Monday 1 April 2019

தாய்ச்சியாக நின்ற புத்தன் குளம் அரைய மூடு

என் அலுவலக பயண நேரத்தை இதப்படுத்துபவை சாலையோர மரங்கள். பயண வழியில் பார்வையில் விழும், 30 க்கும் மேற்பட்ட அரச மரங்களை கடந்து செல்வேன். இவற்றில் வெள்ளைப் பட்டை அணிந்தவை தான் அதிகம். வெளிர் பழுப்பு பட்டையுள்ளவையும் உண்டு.
அரச மரத்துடன் எனக்கு நீண்ட அனுபவம் உண்டு. என் கிராமத்தில் இந்த மரம் இல்லை. பக்கத்து ஊர் உசரவிளை விலக்கில், ஆனையாலும் அசைக்க முடியாத அரசு ஒன்று உள்ளது. பேருந்துக்கு காத்திருப்போரை காக்கும். எதிரில் புத்தனாற்றில் இருந்து குளத்துக்கு நீர் பாயும் கிளைக் கால்வாயில், ‘தத்து போட்டு’ மீன்பிடிப்போர் வரை நிழல் படரும். அதன் நிழல்பரப்பு அலாதியானது.
உசரவிளை புத்தனாறு குளக்கரை அரசமரம் பரந்து விரிந்தது. அதன் நிழல் பரப்பில் இருக்கும், படித்துறையில் இருந்து, அக்கரை வரை நீந்துவோம்.
அந்த மரம் எனக்கு, ‘தாய்ச்சி’( அடையாளப்புள்ளி) யாகவும் இருந்துள்ளது. புத்தனாறு குளப்புரவு பள்ளமடை பாய்ச்சலில் எங்கள் குடும்பத்துக்கு ஒரு வயல் இருந்தது. அதை, ‘அகப்பத்து’ என்போம். மூன்று போகம் விளைச்சல் தர தகுதியானது.
என் அனுபவத்தில், அதை பொடி உழவு செய்ததில்லை. எப்போதும், தொழியடிப்பு தான்.  சிறுவயதில் அந்த வயலை  சரியாக அடையாளம் காணத் தெரியாது. திணறிப்போவேன்.
அரயமூடு வரை, ‘சக்கடா வண்டி’யில் கொண்டு வந்து குவிக்கும் தொழு உரத்தை, தலை சுமட்டில் தான் வயலுக்கு கொண்டு போக வேண்டும். சகடை, சகடு, சாகாடு, சக்கர வண்டி எல்லாம் சக்கடா வண்டியின் முழுமைகள். சகடையை, குருஞ்சாட்டுருளை என்கிறது பெரும்பாணாற்றுப்படை.
புத்தன் குளக்கரை, அரயமூட்டில் நின்று பார்த்தால், எல்லா வயலும் ஒன்று போல் தெரியும். எங்கள் வயலை அடையாளம் காண திணறுவேன்.
ஒருநாள் அப்பாவிடம் இதுபற்றி சொன்னேன். அவர் ஒரு எளிய திறனுடன், வயலை அடையாளம் காணும் வழி குறித்து விளக்கினார். அப்போது, தாய்ச்சியாக இந்த அரையம் மூட்டை அடையாளம் காட்டினார்.
‘அரைய மூட்டில் மேற்கு பார்க்க இறங்கி, இடதுபுறமாக வரப்பில் நடந்து, ஓடையின் முதலில் திரும்பும் வரப்பில் நடந்தால், நான்காவது வயல் நமக்கு’ என்று, எளிமையாக சொன்னார். அதை மனதில் பதித்து, அடையாளம் கண்டு கொள்வேன்.
எங்கள் பகுதியில் அப்போது, ‘அரசமரம்’ என்று அட்சரம் பிசகாமல் யாரும் சொன்னதாக நினைவு இல்லை. அரயம் மூடு, அரயம் எல, அரயம் சுள்ளி, அரயம் கொப்பு, அரயம்பழம் என்றுதான் குறிப்பிடுவர்.
வாசிப்பை துவங்கிய பின்தான், ‘அரையம்’ என்பது சரியான சொல் தான் என தெரிந்து கொண்டேன். ஆனால், அதை பயன்படுத்த பரப்பு இல்லை. பண்படுத்திய, ‘அரசமரம்’ என்ற சொல்லே வழக்கத்தில் உள்ளது.
சங்க காலத்தில், ‘அரையம்’ பற்றி அதாவது அரசமரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
‘வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇப்
போகில் புகா வுண்ணாது பிரிதுபுலம் படரும்‘ என்கிறது ஐங்குறுநுாறு – 325 வது பாடல்.
இந்த பாடலில் உள்ள அரையம் என்பது அரசமரத்தை குறிப்பிடுவதாக, உரை எழுதிய உ.வே.சாமிநாதய்யர் தெரிவித்துள்ளார்.
இந்த பாடல் தரும் அனுபவம் எனக்கு உண்டு.
மாசி மாதம், எங்கள் அகப்பத்து வயல் அறுவடைக்கு வரும். அறுவடை முடிந்த கையோடு, தொழுவில் கிடக்கும் உரத்தை அந்த வயலுக்குள் தள்ள வேண்டும்.
உரம் நிரப்பிய சக்கடா வண்டிகள், புத்தனாறு குளக்கரையில் உள்ள அரையமூடு வரை வரும். அங்கு குவிக்கும் உரத்தை, கூலியாட்கள் உதவியுடன் வயலுக்கு சுமக்க வேண்டும். அப்போது, அந்த மரத்தடியில் பல மணி நேரம் காத்திருப்பேன். காத்திருப்பின் போது அரயை மூட்டில் கண்டவற்றை காட்சியாக்கியுள்ளேன்.
அரையன் மர பச்சை இலைகள், மார்ச்சில் மஞ்சள் பூசி வெளிறி உதிர துவங்கும். வீசும் காற்றில் முற்றிய இலைகள் மோதி உரசி, சலசலத்து இசையை வீசும். கடிவண்ணம் பூசிய இலைகள், காற்றின் போக்கில் புரண்டு நெளிந்து சூரிய கதிரை வாங்கும். இந்த ஒலியையும், ஒளிக்கு பழகாத நாகணஞ்சான் போன்ற பறவைகள் அரையம் பழங்களை தின்னாமல் ஒதுங்கும். 
உதிர்ந்து பாயும் சருகுகள் காற்றின் போக்கில் சுழன்று பள்ளங்களில், இடுக்குகளில் பதுங்கும். அவற்றுக்கள் அரணைகள், சாராய், புல்லுருவி, குசுவண்டு, தேள், நட்டுவக்காலி என சிறு உயிரினங்கள்  பதுங்கி உரசலை அனுபவிக்கும். மண்ணில் புதையும் சருகை கறம்பும் கறையான்கள் கழிநடனம் புரியும்.
இது, அரசு துளிர்க்கும் காலம். மார்ச் முதல் வாரத்திலேயே சில மரங்கள் துளிர்க்கத் துவங்கிவிட்டன. இலைகள் உதிர்ந்து துளிர்க்கும் காலத்தில், உதயத்தின் அத்தனை நிறங்களையும் அரசிலையில் காணலாம். அத்தனையும் குதுாகலமான வண்ணங்கள். அதன்பின் மலரும் பச்சைகள், தினமும் ஒரு குதுாகலத்தை ஊட்டும்.
வசந்தத்தின் வாசலை திறக்கும் அரைய மரங்களை, கண்களையும், இதயத்தையும் திறந்து அனுபவியுங்கள்.
இங்கு பதிவிட்டுள்ள ஒரு அரையம் துளிர், இலங்கை அனுராதபுரத்தில் இருந்து கொண்டு வந்து நட்ட மரத்தில் எடுத்தது. புத்தரின் மகள் சங்கமித்திரை நட்ட மரத்தின் குடும்பத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சென்னையை அடுத்த குன்றத்துார், இரண்டாம்கட்டளை, புத்தவேடு கிராமத்தில்  உள்ள புத்தவிகாரில் இப்போது உள்ளது.
என் அன்புக்குரிய நண்பர் போதி தேவவரம் அவர்கள், இந்த மரத்தை பராமரிப்பதுடன், அந்த பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியின சிறுவர், சிறுமியரின் கல்வி வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறார்.
அரச மரம் பற்றி...
ஆசியாவை தாயகமாக கொண்டது. தாவரவியல் குடும்பம் மேரேசியே (Moraceae). தாவரவியல் பெயர் பைக்கஸ் ரிலிஜியோகா (Ficus Religiosa Linn). ஆங்கிலத்தில் பெப்பல்  (Peepul tree).  30 மீட்டர் வரை வளரும். புத்தர் ஞானம் பெற உதவிய போதிமரம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இலையில், புரதம், சுண்ணாம்பு சத்து அதிகம். எளிதில் செரிமானம் ஆகாது என்பதால், தாவர உண்ணிகள் விரும்பி உண்பதில்லை. மலராபூ மரம். பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும். இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா, அரச இலை போல் வடிவமைக்கப்படுகிறது. ஞானத்தின் புகலிடமாக புத்த மார்க்கத்தில் போற்றப்படுகிறது.
அரையம் இருக்கும் குருவின் பிச்சை.



No comments:

Post a Comment