Thursday 14 March 2019

மழை லில்லியும் வளர் மதியும்

கடந்த ஞாயிறன்று இரவு, உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது,  மின்னல் கீற்றுகளுக்கு இடையே இடி முழங்கியது. சென்னையில் லேசான மழை. நகரவாசிகளுக்கு இது பெரும்மழை. விவசாயிக்கு, கால்பதம் கூட தேறாது.
இடைவெளி விட்டு, இடி முழங்கிக் கொண்டே இருந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள், மழை லில்லி செடி பூக்கும் என்றார் வளர்மதி. விளக்கம் கேட்ட மகளுக்கு, அனுபவமாக பெற்ற இயற்கையின் ரகசியத்தை சுவாரசிய பாடமாக்கினார். அவரது அனுபவ அறிவு வியப்பூட்டியது.
வீட்டின் பின்புறம் இரண்டு தொட்டிகளில் மழை லில்லி செடிகளை, ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கிறார் வளர்மதி. அவை, இளம்சிவப்பு அதாவது, ‘பிங்க்’ வண்ணத்தில் மழையை ஒட்டிய நாட்களில் பூப்பதை கவனித்துள்ளோம்.
குஜராத் நண்பர் பெர்ல்ஷா, வெள்ளை வண்ண மழை லில்லி விதை குமிழ் தண்டுகள் இரண்டை, கடந்த மேமாதம் அனுப்பியிருந்தார். அவற்றை மாடித்தோட்டத்தில் விதைத்து மூன்று இலைகள் விட்டு வளர்ந்துள்ளன.
சொன்னபடியே, வீட்டின் பின்புற தோட்டத்தில் உள்ள மழை லில்லி செடிகளில் இளம் சிவப்பு வண்ண பூக்கள் நேற்று காலை மலர்ந்தன. மின்னல் இடியால் எழுச்சி பெற்ற மொட்டுக்கள் மலர்ந்தன. அந்த பூக்களைத்தான் பதிவிட்டுள்ளேன்.
பருவ மாற்ற சூழலில், செடிகளின் எழுச்சி வியப்பூட்டுகிறது.
மழை லில்லி செடி, லத்தீன் அமெரிக்கா கண்டத்தை தாயகமாக கொண்டது. பெரு, கொலம்பியாவில் அதிகம் உள்ளது. வெள்ளை, சிவப்பு, இளம் சிவப்பு, மஞ்சள், இளம் மஞ்சள், அடர் மஞ்சள் என பல வண்ணங்களில் பூக்கும் ரகங்கள் உள்ளன. இதன் குமிழ்தண்டு, நீரிழிவுக்கு மருந்தாக பயன்படுகிறது. பல்வேறு மருத்துவமுறைகளிலும் உதவுகிறது.
நீண்ட ஓரிதழ் இலை கொண்ட செடிகள், 15 முதல் 20 செ.மீ., உயரம் வரை வளரும். புல் போல் அடர்ந்து காணப்படும். தொல்காப்பியர் குறிப்பிடும் புல் இலக்கண வரம்புக்குள் இந்த செடி வருமா என்பதை அறிஞர்கள் தான் விளக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் Magic lily, Cuban zephyrlily, rosy rain lily, rose fairy lily, rose zephyr lily or the pink rain lily என, அழைக்கின்றனர். தாவர இனப் பெயர் Zephyranthes rosea. முற்றிய தண்டு குமிழ்தான் விதையாக பயன்படுகிறது. அமேசான் விற்பனை தளத்தில், மழை லில்லி தண்டு குமிழ் விதை விற்பனைக்கு கிடைக்கிறது. 
நடை பழகாத நாளில்...
அதிகாரத்துக்கு வர ஆசை
புலனாய்வு செய்தி நிருபராக அப்போது இருந்தேன். மாம்பலம், அண்ணாமலை நகரில் முதல் மாடியில் குடியிருந்தோம். தகவல்தொடர்புக்கு, பேஜர் கருவி வைத்திருந்தேன்.
மகன் பிறந்து, 10 மாதம் ஆகியிருக்கும். என் பைக் சத்தத்தை மிக துல்லியமாக அறிவான். பைக் சத்தம் கேட்ட உடன், தவழ்ந்து வந்து மாடி தடுப்பு வழியாக தலையை வெளியே நீட்டி பார்ப்பான். மாடி ஏறியதும் பேஜர் கருவியை எடுத்துக் கொள்வான். அதை அரையாடையில் தொங்கவிட்டு, சுற்றி சுற்றி வருவான். பைக் சத்தம் விஷயத்தில் அவன் ஒருமுறை கூட ஏமாந்தது இல்லை.
பக்கத்து வீட்டில், குழந்தை சிஜித். இவனைவிட, 7 மாதம் மூத்தவன். அச்சனின் பேஜரை துாக்கி விளையாடுவான். நிரம்பிய குடத்தில், பேஜரை போட்டு சிரித்தான். அன்று முதல், என் பேஜர் கருவியை, ‘காக்காவுக்கு’ போட்டுவிட்டார் வளர்மதி. அவன் விடவில்லை. மாற்று வடிவம் எடுத்தான்.
செய்திகளை விரைந்து பரிமாறவும், இருந்த நிலையிலே ரிமோட் கான்பரன்ஸ் நடத்தவும் வசதியாக ‘வாக்கி டாக்கி’ என்ற கருவியையும் பயன்படுத்தி வந்தேன். அது, 21 சதுர கி.மீட்டருக்குள் இயங்கும் அலைத் திறன் கொண்டது. காலநிலை தெளிவாக இருந்தால், 28 கி.மீ., வரை மங்கலாக சிக்னல் கிடைக்கும்.
ஒருமுறை, பூந்தமல்லி, செந்நீர்குப்பத்தில் நடந்த முக்கிய கொலை நிகழ்வு செய்தியை, அங்கிருந்து, இரைச்சல் மிகுந்த மங்கலான வாக்கிடாக்கி ஒலியில் கொடுத்தேன்.
இரவில், 10:00 மணிக்கு பின்தான் அனேகமாக ரிமோட் கான்பரன்ஸ். அதிகாலை வரை கூட சில நேரம் நீளும். பேசிக் கொண்டே இருப்போம். மகனும் உடன் இருந்து கவனிப்பான். அவ்வப்போது, வாக்கி டாக்கி ஆண்டெனாவை பிடித்து துாக்கியபடி, பேசுவது போல் இமிடேட் செய்வான்.
கான்பரன்சுக்கு இடையே நள்ளிரவில் கிடைக்கும் செய்தியை, பிரசுர வடிவில் எழுதி, இரவு பணியில் இருக்கும் சப் எடிட்டரிடம், வாக்கி டாக்கியில் வாசிப்பேன். அதையும் பார்த்துக் கொண்டு இருப்பான். சில நேரம் பேனாவை பறித்து எழுதுவது போல் கோடு போடுவான். நான் வீட்டில் இல்லாத நேரத்திலும், குறிப்பு நோட்டில், கோடுகள் வரைவதை நடைபழகாத அந்த நாளில் வழக்கமாக்கியிருந்தான்.
ஒருநாள் அவன் வரைந்த கோடுகளால் குறிப்பு நோட்டை பார்த்தேன். சிலாகித்து பேசிக் கொண்டோம். சிலாகிப்பு அடங்கும் முன், ஒரு நிகழ்வு நடந்தது.
அந்த வருட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆசிரியர் கையெழுத்து போட்ட பார்ம்:16 படிவத்தை, மேஜையில் வைத்திருந்தேன். அந்த படிவத்தில், ஆசிரியரின் கையெழுத்துக்கு கீழ், கவுண்டர் கையெழுத்து போல் கோடுகள் போட்டிருந்தான்.
ஆசிரியரிடம் தயங்கி தயங்கி இதை சொல்லி புதிய படிவம் வழங்க கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘அதிகாரத்துக்கு வர ஆசைப்படுகிறான்’ என்று கூறி, மற்றொரு படிவம் தயார் செய்து கொடுத்தார்.
அவன் வரைந்த கோடுகளையும் அவனையும், 21 வருடங்களாக பத்திரமாக பாதுகாத்து வருகிறார் வளர்மதி. புத்தகங்களை கலைத்து போட்ட போது கிடைத்த வெகுமதி.  

No comments:

Post a Comment