Thursday 14 March 2019

அறிவைப் போற்றும் காலம்

சென்னை, அண்ணாசாலையில் அப்போது பணி செய்துகொண்டிருந்தேன். ஒரு பிற்பகல் என்று நினைவு. எங்கள் அலுவலக முகப்பில் சிறு புல்வெளியில் ஆ.இரா.வெங்கடாசலபதியைச் சந்தித்தேன். பாரதியின் ஆக்கங்களைச் செம்பதிப்பாகக் கொண்டு வருவது தொடர்பான பணிக்காக வந்திருந்தார். திட்டத்தை எளிமையாக சொன்னார். குறைந்த பேச்சும், அதிகம் உள்வாங்கும் திறனும் அவரிடம் இருப்பதை உணர்ந்தேன். அது மிகக்குறைந்த நேர சந்திப்பு.
தொடர்ந்து சில இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். உரைகளை கேட்டிருக்கிறேன். சென்னை பல்கலைக்கழக இதழியல் துறையில், கருத்தரங்கங்களில் சந்தித்திருக்கிறோம்.
அவரது எழுத்துக்களை ஊன்றி வாசித்திருக்கிறேன்; பயனுள்ள தகவல்களை பெற்றுள்ளேன். அவருடனான சந்திப்புகள் சில கணங்கள்தான் என்றாலும், நுட்பமாக பதிந்துள்ளன. சொற்கள் குறைவு... அவற்றில் கிடைத்த அனுபவம் நிறைவு.
ஒருமுறை, பிரிட்டீஷ் ஆட்சியில் நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ் பற்றிய தகவல்களை திரட்டி வந்திருந்தார். உரிய ஆதாரங்களைத் தந்து ஒரு செய்திக்கட்டுரை வெளியிடக் கேட்டார். சிறு செய்திக்கட்டுரையாக எழுதியிருந்தேன். தகவல்களை தொகுத்திருந்த விதம் அவருக்கு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். பொதுவாக, என் பணியில் இது போன்ற பின்னுாட்டங்கள் கிடைப்பது அரிது.
ஒருமுறை சென்னை பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ.ரவீந்திரன் அறையில் பேசிக் கொண்டிருந்தோம். ‘ஸ்கூட்டர்’ என்ற சொல்லை, தமிழ் படுத்தி, ‘எப்படி எழுதலாம்...’ என்று கேட்டேன். மடைதிறந்த வெள்ளம் போல், ‘குதியுந்து’ என்றார். அது காட்சியாக மனதில் படிந்தது.
அந்த சொல் அருளியதையொட்டி, ஒரு நாள் அண்ணாசலையில் தேவர்சிலையை ஒட்டி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். அருகே குதித்து பாய்ந்து ஓடிய காட்சி நிரம்பியது. அது ஒரு குதியுந்து. என் மன நிழலில் அவர் எப்போது வந்தாலும், ஒரு குதியுந்துவுடன் இணைத்து பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது. அவரது அறிவுக்கூர்மை இணக்கமானது. அவரது எளிமையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவரது சிந்தனை வழித்தடம் எனக்கு உகந்தது.
சமீபத்தில், அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவையொட்டி, சென்னை பெசண்ட்நகரில் நடந்த இறுதி நிகழ்வின் போது சந்தித்தேன். அவருடன் வந்திருந்த நண்பரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘தகவலை சரியாக உள்வாங்கி, செய்தியை மிகையில்லாமல் எழுதுபவர்’ என்று குறிப்பிட்டார். அவர் மனதில் என் மீதான எண்ணப்படிமத்தை புரிந்து கொண்டேன்.
அவரது பங்களிப்புகள் தமிழை செழிமைப்படுத்தியுள்ளது. அரிதிலும் அரிதான செயல்களை நுட்பமாக, முழுமையாக செய்யும் அறிஞர் அவர். அவரது அறிவுலக உழைப்பை பாராட்டி, விரிவும் ஆழமும் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்க நிகழ்வு சிறக்க வாழ்த்துகிறேன். சான்றோரைப் போற்றுதல் நம் தலைக்கடனே...

No comments:

Post a Comment