Monday, 15 June 2020

யுனஸ்கோ கூரியர் – கனவும் நினைவும்

இளமையில், விரும்பி படித்த இதழ்களில் ஒன்று, யுனஸ்கோ கூரியர். நாகர்கோவில் குடிசை மாத இதழ் வாசகசாலையில், 1984ல் முதலில் கண்டேன்.  தமிழ் கிராம சமுதாயம் குறித்த கட்டுரை ஒன்றை, எழுத்தாளர் சுந்தர ராமசாமி, எழுதியிருந்தார். அதைத்தான் முதலில் வாசித்ததாக நினைவு. தொடர்ந்து, விரும்பி வாசித்து வந்தேன். என் விருப்ப தேர்வில் முலிடம் பெற்ற இதழ்.
இதன் அலுவலகம், சென்னை, சேத்துப்பட்டு, உலக பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கியது. சென்னை வந்தபின், அந்த அலுவலகத்தை  நாடி சென்றேன். இதழின் தமிழ் பதிப்பின் ஆசிரியர்  தமிழறிஞர் மணவை முஸ்தபாவை சந்தித்தேன். 
எளிமையும், அன்பும், அறிவாற்றலும், செயலுாக்கமும் நிரம்பியவர். அவருடன் நிகழ்ந்த சந்திப்பின் ஒவ்வொரு நொடியும், வாழ்வின் முக்கியமான தருணங்களாக கருதுகிறேன். 
தமிழ் மொழியை அறிவியல் பார்வையுடன்  மேம்படுத்த அவர் போல் உழைத்த அறிஞர் இல்லை. அறிவியல் தமிழின் தந்தை என்ற புனை மொழி வெறும் புகழ்ச்சியில்லை. 
அவர் உருவாக்கிய சொல்லகராதிகள், தமிழ் மொழியின் ஆயுளை நீட்டிக்கும் அரிய சாசனங்கள்.
அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி போன்றவை, அவரது உயர்ந்த  உழைப்பை காட்டுபவை. சிறுவர் அறிவியல் கலைக்களஞ்சியமும் மிக முக்கியமானது.
தமிழில், 31 புத்தகங்களை ஆக்கியுள்ளார். ஆங்கிலத்தில் இருந்து, ஏழு நுால்களை மொழியாக்கம் செய்துள்ளார். மலையாளத்தில் இருந்து, மூன்று நுால்களை பெயர்த்துள்ளார். 
இவை தவிர, மூன்று தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். அவை, வெற்றுச் சொற்களால் நிரம்பியவை அல்ல. தமிழ் மொழியை, சமூகத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் பசுவை வனங்கள்.
எளிய பின்னணியில் பிறந்து, தமிழ் சமூகத்துக்கும், மொழிக்கும் அருங்கொடைகள் வழங்கிய பேரறிஞர் மணவை முஸ்தபா பிறந்த தினம் இன்று. 
வெற்று வேட்டுகளுக்களுக்கும், கள்ளச்சாராய வியாபாரக் கும்பலுக்கும் ஆர்பரித்து அடங்கும் தமிழகம், கடும் உழைப்பாலும், செயலாலும் தமிழையும், தமிழ் சமூகத்தையும் உயர்த்திய, எளிய அறிஞரைக் கண்டு கொள்ளாமல் விடுவதில் வியப்போதும் இல்லை.
சிறுவர் இதழ் தயாரிப்பில்,  அவர் உருவாக்கிய அறிவியல் சொற்கள் பலவற்றை பயன்படுத்தி வருகிறேன். பயன்படுத்தும் போதெல்லாம் அவர் நினைவை போற்றத் தவறியதில்லை. அவரது சொற்கள், தமிழ் எண்ணத்தையும், சிந்தனை மரபையும் விரிவு படுத்தும். தமிழ் சமூகத்தை பண்படுத்தும்.
தமிழ் சமூகம், அறிவியல் ரீதியாக சிந்திக்க துவங்கும் போது, முஸ்தபாவின் புகழ் முதன்மை இடத்தில்  மலரும். 
படக்குறிப்பு: என் சேகரத்தில் உள்ள யுனஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பு இதழ் இது. பராமரிக்க இயலாமல் பல பாழாகின. வானொலி பற்றிய சிறப்பிதழ் என்பதால், என் இனிய நண்பர் பேராசிரியர் ஜெயசக்திவேல் வசம் ஒப்படைக்க விரும்பினேன். உலக அளவில் வானொலி ஒலிபரப்பு குறித்து ஆராய்ந்து வரும் முக்கிய அறிஞர்களின் ஒருவர். வானொலி தொடர்பான பல அரிய தொகுப்புகளை பேணி வருகிறார். சென்னை பல்கலைக் கழக இதழியல் துறையில் பேராசிரியாக உள்ளார்.  

Friday, 12 June 2020

இயற்கை நோக்கிய நகர்தல்


துணி சலைவையில், Bio Enzyme என்ற உயிர் நொதி கரைசலை இன்று பயன்படுத்த துவங்கினோம்.
நந்தவனம் தோட்டம் திருமிகு சரோஜா குமார் அவர்களின் முகநுால் பக்கத்தில் கற்ற தொழில் நுட்பம் இது.
கடந்த, 2018 ஆகஸ்ட் 18ல், ‘பயோ என்சைம்’ கரைசல் பற்றி,  முகநுால் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார் சரோஜா குமார். அதில், செய்முறை, உபயோகித்த அனுபவம் பற்றி தெளிவாக்கியிருந்தார். அதை, வாசித்து கடந்திருந்தேன்.
இயற்கையை விரும்புவோருக்கு, இது போன்ற அனுபவ பகிர்வுகள், நம்பிக்கை ஊட்டும்.  
செங்கல்பட்டு, தமிழ்நிலம் தமிழ்பண்ணையில், சரோஜா அவர்களை சந்தித்த போது, சொல் போல் செயலிலும் மேன்மையாளராக அறிந்தேன். தமிழகத்தில் மிக அரிதான, எளிமையில் புதுமை,  நவீன சிந்தனை, தெளிந்த லட்சியம் எல்லாம் அவரிடம் கண்டேன்.  
சலவைக்கு அவர்  பயன்படுத்தி வரும், பயோ என்சைம் கரைசல் தொழி்ல் நுட்பத்தை, கடந்த மே 18ம் தேதி கேட்டுப் பெற்றேன். இணையர் வளர்மதி, அதை பயன்படுத்தி, உயிர் நொதி கரைசலை தயாரித்துள்ளார்.
எங்கள் அனுபவத்தில் தயாரிப்பு விபரம்:
தேவையான பொருட்கள்:
நாட்டு சர்க்கரை  – 100 கிராம்
எலுமிச்சை பழம்  – 1
தண்ணீர்  – 500 மில்லி.
ஞெகிழி குப்பி  – 1 லிட்டர் கொள்ளளவு.
செய்முறை:
தண்ணீரில், நாட்டு சர்க்கரை மற்றும் அரைத்த எலுமிச்சையை சேர்த்தோம். நன்கு கரைத்து, நெகிழி குப்பியில் அடைத்து நிழலில் பாதுகாத்தோம். தினமும், ஒருமுறை குப்பி திறந்து, வாயு வெளியேறியதும் மூடினோம். எழு நாட்கள் இது போன்று செய்து வந்தோம்.
எட்டாவது நாள் கரைசல் தயார்.
தொழில் நுட்பத்தை தந்து உதவிய திருமிகு சரோஜா அவர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் விதமாக, நந்தவன கரைசல் என்றே அழைக்கிறோம்.
முதலில், பருத்தியால் ஆன முகக்கவசத்தை, இந்த கரைசலில் அலசி, வெயிலில் உலர்த்தி பயன்படுத்த துவங்கினோம். நறுமணத்துடன் மிளிர்ந்தது. தொடர்ந்து, உள்ளாடைகள் சலவைக்கு பயன்படுத்தினோம். அது விரும்பத்தக்கதாக இருந்தது. மகிழ்ச்சி தந்தது.
இன்று காலை, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவந்தோம். இயந்திர துவைப்பானில், நீர் நிரம்பி,  அழுக்கு துணிகளுடன், 100 மி.லி., கரைசலை கலந்து, 30 நிமிடங்கள் ஊறிய பின், துவைக்க விட்டோம். வழக்கம் போல் துவைத்தது. அழுக்கை நீக்க, ரசாயனத்துக்கு பதிலான, இயற்கை கரைசல். அவ்வளவு தான் வேறுபாடு.
சலவைக்கு, ஒரே அலசல் போதும் என்று பரிந்துரைந்திருந்தார் சரோஜா. தானியங்கி இயந்திர கட்டளை நிரலை மாற்ற முடியாததால் அதற்கு வழியில்லை. வழக்கம் போல் துவைத்து பிழிந்தது இயந்திரம்.
பிழிந்த துணிகள், நறு மணத்துடன் மிளிர்கின்றன. தொழில் நுட்பத்தை செயலாக்கியதில் இணையருக்கு மிகுந்த மகிழ்ச்சி. எளிய, செலவு குறைந்த, இயற்கைக்கு நெருக்கமாக மற்றொரு நகர்தல்.