Saturday 4 April 2020

புரண்டு வளரும் கணுக்கொடி பிரண்டை

தொடராக அடுக்கியது போல் காணப்படும். பற்றுக் கொடி உதவியுடன் தொற்றி வளரும். சதைப் பற்றுள்ளது. மனித எலும்பு வளர்ச்சிக்கு உகந்தது.
பிரண்டை.
இது கொடி வகை தாவரம். வேலிகளில் படர்ந்திருக்கும். குறுங்காடுகளில் காணலாம். இப்போது, காய்கறிச் சந்தைகளில் நலம் காக்க, காத்துக் கிடக்கிறது. செங்கல்பட்டு ரயில்நிலைய சாலை, மாம்பலம் சந்தை, ஆதம்பாக்கம் பழமுதிர் சோலை என பல இடங்களிலும் காண்கிறேன்.
எலும்புக்கு வலிமை அளிப்பதால் ‘வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. வஜ்ஜிரம்  என்றால் வைரம் என பொருள்.
நான்கு கோணங்களை உடைய சதுரப் பிரண்டை. அனைத்து இடங்களிலும் காணப்படும். ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை என, வகைகள் பல உண்டு. பசுமையாகக் காட்சி தரும்.
இதய வடிவ இலைகள்; சிவந்த நிற கொத்தாக பழங்களைக் கொண்டது.
‘சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்’  Cissus quadrangularis என்பது தாவரவியல் பெயர். ‘விடாஸியே’ Vitaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
கால்சியம், சைடோஸ்டீரால்  Sitosterol, இரிடாய்ட்ஸ்  Iridoids, குவர்சிடின்  Quercitin, கரோட்டின் Carotene போன்ற தாவர வேதிப்பொருட்கள்  நிறைந்தது.
பசிக்காமல் அவதிப்படுவோர் பிரண்டைத் துவையல் சாப்பிடலாம். இளம் தண்டிலிருக்கும் நாரை நீக்கி, வதக்கி உப்பு, புளி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, துவையலாக அரைக்கலாம். தேங்காயும் கலக்கலாம். செரிமானத் திறனை  அதிகரித்து, பசி உண்டாகும். இலைகளையும் பயன்படுத்தி துவையல் செய்யலாம்.
வயது முதிர்வால் தோன்றும் சுவையின்மைக்கு பிரண்டைத் துவையல் அரு மருந்து. குடலில் பூச்சிகளையும் அழிக்கும்.  பெண்களுக்கு மாதவிடாய்க் கால சோர்வை நீக்கும்.
உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும். எலும்பு முறிவுக்கு பின் உண்டாகும் வலி, வீக்கத்தை  குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றிணைப்பதை துரிதப்படுத்தும்.
பிரண்டைத் தண்டுகளை நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாக்கி குளிர் காலத்தில் பயன்படுத்தலாம்.
இவை எல்லாம்,  மருத்துவர்களிடமும், புத்தகங்களிலும் படித்தது.
அனுபவ கதை:
மருந்துவாழ் மலையிலும், அது சார்ந்த குறுங்காட்டிலும் பிரண்டைக் கொடி அதிகம்.  ஈன்ற பசுவின், நச்சுக் கொடி விழ, பிரண்டை கொடியை கட்டும் என் கிராமத்தில் வழக்கமாக இருந்தது. விழுந்த நச்சுக் கொடியை, கள்ளிச் செடியிலும், புன்னை மரத்திலும் வைப்பர்.
தென்மேற்கு பருவ மழைக்கு பின்னான காலத்தில், பிரண்டை துளிர்க்கும். இளம் பிரண்டை துளிர்களை சேகரித்து வந்து சுவை மிக்க, ‘தீயல்’ செய்வார் என் அம்மா. குளிர்காலத்தில் அது இதம் தரும்.
என் இணையருக்கு, பிரண்டையில் தீயலுடன், துவையலும் செய்யத் தெரியும். சுவை அமோகமாக இருக்கும். எங்கள் மாடித்தோட்டத்தில், மூன்று வகை பிரண்டை செடிகள் உள்ளன. உருண்டை முகம், இரட்டை முகம், நான்முகம் என, பல முகங்களைக் கொண்டது. இன்றைய உணவில், வளர்மதியின் பிரண்டை துவையல் நலன் சேர்த்தது.





Friday 3 April 2020

பறக்கும் அனுபவம்

சில மாதங்களாக, ‘மெட்ரோ’ ரயிலில் அலுவலகம் சென்று வந்தேன். பொருளாதாரத்தில் மத்திய, உயர் மத்திய தர பிரிவினர் தான் இந்த சேவையை சென்னையில் பயன்படுத்துகின்றனர். ஏழை எளியவர்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே...
என்றாவது ஒருநாள் பயணிப்பர்.
மெட்ரோ ரயில் அனுபவம் சற்று வித்தியாசமானது. என் பயணம், சென்னை  பரங்கிமலை ராணுவ அகாடமி எதிரில் உள்ள நங்கநல்லுார் சாலை மெட்ரோ நிலையத்தில் துவங்கும். முதலில் சில நாட்கள், ஆலந்துார் நிலையத்தை பயன்படுத்தினேன். அங்கிருந்த வெறுமையால் மாறினேன்.
நங்கநல்லுார் நிலையம் இதமானது. வாகனத்தை நிறுத்தி  நகர்ந்தாலே,  மரங்கள் அடர்ந்த  வனத்தில் பயணிப்பது மாதிரி இருக்கும். நிலையத்தின் ஒருபுறம், புனித பீட்டர் பள்ளியும், மறுபுறம், இந்திய ராணுவ அதிகாரிகள் குடியிருப்பும் உள்ளன. இரண்டுமே மரங்களால் அடர்ந்தவை. ரம்மியம் தருபவை. நிலைய படிக்கட்டில் ஏற மரங்களின் ரம்மியம் மாறியபடி கண்ணை தழுவும். மரங்களடர்ந்த மலையில் நகர்வது போல் தோன்றும்.
நடைமேடையில், காகங்களும், மைனாக்களும் மனம் கொள்ளும். புறாக்கள் பறந்து திரியும். திரும்பும் அந்தி வேளையில்  படிக்கட்டில் இறங்கும் போது, கரும்பருந்துகளும், வவ்வால்களும் வரவேற்கும். விமான நிலைய திசையிலிருந்து, பெரிய பழந்தின்னி வவ்வால்கள் பறப்பது ஆச்சரியம் தரும்.
பீட்டர் பள்ளி வளாகத்தில், சிறுவர்கள் வில் அம்பு எய்ய பழகுவர். அதை அன்னையர் பூரிப்புடன் பார்த்திருப்பர்.
பணி நெருக்கடியால் ஏற்படும் மன இறுக்கத்தை, இந்த நகர்தலால் நெகிழ்த்திக் கொள்வேன். டிசம்பர், ஜனவரியில் பனி தங்கிய மர முகடுகள் மயக்கின. வசந்த ராணி மரத்தின் துணை இனங்கள் பல அங்கு உள்ளன. அவை வெளிர் ஊதா நிறத்தில் விடாமல் பூத்து  மகிழ்வித்தன.
சுணக்கம் இன்றி வரும் ரயில்கள், நிலையத்தில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் தங்க விட்டதில்லை. தங்கும் நிமிடங்கள் இனிமையானவை. நிலையத்தின் இடது புறம் உள்ள, பரங்கிமலை வரை  பார்வை படரும். மனம் மகிழும்.
மெட்ரோ பயணம், கிட்டத்தட்ட விமானத்தில் பயணிப்பது போன்றது தான். பாதுகாப்பு தணிக்கை, அறிவிப்புகள், திறந்து மூடும் கதவுகள், குளிர் சூழல், பயணக் காட்சிகள்  அந்த எண்ணத்தை தரும்.
 சின்னமலை வரை, அரை வானில் அசைந்து வரும் மெட்ரோ. அடையாறு ஆற்றை கடந்து, சைதாப்பேட்டையில் பூமிக்குள் புதையும். ஆயிரம் விளக்கு வரை, 30 மீட்டர் ஆழ பொந்தில் பயணம். நிலையம் தவிர, இடையில் நின்றால், கலக்கம் வரும்.
 அந்த அனுபவம்  வித்தியாச மனநிலையை உருவாக்கும். கிட்டத்தட்ட, நான்கு மாதங்கள் பயணித்திருப்பேன். தினமும் அனுபவத்தில் மாற்றம் இல்லை.
தமிழகத்தில், உயர்தர சேவையை வழங்குவதில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு முதலிடம் தரலாம். பயிற்சி பெற்ற பணியாளர்கள். முகம் சுளிக்காத சேவை, முறையான வழிகாட்டல், சரியான தொடர்பு மொழி என சொல்லிக் கொண்டே போகலாம்.
பண பேரத்துக்கு வழியில்லை. எல்லா சேவைகளுக்கும் கட்டணம், மின்னணு பரிவர்த்தனையில் நடப்பதால், வார்த்தை தடிப்புக்கு வழியில்லை.
தற்காலிக தனிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது பொருந்தாது.  பயண சீட்டு வாங்கும் போது சில்லறை தகராறுகள் ஏற்பட்டு, வார்த்தை தடித்துள்ளதை பலமுறை கவனித்துள்ளேன். பயிற்சி பெற்ற ஊழியர்களும் எரிந்து விழுவதை கண்டிருக்கிறேன்.
வாகன நிறுத்த இடங்களில், வாடிக்கையாளர்களை காக்க வைத்து, அரட்டை, அலைபேசி தடவல் என கவனப்பிசகுடன் செயல்படும் ஊழியர்களை கண்டிருக்கிறேன். மிகவும் கராராக பணிபுரிவோரும் உண்டு. அவர்களுக்கு எப்போதும் நன்றி சொல்ல தவறியதில்லை.
ஆயிரம்விளக்கில் இறங்கினால், சாலையோரத்தை வசிப்பிடமாக கொண்ட குடும்பங்களை கடந்து, சில மீட்டர் துாரத்தில் ஒயிட்ஸ் சாலைக்கு வரவேண்டும்.
இப்படியான அனுபவம், கடந்த வாரம் சற்றே சிதைந்து வேறொரு திசையில் மாறியது. இன்று முற்றிலும் மாறான திசையில்...