Monday 27 July 2020

புலிக்கறியும் மான் குட்டியும்

மருந்துவாழ்மலை காட்டில், ஒரு நரி வாழ்ந்து வந்தது. வயது முதிர்ந்து விட்டதால் ஓடியாடி, வேட்டையாட முடியவில்லை. இளம் வயதில் நடத்திய வேட்டையின் போது, அதன் கால் ஒன்று ஊனமடைந்தது. பற்களும் உதிர்ந்து விட்டன. இரையை பிடிக்க முடியாததால், திணறியது. ஒரு மரத்தடியில் படுத்து ஆலோசனை செய்தது.
 அவ்வழியாக வந்தது கம்பீரம் மிக்க புலி. அதைக் கண்டவுடன், ‘பெருமைகுரியவரே... வணக்கம்...’ என, குட்டிக்காரணம் அடித்து முன்னங்கால்களை துாக்கி வணங்கியது நரி.
‘யாரப்பா நீ... என்னை ஏன், வணங்குகிறாய்...’
‘ஐயா உங்க அருமை, பெருமைகளை அறிந்தவன். அதனால்தான் வணங்குகிறேன்...’
 ‘அப்படியா... மகிழ்ச்சி...’ என்ற புலி சற்று கர்வத்துடன் நடந்தது. 
விடமால், பின் தொடர்ந்தபடி, ‘தினமும் இரை தேடி, இப்படி நீங்க அலைவது பாவமாக இருக்கு...’ என்றது நரி.
‘உழைத்தால் தானே உணவு கிடைக்கும்...’
‘சரிதான்... உங்களைப் போன்ற வலிமை மிக்கவர்களுக்கு சேவகம் செய்ய, என்னைப் போல் பலர் காட்டில் இருக்கிறோமே... அப்புறம் ஏன் அலையுறீங்க...’
பல்லிளித்த நரியின் பேச்சைக் கேட்டு, ‘இப்போ நான் என்ன செய்யணும்...’ என்றது.
 ‘இனி... இதுபோல் அலைந்து திரிய வேண்டாம்; குகையிலே சுகமாக இருங்க; இரை இருக்கும் இடத்தை அறிந்து வந்து துப்புச் சொல்றேன்... அலைந்து திரியாமல் அமுக்கிவிடலாம் அல்லவா...’ 
‘சரி... அதுவும் நல்லாத்தான் இருக்கு...’
வஞ்சக நரியின் வார்த்தைகளை ஒப்புக் கொண்டது புலி. கூட்டணி வைத்தவுடன் கும்மாளம் அடிக்க துவங்கியது கிழநரி.
காட்டில் மான், மாடு, காட்டெருமை போன்ற மிருகங்கள் இருக்கும் இடத்தை அறிந்த நரி, யாருக்கும் தெரியாமல், புலியிடம் சொல்லியது. ஓடிக் களைக்காமல் பதுங்கியபடி சென்று, அவற்றைக் கொன்று, தின்றது புலி. தின்று போக மீதியை ருசித்துச் சாப்பிட்டு வாழ்வை நகர்த்தியது நரி.
ஒரு நாள் –
குட்டியைக் காணாமல், காடு முழுக்க தேடியலைந்தது மான்; கடைசியாக, புலி குகை வாசலில் அது விளையாடிக் கொண்டிருப்பதை கண்டது. ஆபத்தை உணர்ந்து குட்டியை எச்சரித்தது. பாதுகாப்புடன் குட்டியை அழைத்து செல்ல முயன்றது. அப்போது, குகை நோக்கி புலி வருவதைக் கண்டது.
கடும் அதிர்ச்சி அடைந்தது மான். ஆனாலும் தைரியத்தை கைவிடவில்லை. கலங்காமல் சிந்தித்து வழி தேடியது. 
மிக அருகில் வந்துவிட்டது புலி. 
அப்போது, திடீர் என ஓர் உபாயம் நினைவுக்கு வந்தது. குட்டியை ஓங்கி அடித்தது மான்; வலி தாங்காமல் அழுதது குட்டி. மீண்டும் அடித்தது மான். இப்போது, மிகவும் சத்தமாக கத்தி அழுது புரண்டது குட்டி.
அதன் அழுகை சத்தத்தின் ஊடாக, ‘புலிக்கறி வேணும்... புலிக்கறி வேணும்... என்று ஏன் அடம் பிடிக்கிறாய் இன்று, இரண்டு புலிகளை அடித்துக் கொடுத்து விட்டேனே... போதாதா... கொஞ்சம் பொறு; இந்த குகைக்கு வரும் புலியை அடித்து தருகிறேன்... அதை சாப்பிட்டாவது திருப்தி படு...’ என்று கம்பீரமாக சொன்னது மான்.
இதைக் கேட்டதும் பயத்தில் நடுங்கியது புலி. அதன் கால்கள் தள்ளாடின. பீதியில் முழித்தபடி ஒரு புதர் நோக்கி ஓடியது. அங்கு பதுங்கியிருந்த நரி சந்தேகத்துடன், ‘புலியோரே... குகை்குப் போகாமல் ஏன் ஓடுகிறீர்...’ என கேட்டது.
‘நண்பா... உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்...’
‘அப்படியா... என்ன செய்தி!’
‘என் குகையில், ஏதோ மிகப் பயங்கர மிருகம் ஒன்று குட்டியுடன் பதுங்கி முற்றுகையிட்டுள்ளது...’
‘உங்களை விடப் பெரிய பயங்கர மிருகமா...’
‘ஆமாம்... அப்படித்தான் இருக்க வேண்டும். இரண்டு புலிகளை அடித்துக் கொடுத்தும், அதன் குட்டிக்குப் பசி அடங்கவில்லையாம்; மேலும், புலிக்கறி கேட்டு அடம் பிடித்து அழுது கொண்டிருக்கிறது அதன் குட்டி... இதைக் கண்டதும் நடுங்கி ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்...’
‘அடடே... குட்டியே, இரண்டு புலிகளைச் சாப்பிட்டால்... தாயின் பலத்தை ஊகிக்க முடிகிறது. அது எதை எல்லாம் சாப்பிடுமோ...’
‘அத நெனச்சுத்தான் ரெம்ப பயமாயிருக்கு...’
‘அந்த மிருகத்தை பார்த்தீரா புலியாரே...’
‘பார்க்கவில்லை... குரலைத்தான் கேட்டேன்...’
‘வாருங்க... பதுங்கி சென்று பார்த்து வருவோம்...’
‘ஐயோ... விஷப்பரிட்சை வேண்டாம்... அந்த பொல்லாத மிருகத்திடம் மாட்டினா அவ்வளவுதான் நரியாரே...’
‘எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது...’
‘என்ன...’
‘நீண்ட கயிற்றை எடுத்து அதில், இருமுனையிலும் பிணைத்துக் கொள்வோம்...’
‘இருவரும் கழுத்தில் ஏன், கட்டிக் கொள்ளணும்...’
‘வாழ்விலும், சாவிலும் இணை பிரியாத நண்பர்கள் அல்லவா நாம். அதைக் காட்டத்தான்... பொல்லாத மிருகம் துரத்தினால், இருவரும் தப்பி ஓடிவிட வசதியாக இருக்கும்...’என்றது நரி.
அதன்படி கயிற்றில் பிணைத்தபடி நடந்தன. பயந்தபடி பதுங்கி வந்த புலியையும், நரியையும் துாரத்திலேய பார்த்து விட்டது மான். உடனே, குட்டியை மறுபடியும் ஓங்கி அடித்தது; அழுதது குட்டி.
‘அழாதே என் செல்லமே... நண்பன் நரி, என்னிடம் ஓர் உறுதி கூறி சென்றான். அதற்கிணங்க, ஒரு புலியைக் கூட்டி இழுத்து வருகிறான்; உனக்கு நல்ல வேட்டை தான்...’ என்று, மிகவும் உரக்க சொன்னது.
இதைக்கேட்டதும் நடுநடுங்கியபடி, பீதியில் ஓட ஆரம்பித்தது புலி. கயிற்றின் மறுமுனையில் பிணைக்கப்பட்டிருந்த நரி, அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உருண்டது. அதன் உடல் சின்னா பின்னமாக சிதறியது.
அன்பின் செல்லங்களே... இந்த கதையில் இரண்டு நீதியை தெரிஞ்சிகிட்டீங்க தானே... ஒன்று, ஆபத்துவரும் போது, பயந்து நடுங்காமல் புத்தியை பயன்படுத்தி சாதுரியமாக தப்ப வேண்டும்; மற்றொன்று, எளிய மிருகங்களை காட்டிக் கொடுத்து வாழ நினைத்த நரிக்கு ஏற்பட்ட கதியை பார்தீங்களா... உறுதியிடன் வாழ பழகுங்க சரியா!

No comments:

Post a Comment