Monday 4 June 2018

பிள்ளை கொம்பும் எள்ளல் நிழலும் – மனசின் கதை...2

மனசில் கதை 2
இந்த குடும்பம் தவிர, பெரும்பாலான சபை உறுப்பினர்களுக்கு, தமிழ் எழுத வாசிக்க தெரியாது. ஆனால், அனைவரும் புத்தகங்கள் சுமந்து வருவர். முகத்துக்கு நேராக விரித்து பிடித்தபடி சேர்ந்து பாடுவர். எல்லாம் கேள்வி ஞானம்தான். சபையில்  ஹார்மோனியம், பேண்ட்கள், தாளக்கட்டை, ஜிங்ஜான் என இசைக்கருவிகள் உண்டு.
ஹார்மோனியத்தை, சாமானியன் தொட முடியாது. உபதேசியார் பாலஸ் தான் வாசிப்பார். அவர், வெள்ளையும் சொள்ளையுமாக திரிவதாக ஊரில் பேசிக் கொள்வர். வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து சைக்கிளில் வருவார். மிகவும் எளிமையாக இருப்பார். சொற்களை அளந்து பேசுவார். பின் கழுத்தில் கைக்குட்டை சுற்றியிருப்பார். ஒரு மடக்கு குடை வைத்திருப்பார். அந்த சபையில் பல உபதேசி்களை பார்த்திருக்கிறேன். அனைவரிடமும், வளைந்த கம்பு பிடியுடன், மடக்கு குடை இருக்கும். வெயில், மழை என, எல்லா பருவத்திலும் வைத்திருப்பர்.
என் பாரம்பரிய குடும்ப வீட்டின் முகப்பு, தெற்கு முகமாக, மருந்துவாழ்மலை நோக்கி இருக்கிறது. அதன் எதிரே, பாசனக்கால்வாய் தாண்டி, மேற்கு முகமாக கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. என் வீடு வளாகத்துடன், நீண்டு அகண்ட மதில் சுவருக்குள், 11.25 சென்ட் நிலப்பரப்பில் பெரிய முற்றத்தை உள்ளடக்கியது. முன் மதில் ஓரம், வாசலை ஒட்டி பெரிய புளியமரம். அது, மதிலைத் தாண்டி வெண்கலராஜன் சாலையில் நிழல் பரப்பி, மருந்துவாழ்மலை பாசனக்கிளைக் கால்வாய்க்கு அப்பாலும் விரிந்து பரந்து  நிற்கிறது. வழிப்போக்கர்கள், அந்த நிழலை நுகர்வர். புளி காய்ப்பு பருவத்தில், பல குடும்பங்களின் புளித்தேவையை வெளிப்புற கிளைகள் நிறைவு செய்யும்.
நெல் அறுவடை பருவத்தில், யாசகம் கேட்டு குடும்பத்துடன் பாடி வரும் குழுக்கள், சாலையில் படர்ந்துள்ள புளியமர நிழலில் ஓய்வெடுப்பர்.  இலக்கியங்களில் குறிப்பிடும், பாணர் அல்லது விரலியரின் தொடர்ச்சியாக இவர்கள் இருக்கக்கூடும். ‘குளுவர்’ என ஒருவித புறக்கணிப்பின் எள்ளலுடன், கிராமத்தவர் மதிப்பிடுவர். மருண்ட தெலுங்கை உச்சரிப்பர். நீளமாக ஒரு பாட்டை இசைக்க துவங்குவார், ஒருவித இசைக்கருவி வாசிப்பர். பாம்புக்கூடை கக்கத்தில் தொங்கும். குழந்தைகளை நுாதனமாக கட்டி, பின்புறமாக தொங்கவிட்டிருப்பர். எந்த சூழநிலையிலும், குழந்தை பாதிக்கா வண்ணம் செய்யும் ஏற்படாக அது அமைந்திருக்கும். பயம் துளியும் முகத்தில் தெரியாது. அவச்சொற்களை கேட்டு பழகிப் போன காதுகள் இயல்பாக இருக்கும். வசைகளுக்கு எதிர்வசை இருக்காது. ஏகாந்தமான வாழ்க்கை. ஆமையை வேட்டியாடி, புளிய நிழலில் சமைத்து உண்டு களிப்பர். எலி வேட்டையும் நடத்துவர். அப்பாவுக்கு இவர்கள் மீது தனிப்பரிவு உண்டு. குளுவர்கள், சாமிதோப்பு அய்யா, பிச்சைக்காரர்கள் என, தனித்தனியே  கொஞ்சம் நெல்லை சாக்கில் மூட்டை கட்டி போட்டிருப்பார். அவர்கள், வரும்வரை அது திண்ணையில் காத்திருக்கும்
மின் தடங்கல் ஏற்படுத்துவதாக,  தமிழக மின் ஊழியர்கள், புளிய மரக்கிளைகளை, அவ்வப்போது வெட்டி வீழ்த்துவர். அந்த கிளை தளிர்களை மேய, வெள்ளாடுகள் போட்டிப்போட்டு தாவும்.
எங்கள் வளாகத்தில் புளியமர வரிசையில் கிழக்கு முகமாக, சிவப்பேறிய வேப்பமரங்கள், இரண்டு உண்டு. அவற்றின் கிளைகள், புளி போல் அகல விரிவதில்லை. அதற்கு காரணம் உண்டு.
கிராமத்தை சுற்றி,  நெல் பாசனம் அதிகம். தோவாளைச் சானல் புரவில்,  இரண்டு பருவங்களில் நடக்கும். புத்தனாறு போன்ற குளத்து புரவில், மூன்று பருவம்.  முதல் பருவம் , வைகாசியில், தென் மேற்கு பருவ மழையுடன் துவங்கும். அதை, ‘சம்பாபூ’ என்பர். அந்த பருவம், மானாவாரியில் துவங்கும். பெரும்பாலும் பங்குனியில் அவ்வப்போது, பெய்யும் மழையில் கிடைக்கும் பருவத்துக்கு ஏற்ப கரட்டு  உழவு உழுது நிலத்தை பண்படுத்த ஆரம்பிப்பர்.  வறண்ட நிலத்தை பண்படுத்தி, மண்ணை  பொடியாக்கி, பருவ மழைக்கு ஏற்ப, கரட்டில் விதைப்பு செய்வர். அந்த பருவத்தை தவற விடும் விசாயிகள் மட்டுமே, நாற்று விட்டு நடவு செய்வர்.
அந்த பருவத்தில், அடியுரமாக, குளத்து வண்டலை குவிப்பர். எங்கள் ஊரை சுற்றி உள்ள புத்தனாறு குளம், துலுக்கன் குளம், நாராயிணி குளம், இரட்டைகுளம், வாயிலாள் குளம் ஆகியவை, கோடையில்  வறண்டு கிடக்கும். அவற்றில் படிந்துள்ள, வண்டலை சுரண்டி எடுத்து, மாட்டு வண்டியில் ஏற்றி, நடை கணக்கில் வயிலில் குவிப்பர்.
கரட்டு விதைப்புக்கு பின், ஆட்டுகிடை போடுவதும் உண்டு. கிடையில், முன் கிடை, முளைகிடை, மஞ்சள்முளை கிடை என பல வகைகள் உண்டு. என் அப்பாவுக்கு மஞ்சள்முளை கிடையில் விருப்பம் அதிகம். அதை மிகவும் நம்புவார். இயற்கை விவசாயத்தில் அது பெரிய நுட்பம். அதை பயன்படுத்தும் விவசாயிகள் குறைவு. மூன்று மாதத்தில் அறுவடை நடக்கும். குண்டு சம்பா என்ற சிவப்பு ரக நெல்தான், பிரதான நெல்.
அடுத்த பருவம், ஆவணி,  புரட்டாசியில் துவங்கும். அதை, ‘வாசுரமிண்டான்பூ’ என்பர். பேச்சு வழக்கில், வசிரண்டான்பூ. அதில் பிரதான, நெல் ரகமாக வாசுரமிண்டான் என்ற வெள்ளை நெல் இருக்கும். இதன் காலம், ஆறு மாதங்கள்.
முதல் பருவம் முடிய மூன்று மாதங்கள் என்பதால், இயற்கை உரக்குண்டு நிறைந்திருக்காது. இரண்டாம் பருவம், மழையில் புரளும். வடகிழக்கு பருவமழையை ஒட்டியது. எனவே, தண்ணீர் தாராளமாக இருக்கும். முழுக்க தொழி விதைப்பும், நடவும் தான் நடக்கும்.  இயற்கை எரு உரம் குறைவு என்பதால், வயலில் இலை தளைகளை நிறைப்பர். இதற்காகவே, மரங்களை நட்டு வளர்ப்பர், வேம்பு, பூவரசு, புங்கன், வாராட்சி, வாகை, பன்றிவாகை போன்ற மரத் தழைகள் உரமாகும். அந்த பருவத்தில், குளை அரக்குதல் என்பது பிரதானமாக நடக்கும். அதாவது,  கிளைத்து, செழித்து நிற்கும் மரக்  கிளைகளை,   வெட்டி வீழ்த்தி, தழைகளை ஆராய்ந்து, கட்டுகளாக்கி வயலுக்குள் சுமப்பர். வயலில், தறிகுத்தி என்ற வெட்டு கருவியை ஊன்றி, துண்டுகளாக கூறுபோட்டு, வயல் முழுவதும் பரப்புவர். பின், தொழியுடன் புகுத்தி ஒரு உழவு போடுவர். அவை, மண்ணில் மூழ்கி,  அழுகி உரமாகும்.
கொப்புகளுடன் வெட்டுவதால், மர வளர்ச்சி பாதிக்கும். தொடரும் வடகிழக்கு பருவமழையால்,  மரங்கள் பசுமையாகிவிடும்.  இந்த அரக்கும் வைபோகத்தில் , ஓர் உத்தியும் கடைபிடிப்பர். அரக்கும் மரங்களில், கண்டிப்பாக ஒரு பெரிய கொம்பை, வெட்டாமல் விட்டுவைப்பர். அதை, பிள்ளை கொப்பு என்பர். அது, அந்த பருவத்தில் தனித்துவத்துடன் வளர்ந்து, மரத்தின் இருப்பை உறுதி செய்யும்.
இது போன்ற அரக்குதலால் தான், எங்கள் வீட்டு வளாக வேப்பமரங்கள், சுற்றுச்சுவருக்குள் அடங்கி நின்றன. ஆனாலும், வெண்கலராஜன் சாலையில் அவற்றின் நிழல் விழுந்து, வழிப்போக்கர்களுக்கு அவ்வப்போது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்து கொண்டுதான் இருந்தது.

No comments:

Post a Comment