Wednesday 22 August 2018

நிறைவேறாத உரையாடல்...

அவரது பெயரில், கொஞ்சம் நிலம் உண்டு. இரண்டு பகுதிகளில்... வயல், தென்னந்தோப்பு, மாந்தோட்டம் என்று... தோவாளை பாசனக்கால்வாய், மெயின் மடை வெள்ளம் பாயும். ஒன்றில், மரியம்மாள் மகள் செல்லத்தாயி என்றும், மற்றொன்றில் ராஜமணி மனைவி செல்லத்தாயி என்றும் பத்திரம் பதிவாகியிருந்தது. ஒருமுறை அப்பாவிடம் இது பற்றி கேட்டேன். முதல் சொத்து, அம்மாவின் பெற்றோர் போட்ட தங்கநகைகளை விற்று வாங்கியதால், தாயாரை துணைப் பெயராக பதிவு செய்ததாக கூறினார்.
முதல்வராக கருணாநிதி, 1989 ல் பதவி வகித்த போது, குடும்ப சொத்தில், பெண்களுக்கு உள்ள உரிமையை சட்டமாக்கினார். அதையொட்டிய நாளில் ஒரு முறை ஊர் சென்றிருந்த போது, அந்த சட்டப்படி சொத்து பிரிப்பதை என் பெற்றோர்  உறுதி செய்தனர். அப்பா மரணத்துக்குப்பின் அந்தப் படியே, பிரித்தோம். என் உடமையும் அம்மா நிர்வாகத்தில் இருந்தது.
பிச்சிகுடியிருப்பு அம்மாவின் சொந்த ஊர். பிச்சி என்பது, ஒரு வகை குற்றுச் செடி. விரும்பத்தக்க வாசனையுடன் பூக்கும். எங்கள் குடும்பங்களில் சுப நிகழ்வு, வழிபாடு போன்றவற்றில் முக்கிய இடம் பெறும். சென்னை வாசிகள் ஜாதிமல்லி என்பர்.
ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, லண்டன் மிஷன் அமைப்பு சார்பில், 1800 களில், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த, ஜெர்மனி பாதிரியார் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தெளபே, இந்த ஊர் பெயரை, ஜேம்ஸ்டவுண் என மாற்றினார். மதம் மாறியதில், என் அம்மாவின் மூதாதையர்களும் உண்டு. அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில்தான், ஜேம்ஸ்டவுண் தேவாலயம் உள்ளது.
சில தலைமுறைகளுக்கு பின், என் தாயார் மூதாதையர் குடும்பம், மீண்டும் பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு திரும்பியது. ஆனாலும் பெயர் ஒட்டுகளில், கிறிஸ்தவம் படிந்தது. அது இன்னும் நீங்கவில்லை. என் அம்மா வழி குடும்பத்தில், இப்போதும், ஏசுதாசன், ஞானமணி, அமர்தியா போன்ற பெயர்கள் உண்டு. என் தாய்மாமன் மகள் பெயர் மரிய ஜூலியட். அவர்கள் கிறிஸ்தவ வழிபாட்டு முறையை கடைபிடிப்பவர்கள் அல்ல.
திருமலய பெருமாள்... (ஜாதி ஒட்டு உண்டு) – மரியம்மாள் தம்பதிக்கு, ஒரு மகன்; இரண்டு மகள்கள். முதலாமவர் திருமணி (ஜாதி ஒட்டு உண்டு). அஞ்சுகிராமம் ஊராட்சி தலைவராக பணியாற்றிய போது, பொது சேவையில் கொஞ்சம் சொத்தை இழந்தவர். அடுத்தது பொன்னம்மை. கடைக்குட்டி என் தாயார் செல்லத்தாயி.
பிச்சி குடியிருப்பு ஊரில் திறன்மிக்க நடுத்தர வேளாண் குடும்பம். சோளம், கேழ்வரகு, தெங்கு, காய்கறிகள், வாழை, உள்ளி, கொல்லமிளகு, உளுந்து, தட்டைப் பயிறு, பச்சை பயிறு என பல்பயிர் சாகுபடி செய்வர். திறன்மிக்க உழவு மாடுகளும், கவலை மாடுகளும், கறவை மாடுகளும் உண்டு. வசதியான நீண்டு அகன்ற சுற்றுச்சுவருக்குள் வீடும் சுற்றிச்சூழ களமும் விஸ்தாரமானது.
தேவாலயத்தை நோக்கி தெற்கு முகமாக, எழில்மிக்க பூந்தோட்டம். ஐரோப்பிய பாணியிலானது. ஒரு மருங்கில் பன்னீர் மரம். அது, பூத்து தெளிவது மனப்பரப்பில் மகிழ்வை தரும். மறு மருங்கில் வளர்ந்த ஒற்றை பெருந்தடியுடன்  கொல்லாமரம். அதாவது முந்திரி மரம். அதையொட்டி பூவரசு.  சுற்றுச்சுவரை ஒட்டி, தோவாளை பாசனக்கால்வாய் வெள்ளம், மடையில் விழுந்து கிளைக்கால்வாயில் புகுந்து ஓடும். கால்வாயில் சிறுநண்டு, நத்தை, பொத்தி, கணியன், மானா என, சிறு உயிர்கள் களிநடனம் புரியும். மதிலுக்கு அப்பால், தோவாளை பாசனக்கால்வாய். பருவ காலங்களில் பூந்துாவலுடன், நீர் வீழ்ச்சி பெறும். காற்று சுழன்றடிக்கும் போது, நீர் எழுச்சியாகி முயங்கித்திரியும். நீர் வீழும் போது மெல்லிய ஓசை இதமளிக்கும்.
இந்த சூழலில் பிறந்து வளர்ந்தவர், என் தாயார்.
திருச்செந்துார் அருகே குட்டம் ஊரில் இருந்து, 18 ம் நுாற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஒன்று, சாமிவேல் மகன் ஒற்றைவீரன் குடும்பம். அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாராயணன்... ( ஜாதி ஒட்டு உண்டு) – தாமரை வடிவு மகன் ராஜமணி. இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அளவிலான விளையாட்டு வீரர். கபடி, கிளிதட்டு போன்ற குழுவிளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவர். சார்ந்த அணிக்கு பதக்கங்களை குவித்தவர். இவருக்கு செல்லத்தாயியை திருமணம் முடித்தனர்.
என் தாய்மாமன் திருமணி, திராவிட அரசியல் பிரமுகர். அவரது அரசியல் தொடர்பு, திருவிதாங்கூர் மண்ணில், கட்சி, ஜாதி அரசியலைத் தாண்டி பலருடன் நெருங்கிய நட்பாக மலர்ந்திருந்தது. அதன் விளைவாக நிச்சயமானதுதான் இந்த திருமணம்.
...1

Saturday 11 August 2018

டூப்மாஸ்டரும் கருணாநிதியும்

அவர், குட்டையானவர். சைக்கிளில் அமர்ந்தால், பெடலை மிதிக்க கால் எட்டாது. நடக்கும் போது, ‘சடக்... புடக்...’ என, குதித்து செல்வது போல் தோன்றும்.  நேர்த்தியாக தலைமுடியை வாரி சிங்காரித்திருப்பார். பெயர் தவசி. இப்படி, கூப்பிட்டால் அவரை யாருக்கும் தெரியாது. ஒரு, நிரையசை  சொல்லை ,பெயரின் பின்னொட்டாக சேர்க்க வேண்டும். அது சாதி அடையாளம். அதனால் இங்கே தவிர்த்துள்ளேன்.
சிறுவனாக இருந்த போது, தவசியிடம் ஏகப்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். பின்னர், சென்னையில் தமிழ் சினிமாவுக்கு கதை சொல்வோரை பார்த்திருக்கிறேன். அவர்கள், தவசியிடம் மண்டியிட்டு பாடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
அவ்வளவு அற்புதம்... நேர்த்தி... காட்சிமயம்... வியப்பை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
திரு. கருணாநிதி, 70 களில் முதல்வராக இருந்த போதுதான், கதை புனையும் ஆற்றல் அவருக்கு வாய்த்தது. மாயா யதார்த்த வாதம் எல்லாம் அத்துபடி. அவர் கதைக்குள் தமிழ் மண்டியிடும்.
 அது, நெல்லுக்கு,  லெவி விதித்திருந்த காலம். ஏழை சிறு விவசாயிகளை, அதிகாரிகள் வதைப்பர். வன்கொடுமை செய்வர்.  வெளிச்சந்தையில், நெல் விற்க அனுமதிக்காமல், பிடித்து பறிப்பர். முறையாக எடை போடாமல் குறைந்த விலையில், கொள்ளையடிப்பர்.  விற்க மறுப்பவரை, பதுக்கல்காரன் என்று வழக்குப் போட்டு வதைப்பர். இழுத்து செல்வர்.
பத்தயத்துக்குள் நெல் போட முடியாது. பதுக்கல் என ஏகடியம் செய்வர். வீட்டுக்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் அடாவடி செய்வர். பெண்களை தரக்குறைவாக பேசுவர். அடாவடியில் நேரடியாக நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஒரு இடத்தில் இருந்து கூலி நெல்லைக் கூட கொண்டு வரமுடியாது. எங்கள் ஊர் விவசாய கூலிகள், நாஞ்சில் பகுதியில் உள்ள வடமேதி எனப்படும் கடுக்கரை, பூதப்பாண்டி போன்ற ஊர்களில் நெல் அடிப்புக்கு போவர். கிடைக்கும் கூலி நெல்லை, ஊருக்கு எடுத்து  வரமுடியமல் தவித்து அலைவர். பதுக்கல், கடத்தல் என, அதிகாரிகள் அடாவடி செய்து பிடுங்கிக் கொள்வர். பின், லஞ்சம் வாங்கி விடுவிப்பர். விவசாயிகள் கண்ணீரில் கரைந்த காலம் அது.
இன்றைய பொய், நாளைய வரலாறு என்று பொற்கால ஆட்சி புரிந்தவர்கள் பதிவில் இவை இடம் பெற வாய்ப்பு இல்லை. அரசின் கெடுபிடியின் ஊடாக பல நிகழ்வுகள் நடப்பது சமூக யதார்த்தம். அப்படியானது தான் தவசியின் கதையும்.
சரி... கதைக்கு வருகிறேன். அவரது அய்யா பனைத் தொழில் செய்வார். தவசிக்கும் அதைக் கற்றுக் கொடுத்தார். கள்ளமில்லாமல் பிழைக்க வேண்டுமே.
 குட்டையான தவசி, பெரிய பனைகளில் கைபோட்டு ஏறுவதில் சிரமப்பட்டார். உள்ளங்கை, நெஞ்சம் அதாவது மார்பு, கால் கரண்டை, உள் முட்டி போன்ற உறுப்புகள் காய்த்து வெடிப்பேறுவதை, சகிக்க முடியாமல் தவித்தார்.
சீவி சிங்காரிப்பதில் ஆர்வம் மிகுந்த தவசி, விடுபட முயன்றார். சிறு விவசாய பணிகள் செய்தார். கடுத்த வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. எங்கு வேலைக்கு போனாலும் பேச்சு... நயமான பேசு்சு...
நெல் சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள், விலைக்கு அரிசி வாங்குவதை, கீழ்த்தர நடவடிக்கையாக பார்த்தனர். உணவு அரிசிக்காக, மாதத்தில், மூன்று முறை என, முறை வைத்து, புழுக்கிய நெல்லை அரைக்க எடுத்து செல்வர். அந்த அரிசியைத்தான் சாப்பிடுவர்.
லெவி அமலில் இருந்த நாட்களில், அரவை ஆலைக்கு எடுத்து செல்லும் நெல்லையும், அதிகாரிகள் புடுங்கிப் போய்விடுவர். இது, ‘வேலைக்கள்ளன்’ களுக்கு பிழைக்க வாய்ப்பாக அமைந்தது.
தவசிக்கும் இது வாய்ப்பாக, வாகாக அமைந்தது. அரைக்க கொண்டு செல்லும் நெல்லை, விற்று விட்டு அதிகாரிகள் பறித்து சென்றதாக, நாடகமாடுவார். அதற்காக, மிக நேர்த்தியாக ஒரு கதையைத் தயாரிப்பார்.
அந்த கதையில், அவர்தான் முக்கிய கதா பாத்திரம். எடுத்து சென்ற நெல்லை, மீட்க எடுத்த சிரமங்கள் கதை வர்ணனையாக கரையும். அது பெரும் பகுதியைப் பிடித்துக் கொள்ளும். ‘லே... பறிக்க வந்தவன் சீப்புல வந்தானா...  சக்கடா வண்டியிலா... மக்கா’ என்று, மடக்க முயல்வோரை  சுவாரசியமான சொல்லாடல்களால் திசை திருப்பி விடுவார். விவரணையுடன்  வர்ணிப்பார். திருப்பங்களை நேர்த்தியாக கோர்ப்பார். ஆனால், மறுநாளே குட்டு வெளுத்துவிடும். அவருக்கு, என் அப்பா, ‘டூப்மாஸ்டர்’ என்று பெயர் வைத்திருந்தார். அது பிரபலமாயிற்று.
உடல் உழைப்பை தாங்க இயலாமல் இரண்டு முறை, கால்போன போக்கில், தலைமறைவாகிவிட்டார். ஒருமுறை கோவையிலும், மற்றொரு முறை மதுரையிலும் இருந்து அழைத்து வந்தனர். அவர், புலி வேட்டையாட போனக் கதையை பின்னர் ஒருமுறை சொல்கிறேன். 

Saturday 4 August 2018

பிரசவம் ரோட்டிலா... வீட்டிலா...

அது, 1996 என்று நினைக்கிறேன்.  போலீஸ் செய்திகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்தேன். உயர்  அதிகாரிகளின் கோபப்பார்வைக்கு உள்ளாகியிருந்தேன்.  பலருக்கு தீரா பகைமை.
என், ‘தகவல் மூலம்’ எல்லாம், அதிகாரிகள் வீட்டு அடுப்படியும், காரோட்டிகளும் தான். வீட்டுப்பணிப்பெண்ணுக்கு, தோசை சுட கரண்டியை கையுடன் பிடித்து அனுபவப் பாடம் எடுப்பது, ஒரே மாதிரி உடை அணிந்த மப்டி பெண் போலீஸ் சூழ, மன்னர் வேடத்தில் தியேட்டரில் ராஜாங்கம் நடத்துவது, என பல தினுசான அதிகாரிகளை பார்த்திருக்கிறேன்.  தகவல்கள் அவ்வப்போது, என் பேஜர் கருவியில் ஏறும். அவை, டீகடை பெஞ்சில் பேசப்படும். பெரிய செய்தியாவதும் உண்டு.
அது ஏப்ரல் மாதம். கொடும் வெயில். ஒரு முற்பகலில், கோடம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கண்டேன். ஒரு போலீஸ்காரரிடம் விசாரித்தேன். ஆறுமாதமாக, நடையாய் நடப்பதாக சொன்னார். விவரம், விலாசம் பெற்று கொண்டேன்.
 அன்று, பணியை முடித்துக்கொண்டு, இரவு, 8:00 மணி அளவில் வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு சந்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றேன்.
அது ஒரு பீகாரி குடும்பம். தந்தை சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கர்ப்பிணியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தந்தையின் குரல் இயலாமையாக வெளிப்பட்டது. சூழலை ஒருவாறு ஊகித்தபின், அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த ஏழைத் தந்தை, இயலாமையின் வலியை வெளிப்படுத்தினார். மகளுக்காக நீண்ட நாட்கள் அலைந்தும், நீதியின் ஆரம்ப கதவைக் கூட, எட்ட முடியாத ஏக்கம் வெளிப்பட்டது. அப்போதைய பிரதமரின் உறவினர் என்று அவ்வப்போது சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார். நீதி கேட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். கடிதங்கள், புகார்கள் என, நகல்கள் கேட்டு வாங்கினேன். கர்ப்பிணியிடம் நீண்ட பேட்டி ஒன்றை, மைக்ரோ நாடாவில் பதிவு செய்து விடை பெற்றேன். போலீசாரிடமும் சில விளக்கங்களை கேட்டு பெற்றேன்.
அதன் அடிப்படையில் ஒரு செய்தி தயாரித்தேன். பாலியல் பலாத்காரம் சார்ந்த தகவல் கொண்ட செய்தி. வழக்கமாக இது மாதிரி செய்திகளை, நிருபரின் பெயரில் வெளியிடுவதில்லை. எனக்கு உயர் நிலையில் இருந்தவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என் பெயரில் வெளியிட்டுவிட்டார்.
செய்தி இதுதான்...
பிரபல தமிழ் நடிகர் ஒருவர். கதாநாயகன், வில்லன் என்று கதா பாத்திரங்களில் நடிப்பவர். தமிழ் தேசியம் எல்லாம் பேசுவார். அலுவலகத்தில் வேலை செய்ய வந்த பீகாரி பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதிகார மிடுக்குடன் நடிகர் வலம் வந்ததால், புகார் பதியாமல், அலைக்கழித்தனர். விரட்டியடித்தனர். அவர் பிரசவம், ரோட்டிலா... வீட்டிலா... என்ற நிலையில்தான், என் செய்தி வெளிவந்தது.
போனில் ஏகப்பட்ட மிரட்டல். பணம் வாங்கிக் கொண்டு, எதிராக செய்தி போட்டதாக... பணம் கேட்டு மிரட்டியதாக... பேரம் பேசியதாக... நடிகர் புகழை கெடுப்பதாக...
பொதுவாக, இவை வரும் என, எதிர்பார்ப்பதுதான். எனவே, செய்தியின் உயிர்ப்பு வாடிப்போகாமல் இருக்க தொடர் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழி இருக்காது.  அதற்கும் தயாராக இருந்தேன். சம்பவத்தை நிரூபிக்கும் ஆவணங்களை தொடர் செய்தியாக்கினேன். துவக்கம் என்னிடம் என்றாலும், மற்ற இதழ் நிருபர்களும் அதன்பின் இணைந்தனர்.
 அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என்னிடம் பேரம்படியாததால், சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய நடிகர், பேரத்தையும் மிரட்டலையும் துவங்கினார். பெண் நிலை தடுமாறினார். ஏற்கனவே திருமணமானவர் நடிகர். அந்த பெண்ணையும் திருமணம் செய்வதாக சொல்ல, தடுமாற்றம், பூகம்பமாகிவிட்டது.
ஆவணங்களை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய அப்போதைய  தி.நகர் போலீ்ஸ் உதவி கமிஷனர் திரு. சந்திரசேகர் வழக்கு பதிய உத்தரவிட்டார். இவர், தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவினர்
நடிகர் பேரத்தால், இரண்டும் கெட்டானாகிவிட்டார், பெண். அந்த நேரத்தில் உதவிக்கு வந்தார், அறநிலையத்துறை அதிகாரி கவிதா. அவரது தீவிர முயற்சியால், பிரபல வழக்கறிஞர் பாதுகாப்பில் சில நாட்கள் பெண் இருந்தார். பின், மதிப்புக்குரிய ஜனநாயக மாதர் சங்கம், வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணை பராமரித்தது. அப்போதுதான், கவிதாவின் தீர்க்கத்தையும், அயராத முயற்சியையும் கண்டேன். அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அந்த மதிப்பு குலையாமல், குறையாமல் தொடர்கிறது.
சரி... வழக்குக்கு வருவோம். பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. அறிவியல் நிரூபணப்படி, வென்றார். நிவாரணம் கிடைத்தது. நடிகருக்கு தண்டனையும் கிடைத்தது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் தானே... நடிகரின் இரண்டாவது மனைவியாகிவிட்டார். தீவிர தமிழ் தேசியம் பேசும் நடிகர், விரைவில் புரட்சிகள் நடத்துவார்.