Thursday 14 March 2019

காற்றில் கரைந்த கலையரசி -க.மலர்விழி

அன்று, அமுதன் தொலைபேசியில் அழைத்தார். ‘ஒருவரை சந்திக்கப் போகிறோம். விரிவுரையாளர் அருள்செல்வியுடன், பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுங்கள்...’ என்று மட்டும் சொன்னார். பயணத்தின் போது, மற்ற கதைகளைத்தான் பேசி சென்றோம்.  யாரை சந்திக்க போகிறோம் என்பது தெரியாது.
குறுகலான தெருவில், ஒரே வகை வாசற்படி அமைந்த வீடுகள். இந்த தெருவில், கட்டாந்தரையாக இருந்த  இடத்தில், காய்ந்த சருகுகள் விரவிக் கிடந்தன. ஒரு, 20 அடி தூரம் நடந்தால், இடப் பக்கம், இரண்டு ஆட்டு குட்டிகள்   இலைகளை மென்று கொண்டிருந்தன.
அதை, குடிசை என்று கூற இயலாத ஒரு குடியிருப்பு. பக்கத்து வீட்டில் இருந்த பெண், உள்நோக்கி, ‘பாட்டி உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க’ என்று குரல் கொடுத்தாள்.
உள்ளிருந்து, உடல் குறுகி, தள்ளாட்டம் இன்றி மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். ரவிக்கையும், பாவாடையும்  மட்டும் போட்டிருந்தவர்,  எங்களை, ‘வாருங்கள்’ என்று கூட அழைக்காமல், திரும்பி சென்று, சில நொடிகளில் வெளியே வந்தார். இப்போது, அந்த பாவாடை, ரவிக்கை மேல், ஒரு துண்டு தாவணி இருந்தது.
அமுதனை பார்த்ததும், ‘வா மக்கா...’ என, வாஞ்சையுடன் அழைத்தார். உள்ளே சென்றோம். நான் அமர ஒரு  நாற்காலியை காட்டினார். அருகே, கட்டிலில் அருள்செல்வியை அமர்த்தி, உடன் அமர்ந்து கொண்டார். வீட்டின் மூலையில் மண்மேடு போன்ற இடத்தில், அமுதன் அமர்ந்தார். நான், மூதாட்டியை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
எங்களை, அமுதன் அறிமுகப்படுத்தினார். சிரித்த முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். கொள்ளை அழகு. மூதாட்டியைப் பற்றி, ‘இவர் தான், வில்லிசைக்க வந்த  இரண்டாவது பெண்  கலைஞர்... 1980 வரை மிகவும் பிரபலமாக இருந்தார்’ என்று  எங்களிடம் சொன்னார். 

‘தென் தமிழகத்தில், மிகவும் பிரபலமாக இருந்த ஒரே பெண் கலைஞர். மிகப் பிரபலமாக இருந்த ஆண் கலைஞர்களைவிட, 10 மடங்கு சன்மானம் பெற்றவர். இவரது கலை காலம், களிப்புடன் நகர்தது. இவரது  நிகழ்ச்சி என்றாலே இளைஞர்கள் மேடையை சூழ்ந்து விடுவர்.
‘கலை நிகழ்ச்சிகளின் போது, இவர் அணியும் புடவை, வளையல், கம்மல் ரகங்கள் எல்லாம் இவரது பெயர் ஒட்டுடன் நாகர்கோவில் கடைவீதிகளில், விற்பனைக்கு வரும். பெண்கள் விரும்பி கேட்டு வாங்குவர். இவரது வீச்சுகோல் சுழற்சியும், குரலும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும்’ என, அமுதன் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை, ரசித்து புன்னகைத்து கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த அதி அற்புத கலைஞரை ஆழ்ந்து உற்றுநோக்கினேன். சுருக்கங்கள் விழுந்து உடல் பொலிவிழந்திருந்தது. ஆனால், முகம் கலையிழக்கவில்லை. வயோதிகத்தில் வறுமை; தனிமையால் ஏற்பட்ட தளர்வு.  இவற்றின் மொத்த உருவமாய்  அமர்ந்திருந்தார் பூங்கனி.
அவரை, ‘பாட்டி’ என்று அழைத்தேன். உடனே, ‘கலகல’ என சிரித்தபடி, கட்டிலில் இருந்து எழுந்து அருகில் வந்தார். என் முகத்தை தடவி, ‘நீ பொம்பளபிள்ள தானா... உன்னை ஆம்பிளன்னு  நெனச்சு தான்  தாவணியை எடுத்து போட்டுட்டு வந்தேன்...’ என்று கூற அனைவரும் சிரித்தோம்.
என் கன்னத்தை, கைகளால் வருடி எடுத்து முத்தமிட்டார். பின், ‘வா... மக்கா, என் பக்கத்துல வந்து இரு...’ என்று அழைத்தார்.
‘ஏன் பாட்டி... நீங்க  வயசானவங்க தானே... நான் ஆம்பிளையா இருந்தா என்ன.. மேலாக்கு போடாம வரலாம் இல்லையா...’ என, கேட்டேன்.
‘இல்ல மக்கா... எத்தன வயசானாலும், ஆண்கள் கண்ணுக்கு நாம பெண்ணாதான் தெரிவோம்...’ என்ற பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறிந்து கொள்ள பெரும் அனுபவம் அவரிடம் இருப்பதை உணர்த்தியது.

ஒன்பது வயதில், வில்லிசை கற்க ஆரம்பித்தார். 12 வயது முதல் நிகழ்ச்சி நிகழ்த்த துவங்கிவிட்டார். மனப்பாடமாக, 250 கதைப்படால்களுக்கு மேல் தெரியும். எங்கும்  எழுதி வைத்தது இல்லை. அதற்குரிய கல்வியறிவை பெற வாய்ப்புமில்லை. அந்த கதைப் பாடல்களில் சிலவற்றை, சுவை குறையாமல், நினைவில் வைத்து, கணீர் என, எங்களுக்காக பாடினார்.
கலைஞர்கள், தங்களுக்கு என, ஒரு தனி முத்திரை  வைத்திருப்பர். இவரது தனித்த திறமை, வில்லின் வீச்சுக் கோலை கண்ணிமைக்கும் நேரத்தில் அனயாசமாக சுழற்றுவதில் தான். அந்த வீச்சுக்கோல் சுழற்சி, ரசிகர்களை சொக்கிப்போக வைத்தது.
ஒரு கலைஞர் பெண்ணாக, அழகும், அனயாச திறமையும் மிக்கவராக  இருந்தால், எவ்வளவு  இடர் வரும் என்பதற்கு, இவரது கலை வாழ்க்கையே சாட்சி.
ஆம்... இவர் மேடையேறி நிகழ்ச்சி நடத்திவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்ததே இல்லை. அந்த  ஊர் செல்வந்தன்  தூக்கி  சென்று, ஆசைநாயகியாக வைத்திருப்பான். இவரது குழுவினர் அந்த செல்வந்தனிடம் மோதி அவ்வப்போது மீட்பது நிகழும்.
‘எப்படி பாட்டி, அப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்தீர்கள்...’ என்றதும், நீண்ட பெருமூச்சு விட்டு சிரித்தார். அந்தச் சிரிப்பில் களிப்பில்லை; கசிந்தோடிய வலி தெரிந்தது. கனத்த மெளனம் அறையில் நிலவியது.
தலையை ஆட்டிக் கொண்டே, ‘ஒரு, 13 பேர் கூட இப்படி வாழ்ந்திருக்கேன். ஒரு கட்டத்தில் இனி இப்படி வாழ இயலாது என்று முடிவு செய்து  குழுவில் இருந்த ஒருவரை திருமணம்  செய்துக் கொண்டேன்.  திருமணத்திற்குப்பின் யாரும் தூக்கிச் செல்லவில்லை. வயசும் கூடிட்டது இல்லையா...
ஆரம்பத்தில் இளம் வயதில், மிகவும் கஷ்டமாகவும், வலியாகவும், வேதனையாகவும் இருந்தது. பின் பழக்கமாகிவிட்டது. கவர்ந்து செல்பவனுக்கு உயிராக தெரியமாட்டேன்; உடலாக  மட்டுமே தெரிவேன்...’ பெருமூச்சுடன் சொன்னார்.
பாட்டியை இறுகக் கட்டிக்கொண்டேன்.  உடல் நடுக்கத்தை, என் முதுகை தடவி நிறுத்தினார். ‘அந்த காலம் எல்லாம் முடிஞ்சு, 30 வருசம் தாண்டிருச்சு மக்கா... கலங்க வேண்டாம்...’ என்றார்.
82 வயதிலும் உணவை தானே சமைத்துக் கொள்வதும், வேலைகளை தானே செய்துக் கொள்வதும் மட்டுமே அவரை ஆரோக்கியமாக வைத்திருந்தது. அவரிடம் விடைபெற்று  வந்த இரவு, மிக நீண்டதாக கழிந்தது.
அன்று, 2018 நவம்பர் மாதம் 2ம் தேதி. காலை 9:30 மணியளவில் அமுதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு... பூங்கனி  இறந்துவிட்டார் என்ற தகவலை சொன்னது அந்த அழைப்பு. ‘ஊரிலா இருக்கிறீர்கள்’ என்றேன். சென்னையில் இருப்பதாக சொன்னார். அக்கம் பக்கத்தவர் தான் இறுதி ஊர்வலம் நடத்துவதாக சொன்னார்.
கைபேசி இணைப்பை துண்டித்த மறுகணம், பாட்டியின் நினைவுகள் நிழலாடத் தொடங்கியது. மனதுக்குள் சிறு நடுக்கம். கனத்த மெளனம். ‘பரவாயில்லை. அவருக்கு நல்ல இறப்புதான். அவர் வீழ்ந்து கெடந்தா பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் சுகமா  இறந்தாரே...’ என்ற எண்ணம் ஆசுவாசப்படுத்தியது.
பாட்டியை, அவரது ஊரில் சந்தித்து  வந்த பின், மறைந்த கலைஞர் ஓம் முத்துமாரி பெயரால் நிறுவிய வாழ்நாள் சாதனையாளருக்கான  முதல் விருதை பூங்கனி பாட்டிக்கு வழங்க, சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை  திட்டமிட்டிருந்தது.
உடல்நலக்குறைவால், பூங்கனி அந்த நிகழ்வில் பங்கேற்க சென்னை வர இயலவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட விருதை, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு வழங்க, பூங்கனி பாட்டி சார்பாக, நான் பெற்றுக் கொண்டேன். அந்த சம்பவமும் கண் முன்னே நிழலாடியபடியே உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மாணவர்களுக்கு, வில்லிசை வித்தையை கற்பித்து கொடுக்கவும், நிகழ்த்திக் காட்டவும் சென்னை வந்து, இதழியல் துறையில் கவுரவ ஆசிரியராக சில நாட்கள் இருந்தார். அப்போது, அவருடன்  கழித்த நேரங்கள்  மனதில் வந்து அலைமோதின.
இந்த நினைவுகளுடன், சென்னை பல்கலைக் கழக இதழியல் துறை பூங்கனி மறைவை ஒட்டி நடத்திய, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

No comments:

Post a Comment