Thursday 14 March 2019

புத்தரும், ஆர்ப்பாக்கம் தம்மமும்

பேராசிரியர் தமிழ்ப்பரிதி அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு திட்டம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள், உத்திரமேரூர் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு போனோம். அங்குள்ள ஆதிகேசவபெருமள் கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். கோயிலுக்கு இடப்புறம் முள்புதரில், சில சிலைகள் கிடந்தன. ஒன்றின் தலை உடைக்கப்பட்டிருந்தது. அவற்றை தமிழ்ப்பரிதி போட்டோ எடுத்தார்.
அதிகமும்  புத்தர் சிலைகள். ஒன்று மிகவும் கம்பீரமாக இருந்தது. ஒரே கல்லில் இருபுறமும் முகம் செதுக்கப்பட்டிருந்தது. மிகவும் அபூர்வ சிலை. கிராமத்தவரிடம் விசாரித்த சில தகவல்களை தெரிந்து கொண்டோம். பல நாட்டு பவுத்த ஆர்வலர்களும் அந்த சிலையை கண்டு செல்வதாக தெரிவித்தனர்.
கோயில் முன்புறம் உள்ள ஒரு சமண வழிபாட்டிடத்தில் மிகவும் பிரமாண்டமான மகாவீர் சிலை உள்ளது.  அருகே பவுத்த சமண ஆய்வு மையம் என்ற அமைப்பு தென்பட்டது. அதன் நிறுவனர்  ராஜகோபாலனை சந்தித்து பேசினோம். பவுத்தம், சமணம் தொடர்பாக சில புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். ஒரு மாத இதழும் நடத்தி வந்தார். நீ்ண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஆய்வு மையத்தின் தலைமையகம், சென்னை, அயனாவரத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
அந்த சிலைகள் குறித்து ஒரு செய்தி கட்டுரை தயாரிக்க, சில தரவுகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் அதிகாலை புத்தர் சிலையைக் காணவில்லை என, ஒருவர் தகவல் கொண்டு வந்தார். நான் போனபோது, தடயங்கள் அழிந்திருக்கவில்லை.  ஊர் மக்கள் கூடி, கவலையை வெளிப்படுத்தினர். போலீசார் வந்திருக்கவில்லை.
சிலையை, தமிழ்பரிதி போட்டோ எடுத்திருந்த அதே கோணத்தில், சிலை இல்லாத வெற்றிடத்தை போட்டோ எடுத்தோம். என் பணிஒழுங்கு வரிசைப்படி தகவல் சேகரித்தேன். ஆர்ப்பாக்கம் ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக தலைவர், போலீசார், பவுத்த சமண ஆய்வாளர் ராஜகோபாலன் என, பல தரப்பிலும் தகவல் வாங்கி செய்தி அனுப்பினேன். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ச்சியாக சில செய்திகளை பிரசுரித்தேன். சிலை கடத்தலுடன், அந்த பகுதியில் பணியாற்றும், என்.ஜி.ஒ.,வுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தை , கிராம மக்கள் எழுப்பினர். போலீசார் எதையும் கண்டு கொள்ளவில்லை.
சில நாட்களுக்கு பின், நிலைமையை அறிய மீண்டும் ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு போனேன். ஏற்கனவே தகவல் தந்தவர்களை சந்தித்து, வழக்கின் முன்னேற்றம் குறித்து கேட்டேன். ஒன்றும் நடந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. பவுத்த சமண ஆய்வாளர்  ராஜகோபாலனையும் சந்திக்கப் போனேன்.
அவர் வீட்டுக்கதவை தட்டிய போது, ஒரு பெண் திறந்தார்.  விவரத்தை கூறி, சந்திக்க விரும்புவதாக சொன்னேன். அவர் உள்ளே சென்றார். நான் தெருவில் நின்று கொண்டிருந்தேன். நீண்ட நேரம், பதில் எதுவும் வரவி்ல்லை. நீண்ட காத்திருப்புக்குப் பின், ராஜகோபாலன் வெளியே வந்தார். முன் அறிமுகம் இல்லாதவர் போல் நடந்த கொண்டார்.  மீண்டும் என்னை அறிமுகப்படுத்தியபடி, விவரத்தை சொன்னேன். அவர் முகத்தில் அலட்சியம் தெரிந்தது.
என் பேச்சு எதையும் அவதானிக்கவில்லை என, உணர்ந்து கொண்டேன். புத்தர் சிலை காணாமல் போன விவகாரம் குறித்து என் உரையாடலை நகர்த்தினேன். அப்போதுதான், ‘ அந்த செய்தியில என் பெயருக்கு முன்னே முதல்லே... அவன் பேரை போட்டிருந்தே... நீயும் அவரும் ஒரே சாதியா...’ என்று தொடங்கி, அவரது சாதி அபிப்ராயத்தை கொட்டினார். சிரித்துக் கொண்டே, ‘நான் பத்திரிகை தொழில் செய்றேன். நீங்கெல்லாம் யாருன்னே எனக்கு தெரியாதே...’ என்றேன். ‘நக்கல் பண்றியா...’ என்று துவங்கி வசவுகளை தந்தார். வாங்கி வைத்துக் கொண்டேன்.
அந்த புத்தரை கண்டுபிடிக்க பல முறை செய்தி தயாரித்துள்ளேன். ஒருமுறை விசாரித்த போது, வழக்கை மூடிவிட்டதாக தெரிவித்தனர். முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம், அதன்  பண்பாட்டு தொன்மை குறித்து பேசி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டினேன்.  நண்பர் போதி தேவவரம் காஞ்சிபுரம் கலெக்டரை நேரில் சந்தித்து, சிலை குறித்து ஒரு புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழக பண்பாட்டு அடையாளம் அந்த புத்தர் சிலை. அதில் ஆர்ப்பாக்கத்தின் வரலாற்று தொன்மை உள்ளது. நான் மதங்களை போற்றுபவன் அல்ல... பண்பாட்டை பேணுபவன். அதற்கு பக்தி அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment