொன்றை மரத்தின் விதை, கரடி, முள்ளம் பன்றி, காட்டுப்பன்றி, நரி போன்ற விலங்குகளால் பறவுகிறது. இந்த மிருகங்கள் இல்லாவி்ட்டால், கொன்றைக்கு தொடர்ச்சி இல்லை. இதை, தவரவியல் அறிஞர் ராபர்ட் ஸ்காப் ட்ரூப் கண்டறிந்துள்ளார். இவர் எழுதிய, Silvi culture of Indian Trees என்ற நுாலில் இது பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இயற்கையின் உறவு  எளிமையானது என்பதை இந்த தகவல் உணர்த்தும். கொன்றை இலையை ஒரு வகை பழந்தின்னி வவ்வால்கள் தின்பதாகவும் தாவரவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

Wednesday 3 April 2019

மரம் அறிந்து அறம் காப்போம் - நாகலிங்கம்

சென்னை, ஒயிட்ஸ் சாலையில் ஒரு நாகலிங்கம் மரம் உள்ளது. நான் பணி செய்யும் அலுவலகம், இங்கு மாறியது முதல், கவனித்து வருகிறேன். கருநிழல் படர்ந்திருக்கும். அந்த வழியில் நடப்போரை ஓய்வெடுக்க துாண்டும். எப்போதும் பூங்காம்படித்து மொட்டுக்கள் மிளிர்ந்து கொண்டே இருக்கும். உதிர்வதும் துளிர்ப்பதும் இயல்பாய் இருக்கும். கொத்திலை தாவரம் என்பதால் நிழல் அடர்வு அதிகமாக இருக்கும். 
வேலை நெருக்கடி இல்லாத நாட்களில், மதியம், மரத்தை ரசிப்பது வழக்கம். 03–04–2019 அன்று காலை ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வழியில் கடந்த சிறுவன், சற்று துாரம் சென்ற பின், திரும்பி வந்தான். மரத்தை சுற்றி வந்து வியப்புடன் பார்த்தான். அவனை ஈர்த்துள்ளதை கவனித்தேன்.
இதன் பூ இளஞ்சிவப்பு வண்ணம். பார்வைக்கு இதமானது. இதழ்களுக்குள், ஒரு லிங்கம் பொதிந்திருப்பது போல் தோன்றும். அது நாகப்பாம்பு படம் எடுப்பது போன்ற காட்சியை உருவாக்கும். மணம் விரும்பி ரசிக்கத் தகுந்தது. இலைகள், தூசியை வடிகட்டி சுற்றுப்புறத்தை மிளிர்த்தும்.
ஆங்கிலத்தில், Cannon ball tree என்பர். தாவரவியல் பெயர், கவுரவ்பீட்டா கயனென்சிஸ் – Couroupita Guianensis Aublet. தாவரக் குடும்பம் : லெஸிதிடேசி – Lecythidaceae. லத்தீன் அமெரிக்கா, தென் கரீபியன் பகுதியை  தாயகமாக கொண்டது. 35 மீட்டர் வரை  வளரும்.
விரிந்த தழையுடன் அடர்ந்து நிற்கும். அடிமரத்தில் நீண்ட குச்சிகள் போல் பூங்காம்பு  வளரும். சரமாய் பூக்களைத் தாங்கும். .
அடிமரத்தண்டு மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூங்காம்பு உருவாகி சிரிக்கும். அது, ஒரு மீட்டர் வரை நீளும். அழகிய சிமிழ் போல் அதில் மொட்டுக்கள் முகிழ்க்கும்.
விரியும் பூவின் மகரந்தப் பகுதி, நாகப் பாம்பு படமெடுப்பது போன்றிருக்கும். விரிந்த பூவின் அண்டம், லிங்கம் போல் தோன்றும். இதை அடிப்படையாக கொண்டு, நாகலிங்கம் என, தமிழர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
பூக்கள், சூல் கொண்டு காய் உருவாகும். காய், கடின உருண்டை பந்து போல் தொங்கும். அவை, விழுந்தால், குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்கும்.
இலையை அரக்கி, தழையெருவாகப் பயன்படுத்தலாம்.  பழத்தை, லத்தீன் அமெரிக்கா்கள் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.
ஆப்ரிக்கர்கள், கனியை உண்ணும் வழிமுறையை அறிந்துள்ளதாக கூறப்படுகிறது. கனியிலிருந்து ஒருவகை பானமும் தயாரிக்கின்றனர். பூவில் வாசனை திரவியம் தயாரிக்கலாம்.
முதிர்ந்த  நாகலிங்கம் மரம் வேளாண் கருவி, பெட்டி, பொம்மை செய்ய பயன்படும்.
மித வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரும். வறட்சியை தாங்கும். பனிக்கு தேங்கும்.
காலனியாதிக்கத்தின் போது, ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு கொண்டு வந்து நட்டனர். சிங்கள மொழியில், ‘சல்’ என்று அழைக்கின்றனர்.
தமிழகத்தில், நீலகிரி மாவட்டம், பார்லியாறு பகுதியில் தான் முதலில் நடப்பட்டது. இங்கு பல்கி பெருகியுள்ளது. பூவின் அழகை விரும்பியவர்களால், தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
இலையில் டைைஹட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இண்டிகோ இன்ட்ரூபின், ஐசாடின் போன்ற வேதி சேர்மங்கள் உள்ளன.
இந்த மரம் பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியுள்ளேன். ஒருமுறை மரத்தை வெட்டி சேதப்படுத்த சிலர் முயன்றனர். அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் சிறிய கம்பி வேலி போட பரிந்துரைத்தேன். உடனே செய்தார். அந்த கம்பிவேலிக்குள், நாகலிங்கம் பாதுகாப்பாக நிற்கிறது.
உணர்ந்தால் உயரலாம்
வழக்கம் போல், தமிழர் அறிவின் மீது சாணி அடிக்கும் கூட்டம் ஒன்று பூவின் வடிவத்தைக் காட்டி, மூடநம்பிக்கையை பரப்பி வருகிறது. பக்தியின் பெயரால் பிழைப்பு நடத்தும் கூட்டம் அது.  பூவை வைத்து பூஜை செய்தல், வழிபடுதல்,  பூவை வணங்குதல் போன்ற எந்த செயல்களாலும் பலன் இல்லை. 
பூமியில் மலரும் ஒவ்வொரு மலருக்கும் தனிச்சிறப்பு உண்டு. அவை ரசிக்கத் தக்கவை. மனித மன இயல்பை பூக்கள் மிளிர்த்தும். மிளிர்ச்சியையும், மலர்ச்சியையும் கற்பிக்க இயற்கை அமைத்த ஏற்பாடு தான் பூக்கள்.
இவற்றில் சிலவற்றை அறிந்த அறிஞர்கள் விவரங்களை பயன்களையும் பதிவு செய்துள்ளனர். பல பூக்கள் பற்றிய தகவல் தொகுக்கப்படவில்லை. அவற்றின் பலன்களை நுகரமுடியவில்லை. 
லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்த இந்த மரமும் உயர்ந்த விழுமியங்கள் கொண்டது. பயன் மிக்கது. மன மலர்ச்சியை உருவாக்க வல்லது. அந்த மரத்தின் நுட்ப செயல்பாட்டை அறிய முயல்வோம். 
மரத்தை அறிவோம்; அறத்துடன் வாழ்வோம்.

Tuesday 2 April 2019

கரீபியன் கடலில் ஒரு ராட்சத முதலை – கியூபா

கழுகுப் பார்வையுடன் கரீபியன் கடலில் பறந்தால், பெரிய முதலை மிதப்பது போன்ற நிலப்பரப்பை பார்க்கலாம். அதுதான் கியூபா நாடு.
வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் கியூபா உள்ளது. வட அமெரிக்க கண்டப்பரப்பில் அமைந்துள்ளது. நில அமைப்பில், அமெரிக்காவுக்கு மிக அருகிலும், கொள்கையில் மிக துாரத்திலும் உள்ள நாடு. அமெரிக்கா, மியாமி கடற்கரையில் இருந்து, 130 கி.மீ., துாரத்தில் உள்ளது.
உலகின், ஏழாவது பெரிய தீவு இது. 1,14,524 சதுர கி.மீ., பரப்பளவுள்ளது. 2017 ல் மக்கள் தொகை 1.15 கோடி. அரசு மொழியாக ஸ்பானிஷ் உள்ளது. இதன்  தலைநகரம் ஹவானா.
கடல் பயணத்தின் போது, கொலம்பஸ், 1492 ல், கியூபாவைக் கண்டறிந்தார். ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், ஸ்பெயின் மற்றம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்தது.
ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து, 1898 ல் விடுபட்டது. 1920 ல் சுதந்திரக் குடியரசு நாடானது. ஆனாலும், அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை கியூபா மீது விதித்திருந்தது.  1952 ல், பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா என்பவர் ராணுவ புரட்சி நடத்தி கியூபா ஆட்சியைக் கைப்பற்றினார். லஞ்சம், ஊழல், சீர்கேடுகள் நிறைந்த ஆட்சியாக அது இருந்தது.
இந்த நிலையில், பாட்டிஸ்டா ஆட்சிக்கு எதிராக, பெரும் புரட்சி வெடித்தது. புரட்சிக்கு  தலைமை வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இளைஞர்களை திரட்டி போராடினார். அவரை சிறை பிடித்த அரசு, நீதிமன்றத்தில் நிறுத்தியது.
அங்கு வரலாற்று புகழ் மிக்க, வாக்குமூலத்தை, பிடல்காஸ்ட்ரோ பதிவு செய்தார். அதில்,  ‘கியூபா மக்கள் விடுதலை அடைய விரும்பும் போது, விமானங்களை கல்லெறிந்து வீழ்த்துவர்; டாங்கிகளை வெறும் கைகளால் புரட்டிப்போடுவர்’  என்று குறிப்பிட்டார்.
 புரட்சி, 1959 ல் வென்றது; ஆட்சி, பிடல்காஸ்ட்ரோவின் கைக்கு மாறியது. பொதுவுடமை சித்தாந்த அடிப்படையில் ஆட்சி நடந்த ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டார். அமெரி்க்காவுடன் உறவில் விலகி நின்றார்.
கியூபாவில் இருந்த அமெரிக்க சொத்துக்களை, 1960ல் அரசு உடமை ஆக்கினார். இதையடுத்து, கியூபா மீது, அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்தது.
அமெரிக்க படை, 1961 ல் கியூபா நாட்டில் நுழைந்தது. இதற்கு, ‘டேஸ் ஆப் பிக்ஸ்’ என, அமெரிக்கா பெயர் வைத்து தாக்கியது. மிகவும் நுட்பமாக சண்டையிட்ட கியூபா, 1100 அமெரிக்கர்களை, பிணை கைதிகளாக பிடித்தது.
இது  கடும் நெருக்கடியை ஏற்படுத்தியதால், அமெரிக்கா போரை நிறுத்தியது. பிணைய கைதிகளை விடுவிக்க, 53 மில்லியன் டாலர். தற்போதைய இந்திய மதிப்பில், 3396.77 கோடி ரூபாய்  மதிப்பிலான உணவுப் பொருட்களையும், மருந்தையும் அமெரிக்கா கொடுத்தது.
 அதன்பின்னும், அமெரிக்கா– கியூபா இடையே பனிப்போர் நிலவியது. இது, 55 ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த போது, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். கியூபா நாட்டுக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற புகழையும் பெற்றார்.
தொடர்ந்து, 47 ஆண்டுகள், கியூபா பிரதமர் மற்றும் அதிபராக, பிடல் கேஸ்ட்ரோ பொறுப்பு வகித்தார். குடல் நோய் பாதிப்பு காரணமாக, கடந்த, 2008 ல், பதவி விலகினார். அப்போது ராணுவ அமைச்சராக இருந்த அவரது  தம்பி, ரவுல் காஸ்ட்ரோ தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றார்.
கடந்த, 2013 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, ரவுல் காஸ்ட்ரோவே  அதிபர் பொறுப்புக்கு வந்தார். 2018 வரை அந்த பதவியை வகித்தார். 87 வயதில் பதவி விலகிவிடுவதாக அளித்த வாக்குறுதிபடி நடந்து கொண்டார். 2018 ல் நடந்த தேர்தலில் வென்று மிகேயில் டயஸ் கானல் Miguel Diaz Canel என்பவர் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
கியூபாவில் கற்றது...
உலக மக்களுக்கு உயர்ந்த அறங்களையும், பாடங்களையும் கற்றுத்தரும் நாடு.
இங்கு, 77 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிக்கின்றனர். ஆண்களின் சராசரி ஆயுள், 76 வயது, பெண்களுக்கு, 81 வயது. இந்த நாட்டில் மதம் என்ற பெயரில் ஏதும் இல்லை.  ஆகஸ்டில் இங்கு குளிர் அதிகம். ஜனவரியில் கோடை.
இந்த நாடு முழுவதும், 250 அருங்காட்சியகங்கள் உள்ளன. நாட்டின் பெருமையை, குடிமக்களுக்கு உணர்த்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு ஆறு முதல் 15 வயது வரையுள்ளவர்களுக்கு கட்டாய பள்ளிக் கல்வி உண்டு. பள்ளி முதல் கல்லுாரி வரை அனைத்து படிப்புகளுக்கும் கட்டணம் இல்லை. எல்லா படிப்புகளும் இலவசம். படிக்காதவர்களே இல்லை .
பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவ, மாணவியருக்கு பிரத்யேக வண்ண சீருடைகள் வழங்கப்படும். சீருடை அணிவது கட்டாயம்.
இந்த நாட்டில் சுற்றுலா முக்கியத் தொழில்.
உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், கணக்கிட்டால்,  மிக  அதிகமான  மருத்துவர்கள் கியூபாவில் தான் உள்ளனர்.  உலகில் எந்த நாட்டில் நோய் பாதிப்பு ஏற்பட்டாலும்,  உதவிக்கு  கியூபா, தன் நாட்டு மருத்துவர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்.
கியூபாவில் நடனம் மக்கள் வாழ்க்கையுடன் இணைந்தது. நடனம் ஆட தெரியாதவர்களே இல்லை என சொல்லலாம்.  பொலிரோ, மாம்போ மற்றும் சாசா என்ற நடன வகைகள் இங்கு பிரபலம். கிராமியக் நடனக் கலைஞர்களுக்கு, அரசு விழாக்களில்  முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இங்கு, இன்றும் கார்கள் அரசுடமையாகவே உள்ளன.

Monday 1 April 2019

தாய்ச்சியாக நின்ற புத்தன் குளம் அரைய மூடு

என் அலுவலக பயண நேரத்தை இதப்படுத்துபவை சாலையோர மரங்கள். பயண வழியில் பார்வையில் விழும், 30 க்கும் மேற்பட்ட அரச மரங்களை கடந்து செல்வேன். இவற்றில் வெள்ளைப் பட்டை அணிந்தவை தான் அதிகம். வெளிர் பழுப்பு பட்டையுள்ளவையும் உண்டு.
அரச மரத்துடன் எனக்கு நீண்ட அனுபவம் உண்டு. என் கிராமத்தில் இந்த மரம் இல்லை. பக்கத்து ஊர் உசரவிளை விலக்கில், ஆனையாலும் அசைக்க முடியாத அரசு ஒன்று உள்ளது. பேருந்துக்கு காத்திருப்போரை காக்கும். எதிரில் புத்தனாற்றில் இருந்து குளத்துக்கு நீர் பாயும் கிளைக் கால்வாயில், ‘தத்து போட்டு’ மீன்பிடிப்போர் வரை நிழல் படரும். அதன் நிழல்பரப்பு அலாதியானது.
உசரவிளை புத்தனாறு குளக்கரை அரசமரம் பரந்து விரிந்தது. அதன் நிழல் பரப்பில் இருக்கும், படித்துறையில் இருந்து, அக்கரை வரை நீந்துவோம்.
அந்த மரம் எனக்கு, ‘தாய்ச்சி’( அடையாளப்புள்ளி) யாகவும் இருந்துள்ளது. புத்தனாறு குளப்புரவு பள்ளமடை பாய்ச்சலில் எங்கள் குடும்பத்துக்கு ஒரு வயல் இருந்தது. அதை, ‘அகப்பத்து’ என்போம். மூன்று போகம் விளைச்சல் தர தகுதியானது.
என் அனுபவத்தில், அதை பொடி உழவு செய்ததில்லை. எப்போதும், தொழியடிப்பு தான்.  சிறுவயதில் அந்த வயலை  சரியாக அடையாளம் காணத் தெரியாது. திணறிப்போவேன்.
அரயமூடு வரை, ‘சக்கடா வண்டி’யில் கொண்டு வந்து குவிக்கும் தொழு உரத்தை, தலை சுமட்டில் தான் வயலுக்கு கொண்டு போக வேண்டும். சகடை, சகடு, சாகாடு, சக்கர வண்டி எல்லாம் சக்கடா வண்டியின் முழுமைகள். சகடையை, குருஞ்சாட்டுருளை என்கிறது பெரும்பாணாற்றுப்படை.
புத்தன் குளக்கரை, அரயமூட்டில் நின்று பார்த்தால், எல்லா வயலும் ஒன்று போல் தெரியும். எங்கள் வயலை அடையாளம் காண திணறுவேன்.
ஒருநாள் அப்பாவிடம் இதுபற்றி சொன்னேன். அவர் ஒரு எளிய திறனுடன், வயலை அடையாளம் காணும் வழி குறித்து விளக்கினார். அப்போது, தாய்ச்சியாக இந்த அரையம் மூட்டை அடையாளம் காட்டினார்.
‘அரைய மூட்டில் மேற்கு பார்க்க இறங்கி, இடதுபுறமாக வரப்பில் நடந்து, ஓடையின் முதலில் திரும்பும் வரப்பில் நடந்தால், நான்காவது வயல் நமக்கு’ என்று, எளிமையாக சொன்னார். அதை மனதில் பதித்து, அடையாளம் கண்டு கொள்வேன்.
எங்கள் பகுதியில் அப்போது, ‘அரசமரம்’ என்று அட்சரம் பிசகாமல் யாரும் சொன்னதாக நினைவு இல்லை. அரயம் மூடு, அரயம் எல, அரயம் சுள்ளி, அரயம் கொப்பு, அரயம்பழம் என்றுதான் குறிப்பிடுவர்.
வாசிப்பை துவங்கிய பின்தான், ‘அரையம்’ என்பது சரியான சொல் தான் என தெரிந்து கொண்டேன். ஆனால், அதை பயன்படுத்த பரப்பு இல்லை. பண்படுத்திய, ‘அரசமரம்’ என்ற சொல்லே வழக்கத்தில் உள்ளது.
சங்க காலத்தில், ‘அரையம்’ பற்றி அதாவது அரசமரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
‘வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇப்
போகில் புகா வுண்ணாது பிரிதுபுலம் படரும்‘ என்கிறது ஐங்குறுநுாறு – 325 வது பாடல்.
இந்த பாடலில் உள்ள அரையம் என்பது அரசமரத்தை குறிப்பிடுவதாக, உரை எழுதிய உ.வே.சாமிநாதய்யர் தெரிவித்துள்ளார்.
இந்த பாடல் தரும் அனுபவம் எனக்கு உண்டு.
மாசி மாதம், எங்கள் அகப்பத்து வயல் அறுவடைக்கு வரும். அறுவடை முடிந்த கையோடு, தொழுவில் கிடக்கும் உரத்தை அந்த வயலுக்குள் தள்ள வேண்டும்.
உரம் நிரப்பிய சக்கடா வண்டிகள், புத்தனாறு குளக்கரையில் உள்ள அரையமூடு வரை வரும். அங்கு குவிக்கும் உரத்தை, கூலியாட்கள் உதவியுடன் வயலுக்கு சுமக்க வேண்டும். அப்போது, அந்த மரத்தடியில் பல மணி நேரம் காத்திருப்பேன். காத்திருப்பின் போது அரயை மூட்டில் கண்டவற்றை காட்சியாக்கியுள்ளேன்.
அரையன் மர பச்சை இலைகள், மார்ச்சில் மஞ்சள் பூசி வெளிறி உதிர துவங்கும். வீசும் காற்றில் முற்றிய இலைகள் மோதி உரசி, சலசலத்து இசையை வீசும். கடிவண்ணம் பூசிய இலைகள், காற்றின் போக்கில் புரண்டு நெளிந்து சூரிய கதிரை வாங்கும். இந்த ஒலியையும், ஒளிக்கு பழகாத நாகணஞ்சான் போன்ற பறவைகள் அரையம் பழங்களை தின்னாமல் ஒதுங்கும். 
உதிர்ந்து பாயும் சருகுகள் காற்றின் போக்கில் சுழன்று பள்ளங்களில், இடுக்குகளில் பதுங்கும். அவற்றுக்கள் அரணைகள், சாராய், புல்லுருவி, குசுவண்டு, தேள், நட்டுவக்காலி என சிறு உயிரினங்கள்  பதுங்கி உரசலை அனுபவிக்கும். மண்ணில் புதையும் சருகை கறம்பும் கறையான்கள் கழிநடனம் புரியும்.
இது, அரசு துளிர்க்கும் காலம். மார்ச் முதல் வாரத்திலேயே சில மரங்கள் துளிர்க்கத் துவங்கிவிட்டன. இலைகள் உதிர்ந்து துளிர்க்கும் காலத்தில், உதயத்தின் அத்தனை நிறங்களையும் அரசிலையில் காணலாம். அத்தனையும் குதுாகலமான வண்ணங்கள். அதன்பின் மலரும் பச்சைகள், தினமும் ஒரு குதுாகலத்தை ஊட்டும்.
வசந்தத்தின் வாசலை திறக்கும் அரைய மரங்களை, கண்களையும், இதயத்தையும் திறந்து அனுபவியுங்கள்.
இங்கு பதிவிட்டுள்ள ஒரு அரையம் துளிர், இலங்கை அனுராதபுரத்தில் இருந்து கொண்டு வந்து நட்ட மரத்தில் எடுத்தது. புத்தரின் மகள் சங்கமித்திரை நட்ட மரத்தின் குடும்பத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சென்னையை அடுத்த குன்றத்துார், இரண்டாம்கட்டளை, புத்தவேடு கிராமத்தில்  உள்ள புத்தவிகாரில் இப்போது உள்ளது.
என் அன்புக்குரிய நண்பர் போதி தேவவரம் அவர்கள், இந்த மரத்தை பராமரிப்பதுடன், அந்த பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியின சிறுவர், சிறுமியரின் கல்வி வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறார்.
அரச மரம் பற்றி...
ஆசியாவை தாயகமாக கொண்டது. தாவரவியல் குடும்பம் மேரேசியே (Moraceae). தாவரவியல் பெயர் பைக்கஸ் ரிலிஜியோகா (Ficus Religiosa Linn). ஆங்கிலத்தில் பெப்பல்  (Peepul tree).  30 மீட்டர் வரை வளரும். புத்தர் ஞானம் பெற உதவிய போதிமரம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இலையில், புரதம், சுண்ணாம்பு சத்து அதிகம். எளிதில் செரிமானம் ஆகாது என்பதால், தாவர உண்ணிகள் விரும்பி உண்பதில்லை. மலராபூ மரம். பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும். இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா, அரச இலை போல் வடிவமைக்கப்படுகிறது. ஞானத்தின் புகலிடமாக புத்த மார்க்கத்தில் போற்றப்படுகிறது.
அரையம் இருக்கும் குருவின் பிச்சை.