Saturday 9 June 2018

கடவுளுக்கு வரம் கொடுத்த தாத்தா

பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ பேரின் வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான்.
வாழ்க்கை, இன்பத்தை நோக்கிய பயணம். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் மலர்ப் பாதையில் பயணிப்பது வெறும் கனவு. பாலை மணலும், மேடும் பள்ளமும் முட்களும் நிறைந்தது. அதில் தடம் ஏற்படுத்திக் கொள்வது சாதுாரியமானது.
இது போன்ற பாதையை எதிர்கொள்ள திராணி உள்ளவர்கள், பயணிப்பர். வெற்றி தோல்வி என்பதெல்லாம், சூழல் நிர்ணயிக்கும் அளவுகோல் சார்ந்தது
இதை உணர்த்துகிறார், செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,78.
வயது அவரது பயணத்தின் தடைக்கல் அல்ல; அவர் களைத்து கிடக்கவில்லை. உழைப்பை  மதிக்கிறார். நம்பிக்கை கொள்கிறார்.
பயணத்தில் பெரும் சோகங்களை கண்டவர்,  நிகழ்வுகளை எதிர் நோக்கியவர். பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருடன் ஒரு மதிய வேளை உரையாடல்
‘‘சின்ன வயசுல, கழனில நெல்லு, கேழ்வரகுன்னு, பயிர் வைப்போம். மனைவி லட்சுமி, ஆம்பள மாதிரி தலப்பா கட்டிக்குனு, தண்ணீர் பாய்ச்ச ஏத்தத்து மேலே ஏறி மிதிப்பா. அப்பல்லாம், கழனியிலே நல்ல வௌச்சல் கிடைக்கும். வீட்டுல தானியங்களப் போட்டு வைக்கிறதுக்கே இடம் இருக்காது. கழனி வேலையையும் செஞ்சிட்டு, கல் தச்சு வேலைக்கும் போயிடுவேன்,’’ என்றார், சரளமாக...
முதல் சோகத்தை கம்மிய குரலில், ‘‘செங்கல்பட்டு திருமலை தியேட்டர் பக்கத்துல ஒரு வீட்டுல, கல் தச்சு வேலை செஞ்சிக்கிட்டு இருந்தப்போ, என் மனைவி சாப்பாடு எடுத்து வந்திருந்தா. அப்போ...ஊர்ல இருந்து வந்த ஒருத்தர், ‘ஏம்மா இரண்டு பேரும் இங்கே வந்துட்டீங்க... அங்கே உங்க பயிருல மாடு மேயுது’ன்னு சொன்னாரு.
அத கேட்ட என் மனைவி, ஆவேசமா கழனிவெளிக்கு ஓடிப்போனா. அன்னிக்கு, இடி மின்னல் தாக்கி கழனிவெளியிலேயே செத்துட்டா. அந்த கவல, மனசுல முள்ளா குத்திட்டு இருக்கு,’’ என்றார்.
ஆளாளுக்கு கொள்கைகள் மாறலாம். சிலருக்கு கொள்கையே இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு சம்பவம், ஒரு கொள்கையை பின்பற்றும்படி வைத்து விடுகிறது.
‘‘ஐம்பது வருஷத்துக்கு முன்னால... ஒருநாள்...கழனியிலே வேலை செய்துட்டு வந்து, மதியம் வீட்டிலிருந்த கொஞ்சம் கூழ குடிச்சிட்டேன். என் அண்ணன், ‘ஏண்டா எல்லாத்தையும் குடிச்சிட்டே?’ன்னு, கொம்பால, கால், முதுகுன்னு கண்டபடி அடிச்சிட்டார். அன்னேலேருந்து இன்னைக்கு வரை, யாராவது சாப்பாடு கொடுத்து சாப்பிடச் சொன்னா மட்டுந்தான் சாப்பிடுவேன்.
‘‘எவ்வளவு சாப்பாடு முன்னாடி இருந்தாலும், எவ்வளவு பசியா இருந்தாலும், தொடமாட்டேன். இது என் மனைவிக்கு தெரியும். அவ இருந்த வரைக்கும் சாப்பாடு போடுவா. இப்ப என் மருமகள். சாப்பாடு போட்டு வச்சிருக்கேன்னு சொன்னா தான் சாப்பிடுவேன்,’’ என, நெகிழ்ந்தார்.
புத்திரசோகம், தசரதனுக்கு மட்டுமல்ல, இந்த பாலகிருஷ்ணனுக்கும் தாங்க முடியாத ஒன்று தான்.  அவர் மேலும் கூறியதாவது:
என்னை படிக்கவைக்கவில்லை. அதை குறையாகவே உணர்கிறேன். என் பசங்களுக்கு இந்த குறை வர கூடாதுன்னு, கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்.
எனக்கு, இரண்டு ஆம்பள பசங்க. பெரியவன் ஆந்திராவில் கல்லுடைக்கிற வேலை செய்யறான். சின்னவன் கம்பெனி வேலைக்கு ஆளுங்கள ஏத்தி போற வண்டியில, டிரைவரா போனான்.
இரண்டு மாசத்துக்கு முன்ன, ரவுடி பசங்க வண்டிய மடக்கி, அவன அடிச்சிட்டாங்க. இத அவங்க ஓனர்கிட்ட சொல்லிருக்கான். இதை வீட்ல சொன்னா, பெரிய கலவரம் வருமேன்னு, கவலைப்பட்டிருக்கான்.
நாலு பேரு நம்மள அடிச்சிட்டாங்களேன்னு நெனச்சி, வேதனப்பட்டு விஷம் குடிச்சி, செங்கல்பட்டுல விழுந்து கிடந்திருக்கான்.
கடைசி நேரத்தில, அவன் அண்ணங்கிட்ட, போன்ல, ‘நாலுபேரு அடிச்சிட்டாங்க. நான் ஒங்கிட்ட சொன்னா... நீங்க நாலு பேரு சோ்ந்து அவனுங்கள அடிப்பீங்க. அதனால சண்டை தான் வரும். என்னால எதுக்கு சண்டை வரணும்? உனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. நீ அவங்கள பாத்துக்க... அப்படினு சொல்லிக்கிட்டே விழுந்தவந்தான். அப்பறம் ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பிணமா எடுத்து வந்தாங்க. அது என் மனசுல ஆறாத வடுவா மாறிடுச்சு...
நான் கடவுளப் பார்த்து ஒருமுறை கேட்டேன். நான் நோ்மையா இருக்கேன், நோ்மையா உழைக்கிறேன். ஆனா, என் குடும்பத்தை இப்படி சோதிக்கிறியே அப்படின்னு. மகாபலிபுரம் கடல்ல இறங்கி, நடுக்கடல்ல நின்னு, ஒன்பது பூக்களைப் போட்டு, வணங்கி கேட்டேன். எனக்கு ஏன் இந்த சோதனைன்னு.
‘அலைகளுக்கு ஊடே ஆழ் கடலுக்கு வரக்கூடிய தெம்பை குடுத்திருக்கேன். சோகத்தை தாங்கும் மனசை கொடுத்திருக்கேன். இத விட உனக்கு என்ன வேணும்’ன்னு கடவுள் கேட்டார். நியாயம்தானே. பேசாம கரையேறி வந்துட்டேன். அதுக்கு அப்புறம் எது நடந்தாலும், சகிச்சுக்கிட பழகிட்டேன்.
என் மகனிடம், கழனில வேலை செய்து, காய்கறி பயிர் வெச்சா, நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்றேன். அவன் கேட்காம, ஆந்திராவில் கூலிக்கு கல் உடைக்கிறான்.
ஒரு சின்ன ரூம்ல தங்கி கஷ்டப்பட்டு மாசாமாசம் பணம் அனுப்புறான். அதை வச்சு என் மருமக, பேரன்களை படிக்க வைக்கிறா... இப்படித்தான் வாழ்க்கை போவுது.
அனுபவத்தை பகிர்ந்து விட்டு, சுறுசுறுப்பாக விறகு வெட்ட போய்விட்டார் பாலகிருஷ்ணன்.

No comments:

Post a Comment