Wednesday 22 August 2018

நிறைவேறாத உரையாடல்...

அவரது பெயரில், கொஞ்சம் நிலம் உண்டு. இரண்டு பகுதிகளில்... வயல், தென்னந்தோப்பு, மாந்தோட்டம் என்று... தோவாளை பாசனக்கால்வாய், மெயின் மடை வெள்ளம் பாயும். ஒன்றில், மரியம்மாள் மகள் செல்லத்தாயி என்றும், மற்றொன்றில் ராஜமணி மனைவி செல்லத்தாயி என்றும் பத்திரம் பதிவாகியிருந்தது. ஒருமுறை அப்பாவிடம் இது பற்றி கேட்டேன். முதல் சொத்து, அம்மாவின் பெற்றோர் போட்ட தங்கநகைகளை விற்று வாங்கியதால், தாயாரை துணைப் பெயராக பதிவு செய்ததாக கூறினார்.
முதல்வராக கருணாநிதி, 1989 ல் பதவி வகித்த போது, குடும்ப சொத்தில், பெண்களுக்கு உள்ள உரிமையை சட்டமாக்கினார். அதையொட்டிய நாளில் ஒரு முறை ஊர் சென்றிருந்த போது, அந்த சட்டப்படி சொத்து பிரிப்பதை என் பெற்றோர்  உறுதி செய்தனர். அப்பா மரணத்துக்குப்பின் அந்தப் படியே, பிரித்தோம். என் உடமையும் அம்மா நிர்வாகத்தில் இருந்தது.
பிச்சிகுடியிருப்பு அம்மாவின் சொந்த ஊர். பிச்சி என்பது, ஒரு வகை குற்றுச் செடி. விரும்பத்தக்க வாசனையுடன் பூக்கும். எங்கள் குடும்பங்களில் சுப நிகழ்வு, வழிபாடு போன்றவற்றில் முக்கிய இடம் பெறும். சென்னை வாசிகள் ஜாதிமல்லி என்பர்.
ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, லண்டன் மிஷன் அமைப்பு சார்பில், 1800 களில், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த, ஜெர்மனி பாதிரியார் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தெளபே, இந்த ஊர் பெயரை, ஜேம்ஸ்டவுண் என மாற்றினார். மதம் மாறியதில், என் அம்மாவின் மூதாதையர்களும் உண்டு. அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில்தான், ஜேம்ஸ்டவுண் தேவாலயம் உள்ளது.
சில தலைமுறைகளுக்கு பின், என் தாயார் மூதாதையர் குடும்பம், மீண்டும் பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு திரும்பியது. ஆனாலும் பெயர் ஒட்டுகளில், கிறிஸ்தவம் படிந்தது. அது இன்னும் நீங்கவில்லை. என் அம்மா வழி குடும்பத்தில், இப்போதும், ஏசுதாசன், ஞானமணி, அமர்தியா போன்ற பெயர்கள் உண்டு. என் தாய்மாமன் மகள் பெயர் மரிய ஜூலியட். அவர்கள் கிறிஸ்தவ வழிபாட்டு முறையை கடைபிடிப்பவர்கள் அல்ல.
திருமலய பெருமாள்... (ஜாதி ஒட்டு உண்டு) – மரியம்மாள் தம்பதிக்கு, ஒரு மகன்; இரண்டு மகள்கள். முதலாமவர் திருமணி (ஜாதி ஒட்டு உண்டு). அஞ்சுகிராமம் ஊராட்சி தலைவராக பணியாற்றிய போது, பொது சேவையில் கொஞ்சம் சொத்தை இழந்தவர். அடுத்தது பொன்னம்மை. கடைக்குட்டி என் தாயார் செல்லத்தாயி.
பிச்சி குடியிருப்பு ஊரில் திறன்மிக்க நடுத்தர வேளாண் குடும்பம். சோளம், கேழ்வரகு, தெங்கு, காய்கறிகள், வாழை, உள்ளி, கொல்லமிளகு, உளுந்து, தட்டைப் பயிறு, பச்சை பயிறு என பல்பயிர் சாகுபடி செய்வர். திறன்மிக்க உழவு மாடுகளும், கவலை மாடுகளும், கறவை மாடுகளும் உண்டு. வசதியான நீண்டு அகன்ற சுற்றுச்சுவருக்குள் வீடும் சுற்றிச்சூழ களமும் விஸ்தாரமானது.
தேவாலயத்தை நோக்கி தெற்கு முகமாக, எழில்மிக்க பூந்தோட்டம். ஐரோப்பிய பாணியிலானது. ஒரு மருங்கில் பன்னீர் மரம். அது, பூத்து தெளிவது மனப்பரப்பில் மகிழ்வை தரும். மறு மருங்கில் வளர்ந்த ஒற்றை பெருந்தடியுடன்  கொல்லாமரம். அதாவது முந்திரி மரம். அதையொட்டி பூவரசு.  சுற்றுச்சுவரை ஒட்டி, தோவாளை பாசனக்கால்வாய் வெள்ளம், மடையில் விழுந்து கிளைக்கால்வாயில் புகுந்து ஓடும். கால்வாயில் சிறுநண்டு, நத்தை, பொத்தி, கணியன், மானா என, சிறு உயிர்கள் களிநடனம் புரியும். மதிலுக்கு அப்பால், தோவாளை பாசனக்கால்வாய். பருவ காலங்களில் பூந்துாவலுடன், நீர் வீழ்ச்சி பெறும். காற்று சுழன்றடிக்கும் போது, நீர் எழுச்சியாகி முயங்கித்திரியும். நீர் வீழும் போது மெல்லிய ஓசை இதமளிக்கும்.
இந்த சூழலில் பிறந்து வளர்ந்தவர், என் தாயார்.
திருச்செந்துார் அருகே குட்டம் ஊரில் இருந்து, 18 ம் நுாற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஒன்று, சாமிவேல் மகன் ஒற்றைவீரன் குடும்பம். அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாராயணன்... ( ஜாதி ஒட்டு உண்டு) – தாமரை வடிவு மகன் ராஜமணி. இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அளவிலான விளையாட்டு வீரர். கபடி, கிளிதட்டு போன்ற குழுவிளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவர். சார்ந்த அணிக்கு பதக்கங்களை குவித்தவர். இவருக்கு செல்லத்தாயியை திருமணம் முடித்தனர்.
என் தாய்மாமன் திருமணி, திராவிட அரசியல் பிரமுகர். அவரது அரசியல் தொடர்பு, திருவிதாங்கூர் மண்ணில், கட்சி, ஜாதி அரசியலைத் தாண்டி பலருடன் நெருங்கிய நட்பாக மலர்ந்திருந்தது. அதன் விளைவாக நிச்சயமானதுதான் இந்த திருமணம்.
...1

No comments:

Post a Comment