Wednesday 25 July 2018

தொல்லியல் நிலமும் மடுவிளை கனவும்

அதை, மடுவிளை என்பர். மதுவிளை என்போரும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், மருந்துவாழ்மலையின் வடக்கு  மடியில் உள்ளது. பருவ மழை பெய்யும் போது, மலையின் முதுகில் விழும் துளிகள், சேர்ந்து பெருகி, ‘பண்ணிப்பொட’ என்ற பகுதி வழியாக, ஆர்ப்பரித்து திரண்டு பாய்ந்து, மடுவிளை நிலப்பரப்பை அரித்து ஓடும். மண் அரிப்பால், மடுவிளையில் பெரிய ஓடை உருவாகியிருந்தது. திரண்டு சாடும் வெள்ளம், மருந்துவாழ்மலை பாசனக் கிளைக்கால்வாயின் கீழ்மடை வழியாக ஒடுங்கி சாடி, பெரும் ஓடையாகி, ஒருமைல் மேற்கில் நாஞ்சில் புத்தனாற்றில் விழும்.
அப்போது, மடுவிளையிலும் அதை சுற்றியும் குடைமரங்கள் நிறைந்திருந்தன. வாகைகளும் உண்டு. அவற்றில் பொன்வண்டுகள் ஒளிரும். மழைநீர் அறுத்து ஓடிய உடைந்த நில சரிவில்,  பொந்துகளில், ஆந்தை, கூகை, பனங்காடை, மீன்கொத்தி, தவிட்டு புறா என பறவைகள் வசிக்கும். கானாங்குருவிகள் கனன்று திரியும். கருங்குருவிகள், காக்கைகளை துரத்தும், நாகணவாய்கள் நவிங்கித் திரியும். வாலாட்டிகள் வழியறிந்து, சிறுபூச்சி புதர்களுக்குள் குடியிருக்கும்.
 என் பள்ளிப் பருவத்தில் அங்கு அதிகம் போவேன். எங்களுக்கும்,  அந்த பகுதியில் மலை அடிவாரத்தை ஓட்டி கொஞ்சம் நிலம் உண்டு. அதை, மலைக்கரை விளை என்போம். வழக்கமாக, நன்செய் சாகுபடி பணிகளுக்குப்பின்,   ஆவணி மாதத்தில், புன்செய் பணிகள் துவங்கும். அந்த காட்டு நிலத்தில், காணம், சிறுபயிறு, உளுந்து, எள்ளு என்று மாறி மாறி விதைப்பு நடக்கும்.
பரப்பில் முள் புதர்கள் நிறைந்து கிடக்கும். விதைப்பு பணி நாட்களில் அங்கேயே உளுந்தங்கஞ்சி காய்ச்சுவர். மதியம், பனம் பட்டையில் ஆவிபறக்கும் உளுந்தங் கஞ்சியை ஊற்றி, காணத்துவையலை தொடுகறியாக்கி குடித்து மகிழ்வோம்.
அங்கு, பிரண்டைக் கொடிகள் நீண்டு கிடக்கும். துாதுவளை, மட்டைக் கள்ளிகளுக்குள் ஒளிந்து படர்ந்திருக்கும். குற்று முள் செடிகள் படர்ந்திருக்கும். விடைதலை மரங்கள், குற்றி படர்ந்திரக்கும். முசுட்டைக் கொடிகள் திருகி சிரிக்கும். அதன் இலைகளை சுவைத்து மகிழ்வோம். அவற்றின் ஊடே, காட்டு முயல்களுக்கு கண்ணி வைத்து காத்திருப்பர். ஓணான்கள் அதன் மீது, நடந்து போகும். மலை உ:டும்புகள், இடுங்காமல் திரியும்.
மடுவிளையை, எப்போதும் வியப்புடன் பார்ப்பேன். அதன் பரப்பு முழுவதும், உடைந்த மண்பாண்ட சில்லுகள் சிதறிக்கிடக்கும். அவற்றை சேகரித்து திரிவேன். ஊர் பெரியவர்கள், ‘ ஓட்ட காலனத் தொடாதே மக்கா...’ என்று அதட்டி விரட்டுவர். அவ்வப்போது அந்த பகுதிக்குள் தனிமையில் சுற்றிவந்து, ஈர்ப்பை புதுப்பித்துக் கொள்வேன். அந்த ஓடுகள் நிலையை கவனித்துக்கொண்டே நடப்பேன். ஒரு காரணமும் தெரியாது. முதியவர்கள் பார்த்தால், அதட்டி விரட்டுவர்.
ஒருமுறை, மண் சிற்பத்தில் உடைந்த தலை ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்த போது, முதியவர் ஒருவர் அதட்டி, பிடுங்கி எறிந்துவி்ட்டார்.
உடைந்த மண் சில்லுகள் பற்றி, ஆலடிவிளை ஊரில் வாய்மொழி கதை உண்டு.  ஊர் உருவாகும் முன், மலை அடிவாரப் பகுதியில் குயவர்கள் வசித்தனராம். அவர்கள், மயிலாடி, வம்பவிளை அருகே நாராயிணி குளத்தில் மண் எடுத்து, பாண்டங்கள் வனைந்தனராம். அந்த பாண்டங்கள், எளிதில் உடையாத தன்மையுடன் இருந்தனவாம். மண் பாத்திரங்கள் உடையாவி்ட்டால், பிழைப்பு நடத்தவது அரிது என்று எண்ணி, இடம் பெயர்ந்து விட்டனராம்.
இந்த கதையின் மூலத்தை அறியேன். நாகர்கோவில் இந்து கல்லுாரியில், வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றிய திரு. ராமச்சந்திரன் அவர்களிடம், நான் கல்லுாரியில் சேர்ந்த போது, இது பற்றி கூறினேன். அவர் சில மாணவர்களுடன், மடுவிளையை ஆய்வு செய்தார். அதில் அவர் கண்டறிந்தது என்ன என்று தெரியவில்லை. ஒருமுறை அது பற்றி விசாரிக்க போயிருந்தபோது, நோய்வாய்ப்பட்டிருந்தார். தொடரமுடியவில்லை.
மடுவிளை ஒரு முக்கியமான, தொல்லியல் தளமாக இருந்திருக்கலாம். முறைப்படி ஆய்வு செய்திருந்தால், வாழ்வியல் பற்றியும், வரலாறு பற்றியும் முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கலாம்.
நான், சென்னை வரும் முன்பே, மடுவிளை சிதைந்துவிட்டது. அதன் பரப்பை  புரட்டிப் போட்டு வேலிக்குள் அடைத்துவிட்டனர். அதன் உரிமையும் பல கைகளுக்கு மாறிவிட்டது.  இப்போது, அது மற்றொன்றாகி விட்டது. நுழைவதும் அரிது. மலையில் விழும் மழை நீரை, முறைப்படுத்தி ஒடுக்கி விட்டனர். பறவைகளுக்கு பொந்துகள் இல்லை. அது விளை நிலமாக்கப்பட்டுவிட்டது. அதன் வரலாறு மண்ணில் புதைந்து அழிந்து விட்டது.
மலைக் கரையில் என், 65.05 செண்ட் நிலப்பரப்பையும் விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். அந்த பரப்பு பற்றி  பெரும் கனவு இருந்தது. அது, கடந்து போய்கொண்டிருக்கிறது. 

2 comments:

  1. இது போன்ற மலரும் நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும் .ஆனால் நீங்கள் வர்ணித்துள்ள விதம் அருமை
    பார்க்க ஆவலாக இருக்கிறது. 😩

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனம் உற்சாகப்படுத்துகிறது.

    ReplyDelete