Tuesday, 6 August 2024

உலகின் முதல் விதை

 உலகிலேயே மிகப்பெரிய விதை உடைய தாவரம், கடல் தேங்காய். இது, இரட்டைத்தேங்காய், கடல்பனை, மாலத்தீவுத் தேங்காய் எனவும் அழைக்கப்படுகிறது. 

பெரிய வகை தேங்காய் போல இருக்கும். உட்புறம் பனை விதையில் உள்ளது போல் பிளவுடன் காணப்படும். இந்திய பெருங்கடலில், செஷசல்ஸ் மற்றும் மாலத்தீவுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் கோல்கட்டா தாவரவியல் பூங்காவில் ஒரு மரம் பராமரிக்கப்படுகிறது.

பனைமரம் போல இதில் ஆண், பெண் பாகுபாடு உண்டு. ஆண் மரத்தில், ஆறு அடி நீளத்தில் பூ மலரும். பெண் மரம் முளைத்து, 100 ஆண்டுகளுக்கு பின் பூக்கத் துவங்கும்.

 வாழ்நாளில், 100க்கும் குறைந்த விதைகளையே உற்பத்தி செய்யும். மரத்தில் பூ மலர்ந்து கனிய, 10 ஆண்டுகள் ஆகும். விதையின் வெளிப்புற நார் அடர்த்தியுடன் வலுவாக இருக்கும். கனிப்பகுதி கெட்டியான ஓட்டுக்குள் இருக்கும். முதலில் நுங்கு போல் காணப்படும். முற்றியதும் தேங்காய் போல சுவைக்கும். 

முற்றிய கனி உதிர்ந்த பின், கடல் நீரில் அமிழ்ந்து கிடக்கும். நீண்ட நாட்களுக்கு பின், மிதந்து கரையில் ஒதுங்கும். கடல் நீரோட்டத்தின் வழியாக விதை பரவும். விதை முளைக்கத் துவங்கி முதல் இலை தோன்ற மூன்று ஆண்டுகள் வரை ஆகும். 

இந்த மரம், 35 மீட்டர்  உயரம் வரை வளரும். சுற்றளவு, 12 அடி இருக்கும். இலைகள் விசிறி வடிவில் பனை ஓலை போல் இருக்கும். ஒரு இலை, 10 மீட்டர் உயரமும், 4.5 மீட்டர் அகலமும் இருக்கும். விதை, 1 அடி உயரமும், 3 அடி சுற்றளவும் கொண்டிருக்கும். ஒரு விதையின் எடை, 23 கிலோ வரை இருக்கும்.

எடை அதிகம் என்பதால், நீரினுள் விழுந்தவுடன் மிதப்பதில்லை.  அமிழ்ந்து, கடலின் அடிப்பகுதிக்கு போய் விடும். சில நாட்களுக்கு பின், எடை குறையும் போது, நீர்மட்டத்தில் மிதக்கும். 

இதை முதலில் பார்த்த விஞ்ஞானிகள், நீருக்கடியில் வளரும் தாவரத்தின் விதை என்றே நம்பினர். எனவே, பிரெஞ்சு மொழி சொல்லான, ‘கோகோ டி மீர்’ என்ற பெயரில் அழைத்தனர். அதன் பொருள் கடல் தேங்காய் என்பதாகும். பண்டை காலத்தில் துறவிகள், இந்த விதையை குடைந்து திருவோடு போல் உருவாக்கி, பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர். 

மிகை வணக்க சுட்டுப் பெயர்

பள்ளியில் குழந்தையை விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர் இரு பெண்கள். வயது சார்ந்த சுட்டுப் பெயர் அழைப்பு, புண்படுத்தியதை புலம்பிக் கொண்டிருந்தார் ஒருவர். பெரும் வேதனையை வெளிப்படுத்தியது அந்த உரையாடல்.

வயது, மனதை பக்குவப்படுத்துவதற்கு பதிலாக, பாடாய் படுத்துவதை புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும், 40 வயதைக் கடந்தவர்களுக்கு, வயது சார்ந்த சுட்டு விமர்சனம் பெரும் வலி. உணர்வை சிதைத்து தள்ளாட வைக்கிறது.

இது பற்றி தனிப்புத்தகமே எழுதலாம்.

பெண்களை உறவு முறையில் சுட்ட... அம்மா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணி, மதினி, அத்தை, மாமி, சித்தி, பெரியம்மா போன்ற சொற்கள் உண்டு. இவை, வயது சார்ந்தது அல்ல; உறவு சார்ந்தது. சில வயதையும் சுட்டிக் காட்டும். 

ஆண்களை சுட்ட அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, அத்தான், மாமா போன்ற சுட்டுப் பெயர்கள் உண்டு. பொது உறவை குறிக்கிறது தந்தை, தாய், மகன், மகள், சிறுவன், சிறுமி, முதியவர், மூதாட்டி, நண்பர், தோழர், தோழி, வாலிபர், இளைஞர் போன்ற சொற்கள். 

உறவு, பணி, கல்வி, தொழில், வாணிக அடிப்படையில் ஆசிரியர், பொறியாளர், துப்புரவாளர், கூலியாள், மருத்துவர், வியாபாரி, பக்தர், எழுத்தர், மாணவர், மாணவி போன்ற சொற்கள் உள்ளன. இவற்றுக்கு, வயது சார்ந்த பிரச்னை இல்லை. வயது சார்ந்து பொதுச்சுட்டு, கேட்பவர் உணர்வில், சூடோ, குளிர்ச்சியோ ஏற்படுத்துகிறது; அது, எழுச்சியையோ, தளர்ச்சியையோ, சண்டையையோ, இனிய உறவையோ ஏற்படுத்துவதும் உண்டு. 

தமிழகத்தில், இது சார்ந்த சச்சரவுகள் அதிகம். வார்த்தை தடித்து வழக்குகளாகி, சமூக அமைதியைக் கெடுப்பதும் உண்டு.

30 வயது, தாண்டாத பெண்ணை, அம்மா என்றால் சீற்றம் அடைய நேரிடும். 

‘என்னப் பாத்தா, அம்மா மாதிரியா இருக்கு...’ என்ற தீக்‌குரலை, கேட்க வேண்டிய அபாயம் ஏற்படலாம்.

சமாளிக்க இளமை கலந்த பைந்தமிழ் சொற்களைத் தேட வேண்டியிருக்கும்.

வயதில்... தோற்றத்தில்... முதுமையை விரும்புவோர் இவ்வுலகில் அதிகம் இல்லை.

முதுமையைக் குறிக்கும் சொற்களில் உணர்வு இருக்கிறது; விருப்பு, வெறுப்பும் இருக்கிறது. 

இவற்றை பயன்படுத்துவதில் தந்திரங்களும், உபாயங்களும் உண்டு; ஆதாயமும், இழப்பும் இருக்கும். 

தமிழக அரசியலில், மிகை வணக்க பெயர் சுட்டு சொற்களுக்கு தனித்த முக்கியத்துவம் உண்டு. 

புரட்சித்தலைவர், கலைஞர், புரட்சித்தலைவி, கேப்டன், மருத்துவர் அய்யா, சின்னய்யா, புரட்சிப்புயல், வைகைப்புயல், தன்மான சிங்கம், இதயதெய்வம்... என சொல்லிக் கொண்டே போகலாம். கட்சிக் கூட்டங்களில் தாராளமாக மிகைச் சொல் பரிமாறப்படும். புரட்சிதலைவி, முன்பு, புரட்சிசெல்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில், இது போன்ற சொல் பயன்பாடுகளுக்கு பஞ்சமில்லை. பட்டியலிட்டால் பக்கம் கொள்ளாது.

ரவுகளிடமும் இந்த மிகை வணக்க சுட்டு பெயர்களின் புழக்கம் அதிகம். கொக்கி குமார், பங்க் குமார், காட்டான் சுப்ரமணியன், முட்டை ரவி, மாலைக்கண் செல்வம், பாக்சர் வடிவேலு, கேட் ராஜேந்திரன், வெள்ளை ரவி, மார்க்கெட் சிவா, ஜிம்பாடி கபிலன், பாபா சுரேஷ், சகுனி கார்த்திக்...

பணம் படைத்தவரை, ‘ஐயா’ என்று அழைப்பதில் ஆதாயம் உண்டு. இங்கு, வயது முதன்மை பெறுவதில்லை. மதிப்பீடு முன்னிலை பெறுகிறது. ஆங்கிலத்தில், ‘சார்’ என்ற சொல்லில் வயது மங்கி, ஆதாயமும், மதிப்பும் முன்னிலை பெறுகிறது.

மதிப்புக்குரிய மூத்தவரை, ‘ஐயா’ என்று அழைக்கும் வழக்கம், தமிழக குடும்பங்களில் நிறைந்து இருந்தது. அப்பா என்ற சொல்லுக்கு, பதிலியாக கூட அது பயன்பட்டது. இப்போது, அதில் அரசியல் சாயம் படிந்துவிட்டது.

என் நிறுவனத் தலைவர், ‘௪௦ வயது நிரம்பியவரை, இளைஞர் என்றோ, வாலிபர் என்றோ அழைக்க முடியுமா?’ எனக் கேட்டார். அதற்கு விடையும் விளக்கமும் உண்டு.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ், ௪௦ வயதுக்கு மேல் தன்னை, இளைஞர் என்று அழைத்துக் கொண்டது உண்டு; தொண்டர்களை அழைக்க வற்புறுத்தியதும் உண்டு. தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின், ௪௦ வயதைக் கடந்த பின்னும், தி.மு.க.,வில் இளைஞர் அணி செயலராக பொறுப்பு வகித்தது உண்டு.

அரசியலில், அதிகார மையங்களில் இது போன்ற சொற்களை பயன்படுத்த விதி விலக்கு உள்ளது; அதிகாரங்களை பயன்படுத்தி அவர்கள் இளைஞராகவே இருப்பர். மிகை வணக்கச் சுட்டுப்பெயர் சொற்களால், முதுமை அவர்களை நெருங்குவதில்லை. தொண்டர்கள், ‘இளமை’ யை தக்க வைக்க கோஷம் பேடுவர். 

ஆனால், ௪௦ வயது நிரம்பிய சாமானியரை, பொது சமூகத்தில், ‘வாலிபனே... இளைஞனே...’ என்று அழைக்க முடியுமா... அது, பொது சமூக உணர்வுக்கு சவால் விட்டது போல் ஆகிவிடாதா... கல்லடியும், சொல்லடியும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தமிழ் இலக்கண மரபுப்படி பெண்ணுக்கு...

பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற சுட்டுப் பெயர்கள் உள்ளன. 

இவற்றில், மங்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது. மற்றவற்றை உச்சரித்தால், மடமை என பழி வரும்.

ஆணுக்கு...

பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன் என்ற சொற்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில், பாலன் என்ற ஒரே சொல்தான் இன்று வழக்கத்தில் உள்ளது. காளையும், விடலையும் அரசியல் களத்தில் மிகைச் சுட்டு சொல்லாக பயன்படுகிறது; சில, ஜாதிவட்டாரத்தில் புழங்குகின்றன. இந்த சொற்கள், வயது, தோற்ற அடிப்படையில் பிறந்தவை. வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறிவருவதால் வழக்கழிகின்றன.

சிசு, குறுநடை, பள்ளி முன் பருவம், பள்ளி பின் பருவம், குமார பருவம், வளரிளம் பெண், வாலிபன், முதியவன் என்ற வயது சார்ந்த சொற்கள் கல்வித் துறையில் குழுவுக்குறியாக பயன்படுகிறது.  

தற்போது, குழந்தை, சிறுவன், சிறுமி, இளம்பெண், பெண், வாலிபன், இளைஞர், முதியவர், மூதாட்டி, அழகி போன்ற சொற்கள் சமூகத்தில் உலாவுகின்றன. இவற்றை குறிக்கும் வயது கணிப்பில் தெளிவு இல்லை.

இளைஞன், இளம்பெண், ௧௬ வயதில் துவங்குகிறதா? 

அப்படி என்றால், சிறுவன், சிறுமி எந்த வயதில் நிறையும்.

இந்தியாவில், ௧௮ முதல், ௨௧ வயதுக்கு மேற்பட்டவருக்குத்தான், தனித்த சட்ட உரிமை கிடைக்கிறது. வங்கிக் கணக்கை இயக்க,  ஓட்டுனர் உரிமம் பெற, தொழில் துவங்க, அரசு, தனியார் பணியில் சேர, சுயமாக முடிவு எடுக்க என்று அனைத்து நிலையிலும், வயது சார்ந்தே, உரிமை நிலைநாட்டப்படுகிறது. 

இந்த நிலையில், பருவ வயது, எங்கே  துவங்கி முடிகிறது என்ற கேள்வி எழுகிறது.

சட்டத்துக்கு சில தேவையில்லாவிட்டாலும், சமூகத்தில், அது பெரும் வலியாக உள்ளது.

வாலிப பருவம் முடிந்து, நடுத்தர வயது பருவம் எப்போது துவங்குகிறது. அதன் பொதுச் சுட்டுப் பெயர் என்ன... 

நடுத்தரப்பருவம் முடிந்து, முதுமைப்பருவம் எப்போது துவங்குகிறது. இவற்றுக்கு, விடை தேடவேண்டிய கட்டாயம் செய்தி சொல்பவர்களுக்கு உள்ளது.

கிழவர், கிழவி என்ற முதுமை சுட்டு கேலியாக சமூகத்தில் நிறைந்து கிடக்கிறது. 

முதுமையின் முடிவு பற்றிய கவலை தேவையற்றது. 

இனி, பருவக் கணக்குக்கு வருவோம். 

உலக சுகாதார நிறுவன, ௨௦௧௩ம் ஆண்டு ஆய்வு அறிக்கை, இந்தியரின் சராசரி ஆயுள், ௭௦ வயது என்கிறது. இதில் ஆணுக்கு, ௬௭; பெண்ணுக்கு, ௭௩ என, கணித்துள்ளது. இதை பொதுநிலையாக கருதி, வாழ்க்கை பருவத்தை பிரித்து, பொதுவான சுட்டுச் சொற்களை மனித பருவங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்று சிந்திக்கலாம். அனுபவத்தால் அளந்து பார்க்கலாம்...

* ஐந்து வயது வரை, குழந்தைப் பருவம்

* ஆறு முதல், ௧௭ வரை, சிறுவர், சிறுமி

* ௧௮ முதல், ௩௫ வரை, வாலிபர், இளம் பெண்

* ௩௬ முதல், ௬௦ வரை நடுத்தர வயது. இதற்கு சொல் இல்லை.

* ௬௦க்கு மேல் முதியவர், மூதாட்டி. 

இவை பொருந்தி வருமா?

ஐரோப்பிய நாடு ஒன்றில் வேலை பார்க்கும் பெண் சொன்னது முற்றிலும் வேறுபட்டிருந்தது. அங்கு ௮௦ வயதுள்ள பெண்ணை முதன் முதலில் சந்தித்த அனுபவத்தை கூறினார். ‘ஐரோப்பா சென்றபோது முதலில் திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டது போல் உணர்ந்தேன். ஒரு பெண்கள் விடுதியில் சேர்ந்தேன். அங்கு, ௮௦ வயதில் இருந்தவரை, ‘ஆன்டி’ என்று அன்புடன் விழித்தேன். கொதித்து எழுந்து சீறியவர், ‘என்னை பார்த்தால் ஆண்டி போல் தெரிகிறதா...’ என துவங்கி, ஆங்கில வசவுகளால் விளாசி விட்டார். மிரண்டு போய் சமாதானப்படுத்த, சொற்களை இரண்டு நாட்களாக தேட வேண்டியதாயிற்று...’ என சிரித்தார்.

மேற்குலக நாடுகளில் வயது சார்ந்த சுட்டு சொற்களையோ மிகைச் சொல் வணக்கங்களையோ, யாரும் பொதுவெளியில் பயன்படுத்துவதில்லை. எல்லாம் பெயர் மயம்தான். வயது சார்ந்த சுட்டுப் பெயரால் ஏற்படும் வலிகளை நீக்க வழிதான் என்ன?