Monday 30 July 2018

அவருடன் நேரடி பழக்கம் எதுவும் இல்லை

அது, 1989. துல்லியமாக நினைவில் இல்லை. சென்னை செய்திப்பிரிவில் பணியாற்றிவந்தேன். நாளிதழ்களில் ஒரு செய்தி ஒரு வாரமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு பக்தர் வீட்டு லிங்கத்தில் பொங்கி வழியும் தண்ணீர்’ பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டு வந்தன. பெரும் பக்தர் கூட்டம். ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் என, அதிகார மிக்க பக்தர் கூட்டம் வரிசையில் வர, சாமானியர்களை கேட்கவா வேண்டும். பெரும் போக்குவரத்து நெரிசல்.
பொதுவாக, இந்த நிகழ்வுகளை கட்டமைப்பவர்கள், உயர்அதிகாரிகளுடன், நிருபர்களையும் வளைத்துப் போடுவர்.
நான் பணியாற்றிய இதழில் அந்த செய்தி தொடர் வரவில்லை. அப்போது தாம்பரம் நிருபராக இருந்த அகஸ்டின், சிந்திக்கத் தெரிந்தவர். அவரை வளைக்கும் முயற்சி தோல்வியுறவே, தலைமை அலுவலகத்துடன், தொடர்பு கொண்டார் ஒருவர். அந்த தொலைபேசி அழைப்பை சந்தித்தவன் நான். விவரங்களை வாங்கிக் கொண்டேன். அதிகாரிகளை துணைக்கழைத்து மேற்கொள்காட்டி, கண்டிப்பாக செய்தி போட கேட்டுக் கொண்டார்.
சரி... லிங்கம் தண்ணீர் விடுவதை பார்த்தால், செய்தி எழுதுவதாக உறுதி சொன்னேன். ஒப்புக் கொண்டார்.
அவரது மன்றாட்டை, ஆசிரியர் பார்வைக்கு கொண்டு போனேன். விசாரித்து எழுத சொன்னார். அன்று இரவு, தாம்பரத்துக்கு சென்றேன். அகஸ்டினும் உடன் வந்தார். லிங்கத்தை பார்க்க போனோம்.
போனதும் புரிந்தது பிழைப்புக்கான பசப்பு. பிழைக்க வழியில்லாமலோ, தெரியாமலோ நடக்கும் அவச் செயல். தோண்டி துருவி விசாரித்தால் ஆனுதாபம்தான் மிஞ்சும். அவர்களின் புத்திசாலித்தனம் வியப்பை தரும்.
எங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.  லிங்கம் தண்ணீர் கொட்டும் கதையை விளக்கினர். என், மதநம்பிக்கை பற்றிய விசாரணையும் முடிந்தது. ஒரு சிறிய வீட்டின்  உள்ளறையில், லிங்கம் இருந்தது. அருகே போனதும், கண்ணாமூச்சு விளையாட்டு மாதிரி, ‘அதோ தாண்ணி... இதோ தண்ணி... வியர்க்கிறது பாருங்கள்...’ என்று, கும்பல் அரற்றி அடித்து விட்டுக் கொண்டே இருந்தது. பேசாமல் நின்றேன். நேரம் நகர்ந்தது. மீண்டும், ‘அதோ ஊற்று... இதோ ஊற்று...’ என்றனர்.
 ‘சரி... ஊறட்டும்... சென்னையில குடி தண்ணீர் பிரச்னையாவது தீருமே... அமைதியா இருங்க...’ என்றேன், சிரிக்காமல்.
இதற்கிடையில், ‘பூசை நடத்த வேண்டும்’ என்றனர். என் முன்னிலையில் நடத்த சொன்னேன். கதவை மூடி மறைவாகத்தான் பூசை என்றனர். நான் லேசாக சிரித்தேன். நிகழ்வின் முக்கியஸ்தர் என் அருகே வந்தார். காதில், ‘நாங்க குடும்பத்தோட கிணத்துல குதிச்சி தற்கொலை பண்ணிக்கப் போறோம்... ’ என்றார். நான் சிரித்த படி, ‘ கொஞ்சம் பொறுங்க... போட்டோ கிராபரை கூப்பிட்டுக்கிறேன்.  கிணத்துல பாயுறத படம் எடுக்க வேண்டாமா...’ என்றேன்.
நிகழ்வை திட்டமிட்டவர்களுக்கு வியர்க்க துவங்கியது. நான் வேளியேறினேன். அகஸ்டின் சிரித்துக் கொண்டு நின்றார். வெளியே கூடியிருந்த பக்தர்களிடம் விவரங்களை அவர் கறந்திருந்தார். தகவல்களை ஒருங்கிணைத்து, ஒரு செய்தி எழுதினோம். மறுநாள் காலை இதழில் வெளியானது. பக்தர் வரிசையில் நின்ற அதிகாரிகள் இப்போது, விலங்குடன் நின்றனர்.
எங்கள் செய்தி வெளியானதற்கு மறுநாள், முரசொலி இதழில், ஒரு பக்க கட்டுரை ஒன்று. அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுதியிருந்தார். அந்த கட்டுரை, எங்கள் செயலையும், நாங்கள் தயாரித்த செய்தியையும் மையமாக கொண்டிருந்தது. அவருடன் எனக்கு நேரடி பழக்கம் எதுவும் இல்லை.

Thursday 26 July 2018

கவலையை போக்குமா காக்கையும் மைனாவும்

பறவைகளை தேடுவதும், அவற்றை தொடர்வதும், ஒலியை, நடத்தையை ரசிப்பதிலும்  தனி  சுவாரசியம் உண்டு.
உலகம் முழுவதும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு, 2014 ஜனவரி 17 ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டது, தயக்கம்தான் என்றாலும் பங்கேற்றேன்.
ரிஷி வேலி கல்வி நிறுவனம், பறவைகள் பற்றிய, சுய கற்றல் முறையில் தயாரித்த ஆங்கில பாட நுால்களை வாசித்திருக்கிறேன். அது, கொஞ்சம் உதவலாம் என நம்பினேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை 4:00 மணிக்கே எழுந்து விட்டேன். சைக்கிள் பயற்சியை முடித்து அதிகாலை, 5:40 மணிக்கு, வீட்டின் மாடிக்கு வந்தேன். இருள் விலகவில்லை; ஆனால், பறவைகளின் குரல் தெறித்துக் கொண்டிருந்தது.  காகங்களின் கரைச்சல்தான் துாக்கல். மரங்களில் மாறி மாறி அவை பயணித்துக் கொண்டிருந்ததை, கரைசல் வழி அறிய முடித்து.
அவை, பறப்பதைக் கவனி்த்துக் கொண்டிருந்தேன். எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.
தொடர்ந்து, மைனாக்கள் சத்தம் போட்டன. அந்த குரல் ஏற்கனவே அறிமுகம் என்பதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படவில்லை.  எண்ணிக்கையை அவதானித்தேன்.
இடையே, மேலும் சில பறவைகளின் குரல்கள்... அவை பரிச்சயம் என்றாலும்,  அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
மைனாக்கள், ஐந்து விதமாக குரல் கொடுப்பதை கவனித்திருக்கிறேன். ஒருவித குரல் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குரல் எழுப்பும் போது, இணை மைனா குதுாகலம் அடைவதை கவனித்திருக்கிறேன்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், மைனாக்களை வீட்டில் வளர்த்து, பேச பழக்குவது உண்டு. என் உறவினர் ஒருவர், ஒரு மைனாவுக்கு, ‘அக்கக்கா.... கள்ளன்...கள்ளன்...’ என்று பேசக் கற்றுக் கொடுத்திருந்தார்.
இலங்கை தமிழர்களின், குடியிருப்புகளில், கிளியும் மைனாவும் வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். மைனாக்கள் மிகவும் மெல்லியதாக இனிமையாக சீட்டி அதாவது விசில் அடிக்கும்.
சரி... பறவை பார்க்க வருவோம்
தொடர்ந்து, அண்டங்காக்கைகளின் கனமான குரல் கேட்டது. எதிர்வீட்டு தென்னையில் அமர்ந்திருந்ததை கவனித்தேன். தனி்த்த குரல் வளம் உள்ளவை. பலர் இதை ரசிப்பதில்லை. ஆனால், அரசங்காகத்தின் கரைச்சலை விட, அண்டங்காக்கையின் கனம் நிறைந்த குரல் சுவாரசியப்படுத்தும். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று, பக்கத்து மாடி சுவரில் அமர்ந்தது.
விடியலால், வானம் பொலபொலத்தது. காகங்களின் வரவு அதிகரிக்க  அவை, நக்கல் குரலிலும் ஒன்றைக் குரலிலும் கரைந்து கொண்டே இருந்தன. மைனாக்களிலும் மற்றொரு இணை வந்து, குப்பையில் இரை தேட துவங்கின.
குப்பை சிதறிக் கிடந்த பகுதியில், ஒரு கீரிப்பிளை்ளை சுற்றித் திரிவதைக் கவனித்தேன். சற்று நேரத்தில், அதன் இணை கீரியும் சேர்ந்து கொண்டது. அவை குப்பையில் அலைந்து கொண்டிருந்தன.
இதற்கிடையில், கிழக்கு நோக்கி சாய்வாக, சில பறவைகள் வேகமாக பறந்து மறைந்து கொண்டிருந்தன. அவை மிகவும் சிறியவை. பறக்க சிரமப்பட்டது போல் தோன்றினாலும், தனி அழகு தெரிந்தது. காற்றை கிழித்துக்கொண்டு பறந்தன அவை, ஒரே திசையில் பறந்து மறைந்து கொண்டிருந்தன.. 28 பறவைகள் என், தலைக்கு மேலாக பறந்து சென்றதை எண்ணிப்பார்த்தேன்.. அவற்றின் வடிவம் அழகு. ஆனால், அவற்றை ரகம் காணமுடியவில்லை.
சில, பச்சைக் கிளிகள் உச்சிவானில் சத்தமிட்டபடியே, பறந்து மறைந்தன. இப்படி சென்றவற்றில், ஏழு எண்ணிக்கையை அவதானித்தேன். சில தனித்தனியாக பறந்து  கொண்டிருந்தன. எளிமையான கார்ட்டூனாக வரைந்து விட முடியும் என நினைத்தேன்.
அப்போது சற்று துாரத்தில், கருஞ் சிட்டுவின் குரல்.  கொலுசு குலுங்குவது போல் இருந்தது. அந்த ஓசை பரிச்சியம் என்பதால், எளிதில் அடையாளம் காண முடிந்தது.  மாணிக்க பரல்களை உருட்டி விடுவது போல் ஒலி இருக்கும். அந்த சத்தம் மென்மையானது. அற்புதமானது. மனசில் ஒலித்து்க்கொண்டே உயிர்ப்புடன் இருக்கும். இநத ஒலியை அறிமுகப்படுத்தியது என் துணைவிதான். இந்த பறவைகள் வீட்டருகே வந்துவிட்டால், ஓ.. அற்புத சுிட்டுக்களே... என்று ஆர்வமாக சென்று கவனிப்பார். குழந்தைகளையும் அழைத்து காண்பிப்பார்.
சிட்டுக்கள், பல விதமாக ஒலி எழுப்புவதை கவனித்திருக்கிறேன். அனேகமாக, இவற்றில் ஆண்கள்தான் நுாதனமாக ஒலி எழுப்பும். அவற்றின ஓலிக்கு ஏற்ப, பெட்டை நகர்ந்து நிகழ்வை ஒழுங்கு செய்யும்.
சிட்டு என்று நான் குறிப்பிடுவது அடைக்கலான் குருவிகளை அல்ல.
பறவை ஆர்வலர்கள், சிட்டு என்று அடையாளம் காட்டுவதை நான்,  அடைக்கலான் குருவி என்று அடையாளம் கண்டுள்ளேன்.
அடைக்கலான் குருவியுடன் நீண்ட பரிச்சயம் உண்டு. என் குடும்ப வீட்டில், பத்துக்கும் மேற்பட்ட கூடுகளில் அவை வசித்தன. விவரம் தெரிந்த நாள் முதல் அவற்றை தெரியும் அவை எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால், அனைத்து செயல்களுடனும் பரிச்சயம்.  எங்களுடன் அடைக்கலமாக வாழ்வதால, அடைக்கலான் குருவி என்று அப்பா சொல்லித்தந்திருந்தார்.
சில நேரங்களில், அவற்றின் கூட்டில் இருந்து குஞசுகள், மாடி அறையில் தவறி விழுந்து விடும். அவற்றை, மிகவும் மெ்ன்மையாக எடுத்த அப்பாவிடம் காட்டுவோம். எணியை எடுத்துச் சென்று, குறிப்பிட்ட கூட்டைத் தேடி குஞ்சை கவனமாக வைப்போம். அது அந்த காலம்.
இப்போது, அடைக்கலான் குருவி கூடுகளை காணமுடிவதில்லை. அவற்றின் இனிய ஒலி, இதயத்தின் ஓரத்தில் சிந்திக் கொண்டே இருக்கிறது.
பறவைகளை ரசித்து நின்ற போது,  ஒரு செண்பகம் அந்த வழியாக பறந்தது. தொடர்ந்து, மீன் கொத்தி ஒன்று, மின் கம்பியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. ‘அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்,’ என, என் கவனத்தை ஈர்த்தபடி, கருங்குருவி பக்கத்து வீட்டு மாடியைச் சுற்றி பறந்தபடியே சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.  ரசித்து க்கொண்டிருந்த போது, மணி, 7:30 ஐ தாண்டிவிட்டது. இப்போது இயந்திரத்தை நோக்கி பதட்டமாக நகரத் துவங்கினேன்.
பறவைகள் கணக்கெடுப்பை ஒட்டி, இணையத்தில், காக்கைகளையும் மைனாவையும் மட்டுமே பதிவிட முடிந்தது. மற்ற பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  ஆங்கில பெயர்களை இனம் காண்பதில், தடுமாற்றம் ஏற்பட்டதால், பதிவிடாமல் தவிர்த்தேன். இப்போது, நண்பர் ஜெகந்நாதனும், ஆசையும் இணைந்து எழுதிய, பறவைகள் கையேடு புத்தகத்தின் வழி, அடையாளம் காணவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இந்த புத்தகத்தின் அடிப்படையில், மற்றொரு முறை மாடியில் பறவைகளை ரசிக்க சென்றோம். என் மகளும் உடன் வந்தார். மைனாக்களையும், காகங்களையும், புறாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உயரத்தில் கரும்பருந்து பறந்த கொண்டிருந்தது.
 இறக்கையை ஆட்டாமல், எளிமையாக, அது பறந்து சென்ற விதத்தை வியந்து எனக்கு பறப்பு வனப்பை  விளக்கினார் மகள். இதற்கிடையில், ஒரு மைனா கூட்டையும் பார்த்துவிட்டோம். சிறிது நேரத்தில், கரும்பருந்து மீண்டும் வட்டமடித்தது. அதை விரட்டியடிக்க ஒரு காகம் மேலும் கீழுமாக பறந்து கொண்டிருந்தது.

Wednesday 25 July 2018

தொல்லியல் நிலமும் மடுவிளை கனவும்

அதை, மடுவிளை என்பர். மதுவிளை என்போரும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், மருந்துவாழ்மலையின் வடக்கு  மடியில் உள்ளது. பருவ மழை பெய்யும் போது, மலையின் முதுகில் விழும் துளிகள், சேர்ந்து பெருகி, ‘பண்ணிப்பொட’ என்ற பகுதி வழியாக, ஆர்ப்பரித்து திரண்டு பாய்ந்து, மடுவிளை நிலப்பரப்பை அரித்து ஓடும். மண் அரிப்பால், மடுவிளையில் பெரிய ஓடை உருவாகியிருந்தது. திரண்டு சாடும் வெள்ளம், மருந்துவாழ்மலை பாசனக் கிளைக்கால்வாயின் கீழ்மடை வழியாக ஒடுங்கி சாடி, பெரும் ஓடையாகி, ஒருமைல் மேற்கில் நாஞ்சில் புத்தனாற்றில் விழும்.
அப்போது, மடுவிளையிலும் அதை சுற்றியும் குடைமரங்கள் நிறைந்திருந்தன. வாகைகளும் உண்டு. அவற்றில் பொன்வண்டுகள் ஒளிரும். மழைநீர் அறுத்து ஓடிய உடைந்த நில சரிவில்,  பொந்துகளில், ஆந்தை, கூகை, பனங்காடை, மீன்கொத்தி, தவிட்டு புறா என பறவைகள் வசிக்கும். கானாங்குருவிகள் கனன்று திரியும். கருங்குருவிகள், காக்கைகளை துரத்தும், நாகணவாய்கள் நவிங்கித் திரியும். வாலாட்டிகள் வழியறிந்து, சிறுபூச்சி புதர்களுக்குள் குடியிருக்கும்.
 என் பள்ளிப் பருவத்தில் அங்கு அதிகம் போவேன். எங்களுக்கும்,  அந்த பகுதியில் மலை அடிவாரத்தை ஓட்டி கொஞ்சம் நிலம் உண்டு. அதை, மலைக்கரை விளை என்போம். வழக்கமாக, நன்செய் சாகுபடி பணிகளுக்குப்பின்,   ஆவணி மாதத்தில், புன்செய் பணிகள் துவங்கும். அந்த காட்டு நிலத்தில், காணம், சிறுபயிறு, உளுந்து, எள்ளு என்று மாறி மாறி விதைப்பு நடக்கும்.
பரப்பில் முள் புதர்கள் நிறைந்து கிடக்கும். விதைப்பு பணி நாட்களில் அங்கேயே உளுந்தங்கஞ்சி காய்ச்சுவர். மதியம், பனம் பட்டையில் ஆவிபறக்கும் உளுந்தங் கஞ்சியை ஊற்றி, காணத்துவையலை தொடுகறியாக்கி குடித்து மகிழ்வோம்.
அங்கு, பிரண்டைக் கொடிகள் நீண்டு கிடக்கும். துாதுவளை, மட்டைக் கள்ளிகளுக்குள் ஒளிந்து படர்ந்திருக்கும். குற்று முள் செடிகள் படர்ந்திருக்கும். விடைதலை மரங்கள், குற்றி படர்ந்திரக்கும். முசுட்டைக் கொடிகள் திருகி சிரிக்கும். அதன் இலைகளை சுவைத்து மகிழ்வோம். அவற்றின் ஊடே, காட்டு முயல்களுக்கு கண்ணி வைத்து காத்திருப்பர். ஓணான்கள் அதன் மீது, நடந்து போகும். மலை உ:டும்புகள், இடுங்காமல் திரியும்.
மடுவிளையை, எப்போதும் வியப்புடன் பார்ப்பேன். அதன் பரப்பு முழுவதும், உடைந்த மண்பாண்ட சில்லுகள் சிதறிக்கிடக்கும். அவற்றை சேகரித்து திரிவேன். ஊர் பெரியவர்கள், ‘ ஓட்ட காலனத் தொடாதே மக்கா...’ என்று அதட்டி விரட்டுவர். அவ்வப்போது அந்த பகுதிக்குள் தனிமையில் சுற்றிவந்து, ஈர்ப்பை புதுப்பித்துக் கொள்வேன். அந்த ஓடுகள் நிலையை கவனித்துக்கொண்டே நடப்பேன். ஒரு காரணமும் தெரியாது. முதியவர்கள் பார்த்தால், அதட்டி விரட்டுவர்.
ஒருமுறை, மண் சிற்பத்தில் உடைந்த தலை ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்த போது, முதியவர் ஒருவர் அதட்டி, பிடுங்கி எறிந்துவி்ட்டார்.
உடைந்த மண் சில்லுகள் பற்றி, ஆலடிவிளை ஊரில் வாய்மொழி கதை உண்டு.  ஊர் உருவாகும் முன், மலை அடிவாரப் பகுதியில் குயவர்கள் வசித்தனராம். அவர்கள், மயிலாடி, வம்பவிளை அருகே நாராயிணி குளத்தில் மண் எடுத்து, பாண்டங்கள் வனைந்தனராம். அந்த பாண்டங்கள், எளிதில் உடையாத தன்மையுடன் இருந்தனவாம். மண் பாத்திரங்கள் உடையாவி்ட்டால், பிழைப்பு நடத்தவது அரிது என்று எண்ணி, இடம் பெயர்ந்து விட்டனராம்.
இந்த கதையின் மூலத்தை அறியேன். நாகர்கோவில் இந்து கல்லுாரியில், வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றிய திரு. ராமச்சந்திரன் அவர்களிடம், நான் கல்லுாரியில் சேர்ந்த போது, இது பற்றி கூறினேன். அவர் சில மாணவர்களுடன், மடுவிளையை ஆய்வு செய்தார். அதில் அவர் கண்டறிந்தது என்ன என்று தெரியவில்லை. ஒருமுறை அது பற்றி விசாரிக்க போயிருந்தபோது, நோய்வாய்ப்பட்டிருந்தார். தொடரமுடியவில்லை.
மடுவிளை ஒரு முக்கியமான, தொல்லியல் தளமாக இருந்திருக்கலாம். முறைப்படி ஆய்வு செய்திருந்தால், வாழ்வியல் பற்றியும், வரலாறு பற்றியும் முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கலாம்.
நான், சென்னை வரும் முன்பே, மடுவிளை சிதைந்துவிட்டது. அதன் பரப்பை  புரட்டிப் போட்டு வேலிக்குள் அடைத்துவிட்டனர். அதன் உரிமையும் பல கைகளுக்கு மாறிவிட்டது.  இப்போது, அது மற்றொன்றாகி விட்டது. நுழைவதும் அரிது. மலையில் விழும் மழை நீரை, முறைப்படுத்தி ஒடுக்கி விட்டனர். பறவைகளுக்கு பொந்துகள் இல்லை. அது விளை நிலமாக்கப்பட்டுவிட்டது. அதன் வரலாறு மண்ணில் புதைந்து அழிந்து விட்டது.
மலைக் கரையில் என், 65.05 செண்ட் நிலப்பரப்பையும் விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். அந்த பரப்பு பற்றி  பெரும் கனவு இருந்தது. அது, கடந்து போய்கொண்டிருக்கிறது. 

Friday 20 July 2018

போதையில் கிருஷ்ணர் வளர்ச்சியில் காந்தி– மனசின் கதை 3

அப்போது சத்திய சோதனையை அறியேன்.  ‘காந்தி தாத்தா நம் தாத்தா...’ என்று துவங்கும் அழ.வள்ளியப்பாவின் பாடல் வகுப்பறையில் அறிந்தது.  அம்மாவும் கொஞ்சம் உரு ஏற்றிவிடுவார். அவ்வப்போது வாயில் உருண்டு இம்சை படும். வீட்டில் முன் அறை தெற்கு சுவரில், வரிசையாக  நான்கு போட்டோக்கள். நடுவில் காந்தி படம். கொஞ்சம் பெரிதானது.  ஓவியர் திருவடியின் கைவண்ணத்தில்... உறுதியான காப்பு சட்டகத்துக்குள் அடைத்தது. எப்போதும், காந்தி குளிருக்கு போர்த்திக் கொண்டிருப்பது போல் தோன்றும். அப்பாவுக்கு அந்த காந்தியை மிகவும் பிடிக்கும்.
அந்த வரிசை படங்களின் முகத்தில்தான் தினமும் விழிப்பேன். அறுவடை காலங்களில், அந்த அறையை நெல் நிறைத்து விடும். அதன் மேல்தான் இரவில் படுத்திருப்பேன். அப்போது, காந்திக்கு அருகே இருப்பது போல் தோன்றும். நுாலாம் படை படிந்த  படக்கண்ணாடிகளை, அந்தநாட்களில் துடைத்து விடுவேன். மெனக்கெட்டு மேலே ஏற வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்.
அது, 1968 ம் ஆண்டு என்று நினைவு . காமராஜர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். என், எட்டேமுக்கால் செண்ட் நில இயற்கை மரத் தோட்டம், அப்போது தரிசாக கிடந்தது. சில தென்னை மரங்கள், ஒரு புளி, பூவரசு மரங்கள் மட்டும்  நின்றன. அது ஊரில் முகப்பில் உள்ளதால் அங்குதான் பொதுக்கூட்டம். அப்போது, காமராஜர் ஒரு கதர் நுால் மாலையை என் அப்பாவுக்கு போட்டதாக  ஊரில் சொல்வர். அப்பா சொன்னதில்லை. அந்த மாலை, காந்திப்படத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடி ரிங்கல்தவுபே உயர்நிலைப்பள்ளியில், 7 ம் வகுப்பு சேர்ந்திருந்தேன்.  போட்டிகள் அறிவித்தனர். பொதுவாக, என் நிறத்தை முன்நிறுத்தி, எந்த நிகழ்வுகளிலும் ஆசிரியர்கள் சேர்க்க மாட்டர். வலுக்கட்டாயமாக சேர்ந்தாலும் இம்சைதான் படுவேன். புறக்கணிப்புகளை மீற வேண்டும் என்ற வெறி மனதில் கனன்று கொண்டிருந்தது.  அறிவிப்பு வந்த போது, மாறுவேட போட்டிக்கு பெயர் கொடுத்து விட்டேன்.
ஒரு வெறியில் கொடுத்தேனே தவிர, எப்படி நிறைவேற்றுவது. உரிய தளவாட கருவிகள் உண்டா... என்ன வேஷம் போடுவது... இப்படி எல்லாம் சிந்தனை அலைக்கழிக்க  ஒன்றும் புரியவில்லை.  மறுநாள் வகுப்பறையில் ஒரு ஆசிரியர், ‘லே... நீ என்ன வேஷம் போடப்போற...’ என்றார். பயத்தில் கலங்கிய கண்ணுடன் யோசித்தேன். ‘செணம் சொல்லுல...’ என்று அவசரப்படுத்தினார்.
மனதில் சித்திரங்கள் வந்து போயின. மாறி மாறி ஒரு படம் வந்தது. சொல்லிவிட்டேன். அப்பாவுக்கு பிடித்த  திருவடியின் ‘காந்தி...’
வகுப்றையில் ஒரே எள்ளல். நவிச்சியத்துடன் ஏளனமாக சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘காந்தியாமில்ல... அவரு ஒன்னப்போலயா கருப்பு. போல... ஒழுங்கா போயி நாலு மாட்ட மேய்ச்சி பொழைக்கிற வழிய பாருல...’ ஆசிரியரின் எள்ளலுடன் வகுப்பறையில் எனக்கு எதிராக குரல்கள் நிறைந்தன.
எதுவும் சொல்லாமல், பார்த்துக் கொண்டிருந்தேன். மனசில் மருந்துவாழ்மலையும், காந்திபடமும் வந்து போயின. ‘எனக்குத்தாம்ல மொத பிரேசு... பாருங்க...’ மனதில் சொல்லிக் கொண்டேன்.
பள்ளியில் இருந்து என் ஊர், 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இருவேளை, 8 கி.மீ., நடக்க வேண்டும். அன்று வீட்டுக்கு புறப்பட்ட போது, காந்தியை மீண்டும் மனதில் பதித்தேன். காந்தியாவதற்கு தேவையான கருவிகளை பட்டியலிட்டபடி நடந்தேன்.
அகன்று உருண்ட மூக்கு கண்ணாடி, ஊன்று கோல், உடலை மறைத்து மூடிக் கொள்ள துண்டு, உடுத்த இடுப்பு துண்டு,  அணிய செருப்பு. நுாற்க ஒரு ராட்டை, ஒட்டிக் கொள்ள வெள்ளை மீசை. தலையை வழுக்கையாக்க... இவற்றுக்கு என்ன செய்வது... சிந்தித்துக் கொண்டே நடந்தேன்.
வீட்டை சேரும் முன் சிறு துலக்கம் ஏற்பட்டது. உடுத்தவும் போர்த்தவும் அப்பாவின் பழைய வேட்டியை பயன்படுத்தலாம். வட்ட பிரேம் போட்ட கண்ணாடி அணிபவர் உண்டா என்று யோசித்தேன். வேதக்கோயில் விளை சொக்கலிங்கம் தாத்தா நினைவுக்கு வந்தார். ராட்டைக்கு... நுால் நுாற்கும் பேபி அக்காவும், பவுஸ் அக்காவும் நினைவுக்கு வந்தனர். செருப்பு கண்டிப்பாக கிடைக்காது. ஊரில் யாரிடமும் இல்லை.
மீசைக்கு... வழியில் எருக்கம் செடியில் காய் முற்றி வெடித்து விதை பரவுவதைப் பா்த்தேன். அதை சேகரித்துக் கொண்டேன். ஓட்டை கண்ணாடி பிரேம் கிடைத்தது. அப்பாவின் வேட்டி துண்டுகளும் கிடைத்தன. ஒதுக்கிப் போட்ட உழவு கம்பு ஒன்றை ஊன்றுகோலாக எடுத்துக் கொண்டேன்.
ராட்டைக்காக ஓடினேன். முதுகில் இரண்டு சாத்து வைத்து. ‘ போல அந்தால... காந்தியாமில்ல காந்தி... இவுரு புடுங்கிருவாரு...’ என்று விரட்டியடித்தனர். சரி பாதகமில்லை. இருப்பதை வைத்து சமாளித்துவிடலாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.
அன்று இரவே, ஓர் ஒத்திகை பார்த்தேன். கொஞ்சம் திருப்தி வந்தது. கருவிகளை பத்திரப்படுத்திக் கொண்டேன். மறுநாள், காலையில் விவசாயப் பணியைத் தொடர்ந்து பள்ளிக்கு ஓடினேன். மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் ஒருமுறை ஒத்திகை. விட்டுப்போன கருவிகளை யாரிடமாவது பெறமுடியுமா... என்று சிந்தித்தேன். இரவெல்லாம் காந்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒப்பனை செய்தபின், ‘உங்களைப் போல இருக்கிறேனா...’ என்று திருவடியின் காந்தியைக் கேட்டுக் கொண்டேன். அந்த புன்னகை பிடித்திருந்தது.
போட்டி நாள் வந்தது. பெயர் கொடுத்திருந்தவர்களை அழைத்தனர். ஒரு வகுப்பறைக்குள் போட்டு பூட்டினர். மாதச் சம்பள குடும்பத்து மாணவ மாணவியர் ஒப்பனை செய்ய உதவியாக பலர் வந்திருந்தனர்.
நான், மூன்றே நிமிடங்களில் காந்தியாகி விட்டேன். என் அருகில்  அண்ணன் குமரேசன். மருங்கூர் அருகே சிறிய கிராமத்தை சேர்ந்தவர். ராஜா வேடம் போட்டிருந்தார். அவரும் சீக்கிரமே தயாராகிவிட்டார். நீண்ட ஒப்பனையிலும் சிலர் திருப்தி படவில்லை. உதவிக்கு வந்தவர்கள், ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருந்தனர். அதைப் பார்த்து சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். ஏக்கமாகவும் இருந்தது.
என் நண்பன், பிரான்சிஸ் கிறிஸ்டோபர் என்ற ரவி. மயிலாடி பஞ்சாயத்து நிர்வாக அலவலரின் மகன். கிருஷ்ணர் வேடம் போட்டான். அவனுக்கு ஒப்பனை செய்துவிட, ஐந்து பேர் வந்திருந்தனர்.  ஒப்பனை செய்ய திரண்டிருந்தவர்கள், என்னை பார்த்து எள்ளல் செய்வதை புரிந்து கொண்டேன். பரிசு கிடைக்காது என்ற மனநிலை வந்துவிட்டது ஆனாலும், தொட்டதை முடிக்கும் உறுதி திடமாக இருந்தது.
போட்டி ஆரம்பமானது. முதலில் ராஜா. பள்ளி வளாகத்தில் சதுர வடிவ பாதையில் சுற்றி வந்தார்.  அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த சுற்று யாருக்கு... கதவருகே நின்ற வாத்தியார், ‘லே... காந்தி நீ போ...’ என்று விரட்டிவிட்டார்.  கம்பு ஊன்றியபடி, வளாகத்தை, புன்னகை பூக்க முயன்று வலம் வந்தேன். அவ்வப்போது, கண்ணாடியை சரி செய்து கொண்டேன். ஒட்டு மீசை விழாதவாறு மேல் உதட்டை நிமிட்டி கவனித்துக் கொண்டேன். ஒரே ஆர்ப்பரிப்பு. ‘லே... காந்தி... காந்தி... வாரம்லே...’  என்று மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். என் சுற்று முடிந்ததும், அறைக்குள் சென்று, ஒப்பனையை விலக்கினேன். ஒப்புக் கொண்டதை முடித்து விட்டேன்.
போட்டி முடிவு வந்தது. பரிசளிப்பு நடந்தது. கிருஷ்ணர் முதல் பரிசு பெற்றார். காந்தியின் பெயர் ஆறுதல் பரிசுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. கூட்டத்தின் கடைக் கோடியில் நின்ற நான், மருந்துவாழ்மலையைப் பார்த்துக் கொண்டே நடந்தேன்.
ஆனால், பள்ளிக்கு வந்து போகும் போது,  பொது இடங்களில்... ஏதோ சில குரல்கள், ‘காந்தி வாராம்லே...’ என்று சுட்டின. காந்தி பாதிப்பில் பல நாட்கள்  சுட்டுதல் நீடித்தது. அது உவப்பாக இருந்தாலும், வெறுமை கனன்று கொண்டே இருந்தது.
என் மகளுக்கு அப்போது, 7 வயது.  காந்தி பிறந்தநாள் அன்று அதிகாலை, கிண்டி, காந்திமண்டபத்துக்கு,  அழைத்து போனேன். அங்கிருந்த சிலையை பார்த்து, வீட்டுக்கு வந்ததும் ஒரு படம் வரைந்தாள். அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அப்பாவின் காந்தியை விட, மகளின் காந்தி பிடித்தமாகிவிட்டார்.
இப்போது, கிருஷ்ணர் போதையில் உழல்கிறார். காந்தி, பல ஆயிரக்கணக்கான வளர்ச்சி செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

Sunday 15 July 2018

ஓட்டுப்போட தெரியுமா... பழகுங்க படியுங்க

தேர்தலில், உங்கள் தொகுதியில் களத்தில் நிற்கும் எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இந்த உரிமையை நிலைநாட்டுவது குறித்த வழக்கு ஒன்பது வருடம் நிலுவையில் இருந்தது.  வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு, 51 பக்கத்தில் தீர்ப்பு எழுதி முடித்து வைத்தனர்.
 முதலில். 49 என்பது என்ன என்பதை அறிந்து கொள்வோம். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் தகுதியற்றவர்களாக நீங்கள் கருதினால், அவர்களை நிராகரிக்கும் வசதிதான் 49 .
இந்திய தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, 1961 ல் அமல்படுத்தப்பட்டது. ஒரு வேட்பாளருக்கு ஓட்டுப்போட தெரிந்த நமக்கு,  எந்த விதிப்படி அவரை தெர்ந்தெடுக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்வதும் முக்கியம். தலை விதியே என, இயந்திரகதியில் ஓட்டுப்போடும் மானோபாவத்தால் தான், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன என்ற  நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது.
ஒரு தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும் நிராகரித்து ஓட்டுப் போடுவதற்கு, ‘49ஓ’ என்ற தேர்தல்விதி அனுமதிக்கிறது. நிராகரிக்க உரிமை இருக்கும் போது, ஒருவரை ஆதரிக்கவும் சட்ட விதி இருக்க வேண்டும் அல்லவா. அது தேர்தல் விதியில், ‘49 எல்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்வையற்றோர் அல்லது உடல் நலமற்று ஓட்டுப்போட இயலாதவர்கள், உதவியாக ஒருவரை வைத்து ஓட்டுப்போட, ‘49 என்’ என்ற சட்ட விதி அனுமதிக்கிறது. அதாவது, இது போன்றோர் ஓட்டை பதிவு செய்ய, 18 வயதுக்கு குறையாத ஒருவரை உதவிக்கு வைத்துக்கொள்ள முடியும்.
ஓட்டுப்போடும் ரகசியத்தை காப்பாற்ற, ‘49 எம்’ என்ற  விதி உள்ளது. அதாவது யாருக்கு ஓட்டுப்போட்டேன் என்பதை வௌிப்படுத்தாமல்  இருப்பதற்கான தடை விதி. அவ்வளவே.
இந்த விதிகளை புரிந்து கொண்டால், ‘49ஓ’ என்ற விதியை பயன்படுத்தி, நெட்டாவுக்கு ஓட்டுப்போடுவதை வித்தியாசமான அணுகுமுறையாக பார்க்க மாட்டார்கள்.
வேட்பாளர்களை நிராகரிக்கும் வாக்குரிமை சட்டப்படியாக உள்ள விவரம் கடந்த, 2001 ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டித்தான் பரவலாக தெரியவந்தது. அதுவும், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் இருந்த தன்னார்வலர்கள், சட்டத்தை ஆராய்ந்து, இப்படி ஓர் '' சமாச்சாரம் இருப்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
கடந்த, 2004 நாடாளுமன்ற தேர்தலின் போது அது உயிர்ப்பெற்றது. அப்போது, ’49 ஓ ‘ குறித்து விழிப்பு ஏற்படுத்த பல அமைப்புகள் பிரசாரம் செய்தன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களை மறுக்கும் உரிமைக்கான குறியீடு அந்த தேர்தலில் அமைக்கப்படவில்லை.
யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்றால், 49  என்ற விதியை பயன்படுத்த பிரத்யேகமாக வழங்கப்பட்ட, 17 என்ற படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் ஓப்படைக்க வேண்டி இருந்தது. அது, ரகசியம் காக்கும் நடவடிக்கைக்கு மாறாக இருந்ததால் இதை பயன்படுத்துவதில்  தயக்கம் இருந்தது.
இதனால், வெகுசில ஆர்வலர்கள் தவிர, வேட்பாளர்கள் மீதான அதிருப்தி ஓட்டை பதிவு செய்வது குறைவாக இருந்தது.
சமூக ஆர்வலர்கள், இந்த பிரச்னையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவு செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
மீண்டும், 2006 சட்டமன்ற தேர்தல் நடந்த போது, இந்த பிரச்னை பெரிதாக பேசப்பட்டது. வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை ஓட்டாக பதிவு செய்ய, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் தனி பொத்தான் அமைக்க வழக்குப் போட்டனர்.
சுப்ரீம் கோர்ட், 2013 செப்டம்பர் 27 தேதி முக்கிய உத்தரவை பிறப்பித்தது. வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால் நோட்டாவை (NOTA – None Of The Above) தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்க ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், நோட்டா பொத்தானை அமைக்க  உத்தரவிட்டது.

ஓட்டுப்போடும் இயந்திரத்தில் பட்டியலின் கடைசியில், 'X' என்ற குறி இட்ட ஓர் சின்னம் இருக்கும். அந்த பொத்தானை அழுத்தினால், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் ஓட்டுப்பதிவாகும். வழக்கம் போல் மற்ற  வேட்பாளருக்கு பதிவு செய்வது போல் பதியலாம். அதுதான், யாருக்கும் இல்லை என்பதற்கான ஓட்டு.

சரி. நோட்டாவில் அதிகம் ஓட்டுப்பதிவானால் தேர்தல் முடிவு  என்னவாக இருக்கும். இந்த  கேள்வி எழுவது இயல்புதான். இப்போதுள்ள அமைப்பில்  ஒரு மாற்றமும் நடக்காது. ஒரு புள்ளி விவரம் மட்டும் கிடைக்கும். அதிகளவில் நோட்டாவில் ஓட்டுப் பதிவானாலும், அதற்கு அடுத்த நிலையில் எந்த வேட்பாளர் அதிக ஓட்டு பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக, தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ள மட்டுமே இது பயன்படும். .ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தால் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். அவ்வளவுதான்.
இந்திய சட்டப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்தரத்தின் கீழ், வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனில், வாக்காளர்கள் அதை வெளிபடுத்த அவர்களுக்கான ஓர் வாய்ப்பாகத்ான் நோட்டா செயல்படும்.

நோட்டா போன்ற விதிகள் கொலம்பியா, உக்ரைன், பிரேசில், பங்களாதேஷ், பின்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் தேர்தல் முறையில் அமலில் உள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும்  சேர்ந்துள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் 49 வால் நடக்காது. ஆனால, 49 வுக்கு ...... ... போட்டால், அரசியல் ரீதியான மாற்றத்துக்கான கட்டாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.





Thursday 12 July 2018

நொடிக்கு நொடி உயிர்பெறும் கோடுகள்

சென்னை, அண்ணாசாலை செய்திப்பிரிவில் பணியில் சேர்ந்த போது, வியப்புடன் பார்த்திருக்கிறேன். மாலையில்தான் வருவார். வரைவார். வியப்பை தருவார். வெள்ளை தாளில் கருப்பு மையால் உயிர் ஊட்டுவார். அந்த வியப்பு தமிழகத்தில் மறுநாள் பரவும். அந்த பொந்து பேனாவுக்கு தனித்துவம் உண்டு. அது சுழல்வது தனி அடையாளம். சுழற்சியின் நுட்பம் புலப்படாது. கோடுகள் போல் தோன்றும். நொடிப்பொழுதில் உயிர் பெறும். ரசிக்கும் பாமரத்தனம் மிக்கவை. சுய சிந்தனையை துண்டுபவை. மெல்லிய நகைச்சுவை ஊடாடுபவை.
சமூக நடத்தைகளை உள்வாங்கி, மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். இந்திய கார்டூன் உலகின் நாயகன். அவரது கோடுகளுக்கு இணை ஏதும் இல்லை. நீண்ட செய்தியை, சில கோடுகளில்... பெரும் பெகளத்தை, மெல்லிய வரிகளில் வெளிப்படுத்தி வியக்க வைப்பார்.
கடந்த, 2010 ல் ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட, 22 ஆண்டுகள் பழக்கம். கடைசி சில ஆண்டுகளில், எங்கள் பணி மேஜைகள் அருகருகே அமைந்தன. பேசுவதற்கும், உலாவுவதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவரது உரையாடலின் ஊடே, எளிய நகைச்சுவை படரும்.
பணியில் சேரும் முன்பே, அவரது கார்டூன்கள் எனக்கு பழக்கம். அவை உயிர் பெறுவதை, சொந்த ஊரில் காட்சியாக பார்த்திருக்கிறேன். அவரது உணர்வு, பாமரன் செயலில் வெளிப்பட்டது.
ஓய்வுக்கு பின், சில முறை அவரை சந்தித்துள்ளேன். அரசின் ஓய்வூதியம் பெறுவதற்கான முயற்சிகள் அவை. பெரிய அளவில் கைகூட வில்லை.
பின்னர், சொந்த ஊரான கேரள மாநிலம், கோட்டயம் சென்றுவிட்டார். அங்கும் வரைந்தார்... வரைகிறார்... வரைவார்... நீண்ட நாட்களுக்கு பின், சென்னை வந்தார். ஒரு மாலை சந்திப்பு. ஒரு சிறு மழையின் நடுவே நீண்ட உரையாடல். அன்பின் வெளிப்படுத்தல். விடைபெறும் போது சொன்னார்...
‘அமுதன்... ஆயில் பெயிண்டிங் வரைய படிச்சிட்டு இருக்கேன். வாரத்துக்கு நாலு வகுப்பு. புதிய துறை...   ஆர்வமா இருக்கு...’
கார்டூனிஸ்ட்  E.P. பீட்டர்

Wednesday 4 July 2018

ஒரு அரசு பள்ளி வளாகமும், 214 தந்திகளும்

அது, 1991 ம் வருடம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி செய்துவந்தேன். புதுவை பதிப்புக்கு உட்பட்டது.  சின்னக்கடைத் தெருவில் மாஜி அமைச்சர் ப.உ.சண்முகம் வீட்டுக்கு எதிரே அலுவலகம். தங்கும் வசதியுடன் கூடியது. கிராமங்களில் நேரடியாக தகவல் பெற, மக்களைத் தேடி, சந்தை, கோயில், காடு கரை கழனி  என,  அலைந்து கொண்டிருந்தேன்.
கலெக்டர் அலுவலகம், அரசு துறை அலுவலகங்கள், போலீஸ்துறை, நீதிமன்றம், விழாக்கள், கோயில்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசியல் பிரமுகர்கள் என்று, செய்தி சேகரிக்கும் பணியை நிருபர்கள் வழக்கமாக முடித்துக் கொள்வர். இந்த வழக்கத்தை மீறுவதால் மற்ற நிருபர்களுக்கு கொஞ்சம் குமுறல் இருக்கும்.
 அண்ணாமலை கோயிலைச் சுற்றி மட்டுமே அப்போது நகரம். இப்போது, மலை சுற்றும் பாதையில் கஞ்சா புகையும் இத்யாதியும் உண்டு. அவ்வளவு சுலபமாக அந்த வழியில் போக முடியாது. ஜல்லி பெயர்ந்து கிடக்கும் அழிவுற்ற பாதை  உண்டு. அதுவும், சீனிவாசா உயர்நிலைப் பள்ளி வழியில் இருப்பதால். அந்த பள்ளி நிறுவனர் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் வல்லவர் என அறிவேன். அவரைத் தேடிக் கொண்டு கிராமமக்கள் அங்கு அவ்வப்போது வந்து செல்வர்.
 செய்திக்கு பஞ்சம் வரும் நாட்களில், அந்த பகுதிக்குள் சுற்றியலைந்து எழுதுவேன். அடுத்து சில நாட்களுக்கு அந்த பகுதியில் போலீஸ் நடமாட்டம் அதிகமிருக்கும். எனக்கும் கொஞ்சம் மிரட்டல் வரும்.
செய்தி பஞ்சமாக இருந்த ஒருநாள். ஒருவரை, அண்ணாமலை கோவில் முகப்பு மண்டபத்தில் சந்தித்தேன். முன் அறிமுகம் இல்லாதவர்தான். பேச்சின் போது கலசபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மூடிக்கிடப்பதாக சொன்னார். அந்த ஊர் எனக்கு புதுசு. போட்டோகிராபர் சோலையிடம் வழி கேட்டு பஸ்சில் போனேன். தி.மலை – போளூர் மெயின் ரோட்டில் ஆற்றைத் தாண்டி இறங்கி, அங்கிருந்த சைக்கிள் கடையில் வழி விசாரித்தேன். அடையாள அட்டையை காட்டி வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, அங்கு போனேன். வகுப்பறைக்குள் வாத்தியார்கள் சீட்டாடிக் கொண்டிருந்தனர். விசாரித்தேன். தலைமை ஆசிரியரை கடுமையாக விளாசினர். வாங்கிக் கொண்டேன்.
தலைமை ஆசிரியர் தனித்திருந்தார். சந்தித்து விபரம் கேட்டேன். சில தகவல்களை சொல்லிவிட்டு, கிராமத்தில் பெற்றோரை சந்திக்கச் சொன்னார்.ரேண்டமாக, 15 பேரை வீடுகளில் சென்று சந்தித்து பேசினேன். ஆசிரியர்கள் மீது கடும் குற்றச்சாட்டு கூறினர். அவை:
கந்துவட்டிக்கு பணம் விடுகின்றனர்.
வட்டி பிரிக்க மாணவர்களை அனுப்புகின்றனர்.
முறையாக வகுப்புக்கு வந்து பாடம் நடத்துவதில்லை.
வீடு, விவசாய வேலைக்கு மாணவர்களை பயன்படுத்துகின்றனர்.
இவற்றை தடுக்க முயன்ற தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி வகுப்பு புறக்கணிப்பு நடத்தினர். வகுப்பை புறக்கணிக்கும் ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளியை புறக்கணித்திருந்தனர்.
இதை செய்தியாக்கி அனுப்பினேன். நாளிதழில் முக்கால் பக்கம் வந்தது. மறுநாள் கல்வி அதிகாரிகள் எல்லாம் பள்ளிக்கு விரைந்தனர். தொடர்ச்சியாக அது பற்றி செய்தி போட்டேன். ஊர்மக்களே திரண்டு வந்து, நடப்பதை சொல்லிவிடுவர்.
மறுநாள், புதுவை தலைமை அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது. செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்த திரு ஹரியை சந்தித்தேன். சிரித்துக் கொண்டே, ‘ரிக்கார்ட் பிரேக்’ என்றார். புரியாமல் முழித்தேன். நிர்வாகியை பார்க்கச் சொன்னார்.
நிர்வாகி அறைக்கு போனேன். அவர் முன்,  தந்தி காகிதங்கள் அடுக்கப்பட்டிருந்தது. சிரித்துக் கொண்டே நிர்வாகி சொன்னார்... ‘எத்தனை தந்தின்னு எண்ணிப் பாருங்க... உங்கள ஒடனே அங்கிருந்து மாத்தச் சொல்லி கம்ளயிண்டு அனுப்பியிருக்காங்க... எடுத்துட்டு போயி ஒங்க மேஜையில வைங்க. நாளைக்கு வாத்தியாரு எல்லாம் அங்க வருவாங்க... பாக்கட்டும்’ என்றார். அவற்றை கட்டாக எடுத்துக்கொண்டு வெளியே வந்தனே். ஹரி அறையில் அமர்ந்து எண்ணினோம். 214 இருந்தது. ‘அவ்வளவு வாத்தியாருங்க அங்க இல்லையே...’ என்று ஹரியிடம் சொல்லி விடை பெற்றேன். அவர் சிரித்துக் கொண்டே இருந்தார்.
இன்று ஹரியின் நினைவு தினமாக இருக்கலாம்.