Thursday 4 April 2019

பன்றியால் வாழும் சரக்கொன்றை

வசந்தத்தை வரவேற்பதில் கொன்றைக்கு முக்கிய பங்கு உண்டு. ஏப்ரல் துவங்கினால், மஞ்சள் கொத்துக்கள் மலர்ந்து மனதை அள்ளி வசந்தத்தை உணர்த்தும்.  மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்து, குலைக்குலையாய் மலர்கள் குலுங்கும். கொன்றைக்கு, இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களும் உண்டு.
என் வீட்டருகே ஆதம்பாக்கம், குன்றக்குடி நகர் பிரதான தெருவில் ஒரு கொன்றை மரம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நடைபயிற்சியின் போது கண்டேன். ஏப்ரல் மாதங்களில் தவறாமல் எட்டிப் பார்க்க வைக்கும்.
இப்போதும் மார்ச் இறுதியில் அந்த மரம் பற்றிய நினைவு வந்தது. நேற்று காலை யோகப்பயிற்சிக்கு சென்ற வழியில் கவனித்தேன். வெறும் கிளைகளாக உள்ளது. அடியில் சில சுள்ளி கொப்புகள் உயிர் இருப்பதை உணர்த்தின. சில நாட்களில் பூக்க வாய்ப்பு உள்ளது.
நிலமங்கை நகர், இளங்கோ தெரு முனையில் ஒரு சிறிய மரம் உள்ளது. அதில் இரண்டு குலை பூத்துள்ளது. நான் பயிற்சி செய்யும் ஆதம்பாக்கம் மனவளக்கலை மன்ற வளாகத்தில் சிறிய கொன்றை நிற்பதை கவனித்தேன். அது பூத்து குலுங்கி ஈர்த்தது. அந்த வளாக காவலாளியை அழைத்து காட்டினேன். வியந்து பார்த்து, ‘இங்கே தான் இருக்கேன். பார்க்க கிடைக்கலியே...’ என்று சிரித்தார்.
‘பொன் என கொன்றை மலர...’ என்கிறது நற்றிணை. பொன் ஆபரணங்களை கோர்த்தது போல் கொன்றை  மிளர்வதைக் கண்டால் பரவசம் தோன்றும்.
‘மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே...’ என்று சிவனை சுட்டுகிறது, ஏழாம் திருமுறை: 239 வது பாடல்.
சில ஆண்டுகளுக்கு முன், திருப்போரூர் – திருக்கழுக்குன்றம் சாலையில், சென்றுகொண்டிருந்தேன். இடையில் நீண்ட குறுங்காடு. குரங்குகள், புளிய மரத்தில் தாவியது கண்டு, காரை ஓரங்கட்டினேன். காட்டில் மஞ்சளாய் மிளிர்ந்தது. சரைக்கொன்றை சிரித்தது. நீண்ட நேரத்தை அங்கு கழித்தேன். அதன் பின் அந்த குறுங்காட்டை ரசிப்பது வழக்கமாகிவிட்டது.
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மூயச் சூரானைத்
தன்னேர் பிறனில் லானைத் தலையால் வணங்குவார்க்
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே...
என்கிறது, இரண்டாம் திருமுறை : 668 ம் பாடல்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்சைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிலிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே...
என்கிறது, ஏழாம் திருமுறை : 239 ம் பாடல்
முல்லையில் பேயனார் பாடலில் கொன்றை மலரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. காட்டில் மலர்கள் பூத்திருப்பதை கண்டு காதலியிடம் கூறுவதாக அமைந்த இப்பாடலில், கொன்றை மலர் பற்றிய குறிப்பு உள்ளது.
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றாற் புறவே -
பேரமர்க் கண்ணி ஆடுகம், விரந்தே...
என்கிறது, ஐங்குறுநூறு : 412 வது பாடல்.
காட்டில் நடந்து வரும் ஒருவன், காதலியின்  உடல் அழகுக்கு பல மலர்களை உவமையாக உணர்கிறான்.  உடல், கொன்றை மலர் போல், பொன்வண்ணத்திலும், கூந்தல், காயா மலர் போலவும், அணிந்துள்ள நகைகள் வெண்மலர் போலவும் மிளிர்வதாக எண்ணி இந்த பாடலை பாடுகிறான்.
பொன்னென மலர்ந்த கொன்றை; மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னல மெய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், நாமே-
வாணுதல்அரிவையோ டாய்நலம் படர்ந்தே...
ஐங்குறுநூறு : 420 வது பாடல்.
ஒருவன் காட்டு வழியில் பூத்திருக்கும் கொன்றை மற்றும் குருந்த மலர்களை ரசித்து செல்வதை உணர்த்தும் பாடல்.
நன்றே, காதாலர் சென்ற ஆறே
நன்பொன் அன்ன சுடரிணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே...
 –ஐங்குறுநூறு : 436 வது பாடல்.

கொன்றை மரத்தின் தாவரவியல் பெயர் Cassia Fistula. Fabaceae குடும்பத்தைச்  சேர்ந்தது. ஆங்கிலத்தில், Golden Shower, Indian-Laburnum, Pudding Pipe Tree எனவும் அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை தாயகமாக கொண்டது.
பத்து மீட்டர் வரை வளரும். தாய்லாந்து நாட்டின் தேசிய மரம், மலராக அங்கீகாரம் பெற்றுள்ளது. மஞ்சள் மற்றும் மஞ்சள் ஆரஞ்சு கலந்த வண்ணப் பூக்களை கொண்டது. கேரளாவில் மாநில மலராக அங்கீகரித்துள்ளனர். சித்திரை புத்தாண்டு அன்று, மலையாள மொழி பேசுவோர், கொன்றை மலரை கொண்டாடுவர்.
இதன் பழம்,  கறுப்பு வண்ணத்தில் ஊது குழல் போல், 60 செ.மீ., நீளம் வரை இருக்கும். பழத்தை குடைந்து எடுத்து, தோட்டை, தீ மூட்டும் குழலாகப் பயன்படுத்திய மரபும் தமிழகத்தில் இருந்தது. இதை, ‘கொன்றையம் தீம்குழல்’ என்பர்.
கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயிற்
கொன்றையம் தீம்குழல் கேளாமோ தோழீ
என்கிறது சிலப்பதிகாரம்.
துணர்க்காய்க் கொன்றை குழற்பழம் ஊழ்த்தன;
அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தன
மாணலம் இழந்தவென் கண்போன் றனவே
என்கிறது ஐங்குறுநூறு, 458 வது பாடல்.
பல மொழிகளிலும் சொல் விளங்கி இனிமை வளர்க்கிறது கொன்றை.
அரபு மொழியில் கியார் சாம்பார்.
 அசாமில் சொனாரு, வங்காளத்தில் சொனாலு, பண்டார் லத்தி, பர்மிய மொழியில்  ஙூ வு என்றும், சீனாவில் ஆ போ லே என்றும், குஜராத்தியில் கர்மாலோ, இந்தியில் பெந்த்ரா லத்தி, இந்தோனேசியத்தில் தெங்குலி, சாவகத்தில் திரெங்குலி,  கன்னடத்தில், கக்கே என்றும், மலையாளத்தில்  கனிக்கொன்னா என்றும்,  சிங்களத்தில் எகெல என்றும், தெலுங்கில் ரெயீலா என்றும், உருதுவில் அமல்தாஸ் என்றும் அன்புடன் பெயர் பெற்றுள்ளது.
கொன்றை மரத்தின் விதை, கரடி, முள்ளம் பன்றி, காட்டுப்பன்றி, நரி போன்ற விலங்குகளால் பறவுகிறது. இந்த மிருகங்கள் இல்லாவி்ட்டால், கொன்றைக்கு தொடர்ச்சி இல்லை. இதை, தவரவியல் அறிஞர் ராபர்ட் ஸ்காப் ட்ரூப் கண்டறிந்துள்ளார். இவர் எழுதிய, Silvi culture of Indian Trees என்ற நுாலில் இது பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இயற்கையின் உறவு  எளிமையானது என்பதை இந்த தகவல் உணர்த்தும். கொன்றை இலையை ஒரு வகை பழந்தின்னி வவ்வால்கள் தின்பதாகவும் தாவரவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment