Tuesday 12 November 2019

வாசித்தல்

என் இதழ் பணி அனுபவத்தில் மேம்பட்டப் பார்வை, வளர்ச்சி சார்ந்தது. சில நேரம் இதில் கிளர்ச்சி தரும் அனுபவங்கள் வாய்க்கும். அப்படி ஒன்றை, இன்றைய பணியில் கண்டேன்.
உலகில் மிகப்பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும், ஏழு பள்ளிகள் பற்றிய சிறு கட்டுரையை, சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அறிமுக தகவல் மட்டுமே அதில் இருந்தது. ஆழமாக ஏதும் இல்லை. அந்த கட்டுரையை படித்த, 9ம் வகுப்பு சிறுமி ஒருவர், கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக சேர்வது எப்படி... அதற்கு என்ன செய்ய வேண்டும்...’ என்ற கேள்வியை கேட்டுள்ளார். ஏற்றத் தாழ்வுகளுடன் பள்ளிகள் இயங்குவதை, ஒரு போதும் ஆதரிக்கவில்லை. என்றாலும், அந்த சிறுமியின் இலக்கு தேடும் முயற்சி வெகுவாக கவர்ந்தது.  அந்த இலக்கை அடையை பாதை தேடும், அந்த சிறுமியின் தேடல் மனம் நெகிழ வைத்தது. காலம் அவரது இலக்கை அடைய உரிய பாதை அமைக்கும். அவரது இலக்கு நிறைவேற மனம் நெகிழ்ந்து வேண்டுதல் செய்தேன்.
தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், சர்வதேச ரீதியில் உயர் பதவிகளில் அமரத் துடித்து திட்டம் வகுப்பதை மிகவும் நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நம் கல்வித்திட்டங்கள், அவற்றை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை. அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகளை, நிபுணர்கள் உருவாக்கி உதவ வேண்டும். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அதற்கான வழிகாட்டுதலை வழங்கி உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
இந்த சூழலில், கற்றலில் போதிய வழிகாட்டல் இன்றி தடுமாறும், தமிழ் சிறுவ, சிறுமியருக்காக, சிறிய அளவில் வழிகாட்டு நெறிகளை, தொகுத்துள்ளேன். இவை, என் மகளுக்கு அவ்வப்போது உணர்த்திய அறிவுரைகள். இதை தொகுத்து, சற்று மேம்படுத்தி லட்சக்கணக்கான தமிழ் மகள்களுக்காக, பொது வெளியில் சமர்ப்பிக்கிறேன்.

பாடப்புத்தகத்தை எப்படி படிப்பது?
ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன், எந்த முறையில் அணுகி படிப்பது என்பதை மனதில் தெளிவாக்கி கொள்ள வேண்டும்
பாடப்புத்தகத்தை எடுத்தவுடன், முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய துவங்கக் கூடாது.
கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றினால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் பாடங்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
படிக்க துவங்கும் முன்...
நன்றாக உடற்பயி்சி செய்து உடலை தளர்த்திக் கொள்ள வேண்டும். எளிய யோக பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போது, உடல் முழுவதும் ரத்தம் சீராக பாயும். ரத்த ஓட்டம் சீரானால், உடலில் எல்லா உறுப்புகளும் செயல்பட ஆரம்பிக்கும். இந்த சீரான செயல்பாடு புலனுணர்வுகளை மேம்படுத்தி துாண்டும். அறியும் ஆர்வத்தை ஊட்டும்.
கற்றல் என்பது புலனுணர்வுகள் சார்ந்த செயல்பாடு. புலன்களின் திறன் மேம்பட்டால் தெளிவாக புரிந்து கொள்ளும் வழிவகை ஏற்படும். அதாவது புதிய பகுதியை காணப்போகும் ஆவல் ஏற்படும். இந்த உற்சாகம் தான், கற்றலை சீரமைக்கும்.
உடலைத்  தளர்த்தினால், மனம் குதுாகலப்படும். அதை மனதில் கொண்டு படிக்க அமர வேண்டும். மலரும் மலரைப் போலவும், உதிக்கும் சூரியனைப் போலவும், சீறும் அலையைப் போலவும், புத்தக கருத்துக்களை மனதில் பதிய வைக்க வேண்டும்.

முதல்படி:
பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும்.
இரண்டாம் படி:
தலைப்புகளையும், துணைத் தலைப்புகளையும் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
 இப்பாடம் எதைப்பற்றியது என்பது அப்போது விளங்கும்.
மூன்றாம் படி:
பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதில் சில வார்த்தைகளைப் படிக்கும் போது கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு: உயிரியலில், ‘சைட்டோபிளாஸம்’ என்ற சொல்லை வாசிக்கும்போது அது என்ன  என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்)

வினா எழுப்புதல்
பாடச் சுருக்கத்தை வாசித்த பின், தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி, நமக்கு நாமே கேட்டு விடை தேட முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால், அந்த கேள்விகளுக்கு விடை காணும் ஆர்வம் அதிகரிக்கும். நேரம் பயன்பாட்டு வடிவத்தை பெறும்.
எதற்காக, இந்த பாடத்தை படிக்கிறேன்... இதை படிப்பதால் எனக்கு என்ன பயன்  கிடைக்கும் என்பதை, எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த பாடத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். தேடல் மனம் இயல்பூக்கம் பெறும்.

இதை ஒரு ஒப்பீடு வழியாக உணரலாம்.
உதாரணமாக, தொலைக்காட்சியில் ஒன்றை பார்க்கிறீர்கள். எதற்காக அதை பார்க்கிறீர்கள். உண்மையில் அது உங்களை ஈர்க்கிறதா... ஈர்த்தால் ஏன் ஈர்க்கிறது என்று கேள்வி எழுப்ப வேண்டும். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து முடித்த பின் நமக்கு ஏற்படும் உணர்வு  பற்றி சிந்திக்க வேண்டும். அந்த உணர்வு, ஏதாவது பலனைத் தருகிறதா என்று அவதானிக்க வேண்டும்.

வாசித்தல்

அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.
படித்தவற்றை, நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடக் கூடாது. மிகவும் முக்கிய சொற்களை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால், திருப்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல், பாடத்தை எளிதாக நினைவில் கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்
வாசித்து முடித்தபின், முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.
இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும்.
படித்தவற்றை, சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.
இந்த முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை படித்து முடித்த பின்,  அடுத்த பாட பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்
இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும்.
ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்பாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக,  பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை
1. பதற்றம், அச்சம் நீக்க வேண்டும்.

2. சிலவற்றை நம்மால் நினைவு படுத்த முடியாது. அது, நினைவில் பதிய வராது என்ற எண்ணம்  கூடாது. முயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சம் தவிர்த்து, இயல்பாக படிக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழுமையாக கவனத்தையும் சக்தியையும் செலுத்தினால் கண்டிப்பாக நினைவில் பதியும். தேர்வு எழுதும் போது உதவும்.

3. தேர்வு எழுதும் பொழுது பதற்றப்படக்கூடாது. நிதானமாகச் சிந்திக்க வேண்டும். கருத்துகளை தொடர்படுத்தி படிப்பதும், ஒருமுகப்படுத்தி சிந்தித்துப் பார்ப்பதும் நினைவு திறனை  பெருக்க உதவும்.

4. ஒரு வினாவிற்கான விடை, நினைவிற்கு வராமல் போனால், அதையே எண்ணி போராடக்கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு, மிகவும் தெரிந்த விடைகளை எழுத வேண்டும். நினைவுக்கு வராமல் இருந்தவை பின்பு, தானாக வரும். அப்பொழுது, பதட்டம் இன்றி எழுதிக் கொள்ளலாம்.

***
நினைவு திறன் மேம்படுத்த சில வழிகள்:

* நன்றாக கற்கிறேன் என்ற உறுதியையும், நம்பிக்கையையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
*பின் தங்கல்களை, சறுக்கல் என எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னடைவு என கொள்ளக்கூடாது. ஆர்வம், கவனத்தை ஒருமுகப்படுத்தி சரி செய்ய வேண்டும்.
* ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி ஒப்புமையாக கற்க பழக வேண்டும்.
* சந்த பாடல் போல் தொகுத்து (Grouping and Rhythm) மனம் நிரம்பி படிக்க வேண்டும். புலனுணர்வுகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
* உரிய இடைவெளிகள் விட்டு, போதிய அளவு ஓய்வு எடுத்து படிக்க வேண்டும்.
* திரும்பக் கூறுவதும், நினைத்து பார்க்கும் பயிற்சியையும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
இவை எல்லாம், கற்கும் திறனை மேம்படுத்தும். வாழ்வில் சிறப்பான இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.
முக்கியமாக, பள்ளி என்பது சமூக பொதுத்தளம். அங்கு கற்றல் மட்டுமே வாய்ப்பதில்லை. பொதுத்தளத்தில் இயங்கும் நடைமுறை பயிற்சி, பண்புகளை மேம்படுத்தும் பயிற்சி என, எல்லா செயல்பாட்டையும் கற்றுக் கொள்ளலாம். இதை மனதில் பதிய வைத்தால், கற்றலில் இனிமை வாய்க்கும். திறன் மேம்படும்...