விடுதலைக்கு பின், இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டாலும், செயல்படுத்துவதில், சமச்சீரான நடைமுறை கடை பிடிக்கப்படவில்லை. விடுதலைப் போராட்டம் முடிந்து, 60 ஆண்டுகளுக்குப் பின்னும், அடிப்படை வளர்ச்சி எட்டிப்பார்க்காத பகுதிகள் ஏராளம். குறிப்பாக, ஆதிவாசிகளின் வசிப்பிடங்கள், விவசாய உற்பத்தியை நம்பிய கிராமங்கள், நகர ஏழைகள் வசிக்கும் குடிசைப்பகுதிகள் என, அடுக்கிக் கெண்டே போகலாம்.
ஐக்கிய நாடுகள் சபை, 2005 ம் ஆண்டு, 177 நாடுகளின் மானுட வளர்ச்சியை, தரவரிசைப் படுத்தி, அறிக்கையாக வெளியிட்டது. அதில், மக்களின் வாழ்க்கைத் தரம், அந்த நாட்டின் சமூக, பொருளாதார பின்னணியில் ஆராய்ந்து பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா, 166 ம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து, மானுட வளர்ச்சி அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு வருகிறது. 2018 ம் ஆண்டு அறிக்கையில், 131 வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளது.
இந்திய வளர்ச்சிப் பயணம், தொய்வும் தடங்கலும் நிறைந்துள்ளதை இந்த தர வரிசை பட்டியல் நிரூபிக்கிறது. அதிகாரத்தின் உயர்மட்டத்தில் திட்டம் தீட்டி. அறிவி்க்கப்படுகிறது. அது, வட்டார அளவில் முறையாக நிறைவேற வேண்டும்.
இந்திய விடுதலைப் போரில், பத்திரிகைகளும் ஒருங்கிணைந்து, போராட்டத்தை முன் நகர்த்தின. போராட்டங்களுக்கு சாதகமாக, மக்கள் கருத்தை உருவாக்கின. இது ஒரு வகையான கண்காணித்து உணர்த்தும் நடவடிக்கை.
கண்காணிப்பதும், சுட்டிக்காட்டுவதும், தொடர்பியல் நடைமுறையில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒரு திட்டத்தை அமலாக்கம் செய்யும் போது, அதன் செயல்பாட்டை கண்காணித்து அதில் உள்ள விலகல் அம்சங்களை சுட்டிக்காட்டும் போது, அது வளர்ச்சித் தொடர்பியல் என்ற பணியாக மாறும். அதை வளர்ச்சியில் ஒரு பாணியாக மாற்றினால், கருத்தியலாக வளரும்.
இந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, செய்தியின் செயல்பாட்டை சமுதாய வளர்ச்சி திட்டங்களுடன் இணைத்து முறைப்படுத்தலாம். அது, இன்றியமையாதததும் முக்கியமான தேவையுமாக மாறும். முறையான, கூர்மையான விமர்சனம், வளர்ச்சியை சரியான இலக்கில் நகர்த்தும். புதிய திட்டங்களை உருவாக்க வழிகாட்டியாக அமையும்.
***
வளர்ச்சி திட்டம்
அரசுத் திட்டம் என்பது, மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அல்லது அதற்கான சூழலை உருவாக்குவதற்கான முன் ஏற்பாடு. இந்தியா போன்ற வளரும் மூன்றாம் உலக நாடுகளில், மக்களுக்கு அன்றாட நெருக்கடிகள் அதிகம்.
இந்த நெருக்கடி பற்றி அதிகார மையங்கள் அறிந்து வைத்திருப்பதில்லை. அல்லது அதிகார மையங்களின் சாய்வால், அது முரண் வடிவாக மாற்றப்பட்டிருக்கும். அல்லது கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கும். திட்டங்களை செயல்படுத்தும் போது, அது, மேலும் முரண்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
திட்டத்தை குறிப்பிட்ட இலக்கில் செயல்பட அனுமதிக்காது. அரசு இயந்திரம் இயல்பாக செயல்படுவதற்கு பதிலாக, முரண் போராட்டத்தில் இயைந்து நிற்கும். இறுதியில், முரண் போராட்டம் திட்டத்தின் திசையை மாற்றும். திட்டம் இயல்பிழந்து, முகம் அழிந்து, தொந்தரவாக துறுத்திக் கொண்டிருக்கும். மக்கள் அந்த வேதனையை அனுபவமாக பெற்று, வலியில் முனகுவர். அந்த திட்டத்தை செயல்படுத்தவதற்கான முயற்சியும், உழைப்பும் வீணாகும். வளர்ச்சிக்கு பதிலாக, வீக்கம்தான் மிஞ்சும்.
இது போன்ற நிலையில், வளர்ச்சி தொடர்பான நெருக்கடிகளை, முரண் பேராட்ட முகத்தை வெளிப்படுத்த, எளிய நடைமுறை வேண்டும். இது பற்றி, சமூக ஆர்வலர்களால் பல தளங்களிலும் உரையாடல், விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த உரையாடல், அரசு அமைப்பில் மிகவும் பின்தங்கியே உள்ளது.
சமுதாய அடிமட்ட யதார்த்த நிலை, அதில் நிலவும் சிக்கல், சிடுக்கு, வம்பு போன்றவை அதிகார மையங்களின் கண்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். தெளிவு, மாற்றத்தை பரிசீலிக்கும், அதற்கு ஏற்ப திட்ட அமலில் மாற்றங்கள் நடக்கும்.
அந்த மாற்றங்களை உள்வாங்கும், திட்டங்கள் தான், வளர்ச்சியை பூர்த்தி செய்யும். புதிய திட்ட வடிவங்களை முன்னேற்கும். அப்படிப்பட்ட சூழலில் அரசு அமைப்புகள் இல்லை. அதனால், சுட்டிக்காட்டவும், கண்காணிக்கவம், உணர்த்தவும் அரசுக்கு இணையாக ஒரு அமைப்பு உருவாக வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.
***
மக்கள் பங்கேற்பு
ஜனநாயக அரசுகளில், மக்கள் பங்கேற்பு என்பது மையப்படுத்தப்பட்ட கருத்து. ஆனால், மக்கள் கருத்தை, பங்கேற்பை ஏற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான், அரசு இயந்திரமும், அதற்கு இணையான நீதி பரிபாலன அமைப்பும் உள்ளது.
ஜனநாயகத்தை தாங்கும், துாண்களில் ஒன்றாக இதழ்களை மதிப்பிட்டுள்ளனர். சமுதாயத்தில் நிலவும் சிக்கல்களை, விமர்சனத்துடன் வெளிப்படுத்தி விவாதிப்பதால் தான் , இந்த தகுதியை இதழ்கள் பெறுகின்றன.
உள்ளூர் மொழி இதழ்கள், வட்டார ரீதியாக மக்களுடன் நெருங்கியுள்ளன. இந்த இணைவை முதன்மைப்படுத்தி, மக்கள் பிரச்னைகளை இதழ்கள் அணுகும் விதம் பற்றி, முழுமையான ஆய்வு எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அது போன்ற ஆய்வுகளை நடத்தினால் தான், வளர்ச்சித் தொடர்பியல் என்ற, கருத்தாக்கச் சட்டகத்துக்குள், இதழ்களை நிறுத்தி பரிசோதிக்க முடியும்.
வளர்ச்சிக்கும், இதழ்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக அளந்து அறிய முடியும். அப்படி அளந்தறிவதுதான், வளர்ச்சி தொடர்பியல் கருவியாக, இதழ்கள் பயன்படுமா என்பதை கணிக்க முடியும். அப்படி ஓர் கணிப்பை உருவாக்கும் முயற்சியாகத்தான், இந்த ஆய்வு அறிக்கையை உருவாக்கியுள்ளேன்.
இதில், மக்கள், இதழ்கள், அரசு இயந்திரம் என்பவற்றை முக்கோண சட்டகத்தில் நிறுத்தி பார்கக முயன்றுள்ளேன். பெரும் அடர்த்தியும், வலிமையும் உள்ள மக்கள் சமுதாயம் என்ற புள்ளி, திறட்சி அடையாததால், முக்கோண சட்டகம் சாய்ந்து நொருங்கி விழுவதை காணமுடிகிறது.
***
தொர்பியல் மாற்றம்
இரண்டாம் உலகப்போருக்குப்பின், தகவல் தொடர்பு முறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்பியல் நடைமுறை விரிந்து பரந்து விட்டது. அது கட்டுப்படுத்த முடியாதபடி, அசுரத்தனமாக விரிந்து, உண்மையை சுட்டுவதற்கு பதிலாக, குழப்பத்தை உருவாக்கும் நிலையில் உள்ளது.
இந்தியா போன்ற பல மொழிகள், வட்டார கலாசாரம், பன்முக சமூகங்கள் கொண்ட நாடுகளில், வளர்ச்சி செயல்பாட்டில் தடுமாற்றமும், தடங்கலும் தவிர்க்க முடியாதவை. மொழி நாளிதழ்கள், வட்டாரம் சார்ந்து ஊடாடுபவை.
வட்டார அளவில், இதழ்கள் வெளியிடும் செய்திகள், அந்தந்த பகுதியில், நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. இதன்மூலம் செல்வாக்கு பெறுகின்றன. இந்த பிணைப்பை , வளர்ச்சியில் சுட்டல் உறவாக இணைக்க முயற்சிக்கலாம்.
தமிழ்நாட்டில், தினமலர், தினத்தந்தி, தினகரன், தினமணி, தி இந்து தமிழ் என, பல நாளிதழ்கள், தமிழ் மொழியில் பல நகரங்களில் அச்சாகின்றன. ஒவ்வொரு அச்சு மையத்திலும், பல பதிப்புகள் வெளிவருகின்றன.
வட்டாரம் சார்ந்து பல நுாறு செய்திகள், தினமும் பிரசுரமாகின்றன. இந்த செய்திகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒருங்கிணைத்து உற்று நோக்கினால், அவற்றின் பொதுப் பண்பை வரையறை செய்யலாம்.
சென்னை நகரத்தில் அச்சாகும், தினமலர் நாளிதழ், காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்துக்கு தனி பதிப்பை வெளியிடுகிறது. இந்த பதிப்பில், 2005 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31 வரை, பிரசுரமான வட்டார செய்திகளை வகைப்பிரித்து, உள்ளடக்கத்தை அலசியபோது, பல உள் இயக்கங்களையும், முரண்களையும், விமர்சன இயக்கத்தையும் காண முடிந்தது.
சமுதாயத்தில் நேர்வினை சார்ந்தோ, முரண்வினை சார்ந்தோ, ஒரு வகை உந்துதலை அந்த செய்திகள் ஏற்படுத்தியிருந்ததை விளங்க முடிந்தது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகள் அவற்றில் இருப்பதை அறியமுடிந்தது.
நாளிதழ் செய்திகளில், மக்கள் பிரச்னைகள் கவனம் பெறுவதால் தீர்வுகளுக்கு சாத்தியம் உண்டு. உள்ளூர் வளர்ச்சியில் துாண்டும் கருவியாக, வட்டார செய்திகளை பயன்படுத்தலாம்.
ஒரு செய்தி உள்ளடக்கத்தில் புலப்படாமல் இயங்கும் பொருள் பற்றிய புரிதலை, ஒழுங்கு படுத்தினால், தகவலின் சாரம், ஒரு சமூகத்தின் குரலாக வெளிப்படும். இது போன்ற செய்திகளின் உள்ளடக்கத்தைக் குறியீடு செய்து வகைப்படுத்தி, மாதிரி அலகுகளை ஒப்பிட்ட ஆய்வாளர் பெர்னார்டு பெரல்சன், ஒருவகை முடிவை அடைந்தார்.
உள்ளடக்கத்தை பகுப்பாய்வதில், இரண்டு வகைமைகள் உள்ளன. செய்தியின் பருப்பொருள் அளவு மற்றும் எண்ணிக்கையை கணக்கிடுவது, அளவிடும் முறை எனப்படும். தமிழகத்தில், புரட்சித்தலைவி, புரட்சித்தலைவர், கலைஞர், தளபதி, உலகநாயகன், சூப்பர் ஸ்டார் போன்ற அடை சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சொற்கள் நிகழ்த்தும் மாற்றம், பொருள்புலப்பாடு பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம். ஒன்றை புனிதப்படுத்தவோ, கடவுள் தன்மையாக கட்டமைக்கவோ, இந்த சொற்கள் உதவுகின்றன. வேறு எந்த வகையிலும் இந்த சொற்கள், சமுதாயத்துக்கு பயன்படாது என்பது கண்கூடு.
இது போன்ற கோஷங்கள் ஒரு தனிமனிதரை உயர்த்திப்பிடித்து, விமர்சன நோக்கை குறைக்கும். முகஸ்துதி பெருகி, பொது கருத்தியல் தளத்தில், விமர்சனம் என்பதை அறமற்ற செயல்பாடாக மாற்றும். இதை, சமுதாய வளர்ச்சியில் மிகப் பெரிய பின்னடைவு தொடர்பியல் என்றுதான் கொள்ள வேண்டும்.
ஒரு செய்தி சொற்றொடர் தொகுப்பு வெளிப்படுத்தும் நேரடி தகவல், மதிப்பீடு, நம்பகத்தன்மை, ஆதாரம் ஆகியவை, தரனிடும் முறையில்தான் கிடைக்கிறது. ஒரு பொது அறத்தை பேண முனைகிறது. அந்த அடிப்படையில் தான், செய்தி உள்ளடக்கங்களை பகுப்பாய்வு செய்துள்ளேன்.
இந்திய விடுதலைப் போரில், ‘வெள்ளையனே வெளியேறு’ என, காந்தி முன்வைத்த கோஷம், நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலையை, எழுச்சியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
அது, சொற்களின் அளவிலானது அல்ல; உள்ளடக்க பொருண்மை தாக்க உணர்வு அடிப்படையிலானது. குறைந்த சொற்களின் தொனி, தொடர்பியல் வெற்றியாக அமைந்தது. கருத்து, கூர்மையாக பாய்ந்து, மையத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயன்றது. அல்லது நகர்த்தியது.
உண்மை நிகழ்வுக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்த, தொடர்பியல் அறிஞர் வால்டர் லிப்மென், இரண்டுக்கும் இடைவெளி அதிகம் உள்ளதாக கூறியுள்ளார். ‘உண்மையில், என்ன நடக்கிறது என்பதை புரிந்து, மக்கள் செயல்படுவதில்லை; இதழ்கள், கூறுவதை யொட்டித்தான் செயல்பாட்டை முடிவு செய்கின்றனர்’ என்று கண்டறிந்துள்ளார்.
***
அணுகுண்டு தொடர்பியல்
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதற்கு, 60 ஆண்டுகளுக்குப்பின், அந்த குண்டு வீச்சு, அதன் பாதிப்புகள் பற்றி வெளியான செய்திகளை தொகுத்து, ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர்கள் யாஷீசுசிரீயோ, கேரல் ரின்னர்ட் ஆகியோர் நிகழ்த்தினர்.
உலகில், 12 நாடுகளில் வெளிவரும் பிரபல நாளேடுகள், 2005 ஆகஸ்ட் 8 ம் தேதி முதல், 12 ம் தேதி வரை, அணுகுண்டு வீசிய நினைவு தினத்தை ஒட்டி, வெளியிட்ட செய்திகளை தொகுத்து, தகவலை ஆய்வு செய்தனர். முடிவுகள், நான்கு வகையாக அமைந்திருந்தன.
குண்டு வெடிப்பு...
* போரை நிறுத்த வழி
* அது கொடூரச் செயல்
* போரை நிறுத்த வழி ஆனாலும், கொடூரம்
* ஜப்பானுக்கு தண்டனை
நாட்டுக்கு நாடு, ஒரே நிகழ்வு குறித்து வெளியான செய்தி உள்ளடக்கங்களில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் காட்டியது.
இங்கிலாந்து, ஜெர்மனி, தாய்லாந்து, அரேபியா, பிரான்ஸ் ஆகிய நாட்டு இதழ்களில் வெளியான, அணுகுண்டு வெடிப்பு பற்றிய, செய்தி உள்ளடக்கங்கள், ‘கொடூரச் செயல்’ என்பதை மையக் கருத்தாக, தொகுத்திருந்தன.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாட்டு இதழ் செய்திகள், ‘போரை நிறுத்த வழி, ஆயினும் கொடூரச் செயல்’ என்று குறிப்பிட்டிருந்தன.
சீனா, கொரியா நாட்டு இதழ் செய்திகள், ‘ஜப்பானுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை’ என, சாடியிருந்தன.
ஒரே நிகழ்வை, நாடுகள், வெவ்வேறுவகையாக, அதாவது, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பொருள் தரும் வகையில், அந்தந்த நாட்டு இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நாடுகள், கட்டமைத்துக் கொண்ட அதிகாரப் பண்புக்கு ஏற்ப, அந்தந்த நாட்டு இதழ்கள் செயல்படும் என்பததை, இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
***
வளர்ச்சி தொடர்பு ஆய்வுகள்
இந்தியாவில் வளர்ச்சி தொடர்பு ஆய்வுகள் சுதந்திரத்துக்குப்பின் வேகமெடுத்தன. அமெரிக்கா தகவல் தொடர்பு வல்லுனர் வில்பர் ஸ்க்ராம் தலைமையிலான குழு, 1964 ல், இந்திய அரசின் தொடர்பு பணிகள் பற்றி ஆய்வு செய்தது. அது, வளர்ச்சித் தொடர்பின் முக்கியத்துவம் பற்றி, அரசுக்கு ஆலோசனை கூறியது. இதையடுத்து, டில்லியில் உயர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்திய தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு குறித்து, 1975 -76 ம் ஆண்டில், 2,400 கிராமங்களை ஒருங்கிணைத்து, ஆய்வு நடத்தப்பட்டது. அது, சாதாரண மக்களிடம், தகவல் தொடர்பு ஏற்படுத்தும் தாக்கங்களை, மாற்றங்களை பட்டியலிட்டது.
அச்சு ஊடகங்கள், தனியார் நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை, வியாபாரத் தன்மை நிறைந்தவை. அச்சு ஊடகத்தில் வளர்ச்சி செய்திகள் பற்றி ஜே.வி. விளநிலம், 1973 ல் ஓர் ஆய்வு செய்துள்ளார். இந்திய இதழ்களில் வளர்ச்சி செய்திகள் பற்றி, 1986 ல் ஆய்வு செய்த கியூக், ‘குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி செய்திகளை இதழ்கள் வெளியிடவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதே தலைப்பில், 2000 ல் ஆய்வு மேற்கொண்ட, டி.வி.ஆர்.மூர்த்தி, வளர்ச்சி செய்திகள், மிகக் குறைவாக வெளியாகியுள்ளதாக மதிப்பிட்டுள்ளார். அரசியல் மற்றும் குற்றச் செய்திகளையே இதழ்கள் அதிகம் வெளியிடுவதாக மதிப்பிட்டுள்ளார்.
‘முரண் சார்ந்து சிக்கல் இயங்குகிறது. இதை அலசும் போது, பிரச்னையின் முகம் வெளிப்பட வாய்ப்பு உண்டு. பிரச்னையில் இருந்து விடுபடுதால் தான், வளர்ச்சி. வளர்ச்சிக்கான பொருள், மாற்றத்துக்குள் மறைந்திருக்கும் உண்மை. வளர்ச்சி என்பது, உடன்பாடு அல்லது எதிர்மறையான தொடர் செயல்பாடுகளைக் கொண்ட மாற்றம்...’ என்றார், அவதார் எஸ் தேசி
‘ஒரு தேவை நிறைவேறும் போது, மற்றொரு குறைபாடும் வருகிறது. வளர்ச்சி என்ற வரையறையே பிரச்னைகளில் இருந்து விடுபடுதலின் தொடர்ச்சிதான். ஏற்றத்தாழ்வு என்பது, வளர்ச்சி நடவடிக்கையுடன் இணைந்த தவிர்க்க முடியாத செயல்’ என்று, இந்திய வட்டார வளர்ச்சி பற்றி ஆராய்ந்த, பேராசிரியர் ஷிர்ச்மேன் வரையறுத்துள்ளார்.
***
வளர்ச்சி வேறுபாடு
மக்களை நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிப்பவை, மக்கள் பிரச்னையாகிறது. இது, வட்டார அளவில் வேறுபடலாம். இசைந்தும் இருக்கலாம். வட்டார தன்மையில் வேறுபட்டாலும், சர்வதேச வளர்ச்சி அளவுகோல் படி, நேரடி தன்மையில் தான் நிலை கொள்ளும்.
ஐக்கிய நாடுகள் சபை, உறுப்பு நாடுகள் வளர்ச்சியை செயல்படுத்த, எட்டு விதிகளை உருவாக்கியது. அதை, மில்லினியம் வளர்ச்சி பிரகடனம் –2000 என்று அறிவித்தது.
இந்த விதிகள் அடிப்படையில், வளரும் நாடுகள், திட்டங்களை வகுத்து, முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம். இப்போது, 17 விதிகளாக பிரித்து, செயல்படுத்த பரிந்துரைத்துள்ளது. இதை, நிலைத்த நீடித்த வளர்ச்சி விதிகள் என உலக அளவில் வரையறை செய்துள்ளது. வளரும் நாடுகள் இந்த விதிகளை கடை பிடிக்க, ஒப்பந்தமும் செய்துள்ளது.
ஐ.நா., வளர்ச்சி விதி சுருக்கம்:
* பசி, வறுமையை ஒழித்தல்
* தரமிக்க கல்வியை உறுதி செய்தல்
* பாலின சமத்துவம், பெண்களை திறன் படுத்துதல்
* குழந்தை இறப்பு விகிதம் குறைத்தல்
* மன நலம் காத்தல்
* கொடூர நோய்கள் ஒழித்தல்
* மாசற்ற சூழல் உருவாக்குதல்
* சுகாதாரம் உறுதி செய்தல்
இந்த விதிகள், வட்டாரத் தன்மையுடன் இயங்கும் போது, பல முகங்களை காட்டும். இந்த விதிகளை மையப்படுத்தி, திட்டங்களை செயல்படுத்தும் போது ஏற்படும் தடங்கல்களை, மக்கள் பிரச்னையாக வரையறுக்கலாம்.
இந்தியா போன்ற வட்டாரத்தன்மை நிறைந்த நாடுகளில் சமுதாய சிக்கல்கள், வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற தடையாக உள்ளன. இந்த தடைகளை வெளிப்படுத்தி அலசினால்தான், சிக்கலை தீர்க்க முடியும்.
முன்நிபந்தனை இன்றி, பிரச்னையின் தன்மையை, அதன் வேரைக் கண்டுபிடித்து விமர்சிப்பதன் மூலம், ஒரு செய்தி, வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்கும். இதழ்கள், வளர்ச்சிக்காக செயல்படுவதை, இதன் மூலம், உறுதி செய்யலாம்.