Monday 4 June 2018

என் மனசின் கதை....1

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, சிற்ப வடிப்புக்கு புகழ்பெற்ற ஊர். சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் கட்டும் பணிக்கு  அழைத்துவரப்பட்ட ஸ்தபதிகள்,  இங்கு தங்கி நிலை பெற்றுவிட்டதாக செவி வழியில் அறிவேன். அவர்கள் வசிக்கும் பகுதி சேந்தன்புதுார். சேர்ந்தபுதுார் என்பாரும் உளர். பேச்சுமொழியில், ‘சேந்தம்பூரு’ என்பர் அதிகம். 
மயிலாடியுடன் சேர்ந்து உருவான பகுதி என்பதால், சேர்ந்தபுதுார் ஆனது என பெயர் காரணம் சொல்லவார்  பிரபல தமிழ் வித்துவான் பூமணி. இங்குள்ள தெங்கம்பொற்றை என்பது சிறிய பாறை குன்று. இந்த கல், சிற்பம்  வடிக்க தோதானது என்பதால் சிற்ப தொழில் வளர்ந்ததாக சொல்வோர் உண்டு. இந்த பொற்றையை உடைத்து எடுத்த கல்லில்  செதுக்கிய சிற்பங்கள், பல நாடுகளில் நிற்கின்றன. இந்தியாவிலும் சென்னை மெரினாவிலும் கூட நிற்கிறது.
மயிலாடிக்கு தெற்கே, 3 கி.மீ., துாரத்தில், மருந்துவாழ்மலை, இந்திய துணைக் கண்டத்தின் தென்முனையில் உள்ள பாறைக்குன்று. இதன் வடக்கு அடிவாரத்தில் ஆலடிவிளை கிராமம். இது, என் தந்தை வழி குடும்பத்தினர் வசிக்கும் ஊர். இந்த ஊர் பெயருக்கு, சமூக அந்தஸ்து குறைவு என்று கருதி,  பெருமாள்புரம் என்றுதான் பலரும் குறிப்பிடுவர். அரசு பதிவிலும் அப்படித்தான் உள்ளது. சாதி இழிவு போல், ஊர் பெயரிலும் இழிவு உண்டு என்பதை இதனால் அறிக. இதை புரிந்து கொள்ள பல நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும்.
 ஊரில், முத்தாரம்மன் கோவிலும் அதை இணைக்கும் தெருவும், ஜெர்மனியில் இருந்து, 1800 களில் புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தவுபே பெயரில் தேவாலயமும் அதை சுற்றி, றிங்கல்றோபிபுரம் என்ற பெயரில் கிறிஸ்தவ குடியிருப்பும் உருவாகியுள்ளது. ஊரின் கிழக்கே சற்று தொலைவில்  சிறிய குடியிருப்பு தனியாக உள்ளது. அது பொன்னம்மாள்புரம் என்று அழைக்கப்படுகிறது. வினோபாஜியின் பூமிதான இயக்க நடை பயணத்தின் விளைவால் உருவான குடியிருப்பு அது. ஒவ்வொரு குடியிருப்பும், 5 செண்ட் நிலத்தைக் கொண்டது.
ஊரின் நீர் ஆதாரமாக, பேச்சிபாறை அணையில் இருந்து நீர் கொண்டு வரும், தோவாளை பாசனக்கால்வாய் உள்ளது. அது மருந்துவாழ்மலை பாசனக் கிளைக்கால்வாயாக ஆலடிவிளை கிராம எல்லை வரை பாய்கிறது. பொற்றையடி கிராமம் அருகே, குன்றுகள் சூழ்ந்த இடைவற்று குண்டில் அது நிறைவு பெறுகிறது. கிட்டத்தட்ட, 980 ஏக்கர் ஆயக்கட்டு இந்த கிளைக்கால்வாயால் பாசனவசதி பெற்றது. பாசனக்கால்யை ஒட்டி, பழைய சாலை உள்ளது. அது,  வெண்கலராஜன் சாலை என அழைக்கப்பட்டது. அந்த சாலையில் சங்கு முத்திரை பதித்த மைல்கற்கள் உண்டு.
என் குடும்ப வீடு, பாசனக்கால்வாயை ஒட்டி உள்ளது. மயிலாடியை மையமாகக் கொண்டு, 1806 முதல் புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த  ஜெர்மனி நாட்டு பாதிரியார் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தேளபே  பெயரிலான தேவாலயம், என் வீட்டின் எதிரே, பாசனக் கால்வாய் மறுகரையில் உள்ளது. அந்த ஆலயம் முழு அளவில் இயங்க  போதுமான உறுப்பினர்கள் அப்போது இல்லை. எனவே அதை சபை என்பர். ஞாயிற்றுக்கிழமைகளில், ரிங்கல்தெளபே சபையில், உபதேசம் நடக்கும். அதற்கு இரண்டு முறை, மணி அடிப்பர். அது வட்டமாக தோசைக்கல் போல் இருக்கும், வெண்கலத்துடன் சில உலோகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. லண்டனிலோ, ஜெர்மனியிலோ தயாரித்து பரிசாக கொண்டு வரப்பட்டதாக சொல்வார்கள். ஒரு ஐரோப்பிய பெண் பரிசாக கொடுத்தது என்பர். அதன்  விட்டத்தில் ஒரு ஓரம், சிறிய இரண்டு ஓட்டைகள் உண்டு. அதில் சிறிய கொச்சங்கயிறு நுழைத்துக் கட்டி, ஆலயத்தின் வலது புற வாசல் அருகே வளைந்த கம்பியில் தொங்கவிட்டு, கொட்டபுளியால் அடிப்பர். இனிமையான அதன் ஓசை, கிட்டத்தட்ட நான்கு கி.மீ., வரை கேட்கும். அதை மணி அடித்தல் என்பர்.  அப்போதைய சபை டீக்கனார் வேதக்கண் என்பவர் நிறைவேற்றுவார்.  மணி அடிப்பதற்கும் ஒரு முறை உண்டு. காலை, 8:00 மணிக்கு முதல் மணி. அதை ஒற்றை மணி என்பர். குறிப்பிட்ட எண் வரை எண்ணிக்கொண்டே, ஒற்றை எண்ணிக்கையில் மணியை அடிப்பார். அடுத்து, 8:30 மணிக்கு இரண்டாம் மணி ஒலிக்கும். அதை இரண்டை மணி என்பர். குறிப்பிட்ட நெடி இடைவெளியில், இரட்டை நிரலில் மணியை அப்போது அடிப்பார். அந்த மணி அடிப்பதற்கு முன், சபை உறுப்பினர்கள், ஆலயத்துக்குள் சென்றுவிட வேண்டும். ஆராதனை துவக்கம்தான் இரட்டை மணி. அந்த மணி ஒலிக்கும் போது, சபையில் குறும்புக்கார ஊறுப்பினர்கள், ‘ வந்தால் வா... வராவிட்டால் போ’ என்ற தொனியில் மணி ஒலிப்பதாக எங்களிடம் கிண்டலாக சொல்வர். 
 சபையில் உபசேதம் செய்ய உபதேசியார் பாலஸ் என்பவர் மயிலாடியில் இருந்து வருவார். அவரை, ‘ஒதேசியார்’ என்று அழைப்பர். கிண்டலாக, ‘ஓதேசி’ என்பாரும் உண்டு. சபையில், இசையுடன் பாட்டும், காணிக்கை சேகரிப்பும் உபதேசமும், கண்ணீர் மல்க ஜெபமும், கெஞ்சி மன்றாட்டும் நடக்கும்.
குளித்து, சுத்தமான ஆடை உடுத்தி, ஆண்களும் பெண்களும், குழந்தைகளுடன் சபைக்கு போவார்கள். பெண்கள் சேலை தலைப்பால் முக்காடிட்டிருப்பர். வாசல் படிக்கல் அளவில் பைபிள், ஞானப்பாட்டு கீர்த்தனை மற்றும் இசைப்பாடல் புத்தகங்கள் வைத்திருப்பர். முக்காடு குலைந்துவிடாமல் கவனமாக இருப்பர். கலைந்தால், உடனே சுட்டுவிரல்கள் நீளும். வாயை குவித்து, ‘உச்...’ என, ஓசை எழுப்பி, முக்காட்டை சரி செய்ய சைகை வைப்போரும் உண்டு. அன்று சபை முடிந்ததும், ‘ஏட்டி... ஓர்ம இல்லாமயா இருக்க...’ என்று துவங்கி கடும் வசவுகள் சுற்றிவளையும். எனவே, முக்காடில் கவனமாக இருப்பர் பெண்கள். சில நேரம் அது குடும்பங்களுக்குள் பெரும் சண்டையாக மூண்டு, அடிதடியாகி பகையானதும் உண்டு. 
சிலநேரம் முக்காட்டை, குழந்தைகள் இழுத்து குலைத்துக் கொண்டே இருப்பர். தாய் எரிச்சலில் இருந்தால் முதுகில் நாலு சாத்து வைப்பார். அது, கண்ணீருடன் மறுகித்திரிந்து ஒரு தனி்ப்பாடல் பாடும். 
பல பெண்கள் கருணையுடன் குழந்தைகளை விலக்குவர். அருகே பார்த்திருக்கும் பெண் சும்மா இருக்காமல், ‘முதுகுல ஒண்ணு போட்டு... அந்தால வெரட்டி வுடாமுட்டி...’ என்று முணுமுணுப்புடன் அறிவுரை சொல்வதும் உண்டு.
அந்த ஊர் சபை குடும்பங்களில், முதலில் மதம் மாறியவர் ஞானப்பூ மகள் லேயாள். இவரது கணவர் இசக்கிமுத்து. மந்திர தந்திரத்தில் பயிற்சி பெற்றவர் என கூற அறிவேன். மனைவி மதம் மாறியதை எதிர்த்து, நீண்ட போராட்டம் நடத்தி தோற்றவர். இவர்கள் வழி குடும்பம்தான் அந்த ஊரில் ஆதி கிறிஸ்தவர்கள். 

No comments:

Post a Comment