Friday 20 July 2018

போதையில் கிருஷ்ணர் வளர்ச்சியில் காந்தி– மனசின் கதை 3

அப்போது சத்திய சோதனையை அறியேன்.  ‘காந்தி தாத்தா நம் தாத்தா...’ என்று துவங்கும் அழ.வள்ளியப்பாவின் பாடல் வகுப்பறையில் அறிந்தது.  அம்மாவும் கொஞ்சம் உரு ஏற்றிவிடுவார். அவ்வப்போது வாயில் உருண்டு இம்சை படும். வீட்டில் முன் அறை தெற்கு சுவரில், வரிசையாக  நான்கு போட்டோக்கள். நடுவில் காந்தி படம். கொஞ்சம் பெரிதானது.  ஓவியர் திருவடியின் கைவண்ணத்தில்... உறுதியான காப்பு சட்டகத்துக்குள் அடைத்தது. எப்போதும், காந்தி குளிருக்கு போர்த்திக் கொண்டிருப்பது போல் தோன்றும். அப்பாவுக்கு அந்த காந்தியை மிகவும் பிடிக்கும்.
அந்த வரிசை படங்களின் முகத்தில்தான் தினமும் விழிப்பேன். அறுவடை காலங்களில், அந்த அறையை நெல் நிறைத்து விடும். அதன் மேல்தான் இரவில் படுத்திருப்பேன். அப்போது, காந்திக்கு அருகே இருப்பது போல் தோன்றும். நுாலாம் படை படிந்த  படக்கண்ணாடிகளை, அந்தநாட்களில் துடைத்து விடுவேன். மெனக்கெட்டு மேலே ஏற வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்.
அது, 1968 ம் ஆண்டு என்று நினைவு . காமராஜர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். என், எட்டேமுக்கால் செண்ட் நில இயற்கை மரத் தோட்டம், அப்போது தரிசாக கிடந்தது. சில தென்னை மரங்கள், ஒரு புளி, பூவரசு மரங்கள் மட்டும்  நின்றன. அது ஊரில் முகப்பில் உள்ளதால் அங்குதான் பொதுக்கூட்டம். அப்போது, காமராஜர் ஒரு கதர் நுால் மாலையை என் அப்பாவுக்கு போட்டதாக  ஊரில் சொல்வர். அப்பா சொன்னதில்லை. அந்த மாலை, காந்திப்படத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடி ரிங்கல்தவுபே உயர்நிலைப்பள்ளியில், 7 ம் வகுப்பு சேர்ந்திருந்தேன்.  போட்டிகள் அறிவித்தனர். பொதுவாக, என் நிறத்தை முன்நிறுத்தி, எந்த நிகழ்வுகளிலும் ஆசிரியர்கள் சேர்க்க மாட்டர். வலுக்கட்டாயமாக சேர்ந்தாலும் இம்சைதான் படுவேன். புறக்கணிப்புகளை மீற வேண்டும் என்ற வெறி மனதில் கனன்று கொண்டிருந்தது.  அறிவிப்பு வந்த போது, மாறுவேட போட்டிக்கு பெயர் கொடுத்து விட்டேன்.
ஒரு வெறியில் கொடுத்தேனே தவிர, எப்படி நிறைவேற்றுவது. உரிய தளவாட கருவிகள் உண்டா... என்ன வேஷம் போடுவது... இப்படி எல்லாம் சிந்தனை அலைக்கழிக்க  ஒன்றும் புரியவில்லை.  மறுநாள் வகுப்பறையில் ஒரு ஆசிரியர், ‘லே... நீ என்ன வேஷம் போடப்போற...’ என்றார். பயத்தில் கலங்கிய கண்ணுடன் யோசித்தேன். ‘செணம் சொல்லுல...’ என்று அவசரப்படுத்தினார்.
மனதில் சித்திரங்கள் வந்து போயின. மாறி மாறி ஒரு படம் வந்தது. சொல்லிவிட்டேன். அப்பாவுக்கு பிடித்த  திருவடியின் ‘காந்தி...’
வகுப்றையில் ஒரே எள்ளல். நவிச்சியத்துடன் ஏளனமாக சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘காந்தியாமில்ல... அவரு ஒன்னப்போலயா கருப்பு. போல... ஒழுங்கா போயி நாலு மாட்ட மேய்ச்சி பொழைக்கிற வழிய பாருல...’ ஆசிரியரின் எள்ளலுடன் வகுப்பறையில் எனக்கு எதிராக குரல்கள் நிறைந்தன.
எதுவும் சொல்லாமல், பார்த்துக் கொண்டிருந்தேன். மனசில் மருந்துவாழ்மலையும், காந்திபடமும் வந்து போயின. ‘எனக்குத்தாம்ல மொத பிரேசு... பாருங்க...’ மனதில் சொல்லிக் கொண்டேன்.
பள்ளியில் இருந்து என் ஊர், 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இருவேளை, 8 கி.மீ., நடக்க வேண்டும். அன்று வீட்டுக்கு புறப்பட்ட போது, காந்தியை மீண்டும் மனதில் பதித்தேன். காந்தியாவதற்கு தேவையான கருவிகளை பட்டியலிட்டபடி நடந்தேன்.
அகன்று உருண்ட மூக்கு கண்ணாடி, ஊன்று கோல், உடலை மறைத்து மூடிக் கொள்ள துண்டு, உடுத்த இடுப்பு துண்டு,  அணிய செருப்பு. நுாற்க ஒரு ராட்டை, ஒட்டிக் கொள்ள வெள்ளை மீசை. தலையை வழுக்கையாக்க... இவற்றுக்கு என்ன செய்வது... சிந்தித்துக் கொண்டே நடந்தேன்.
வீட்டை சேரும் முன் சிறு துலக்கம் ஏற்பட்டது. உடுத்தவும் போர்த்தவும் அப்பாவின் பழைய வேட்டியை பயன்படுத்தலாம். வட்ட பிரேம் போட்ட கண்ணாடி அணிபவர் உண்டா என்று யோசித்தேன். வேதக்கோயில் விளை சொக்கலிங்கம் தாத்தா நினைவுக்கு வந்தார். ராட்டைக்கு... நுால் நுாற்கும் பேபி அக்காவும், பவுஸ் அக்காவும் நினைவுக்கு வந்தனர். செருப்பு கண்டிப்பாக கிடைக்காது. ஊரில் யாரிடமும் இல்லை.
மீசைக்கு... வழியில் எருக்கம் செடியில் காய் முற்றி வெடித்து விதை பரவுவதைப் பா்த்தேன். அதை சேகரித்துக் கொண்டேன். ஓட்டை கண்ணாடி பிரேம் கிடைத்தது. அப்பாவின் வேட்டி துண்டுகளும் கிடைத்தன. ஒதுக்கிப் போட்ட உழவு கம்பு ஒன்றை ஊன்றுகோலாக எடுத்துக் கொண்டேன்.
ராட்டைக்காக ஓடினேன். முதுகில் இரண்டு சாத்து வைத்து. ‘ போல அந்தால... காந்தியாமில்ல காந்தி... இவுரு புடுங்கிருவாரு...’ என்று விரட்டியடித்தனர். சரி பாதகமில்லை. இருப்பதை வைத்து சமாளித்துவிடலாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.
அன்று இரவே, ஓர் ஒத்திகை பார்த்தேன். கொஞ்சம் திருப்தி வந்தது. கருவிகளை பத்திரப்படுத்திக் கொண்டேன். மறுநாள், காலையில் விவசாயப் பணியைத் தொடர்ந்து பள்ளிக்கு ஓடினேன். மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் ஒருமுறை ஒத்திகை. விட்டுப்போன கருவிகளை யாரிடமாவது பெறமுடியுமா... என்று சிந்தித்தேன். இரவெல்லாம் காந்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒப்பனை செய்தபின், ‘உங்களைப் போல இருக்கிறேனா...’ என்று திருவடியின் காந்தியைக் கேட்டுக் கொண்டேன். அந்த புன்னகை பிடித்திருந்தது.
போட்டி நாள் வந்தது. பெயர் கொடுத்திருந்தவர்களை அழைத்தனர். ஒரு வகுப்பறைக்குள் போட்டு பூட்டினர். மாதச் சம்பள குடும்பத்து மாணவ மாணவியர் ஒப்பனை செய்ய உதவியாக பலர் வந்திருந்தனர்.
நான், மூன்றே நிமிடங்களில் காந்தியாகி விட்டேன். என் அருகில்  அண்ணன் குமரேசன். மருங்கூர் அருகே சிறிய கிராமத்தை சேர்ந்தவர். ராஜா வேடம் போட்டிருந்தார். அவரும் சீக்கிரமே தயாராகிவிட்டார். நீண்ட ஒப்பனையிலும் சிலர் திருப்தி படவில்லை. உதவிக்கு வந்தவர்கள், ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருந்தனர். அதைப் பார்த்து சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். ஏக்கமாகவும் இருந்தது.
என் நண்பன், பிரான்சிஸ் கிறிஸ்டோபர் என்ற ரவி. மயிலாடி பஞ்சாயத்து நிர்வாக அலவலரின் மகன். கிருஷ்ணர் வேடம் போட்டான். அவனுக்கு ஒப்பனை செய்துவிட, ஐந்து பேர் வந்திருந்தனர்.  ஒப்பனை செய்ய திரண்டிருந்தவர்கள், என்னை பார்த்து எள்ளல் செய்வதை புரிந்து கொண்டேன். பரிசு கிடைக்காது என்ற மனநிலை வந்துவிட்டது ஆனாலும், தொட்டதை முடிக்கும் உறுதி திடமாக இருந்தது.
போட்டி ஆரம்பமானது. முதலில் ராஜா. பள்ளி வளாகத்தில் சதுர வடிவ பாதையில் சுற்றி வந்தார்.  அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த சுற்று யாருக்கு... கதவருகே நின்ற வாத்தியார், ‘லே... காந்தி நீ போ...’ என்று விரட்டிவிட்டார்.  கம்பு ஊன்றியபடி, வளாகத்தை, புன்னகை பூக்க முயன்று வலம் வந்தேன். அவ்வப்போது, கண்ணாடியை சரி செய்து கொண்டேன். ஒட்டு மீசை விழாதவாறு மேல் உதட்டை நிமிட்டி கவனித்துக் கொண்டேன். ஒரே ஆர்ப்பரிப்பு. ‘லே... காந்தி... காந்தி... வாரம்லே...’  என்று மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். என் சுற்று முடிந்ததும், அறைக்குள் சென்று, ஒப்பனையை விலக்கினேன். ஒப்புக் கொண்டதை முடித்து விட்டேன்.
போட்டி முடிவு வந்தது. பரிசளிப்பு நடந்தது. கிருஷ்ணர் முதல் பரிசு பெற்றார். காந்தியின் பெயர் ஆறுதல் பரிசுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. கூட்டத்தின் கடைக் கோடியில் நின்ற நான், மருந்துவாழ்மலையைப் பார்த்துக் கொண்டே நடந்தேன்.
ஆனால், பள்ளிக்கு வந்து போகும் போது,  பொது இடங்களில்... ஏதோ சில குரல்கள், ‘காந்தி வாராம்லே...’ என்று சுட்டின. காந்தி பாதிப்பில் பல நாட்கள்  சுட்டுதல் நீடித்தது. அது உவப்பாக இருந்தாலும், வெறுமை கனன்று கொண்டே இருந்தது.
என் மகளுக்கு அப்போது, 7 வயது.  காந்தி பிறந்தநாள் அன்று அதிகாலை, கிண்டி, காந்திமண்டபத்துக்கு,  அழைத்து போனேன். அங்கிருந்த சிலையை பார்த்து, வீட்டுக்கு வந்ததும் ஒரு படம் வரைந்தாள். அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அப்பாவின் காந்தியை விட, மகளின் காந்தி பிடித்தமாகிவிட்டார்.
இப்போது, கிருஷ்ணர் போதையில் உழல்கிறார். காந்தி, பல ஆயிரக்கணக்கான வளர்ச்சி செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment