Monday 15 June 2020

யுனஸ்கோ கூரியர் – கனவும் நினைவும்

இளமையில், விரும்பி படித்த இதழ்களில் ஒன்று, யுனஸ்கோ கூரியர். நாகர்கோவில் குடிசை மாத இதழ் வாசகசாலையில், 1984ல் முதலில் கண்டேன்.  தமிழ் கிராம சமுதாயம் குறித்த கட்டுரை ஒன்றை, எழுத்தாளர் சுந்தர ராமசாமி, எழுதியிருந்தார். அதைத்தான் முதலில் வாசித்ததாக நினைவு. தொடர்ந்து, விரும்பி வாசித்து வந்தேன். என் விருப்ப தேர்வில் முலிடம் பெற்ற இதழ்.
இதன் அலுவலகம், சென்னை, சேத்துப்பட்டு, உலக பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கியது. சென்னை வந்தபின், அந்த அலுவலகத்தை  நாடி சென்றேன். இதழின் தமிழ் பதிப்பின் ஆசிரியர்  தமிழறிஞர் மணவை முஸ்தபாவை சந்தித்தேன். 
எளிமையும், அன்பும், அறிவாற்றலும், செயலுாக்கமும் நிரம்பியவர். அவருடன் நிகழ்ந்த சந்திப்பின் ஒவ்வொரு நொடியும், வாழ்வின் முக்கியமான தருணங்களாக கருதுகிறேன். 
தமிழ் மொழியை அறிவியல் பார்வையுடன்  மேம்படுத்த அவர் போல் உழைத்த அறிஞர் இல்லை. அறிவியல் தமிழின் தந்தை என்ற புனை மொழி வெறும் புகழ்ச்சியில்லை. 
அவர் உருவாக்கிய சொல்லகராதிகள், தமிழ் மொழியின் ஆயுளை நீட்டிக்கும் அரிய சாசனங்கள்.
அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி போன்றவை, அவரது உயர்ந்த  உழைப்பை காட்டுபவை. சிறுவர் அறிவியல் கலைக்களஞ்சியமும் மிக முக்கியமானது.
தமிழில், 31 புத்தகங்களை ஆக்கியுள்ளார். ஆங்கிலத்தில் இருந்து, ஏழு நுால்களை மொழியாக்கம் செய்துள்ளார். மலையாளத்தில் இருந்து, மூன்று நுால்களை பெயர்த்துள்ளார். 
இவை தவிர, மூன்று தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். அவை, வெற்றுச் சொற்களால் நிரம்பியவை அல்ல. தமிழ் மொழியை, சமூகத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் பசுவை வனங்கள்.
எளிய பின்னணியில் பிறந்து, தமிழ் சமூகத்துக்கும், மொழிக்கும் அருங்கொடைகள் வழங்கிய பேரறிஞர் மணவை முஸ்தபா பிறந்த தினம் இன்று. 
வெற்று வேட்டுகளுக்களுக்கும், கள்ளச்சாராய வியாபாரக் கும்பலுக்கும் ஆர்பரித்து அடங்கும் தமிழகம், கடும் உழைப்பாலும், செயலாலும் தமிழையும், தமிழ் சமூகத்தையும் உயர்த்திய, எளிய அறிஞரைக் கண்டு கொள்ளாமல் விடுவதில் வியப்போதும் இல்லை.
சிறுவர் இதழ் தயாரிப்பில்,  அவர் உருவாக்கிய அறிவியல் சொற்கள் பலவற்றை பயன்படுத்தி வருகிறேன். பயன்படுத்தும் போதெல்லாம் அவர் நினைவை போற்றத் தவறியதில்லை. அவரது சொற்கள், தமிழ் எண்ணத்தையும், சிந்தனை மரபையும் விரிவு படுத்தும். தமிழ் சமூகத்தை பண்படுத்தும்.
தமிழ் சமூகம், அறிவியல் ரீதியாக சிந்திக்க துவங்கும் போது, முஸ்தபாவின் புகழ் முதன்மை இடத்தில்  மலரும். 
படக்குறிப்பு: என் சேகரத்தில் உள்ள யுனஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பு இதழ் இது. பராமரிக்க இயலாமல் பல பாழாகின. வானொலி பற்றிய சிறப்பிதழ் என்பதால், என் இனிய நண்பர் பேராசிரியர் ஜெயசக்திவேல் வசம் ஒப்படைக்க விரும்பினேன். உலக அளவில் வானொலி ஒலிபரப்பு குறித்து ஆராய்ந்து வரும் முக்கிய அறிஞர்களின் ஒருவர். வானொலி தொடர்பான பல அரிய தொகுப்புகளை பேணி வருகிறார். சென்னை பல்கலைக் கழக இதழியல் துறையில் பேராசிரியாக உள்ளார்.  

No comments:

Post a Comment