Saturday 9 June 2018

வைக்கிறதும்... அடிக்கிறதும்...

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, ரிங்கல் தவுபே உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் பூமணி. அவரது, நேரடி வகுப்பில் இருக்க எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. அதே பள்ளியில், ஒரு பிரிவு வகுப்பில் நான் படித்தேன். அவர் வேறு வகுப்புக்கு தமிழ் பாடம் நடத்தினார். பள்ளி நீண்ட வளாகத்தை கொண்டது. அதை, அரங்குகளாக பிரம்பு பாய்த்தட்டிகளை நிறுத்தி,  வகுப்பறைகள் உருவாக்கப்பட்டிருந்தன. எந்த வகுப்பறையில்,  மிகைக் குரல் வந்தாலும், எல்லா வகுப்பும் கேட்கும். மிகை தொனியில் ஆசிரியர் நடத்தும் பாடம், அலையாய், பிற வகுப்பறைகளை நிறைக்கும். அந்த பாடம் இனிமையாக இருந்தால், காதுகள் அந்த வகுப்பறைக்குள் லயித்துவிடும். இருக்கும் வகுப்பறை பயனற்றதாகிவிடும்.
தமிழ் ஆசிரியர் புலவர் பூமணி, ஒலி பெருக்கி போல், குரலை உயர்த்தி பாடம் நடத்துவார். மற்ற வகுப்பறை மாணவ, மாணவியர் காதுகள் இவர் குரலுக்கு அடிபணியும். அந்த பாடம் பக்கம் போய்விடும். 
செய்யுள்களை, அதற்குரிய ஓசை நயத்துடன் பாடுவார். அவர்  ஓங்கி உயர்த்திய குரல் தான், மனப்பாட செய்யுள்களை  மனதில் பதிய வைத்தன. இப்போதும் நினைவில் நிறுத்தி வைத்துள்ளது. இரவலாக வாங்கிய பாடங்கள் இளமையாக மனதில் தங்கி நிற்கிறது.
கம்ப ராமாயணத்தில், கும்பகர்ணனை துயில் எழ வைப்பதை, வர்ணனையுடன், சுவையாக லயத்துடன், பாடி மதிய உணவு உண்ட மயக்கத்தில் சொக்கி போகும் கண்களை,  திறந்து அறிவூற்றுவார்.  பாடிக் கிறக்குவார். உலக்கையால், உரலில் நெல் குத்துவது போல், ஏற்ற இறக்கங்களுடன் குரல், நெஞ்சில் குத்தும். மனதில் பதியவைக்கும்.
குகன் படகு விடும் பாடலும் அப்படித்தான்.  விமானங்களில் பயணிக்கும் போது, மேகங்களுக்கு ஊடாக  அவரது குரல் வழி பாடல் நீந்தி வந்து உற்சாகப்படுத்தும்.
மதிய உறக்கத்தில் மாணவர்கள் கிறங்குவதைக் கண்டால், பூமணி வாத்தியாரின் உத்தி மாறிவிடும். ஒரு சிறுகதையை உற்சாக குரலில் சொல்வார். கதையை மிகவும் நுாதனமாக மாற்றி மாற்றி நிகழ்த்துவார். இது அவரது வகுப்பறையில் அவ்வப்போது ஒலிக்கும். அற்புதமான கதை சொல்லி அவர்.
ஆமையும் அணிலும் என்பது ஒரு  கதையின் தலைப்பு...
ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டு எழுத்தாளர் சினுவா ஆச்சபேய், (Chinua Achebe) எழுதிய, Things fall apart  என்ற நவீன புதினத்தின் அடிநாதமாக, இந்த கதை இருந்ததை, அந்த  நாவலை வாசித்த போது, வியந்து போனேன். அனேகமாக அவர் சொல்லிய கதைகள், திருவிதாங்கூர் நாட்டில் அதாவது தற்போதைய  கன்னியாகுமரி மாவட்டத்தில், பல தலைமுறைகள் வாய்மொழியாக கடந்து வந்தவை.
ஆசிரியர் பூமணி,  கடவுள் மறுப்பு கொள்கையாளர் என பின்னர் அறிந்தேன். அவர் பின்பற்றிய கொள்கையை, ‘தாழம்பூ’ என, கிராமத்தவர் விமர்சித்தனர்.
வாய் நிறைந்த வெற்றிலையை குதப்பியபடி, காலையில்  வயல்வேலைகளை செய்து கொண்டிருப்பார். எங்களுக்கு பக்கத்து வயல் அவருக்கு.  சில நாட்கள் தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருப்பேன். இளம் பயிர் மீது வீசும் சில் காற்றில், அவர் குரல்  அலைபோல் தவழ்வதாக நினைப்பேன்.
சுண்ணாம்பு தொட்ட ஆள்காட்டி விரல் ஆகாயம் நோக்க... இடது கையால், வேட்டியின் ஒற்றை முனையை துாக்கிப் பிடித்தபடி, கடைசி விநாடியில் அவசரமாக பள்ளி வளாகத்துக்குள் அவர் நுழைவதை பார்த்திருக்கிறேன். மாணவர்களை உற்சாகப்படுத்த, நகைச்சுவைகளை பகிர்வார். அதில் ஒன்று அவர் பெயர் சார்ந்தது... ‘கொண்டையில் வைக்கிறதும்... கோயிலில் அடிக்கிறதும்... என்னலே’ என்று அவர் கேட்பார். அது அவர் பெயர் .. பூ...மணி...யை குறிக்கும்.
ஒருநாள் கூட அவரது வகுப்பறையில் அமர்ந்ததில்லை... பல நாட்கள் அவரது பாடங்களைக் கேட்டுள்ளேன். வாழ்க்கை முழுவதும் நிரம்பும் மனிதர் அவர்.

No comments:

Post a Comment