Monday, 25 May 2020

வீடுறையும் காடு


நேற்று, 24 ம் தேதி ஞாயிறு முன் இரவு.
உணவுக்கு பின், மாடியில் சற்று உலாவிக் கொண்டிருந்தேன். ஆசுவாசத்தில் சாலையை கவனித்த போது, எகிறி குதித்து பாய்தோடி, மழைநீர் வடிகால்வாய்க்குள் புகுந்தது கீரி. தெரு விளக்கின் ஒளியில் அதன் துள்ளல் துல்லியமாக தெரிந்தது. சென்னை, குழுவாக வாழும் சாம்பல் கீரிகள் நிறைந்த நகரம். அதன் வாழ்வியல் வியக்க வைக்கும். சென்னை வாழ்வில், 1987 முதல் கவனித்து வருகிறேன்.
உலாவல் முடித்து படிக்கட்டில் இறங்கிய போது, உள்ளுணர்வு நிறுத்தியது. உற்றுப் பார்த்தேன். காற்றில் சுழற்சியில், படி மடிப்பில் தீவாக தயங்கி கிடந்த இலை சருகுகள்.
அதன் மத்தியில் சிறு அசைவு. உற்று கவனித்தேன்.
Violin Mantis. கிராமத்தில், அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கள் ஊர்வாசிகள், ‘கும்பிடு புட்டான்’ என்பர். மென்சிறகி என்பதால் இந்த பெயர். நம்மை சூழ வாழும் ஒர் உயிரினத்தின், தமிழ் பெயர் என்ன... வயலின் போன்ற அமைப்புள்ளதால் ஆங்கிலத்தில் வயலின் மாண்டிஸ் என்கின்றனர்.
இந்த உயினம் குறித்து இணைய தேடலில் கிடைத்தவை...
தமிழ் லெக்சிகன் என்ற அகரமுதலி, பூச்சிகளை தின்னும் பெரும் பூச்சி வகை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பான பெயரை குறிப்பிடவில்லை. தமிழ் விக்கிபீடியா, இடையன்பூச்சி, மழைப்பூச்சி, கும்பிடு பூச்சி என்று குறிப்பிட்டுள்ளது. இணைய தளத்தில் உள்ள பல தமிழ் அகராதிகள், ‘மாண்டிஸ்’ என்று கடமையை முடித்துவிட்டன.
studysite.org என்ற இணைய தளம், praying mantis என குறிப்பிட்டு, தமிழ் பெயராக, ‘கும்பிடு மாண்டிஸ்’ என தெரிவித்துள்ளது. பிளிக்கரில் படம் பதிவிட்டுள்ள, ஸ்ரீநாத் ரகு என்பவர், மரவட்டை என குறித்துள்ளார்.
கூகுள் இணைய தளத்தில் உள்ள பழைய அகராதி ஒன்று, Mantis ஐ ‘தவிட்டுக்கிளி’ என பெயர்த்துள்ளது. அலாமி.காம் என்ற இணைய தளம், படத்தை வெளியிட்டு, Similar to the Violin praying mantis என்று குறிப்பிட்டுள்ளது. படம், 2009 டிசம்பர் 12ல், திருநெல்வேலியில் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வட்டார ரீதியாக மக்கள் வழக்கில் இதன் தமிழ் பெயர் என்ன... பூச்சியியல் அறிஞர்கள் என்ன பெயர் கொண்டுள்ளனர். அறிய வசதியாக பதிவிட வேண்டுகிறேன். சூழலின் கண்ணியில் இந்த உயிரினம் பற்றி அறியும் ஆவலுடன் இருக்கிறேன்.
***
நெதர்லாந்து நாட்டில் உள்ள குரோனிங்ஜன் பல்கலையில் University of Groningen, The Netherland  பூச்சி இனங்கள் குறித்து ஆய்வு செய்து வருபவர் லிண்டா. இவர், 19 வகையான மாண்டிஸ் பற்றி விரிவாக குறிப்பிட்டு்ளளார். நான் பதிவிட்டுள்ள படம் அவரது, இணைய தளத்தில் இல்லை. ஆனால் அது போன்ற வகையை, Wandering Violin Mantis என ஆங்கிலத்தில் வரையறுத்து்ளளார். அதற்கான லத்தின் பெயராக, Gongylus gongylodes என்று வரையறை செய்துள்ளார்.
நான் பதிவிட்டுள்ள மாண்டிஸ், தென்னிந்தியா மற்றும் இலங்கையை தயாகமாக கொண்டது. மிக அமைதியான உயிரினம். இரைக்காக அலைபாயாது. நிதானமாக காத்திருந்து பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும். இரை கிடைக்காத போது, தன் இனத்தை சேர்ந்தவற்றை உண்ணும், Cannibalism என்ற பண்பு கொண்டது. இதை, தன்னின உயிருண்ணி என, தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். சரியான சொல்லாக படவில்லை.
இணை சேர்ந்த பின் ஓத்திகா என்ற வகை முட்டை பையை வெளியிடும். அதில், 30 முதல், 40 முட்டைகள் வரை இருக்கும். பொரித்து புழுக்கள் வெளிவரும். இதன் முக்கிய உணவு, வீட்டில் பறக்கும் ஈக்கள் என்று கூறப்படுகிறது.
பகலில், 30 டிகிரி முதல் 40 டிகிரி வரையிலான வெப்பத்தில் சுகமாக வாழும். இரவு வெப்பநிலை, 20 டிகிரி போதும். இளம் பூச்சியில் ஆணை விட, பெண் சற்று பெரியதாக இருக்கும். இனப்பெருக்கத்துக்காக, ஒரே ஒரு முறை மட்டுமே கூடும்.
கிராமத்தில், அறுவடைக்கு பிந்தைய காலத்தில் பார்த்திருக்கிறேன். சென்னையில் மைய கோடையில் நேற்று கண்டேன். முதலில் லேசாக அசைந்தாலும், பின் மிகவும் நிதானமாவே காணப்பட்டது. கிட்டத்தட்ட, 10 நிமிடங்கள் அதை கவனித்தேன். நகரவில்லை. சூழலில் இதன் இடம் என்ன என்பதை அறிஞர்கள் விளக்கினால் அறியும் ஆவல் பெருகும்.
வீடுறை காட்டை பராமரிப்பது சற்று கடினமானது தான். கொஞ்சம் பயிற்சி இருந்தால் மகிழ்ச்சி மலரும்
#தடமும் தடயமும்



Saturday, 4 April 2020

புரண்டு வளரும் கணுக்கொடி பிரண்டை

தொடராக அடுக்கியது போல் காணப்படும். பற்றுக் கொடி உதவியுடன் தொற்றி வளரும். சதைப் பற்றுள்ளது. மனித எலும்பு வளர்ச்சிக்கு உகந்தது.
பிரண்டை.
இது கொடி வகை தாவரம். வேலிகளில் படர்ந்திருக்கும். குறுங்காடுகளில் காணலாம். இப்போது, காய்கறிச் சந்தைகளில் நலம் காக்க, காத்துக் கிடக்கிறது. செங்கல்பட்டு ரயில்நிலைய சாலை, மாம்பலம் சந்தை, ஆதம்பாக்கம் பழமுதிர் சோலை என பல இடங்களிலும் காண்கிறேன்.
எலும்புக்கு வலிமை அளிப்பதால் ‘வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. வஜ்ஜிரம்  என்றால் வைரம் என பொருள்.
நான்கு கோணங்களை உடைய சதுரப் பிரண்டை. அனைத்து இடங்களிலும் காணப்படும். ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை என, வகைகள் பல உண்டு. பசுமையாகக் காட்சி தரும்.
இதய வடிவ இலைகள்; சிவந்த நிற கொத்தாக பழங்களைக் கொண்டது.
‘சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்’  Cissus quadrangularis என்பது தாவரவியல் பெயர். ‘விடாஸியே’ Vitaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
கால்சியம், சைடோஸ்டீரால்  Sitosterol, இரிடாய்ட்ஸ்  Iridoids, குவர்சிடின்  Quercitin, கரோட்டின் Carotene போன்ற தாவர வேதிப்பொருட்கள்  நிறைந்தது.
பசிக்காமல் அவதிப்படுவோர் பிரண்டைத் துவையல் சாப்பிடலாம். இளம் தண்டிலிருக்கும் நாரை நீக்கி, வதக்கி உப்பு, புளி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, துவையலாக அரைக்கலாம். தேங்காயும் கலக்கலாம். செரிமானத் திறனை  அதிகரித்து, பசி உண்டாகும். இலைகளையும் பயன்படுத்தி துவையல் செய்யலாம்.
வயது முதிர்வால் தோன்றும் சுவையின்மைக்கு பிரண்டைத் துவையல் அரு மருந்து. குடலில் பூச்சிகளையும் அழிக்கும்.  பெண்களுக்கு மாதவிடாய்க் கால சோர்வை நீக்கும்.
உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும். எலும்பு முறிவுக்கு பின் உண்டாகும் வலி, வீக்கத்தை  குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றிணைப்பதை துரிதப்படுத்தும்.
பிரண்டைத் தண்டுகளை நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாக்கி குளிர் காலத்தில் பயன்படுத்தலாம்.
இவை எல்லாம்,  மருத்துவர்களிடமும், புத்தகங்களிலும் படித்தது.
அனுபவ கதை:
மருந்துவாழ் மலையிலும், அது சார்ந்த குறுங்காட்டிலும் பிரண்டைக் கொடி அதிகம்.  ஈன்ற பசுவின், நச்சுக் கொடி விழ, பிரண்டை கொடியை கட்டும் என் கிராமத்தில் வழக்கமாக இருந்தது. விழுந்த நச்சுக் கொடியை, கள்ளிச் செடியிலும், புன்னை மரத்திலும் வைப்பர்.
தென்மேற்கு பருவ மழைக்கு பின்னான காலத்தில், பிரண்டை துளிர்க்கும். இளம் பிரண்டை துளிர்களை சேகரித்து வந்து சுவை மிக்க, ‘தீயல்’ செய்வார் என் அம்மா. குளிர்காலத்தில் அது இதம் தரும்.
என் இணையருக்கு, பிரண்டையில் தீயலுடன், துவையலும் செய்யத் தெரியும். சுவை அமோகமாக இருக்கும். எங்கள் மாடித்தோட்டத்தில், மூன்று வகை பிரண்டை செடிகள் உள்ளன. உருண்டை முகம், இரட்டை முகம், நான்முகம் என, பல முகங்களைக் கொண்டது. இன்றைய உணவில், வளர்மதியின் பிரண்டை துவையல் நலன் சேர்த்தது.





Friday, 3 April 2020

பறக்கும் அனுபவம்

சில மாதங்களாக, ‘மெட்ரோ’ ரயிலில் அலுவலகம் சென்று வந்தேன். பொருளாதாரத்தில் மத்திய, உயர் மத்திய தர பிரிவினர் தான் இந்த சேவையை சென்னையில் பயன்படுத்துகின்றனர். ஏழை எளியவர்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே...
என்றாவது ஒருநாள் பயணிப்பர்.
மெட்ரோ ரயில் அனுபவம் சற்று வித்தியாசமானது. என் பயணம், சென்னை  பரங்கிமலை ராணுவ அகாடமி எதிரில் உள்ள நங்கநல்லுார் சாலை மெட்ரோ நிலையத்தில் துவங்கும். முதலில் சில நாட்கள், ஆலந்துார் நிலையத்தை பயன்படுத்தினேன். அங்கிருந்த வெறுமையால் மாறினேன்.
நங்கநல்லுார் நிலையம் இதமானது. வாகனத்தை நிறுத்தி  நகர்ந்தாலே,  மரங்கள் அடர்ந்த  வனத்தில் பயணிப்பது மாதிரி இருக்கும். நிலையத்தின் ஒருபுறம், புனித பீட்டர் பள்ளியும், மறுபுறம், இந்திய ராணுவ அதிகாரிகள் குடியிருப்பும் உள்ளன. இரண்டுமே மரங்களால் அடர்ந்தவை. ரம்மியம் தருபவை. நிலைய படிக்கட்டில் ஏற மரங்களின் ரம்மியம் மாறியபடி கண்ணை தழுவும். மரங்களடர்ந்த மலையில் நகர்வது போல் தோன்றும்.
நடைமேடையில், காகங்களும், மைனாக்களும் மனம் கொள்ளும். புறாக்கள் பறந்து திரியும். திரும்பும் அந்தி வேளையில்  படிக்கட்டில் இறங்கும் போது, கரும்பருந்துகளும், வவ்வால்களும் வரவேற்கும். விமான நிலைய திசையிலிருந்து, பெரிய பழந்தின்னி வவ்வால்கள் பறப்பது ஆச்சரியம் தரும்.
பீட்டர் பள்ளி வளாகத்தில், சிறுவர்கள் வில் அம்பு எய்ய பழகுவர். அதை அன்னையர் பூரிப்புடன் பார்த்திருப்பர்.
பணி நெருக்கடியால் ஏற்படும் மன இறுக்கத்தை, இந்த நகர்தலால் நெகிழ்த்திக் கொள்வேன். டிசம்பர், ஜனவரியில் பனி தங்கிய மர முகடுகள் மயக்கின. வசந்த ராணி மரத்தின் துணை இனங்கள் பல அங்கு உள்ளன. அவை வெளிர் ஊதா நிறத்தில் விடாமல் பூத்து  மகிழ்வித்தன.
சுணக்கம் இன்றி வரும் ரயில்கள், நிலையத்தில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் தங்க விட்டதில்லை. தங்கும் நிமிடங்கள் இனிமையானவை. நிலையத்தின் இடது புறம் உள்ள, பரங்கிமலை வரை  பார்வை படரும். மனம் மகிழும்.
மெட்ரோ பயணம், கிட்டத்தட்ட விமானத்தில் பயணிப்பது போன்றது தான். பாதுகாப்பு தணிக்கை, அறிவிப்புகள், திறந்து மூடும் கதவுகள், குளிர் சூழல், பயணக் காட்சிகள்  அந்த எண்ணத்தை தரும்.
 சின்னமலை வரை, அரை வானில் அசைந்து வரும் மெட்ரோ. அடையாறு ஆற்றை கடந்து, சைதாப்பேட்டையில் பூமிக்குள் புதையும். ஆயிரம் விளக்கு வரை, 30 மீட்டர் ஆழ பொந்தில் பயணம். நிலையம் தவிர, இடையில் நின்றால், கலக்கம் வரும்.
 அந்த அனுபவம்  வித்தியாச மனநிலையை உருவாக்கும். கிட்டத்தட்ட, நான்கு மாதங்கள் பயணித்திருப்பேன். தினமும் அனுபவத்தில் மாற்றம் இல்லை.
தமிழகத்தில், உயர்தர சேவையை வழங்குவதில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு முதலிடம் தரலாம். பயிற்சி பெற்ற பணியாளர்கள். முகம் சுளிக்காத சேவை, முறையான வழிகாட்டல், சரியான தொடர்பு மொழி என சொல்லிக் கொண்டே போகலாம்.
பண பேரத்துக்கு வழியில்லை. எல்லா சேவைகளுக்கும் கட்டணம், மின்னணு பரிவர்த்தனையில் நடப்பதால், வார்த்தை தடிப்புக்கு வழியில்லை.
தற்காலிக தனிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது பொருந்தாது.  பயண சீட்டு வாங்கும் போது சில்லறை தகராறுகள் ஏற்பட்டு, வார்த்தை தடித்துள்ளதை பலமுறை கவனித்துள்ளேன். பயிற்சி பெற்ற ஊழியர்களும் எரிந்து விழுவதை கண்டிருக்கிறேன்.
வாகன நிறுத்த இடங்களில், வாடிக்கையாளர்களை காக்க வைத்து, அரட்டை, அலைபேசி தடவல் என கவனப்பிசகுடன் செயல்படும் ஊழியர்களை கண்டிருக்கிறேன். மிகவும் கராராக பணிபுரிவோரும் உண்டு. அவர்களுக்கு எப்போதும் நன்றி சொல்ல தவறியதில்லை.
ஆயிரம்விளக்கில் இறங்கினால், சாலையோரத்தை வசிப்பிடமாக கொண்ட குடும்பங்களை கடந்து, சில மீட்டர் துாரத்தில் ஒயிட்ஸ் சாலைக்கு வரவேண்டும்.
இப்படியான அனுபவம், கடந்த வாரம் சற்றே சிதைந்து வேறொரு திசையில் மாறியது. இன்று முற்றிலும் மாறான திசையில்...

Wednesday, 11 March 2020

தாய்மை சிந்திய பெண் கல்வி

சாவித்ரிபாய் புலே... இந்திய துணை கண்டத்தில் முதல் பெண் ஆசிரியர். தற்போதைய மகாராஷ்டிரா மாநிலம் உள்ள பகுதியில், கல்வி வாய்ப்பற்ற குடும்பத்தில் பிறந்தார். ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய தீரர் மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலேயை மணந்தார். அவரது  முயற்சியால்  கல்வி பயின்றார்.
எளியவர்களுக்கு கற்பிக்க, பள்ளியை தொடங்கினார் ஜோதிபா. அதில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார் சாவித்ரி. கற்பிக்கும் பணிக்கு சென்று திரும்பிய போதெல்லாம், வீசப்பட்ட கற்களையும், மலத்தையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் கண்ணியமாக எதிர்ப்புகளை சகிப்புடன் வென்றார்.
மாற்றுடை ஒன்றை, எப்போதும் உடன் வைத்திருப்பார். எதிர்ப்புகளை உள்வாங்கும் உடையை வகுப்பறையில் மாற்றி, புதிய உடை அணிந்து பாடம் நடத்துவார். எதிர்த்தவர் எண்ணத்தை, தவிடு பொடியாக்கி கற்பித்தலில் கவனம் செலுத்தினார்.
* தீண்டத்தகாதவர் என, பெரும் பிரிவு மக்களை ஒதுக்கி  தண்ணீர் தர மறுத்தது ஆதிக்க சமூகம். வீட்டிலேயே தண்ணீர் எடுக்க  அனுமதித்து, அந்த கொடுமையை தவிடு பொடியாக்கினார்.
*விதவையாகும் சிறுமியரின் தலையை மழிக்கும் கொடிய வழக்கம் நடைமுறையாக இருந்தது; அதற்கு எதிராக முழங்கினார். மழிக்கும் பணியைச் செய்த பணியாளர்களை திரட்டி கற்பித்து, அந்த  கொடுமைக்கு முடிவு கட்டினார். விதவை மறுமணங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்.
'மஹிளா சேவா மண்டல்' என்ற பெண்கள் சேவை மையத்தை, 1852ல் துவங்கினார். மனித மாண்பை உயர்த்தவும், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரும்பாடுபட்டது அந்த அமைப்பு.
மகாராஷ்டிராவில்,  1876 முதல் 78 வரை பெரும் பஞ்சம் நிலவியது. அந்த காலத்தில் பட்டினியைப் போக்க கணவருடன் இணைந்து கடுமையாக உழைத்தார். துயரம் தீர பல ஆலோசனைகளை முன்வைத்தார். இலவச உணவு திட்டத்தை அமல்படுத்தி பசி பிணி போக்கினார்.
பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, வீட்டில் தங்க வைத்தார். அவருக்குப் பிறந்த குழந்தையை வளர்த்து, மருத்துவம் படிக்க வைத்தார்.
கைவிடப்பட்ட பெண்களைக் காக்கும் வகையில், 'பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா' எனும் இல்லத்தைத் துவக்கினார்.
சாவித்ரியிடம் கற்ற மாணவி முக்தாபாய், 1855ல் ஒரு கவிதை எழுதினார். அது,  ‘தியானோதயா’ இதழில், 'மங்குகள், மகர்களின் துக்கம்' என்ற தலைப்பில் பிரசுரமானது. சாவித்ரிபாயின் பணி அந்த கால சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அது தெளிவாக்குகிறது.
அந்த கவிதை:
 ஓ இறைவா...
எங்கள் மதம் எது என்று சொல்
வாழ்க்கையை
செம்மை வழி நடத்த கற்பி
உயர்வு தாழ்வை வளர்க்கிற மதம்
பூமியை விட்டு ஒழியட்டும்
மனதில் புகுந்த
இழிந்த சாதி, மத இருள் விலகட்டும்...

கல்வி எனும் அறிவு மருந்து...
ஏழ்மை, நோயால் வாடும்
மங்கு, மகர்களை
குணப்படுத்தட்டும்.
***
மகாராஷ்டிராவில்,  பிளேக் நோய் தாக்கம், 1897ல் அதிகம் இருந்தது. ஆங்கிலேய அரசு நோய்த்தொற்றை தடுக்க கடும் சட்டங்களை  அமல்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டனர் . அவர்களை பிரித்து வைத்தது சட்டம். இதை எல்லாம் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார் சாவித்ரி.
சாவித்ரியின் வளர்ப்பு மகன் யெஸ்வந்த். மருத்துவம் படித்து ராணுவ பணியில் ஈடுபட்டிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தவரை, ஊருக்கு வெளியே ஒரு மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்ரி.
பாதிக்கப்பட்டவர்களை தூக்கி வந்து, அங்கு சிகிச்சை அளித்தார். உயிர் காக்கப்போராடினார். பாதிக்கப்பட்ட, 10 வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை  தூக்கி வந்த போது, 66 வயதான சாவித்ரிக்கு, அந்த நோய் தொற்றியது.  சிகிச்சை  பலனின்றி மரணமடைந்தார். அவர் துாக்கி வந்த சிறுவன் பிழைத்தான்.
வாழ்க்கையை, சேவையால் நிறைத்தவர் சாவித்ரிபாய். இந்தியக் கல்வியின் தாய் என போற்றத்தக்கவர்.
கவிதைகள் பல எழுதியுள்ளார். மராத்தி மொழியில் நவீன கவிதைகள்  இவரின் அனுபவத்தில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல பொருண்மைகள் சார்ந்து கவிதைகள் பாடியுள்ளார்.
 அவர் பாடிய கவிதை ஒன்று :
போ...  படி...
சோராமல் உழை
சொந்தக்காலில் நில்
ஞானத்தை தேடு...
செல்வம் சேர்
***
ஞானம் இழந்தால்...
விலங்காவாய்
அறிவற்றால்  அழியும்
***
சோம்பல் படாதே
போ... படி !
ஏழை எளிய
மக்களின் துயரை துடை
***
பொன்னான வாய்ப்பு
போ... படி...
அடிமைகளுக்கு அறிவை அளி
தடுக்கும் சங்கிலியை உடை.
***
சாவித்ரிபாய் பிறந்து, இரண்டு நுாற்றாண்டுகள் ஆகிவிட்டன. அவர் எதற்காக போராடினாரோ அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அந்த பணியை பலர் தொடர்கின்றனர். அது நிறைவடையவில்லை. அந்த பணியை முழுமையாக்கி முற்றுப்புள்ளி வைப்போம்.

Tuesday, 24 December 2019

அறைக்குள் வந்த இந்திர வானம்

மார்கழியில் அந்தியும், அதிகாலையும், மனம் மயங்க செய்பவை. அந்தி வானுடன், இந்திர ஜாலமும் சேர்ந்தால்...
கலை விமர்சகர், ஓவியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற, பிரபல எழுத்தாளர் நண்பர் இந்திரனை, 80களிலிருந்து அறிவேன்.  அவரது, ‘அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம்’ கவிதை தொகுதியை அப்போதே வாசித்திருக்கிறேன். அவை நீங்காத படிமமாக மனதில் தங்கியுள்ளது.
சென்னைக்கு பெயர்ந்த பின், அவரை நேரில் அறிவேன். இலக்கிய வட்டம் வழி நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையாக பழகும் மனம் கொண்டவர். தொழில் தொடர்பாக உரையாடிய தருணங்களும் உண்டு. அவை எல்லாம், வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற நாட்கள்.
சிறந்த உரையாடல் ஆளுமை. எது கேட்டாலும் விளக்கமாக பதில் சொல்வார். உலகளாவிய அறிவு மற்றும் ஆளுமைத் தொடர்பு கொண்டவர். அவரது பரந்த வாசிப்பு அனுபவம் எப்போதும் வியப்பூட்டும். உரையாடல்களில் அறிவு வளம் பெறும்.
கடந்த வாரம், தொடர்பு கொண்டு, என் வீட்டுக்கு வருவதாக கூறினார். மிகவும் மகிழ்ந்து வரவேற்றேன். குறிப்பிட்டபடி, ஞாயிறன்று மாலை, இணையருடன் வந்தார். உரையாடல் வழி விளக்கங்கள் பல தந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவருடன் கழித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியானது. அறிவுப்பூர்வமானது.
மாலை மயங்கிய போது மாடித் தோட்டத்தில் உரையாடினோம். தோட்டத்தை பாராட்டினார். என் மகள் பாடிய, ‘யாருக்கு பொன்னம்பலம் கிருபை இருக்குதோ...’ என்ற கோபால கிருஷ்ண பாரதி எழுதிய கீர்த்தனையை, நுட்பமாக ரசித்தார்.
அறைக்குள் வந்த இந்திர வானம், அன்பு மழை பொழிந்தருளியது.

Tuesday, 12 November 2019

வாசித்தல்

என் இதழ் பணி அனுபவத்தில் மேம்பட்டப் பார்வை, வளர்ச்சி சார்ந்தது. சில நேரம் இதில் கிளர்ச்சி தரும் அனுபவங்கள் வாய்க்கும். அப்படி ஒன்றை, இன்றைய பணியில் கண்டேன்.
உலகில் மிகப்பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும், ஏழு பள்ளிகள் பற்றிய சிறு கட்டுரையை, சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அறிமுக தகவல் மட்டுமே அதில் இருந்தது. ஆழமாக ஏதும் இல்லை. அந்த கட்டுரையை படித்த, 9ம் வகுப்பு சிறுமி ஒருவர், கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக சேர்வது எப்படி... அதற்கு என்ன செய்ய வேண்டும்...’ என்ற கேள்வியை கேட்டுள்ளார். ஏற்றத் தாழ்வுகளுடன் பள்ளிகள் இயங்குவதை, ஒரு போதும் ஆதரிக்கவில்லை. என்றாலும், அந்த சிறுமியின் இலக்கு தேடும் முயற்சி வெகுவாக கவர்ந்தது.  அந்த இலக்கை அடையை பாதை தேடும், அந்த சிறுமியின் தேடல் மனம் நெகிழ வைத்தது. காலம் அவரது இலக்கை அடைய உரிய பாதை அமைக்கும். அவரது இலக்கு நிறைவேற மனம் நெகிழ்ந்து வேண்டுதல் செய்தேன்.
தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், சர்வதேச ரீதியில் உயர் பதவிகளில் அமரத் துடித்து திட்டம் வகுப்பதை மிகவும் நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நம் கல்வித்திட்டங்கள், அவற்றை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை. அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகளை, நிபுணர்கள் உருவாக்கி உதவ வேண்டும். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அதற்கான வழிகாட்டுதலை வழங்கி உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
இந்த சூழலில், கற்றலில் போதிய வழிகாட்டல் இன்றி தடுமாறும், தமிழ் சிறுவ, சிறுமியருக்காக, சிறிய அளவில் வழிகாட்டு நெறிகளை, தொகுத்துள்ளேன். இவை, என் மகளுக்கு அவ்வப்போது உணர்த்திய அறிவுரைகள். இதை தொகுத்து, சற்று மேம்படுத்தி லட்சக்கணக்கான தமிழ் மகள்களுக்காக, பொது வெளியில் சமர்ப்பிக்கிறேன்.

பாடப்புத்தகத்தை எப்படி படிப்பது?
ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன், எந்த முறையில் அணுகி படிப்பது என்பதை மனதில் தெளிவாக்கி கொள்ள வேண்டும்
பாடப்புத்தகத்தை எடுத்தவுடன், முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய துவங்கக் கூடாது.
கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றினால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் பாடங்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
படிக்க துவங்கும் முன்...
நன்றாக உடற்பயி்சி செய்து உடலை தளர்த்திக் கொள்ள வேண்டும். எளிய யோக பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போது, உடல் முழுவதும் ரத்தம் சீராக பாயும். ரத்த ஓட்டம் சீரானால், உடலில் எல்லா உறுப்புகளும் செயல்பட ஆரம்பிக்கும். இந்த சீரான செயல்பாடு புலனுணர்வுகளை மேம்படுத்தி துாண்டும். அறியும் ஆர்வத்தை ஊட்டும்.
கற்றல் என்பது புலனுணர்வுகள் சார்ந்த செயல்பாடு. புலன்களின் திறன் மேம்பட்டால் தெளிவாக புரிந்து கொள்ளும் வழிவகை ஏற்படும். அதாவது புதிய பகுதியை காணப்போகும் ஆவல் ஏற்படும். இந்த உற்சாகம் தான், கற்றலை சீரமைக்கும்.
உடலைத்  தளர்த்தினால், மனம் குதுாகலப்படும். அதை மனதில் கொண்டு படிக்க அமர வேண்டும். மலரும் மலரைப் போலவும், உதிக்கும் சூரியனைப் போலவும், சீறும் அலையைப் போலவும், புத்தக கருத்துக்களை மனதில் பதிய வைக்க வேண்டும்.

முதல்படி:
பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும்.
இரண்டாம் படி:
தலைப்புகளையும், துணைத் தலைப்புகளையும் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
 இப்பாடம் எதைப்பற்றியது என்பது அப்போது விளங்கும்.
மூன்றாம் படி:
பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதில் சில வார்த்தைகளைப் படிக்கும் போது கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு: உயிரியலில், ‘சைட்டோபிளாஸம்’ என்ற சொல்லை வாசிக்கும்போது அது என்ன  என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்)

வினா எழுப்புதல்
பாடச் சுருக்கத்தை வாசித்த பின், தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி, நமக்கு நாமே கேட்டு விடை தேட முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால், அந்த கேள்விகளுக்கு விடை காணும் ஆர்வம் அதிகரிக்கும். நேரம் பயன்பாட்டு வடிவத்தை பெறும்.
எதற்காக, இந்த பாடத்தை படிக்கிறேன்... இதை படிப்பதால் எனக்கு என்ன பயன்  கிடைக்கும் என்பதை, எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த பாடத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். தேடல் மனம் இயல்பூக்கம் பெறும்.

இதை ஒரு ஒப்பீடு வழியாக உணரலாம்.
உதாரணமாக, தொலைக்காட்சியில் ஒன்றை பார்க்கிறீர்கள். எதற்காக அதை பார்க்கிறீர்கள். உண்மையில் அது உங்களை ஈர்க்கிறதா... ஈர்த்தால் ஏன் ஈர்க்கிறது என்று கேள்வி எழுப்ப வேண்டும். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து முடித்த பின் நமக்கு ஏற்படும் உணர்வு  பற்றி சிந்திக்க வேண்டும். அந்த உணர்வு, ஏதாவது பலனைத் தருகிறதா என்று அவதானிக்க வேண்டும்.

வாசித்தல்

அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.
படித்தவற்றை, நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடக் கூடாது. மிகவும் முக்கிய சொற்களை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால், திருப்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல், பாடத்தை எளிதாக நினைவில் கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்
வாசித்து முடித்தபின், முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.
இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும்.
படித்தவற்றை, சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.
இந்த முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை படித்து முடித்த பின்,  அடுத்த பாட பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்
இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும்.
ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்பாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக,  பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை
1. பதற்றம், அச்சம் நீக்க வேண்டும்.

2. சிலவற்றை நம்மால் நினைவு படுத்த முடியாது. அது, நினைவில் பதிய வராது என்ற எண்ணம்  கூடாது. முயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சம் தவிர்த்து, இயல்பாக படிக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழுமையாக கவனத்தையும் சக்தியையும் செலுத்தினால் கண்டிப்பாக நினைவில் பதியும். தேர்வு எழுதும் போது உதவும்.

3. தேர்வு எழுதும் பொழுது பதற்றப்படக்கூடாது. நிதானமாகச் சிந்திக்க வேண்டும். கருத்துகளை தொடர்படுத்தி படிப்பதும், ஒருமுகப்படுத்தி சிந்தித்துப் பார்ப்பதும் நினைவு திறனை  பெருக்க உதவும்.

4. ஒரு வினாவிற்கான விடை, நினைவிற்கு வராமல் போனால், அதையே எண்ணி போராடக்கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு, மிகவும் தெரிந்த விடைகளை எழுத வேண்டும். நினைவுக்கு வராமல் இருந்தவை பின்பு, தானாக வரும். அப்பொழுது, பதட்டம் இன்றி எழுதிக் கொள்ளலாம்.

***
நினைவு திறன் மேம்படுத்த சில வழிகள்:

* நன்றாக கற்கிறேன் என்ற உறுதியையும், நம்பிக்கையையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
*பின் தங்கல்களை, சறுக்கல் என எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னடைவு என கொள்ளக்கூடாது. ஆர்வம், கவனத்தை ஒருமுகப்படுத்தி சரி செய்ய வேண்டும்.
* ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி ஒப்புமையாக கற்க பழக வேண்டும்.
* சந்த பாடல் போல் தொகுத்து (Grouping and Rhythm) மனம் நிரம்பி படிக்க வேண்டும். புலனுணர்வுகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
* உரிய இடைவெளிகள் விட்டு, போதிய அளவு ஓய்வு எடுத்து படிக்க வேண்டும்.
* திரும்பக் கூறுவதும், நினைத்து பார்க்கும் பயிற்சியையும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
இவை எல்லாம், கற்கும் திறனை மேம்படுத்தும். வாழ்வில் சிறப்பான இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.
முக்கியமாக, பள்ளி என்பது சமூக பொதுத்தளம். அங்கு கற்றல் மட்டுமே வாய்ப்பதில்லை. பொதுத்தளத்தில் இயங்கும் நடைமுறை பயிற்சி, பண்புகளை மேம்படுத்தும் பயிற்சி என, எல்லா செயல்பாட்டையும் கற்றுக் கொள்ளலாம். இதை மனதில் பதிய வைத்தால், கற்றலில் இனிமை வாய்க்கும். திறன் மேம்படும்...

Monday, 23 September 2019

காக்கை தவளையுடன் கோடை ஞாயிறு

அது, 2019 கோடைகால ஞாயிற்றுக்கிழமை.
மதிய உணவுக்கு பின், மாடியில் உலாவ சென்றேன். தோட்டத்தை கவனித்த போது, ஒரு காக்கை இரையை, கொத்தி பிடுங்க முயன்று கொண்டிருந்தது. அது ஒரு செந்நாம தவளை. கால்களை பரப்பியபடி கிடந்தது. அதை, புரட்டிப் புரட்டி, கால்களால் பற்றி, அலகால் கொத்தி கிழிக்க முயன்றது காகம். இறந்த தவளையை, கொத்தி பிடுங்கி தின்ன முயல்வதாக தான் முதலில் எண்ணினேன்.
சற்று நேரத்துக்குப் பின், உயிர் வாழ போராடும் தவளையின் தனித்துவமிக்க முயற்சியையும் கண்டேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள்  கவனித்துக் கொண்டிருந்தேன்.
கூர்மையான தடித்த அலகு, அந்த மெல் உடலியை ஒன்றும் செய்ய முடிவில்லை. உடலை உப்பி, செத்தது போல் தவளை காலை பரப்பி கிடந்தது. காற்று நிறைந்த ஒரு பலுானை கொத்தி உடைக்க முயல்வது போல் இருந்தது காக்கையின் செயல்.
அது ஓர் இயற்கை நிகழ்வு. உணவை நினைக்கிறது காக்கை; உயிரை எண்ணுகிறது தவளை. என் முன்னால் போராட்டம் நடக்கிறது. இன்னும், இரண்டு நிமிடம் பார்க்கலாம். தவளை தாக்குப்பிடித்தால், உதவலாம் என்று எண்ணியபடி நின்றேன்.
காக்கையின் தீவிரம் அதிகமானது. கொத்தும் வேகத்தை தீவிரப்படுத்தியிருந்தது. இரண்டு நிமிடங்கள் கடந்தன. தவளைக்கு உதவும் எண்ணத்தை நிறைவேற்றினேன்.
போராட்ட களத்தை நோக்கி நகரத்துவங்கியதும், காக்கை பறந்து சற்று விலகியது. தவளையை எடுத்து, தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டேன். அது, சற்று அமிழ்ந்து மேலெழுந்து மீண்டும் மறைந்தது. காக்கை சற்று ஏளனமாக பார்த்தபடி பறந்து வேம்பில் அமர்ந்தது4.
இந்த நிகழ்வு, ஒரு பாடம் கற்றுத்தந்தது. மாடியில் தோட்டம் போட்ட சில நாட்களில், தவளைகள் வருவதை கவனித்து வந்தேன். இரண்டு மாடிகள் ஏறி வருமா என்ற ஐயம் இருந்தது. அது, அன்று தீர்ந்தது.
கோடை காலத்தில் மட்டும், மாடித் தோட்டத்தில், பறவைகளுக்காக குடிநீர் வைப்பதை வழக்கமாக்கியுள்ளோம். காக்கை, அண்டங்காக்கை, கரிச்சான், மைனா, கொண்டை குருவி, குயில் என, பலவும் வரும். இந்த ஆண்டு, கடும் நீர் தட்டுப்பாடு நிலவிய போதும், நிறைவேற்றினோம். நொடியில் உளம் புகுந்து, நினைவை பசுமையாக்கும் பறவைகள் பலவிதம்.