Thursday 7 June 2018

இசை... மாற்றம் நிகழ்த்தும்; மாற்றத்தில் முகிழ்க்கும்...

ஜப்பான் நாட்டின் தேசிய அருங்காட்சியக, இன மரபியல் இசை அடையாளத்துறை போராசிரியர் டாக்டர் தெரிதா யாக்சிதாகா. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில், இசையில் உயர்கல்வி முடித்தவர். நாதஸ்வர இசையில் மயங்கி, அது பற்றி தமிழகத்தில் ஆய்வு செய்தவர்.
 பிரபல நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் வாழ்க்கை மற்றும் இசைப்பயணம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியவர். நாதஸ்வரமும், வீணையும் முறையாக கற்றுத்தேர்ந்தவர். கச்சேரி நடத்தும் திறன் பெற்றவர். சென்னை வந்திருந்த அவருடன் உரையாடியதிலிருந்து...
இசையை முதலில் எப்படி புரிந்து கொண்டீர்கள்?
மகிழ்ச்சியை அனுபவித்த தருணம் என்று சொல்லலாம். அதன் அடிப்படையில்தான் இசையை புரிந்து கொண்டேன். ஜப்பானில் கல்லுாரியில் படித்த நாட்களில், வழக்கமான ரசனையுடன் தான் என் இசை ஆர்வம் வளர்ந்தது. ஜப்பானிய இசையுடன் மேற்கத்திய இசையையும் கேட்க முடிந்தது. அதில் பேரானந்தம் அடைந்தேன். அந்த ரசனைதான் எனக்குள் ஆர்வமாக வளர்ந்தது.
இசை ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி
இசையை ரசிக்கும் மனலைதான், அது தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபடத்துாண்டியது. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக்கழக மரபியல் இசைக் கல்லுாரியில் படித்த போதுதான், கலாசாரங்களுக்கும் இசை க்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொண்டேன். அங்கு, பல நாட்டு இசைக் கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் இசை அறிவை விரிவு படுத்தியது.
பல நாட்டு கலைஞர்களும் வந்து இசை நிகழ்த்துவர்... பாடுவர். இது என் அறிவுத் தளத்தை மேலும் விரிவாக்கியது. இந்த விரிவாக்கம்தான், இசை ஆய்வுகளுக்குள் என்னை கொண்டு போய் சேர்த்தது என, நினைக்கிறேன்.
எங்கள் கல்லுாரியில் பலநாட்டு இசைத் தட்டுக்கள் இருந்தன. அதில் ஒருமுறை நாதஸ்வர இசையைக் கேட்டேன். அது என்னை கவர்ந்தது என்படைவிட, அதற்குள் ஐக்கியமாகிவிட்டேன் என்று சொல்ல வேண்டும்.

இன மரபு இசையை தனி அடையாளமாக கண்டீர்களா?

இசை என்பதே மரபில் இருந்து வருவதுதான். அமெரிக்காவில் நான் படித்த போது, ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குலிங்டாங் என்ற இசை மரபைச் சேர்ந்த கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவின் பல பகுதிகளில் வசிப்போரும் வந்திருந்தனர்.
அங்கு வந்திருந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அந்த இசையை மிகவும் விரும்பினர். அதில் லயித்து இசைக்குள் கரைந்து போய்விட்டனர். அவர்களின் அந்த லயிப்பும் ரசிப்பும் வினோதமாக இருநதது.
அப்படி லயித்து போயிருந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அமெரிக்க பூர்வீகர்கள் அல்ல. பல தலைமுறைகளுக்கு முன், அங்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்‌ந்தோர். அவர்களின் முன்னோர், பிலிப்பைன்ஸ் அருகே உள்ள மிட்லாநாட் என்ற தீவுப்பகுதியில் வசித்தவர்கள் என்று கூறினர். இது எனக்கு வியப்பாக இருந்தது.
அன்று நடந்த இசை நிகழ்ச்சி, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாசார மரபுகளை உள்ளடக்கியிருந்தது. அவர்களின் லயிப்புக்கு காரணம், இன மரபியல் என, புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு இனத்தின் மரபு சார்ந்த இசை, அந்த இன மரபுக்குள் ரத்தத்தில் கலந்துள்ளதாக உணர்ந்தேன். மற்றெல்லாவற்றையும் விட, இன மரபிசை, இனத்தின் உள்ளார்ந்த லயிப்புக்கு உரியது என்பது தெளிவானது.

மரபிசையில், மற்ற ஒரு இனத்தை இழிவுபடுத்தும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
ஒரு இனத்தின் மரபிசை மற்றொரு இனத்தை முழுமையாக ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால், இழிவுபடுத்தும் என்று சொல்ல முடியாது.
மரபிசை மண் சார்ந்த பண்பாட்டுடன் உருவாவதாக கொள்ளலாமா?
அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; வேறு வகயைில் இருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் உங்கள் இசை ஆய்வுகள் பற்றி...?

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது, தமிழக இசைத்தட்டு ஒன்றை ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது, மதுரை இசைக் கலைஞர்களின் நாதஸ்வர இசை. அதில் லயித்துப் போய்விட்டேன். அது பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டது.
அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த விவேகவாகினி என்ற கலைஞர், எங்கள் கல்லுாரியில், வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அவரது இசையும் என்னை கவர்ந்து லயிக்க வைத்தது. அவரிடம் தமிழகத்தில் மரபு இசை குறித்து கேட்டேன்.
அவர்தான், தமிழகத்தில் உள்ள இசை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்; தமிழ் கற்றுக் கொண்டால்தான், இசை ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்றார். அவரது அழைப்பை ஏற்று சென்னை வந்தேன்.
இங்கு சங்கீத மேதை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையில் கரைந்து போனேன். அவரைப்பற்றி, அவரின் இசை வாசிப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என முயற்சி எடுத்தேன். என் முயற்சிக்கு, ஆய்வு உதவி கிடைத்தது.
ஆய்வு உதவியால், வீணையும், நாதஸ்வரமும் கற்றுக்கொண்டேன். நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை பற்றி, விரிவாக தகவல்களை சேகரித்தேன். பெரும் முயற்சி செய்து பல இடங்களுக்கு அலைந்து, ஏராளமான தகவல்களை சேகரித்து ஆய்வு செய்தேன்.
அவற்றில் முக்கியமானது. நாதஸ்வர இசைக் கருவியை, ராஜரத்தினம் பிள்ளை தன் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்த விதம். அது என்னை வெகுவாக கவர்ந்தது. அது பற்றி விரிவாக தகவல்களை சேகரித்துள்ளேன். நாதஸ்வரத்தை உருவாக்கிய கலைஞர்கள், அதை மீட்டிய வித்வான்கள் என, பலரை சந்தித்து தகவல்கள் திரட்டினேன். இந்த இசைக்கருவியை இசைக்க எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை அப்போது உணர்ந்தேன்.
ஜப்பானில் இன மரபிசை தாக்கம் பற்றி?
ஜப்பானில் இன மரபிசை நெருக்கடியில் உள்ளது. அதை, ஆதாயம் தேடாத சில இசைக்குழுக்கள் காப்பாற்றி வருகின்றன. கொரியாவில் இருந்து, ஜப்பானில் குடியேறியவர்களும் இன மரபிசையை பாதுகாத்து வருகின்றனர்.
தமிழக இன மரபிசையை எப்படி பார்க்கீறீர்கள்?
தமிழகத்தில், இனக்குழுக்களுக்குள் ஏராளமான வகை இசை போக்குகள் உள்ளதாக அறிகிறேன். அது பற்றி விரிவாக ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழகத்தில் பரவலாக சினிமா இசைதானே உள்ளது?
உண்மைதான். அது கொண்டாட்டமாகவும் உள்ளது. அதை இனமரபிசை என்று எடுத்துக்கொள்ள முடியுமா என, ஆராயவில்லை. ஆனால், அந்த இசையால் பாதகம் இருப்பதாக தெரியவில்லை

சினிமா இசை என்பது விற்பனை சரக்குத்தானே?
உண்மைதான். உலகம் முழுவதும், இசை விற்பனை சரக்காகத்தான் உள்ளது. மரபு சார்ந்த அடையாளமாகவும் உள்ளது.
தற்போது அரசியல்,பொருளாதார மாற்றங்கள் விரைந்து நடக்கிறதே.. இதில், மரபியல் இசை அடையாளம் எதை சார்ந்து நிற்கும்?
மரபிசை அடையாளம், மாற்றங்களை ஏற்படுத்தும். மாற்றங்களுடன் நிகழும். மாற்றங்களுக்கு பின்னும் உயிர்ப்புடன் நிற்கும் என, நம்புகிறேன். மரபு இசை என்பது ஒரு இனத்தின் உயிரில் கலந்தது.

தமிழை தாய்மொழியாக கொண்டோர் இசை மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கணிக்கிறீர்களா?

தமிழகத்தில் ஏராளமான இசை கலைஞர்கள் இருப்பதை காண்கிறேன். இசை பள்ளிகளைக் காண்கிறேன்; இசை கற்போரை காண்கிறேன். அதைவிட மேலாக, புலம் பெயர்ந்து, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இசையை தங்கள் அடையாளமாக கொண்டிருப்பதை காண வியப்பாக உள்ளது.
கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் மட்டும், 100 க்கும் அதிகமான இசை ஆசிரியர்களை சந்தித்தேன். அவர்களிடம், 3000 க்கும் அதிகமான மாணவர்கள் இசையை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இது வியப்பான புள்ளி விபரம். புலம்பெயர்ந்து வாழுவோரை, இன மரபிசை உயர்ப்புடன் வைத்திருக்கிறது. இதை நிரூபிக்க வேறு புள்ளி விவரங்கள் எதுவும் அவசியமில்லை என, நினைக்கிறேன்.

                                                                                                         

No comments:

Post a Comment