Thursday, 14 March 2019

வண்ணங்களை பூசிய வால்காக்கை

சென்னை பெசண்ட் நகர் உ.வே.சா., வாசிப்பகம் பக்கம் ஒரு வேலையாக போயிருந்தேன். கலாசேத்ரா பள்ளி வளாகத்தில் தனித்தீவு போல் உள்ளது. தனிமையும் அமைதியும் நிறைந்த இடம். வளாகத்தில், மைனா, கிளி, வால்காக்கை,  துடிச்சிட்டு, பூணியல் என, பறவைகள் சுதந்திரமாக திரிந்தன. கொஞ்ச நேரம் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த படிப்பகத்தில் மிகச்சிறந்த சுவடியகம் உள்ளது. சங்க இலக்கிய மூலச் சுவடிகள் பலவற்றை பார்த்தேன். மூலிகை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் மூலிகை கலவை நெடிக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. பழந்தமிழ் சுவடிகளை, மின்னுாலாக்கும் பணி நடந்து வருகிறது.
வாசிப்புக்கு வசதியான வடிவமைப்புடன் கூடம் உள்ளது. மேற்கோள் புத்தகங்கள்  பல ஆயிரம் உள்ளன. படிக்கத்தான் ஆட்களை காணோம்.
இந்த இடத்துக்கு போனதும்,  ருக்மிணி தேவி அருண்டேல் பற்றிய நினைவு வந்தது. அவரது மறைவு தினம், பிப். 24 ம் தேதி. மறைந்த வருடம், 1986. என் அஞ்சலியை பதிவு செய்தேன்.
அவர் பிறந்தது,  1904  பிப்., 29 ல். அவரது பிறந்த நாளை முறைப்படி நினைவு படுத்த வேண்டுமானால், நான்கு வருடத்துக்கு ஒருமுறை தான் முடியும். 
மதுரையில் பிறந்தவர். புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியை நிறுவியவர்.
சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே ஆடிவந்த சதிர் என்ற நடனத்தை, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பரவலாக்கியவர்.
மொரார்ஜி தேசாய், இந்திய பிரதமராக இருந்த போது, 1977 ல் இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார். ‘கலை மற்றும் கலைசார்ந்து  பணிபுரிவதே விருப்பம்’ என்று கூறி மறுத்துவிட்டார்.
மதுரயைில், நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு,  பிறந்தார். அன்னி பெசண்ட் துவக்கிய,  தியசோபிக்கல் சொஸைட்டியில், நீலகண்ட சாஸ்திரி ஈடுபாடு கொண்டவர். பணி ஒய்வுக்கு பின்,  சென்னை அடையாரில், குடும்பத்துடன் குடியேறினார்.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, மாலினி என்ற நாடகத்தில் அங்குதான் ருக்மிணி தேவி நடித்தார். அவரது பாடல்களையும் பாடினார். தந்தையின் ஊக்குவிப்பால் கிரேக்க நடனம் கற்றுக் கொண்டார்.
கல்விபணிக்காக வந்த இங்கிலாந்தை சேர்ந்த  ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை, 1920 ல்  அன்னிபெசன்ட் முன்னிலையில் மணந்தார்.
இது, அக்காலக் கட்டத்தில், பிரமாண குடும்பங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய நாட்டு பாலே கலைஞர்கள் அன்னா பாவ்லோவா, கிளியோ நார்டி  ஆகியோரிடம், பாலே நடனம் கற்றார். இந்திய பாரம்பரிய நடனத்தையும் கற்கும் படி, பாப்லோவா பரிந்துரைத்தார்.
சென்னை மியூசிக் அகாதெமியில், 1933 ல் தேவதாசிகளின், சதிர் நடன நிகழ்ச்சி நடந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அக்கலையை  கற்க விரும்பினார். பல தடைகளுக்கு பின், மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் கற்றார். பின்னர் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் பயின்றார்.
சதிர் என்ற பரதநாட்டியம், கற்பிக்க, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியைத் துவக்கினார். அந்தக் காலக்கட்டத்தில்,  பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்ற சமூகத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவியிருந்தது. அதை மாற்ற அயராது உழைத்தார்.
சதிராட்டம், ஆபாசங்களை அள்ளி வீசுவதை மட்டுமே குறியாக கொண்டிருந்தது. ருக்மிணி, அந்த தளத்தை மாற்றினார். அதில் இருந்து மேலெழுந்து, மிகச்சிறந்த ஆடல் அனுபவத்தை வெளிப்படுத்தி ரசிக்க வைத்தார்.
தேவதாசிகள், சதிராடிய போது, சேலை, நகைகள் என பலவற்றையும் அணிந்திருந்தனர். ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் பின் தொடர்ந்தனர். இதனால் நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக கருதிய ருக்மிணி சில மாற்றங்களை செய்தார்.
பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஓரமாக அமரச் செய்தார். பாரம்பரிய சிற்பக் கலை ரசனையில் தோய்ந்து, இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியுடன் புதுவித உடைகளையும், ஒப்பனையையும்  வடிவமைத்தார்.  நடன மேடையின் பின்புலத்தை மாற்றியமைத்தார். 
கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால், மேடை ஒளியமைப்பையும் மாற்றினார்.  சதிராட்டதுக்கு, பரதநாட்டியம் என பெயர் சூட்டினார்.
வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களை நடன காட்சியாக அமைத்தார்.
இந்திய பாரம்பரியக் கலைகளில் முழு ஆர்வம் கொண்டிருந்தார்.  நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலை, ஊக்குவிக்கும் பொருட்டு  கண்கவர் வண்ணங்களில்,  வேலைப்பாடுகளுடன் கைத்தறி ஆடைகளை தயாரித்தார்.
கமலாதேவி சட்டொபத்யா உதவியுடன், துணிகளுக்கு இயற்கை சாயங்களை பயன்படுத்தும் முறையை பயின்றார். கலம்கரி என்ற துணிகளில், இயற்கை சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளை ஊக்குவித்தார். இயற்கையுடன் வாழ்ந்த பேராளர் அவர்.
பத்ம பூசன் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவை இவரை அலங்கரித்தவை. வண்ணங்களை பூசிய வால் காக்கை போல் பறந்து திரியும் அவரது நினைவை போற்றுகிறேன்.

இருளுக்குள் ஒளியும் நிலவு

தண்டரை, மிகப் பழமையான ஊர். தண்மை உறையும் இடம் என்று பொருள் கொள்ளலாம். செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், குறுங்காடுகளின் ஊடே சற்று உள்ளடங்கி உள்ளது. சிறு குன்றுகளால் சூழ்ந்துள்ளது. இங்கு, 10 ஏக்கர் பரப்பில் இருளர் பழங்குடி இனப் பெண்கள், சிறு காடு உருவாக்கியுள்ளனர். பல்லுயிர் பெருகி நிறையும் காடு. மரங்களும், பறவைகளும் மனதை இதப்படுத்தும். மூலிகை செடிகள் நிறைந்த பண்ணையும்  உள்ளது.
மிக எளிய, இனிய அனுபவத்தை தரும் இடம். இது உருவாகும் போது பலமுறை சென்றுள்ளேன். இருளுக்குள் ஒளிந்திருக்கும் நிலவுகளைக் கண்டுள்ளேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தண்டரைக்கு... பழங்குடி மக்களுக்கான இதழியல் பற்றி பேசுகிறேன்.   

Monday, 18 February 2019

தமிழ் சிறுகதைகளின் போக்கு... கவனிப்பும் கணிப்பும் – 2018

அது, அலுவலக தேநீர் இடைவேளை நேரம். வழக்கமாக நண்பர் எழுததாளர் ரமேஷ்வைத்யாவுடன் அப்போது தான் பேச வாய்க்கும். எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் நினைவாக, 2018 ல் வெளிவந்த முதல் சிறுகதை தொகுதிகளின் படைப்பாளர்களை, உற்சாகப்படுத்துவம் வகையில் ஊக்கப்பரிசு வழங்குவதற்கான சிறுகதைகளை தேர்வு செய்யும் பணி பற்றி சொன்னார். சற்று நேரம் யோசித்து விட்டு, ஒருநாள் அவகாசம் கேட்டேன். 
அந்த அவகாச காலத்தில், என் வாசி்ப்பு திறன் பற்றிய கேள்வியை எழுப்பி, தகுதியை மறுவாசிப்பு செய்தேன்.  எனக்கிருந்த மற்ற பணிகள் பற்றியும் சிந்தித்தேன். 
கிட்டத்தட்ட, 10 நாட்கள் அவகாசம். மொத்தம், 15 புத்தகங்கள். அவற்றில், 170 கதைகள். மொத்த வாசிப்பையும் மனம் ஏற்குமா என, கேள்வி எழுந்தது. 
இது ஒருவகையான பணி. சற்று சவாலாக இருக்கும்.  முன் பயிற்சி ஏதும் இல்லை. ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்பதால் ஒப்புக் கொண்டேன். 
வாசிப்பை, மூன்று விதமாக ஒழுங்கு படுத்தினேன். தொகுதியின் முதலில் துவங்கி பின்நோக்கி போவது, இறுதியில் துவங்கி முன் நோக்கி நகர்வது, இடையில் துவங்கி, முன்னும் பின்னுமாக நகர்வது... இவை, அதீத வாசிப்பால் ஏற்படும் சடவு மனநிலையைத் தவிர்க்கும் என்று நம்பினேன்.  எழுத்தாளர்கள் சுந்தரராமசாமி, வல்லிக்கண்ணன் போன்றோரிடம் அறிந்தது. 
முதல் வாசிப்பின் போது தனிமையை தவிர்த்தேன். பெரும்பாலும், என் குடும்பத்துடனோ, அலுவலக பணியாளர்களுடனோ தான் இருந்தேன். மறுவாசிப்புகளுக்கு மட்டும் நள்ளிரவு, அதிகாலை என, தனிமையை தேர்வு செய்தேன்.
ஒரு கதையை வாசித்த பின் உரிய இடைவெளி விட்டேன். வாசித்ததை  நினைவு படுத்திப் பார்த்தேன்.  சுவாரசியங்களை  அசைபோட்டேன். அந்த எழுத்தின் பரப்புக்குள் உலாவிப்பார்த்தேன். மன ஒழுங்கில் பதியாதவற்றை மறுவாசிப்பு செய்து உள்வாங்க முயன்றேன். 
மூளை திணறி மறுத்த போது,  இசையால் நெகிழ்த்த முயன்றேன். இசை கலைஞர்கள் மிரண்டா சவுத்திரி, பர்னாலி பர்மன், டாரித்ரி ராய், சுபேன் கார்க், லஷ்மண் தாஸ் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்து மீண்டும் வாசிப்பைத் தொடர்ந்தேன்.  
ஒரு தொகுதியை வாசித்து முடித்ததும், சில கதைகளை தேர்வு செய்து, என் மனைவியிடம் வாசிக்க கொடுத்து கருத்து கேட்டேன். அவர் எளிமையாக சில கேள்விகளை முன்வைத்தார். அந்த கேள்விகளில் பல என்னிடமும் எழுந்திருந்தன. விவாதிக்கவில்லை.
வாசிப்பின் மன ஒழுங்கை புரிந்து கொள்ள முயலும் ஒரு வகை உத்திதான் அது.
என்னை நெகிழ்த்திய தொகுப்பை வாசித்து முடித்ததும், நீண்ட இடைவெளி விட்டேன். அடுத்த படைப்பை,  உள்வாங்கும் திறனை குறைத்து விடும் என நம்பியதால் அப்படி செய்தேன்.  
சுடுநடை, குளிர்நடை, கடும்நடை, புயல் நடை, மென்நடை என, வாசிப்பின் அனுபவத்தை ஒரு பயணமாக உணர்ந்தேன். மொழி ஆளுமையின் முதிர்ச்சியை தேடினேன். சொற் சேர்க்கைகளில் அனுபவச்சுவடுகளை அறிய முயன்றேன். வாழ்வின் பரப்பை, இயற்கையின் அற்புதங்களை வகை பிரித்த எழுத்து முறைமையை அறிய முயன்றேன். கதைகள் பேசிய பரப்பின் ஊடாக நடந்து, நம்பகத்தன்மையை தேடினேன். 
கலை வழியாக நெகிழ்ச்சியை தேடி, சுயம் சார்ந்த வளர்ச்சியைத்தேடுபவன் நான். ஒரு உயர்வை, மேன்மையை பிசக விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். அதன் அடிப்படையில், ஏழு தொகுப்புகளை தேர்வு செய்தேன்.
முதல்கட்ட தேர்வாளனாக மட்டுமே நான் இருந்தேன். இறுதி வடிவத்தை தேர்வு குழு முடிவு செய்தது. இந்த தேர்வில், பல ஒற்றுமைகளும் முரண்களும் உண்டு. அவை விவாதத்துக்கு உரியவை அல்ல.  
ரசனைக்கு பல வடிவம் உண்டுதானே.  எப்போதும் மேன்மையானது. மனதின் உள்வாங்கும் தன்மை வேறு வேறானது. அதனால் தான், பல வண்ணங்களை நேசிக்கிறோம்.
ஒரே மூச்சிலான 15 தொகுதிகளின் வாசிப்பு அனுபவம் இப்படித்தான் இருந்தது.
வாசித்த கதைகளை பற்றி சொல்ல வேண்டாமா...
ஒரு கதை,  ஒருவரை எப்படி கவரும். அதை பதவுரை, பொழிப்புரை சொல்லி விளக்க  முடியுமா. சிறுகதை என்பது ஒரு சிறு நினைவுப் பயணம். ஒரு மெல்லிய எழுத்து நிகழ்த்துதல். மொழி ஆசானை உள்வாங்கி எழுதுபவர்கள், காற்றில் கம்பு சுற்றுகின்றனர். ஒரு  பயணம் செய்து, அந்த அனுபவத்தில் கற்றதை முறைப்படுத்தி வடிவமைக்கிறார்கள்.  
அவர்களின் பயண முறை தான் உள்வாங்கும் திறனையே உருவாக்குகிறது.
சிலர் விமானத்தில் பயணிப்பார்கள். சிலர் ரயிலில்... சிலர், காரிலும், மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் மாறி மாறி... இந்த பயணங்களில் வேகம் முக்கியமல்ல... உள்வாங்கும் அனுபவம் மிக முக்கியமானது. அதுதான் உள்ளடக்கத்தை உருவாக்குகிறது.
பயணத்தில் சிலர் எளிய மென் நடை பயில்வர். இது போன்ற பயணியரின் அனுபவத்தை நான் விரும்புகிறேன். இந்த கதைத் தொகுதிகள் தேர்விலும் அப்படித்தான் முடிவு செய்தேன். நின்று நிதானமாக நடப்பவர்களை விரும்பி தேர்வு செய்துள்ளேன்.
இந்த கோணத்தில், ஒருமுறை  ஒரு புத்தகத்தை வாசித்து பாருங்கள். ஒரு படைப்பூக்கம் எப்படி இயங்குகிறது என, பிடிபட வாய்ப்பு உண்டு. 
நான் வாசித்தவற்றில்  வாழுங்காலம் இருக்கிறது. உயர்ந்த அற விழுமியங்கள் உள்ளன. அது சார்ந்து  வாழும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை சார்ந்துதான், நானும் இயங்குகிறேன். அதை தொட்டோ, உணர்த்தியோ செல்லும்  படைப்புகள்  கவர்கின்றன. 
என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு வாசிப்பு அனுபவத்தை ஒரு உதாரணத்துக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன், மலையாள எழுத்தாளர் பெரும்படவம் ஸ்ரீதரன் எழுதிய, ‘ஒரு சங்கீதம் போல...’ என்ற நுாலை, ஒரு பஸ் பயணத்தின் போது வாசித்தேன். அது என்னை ஆட்கொண்டது. ஒரு வகை தகிப்பு மனநிலையை ஏற்படுத்தியது. பயணத்தின் போது, இருக்கையில் அமரவே சிரமம் ஏற்பட்டது. என் ரத்த ஒட்டம் எதிர்திசையில் நகர்வது போல் உணர்ந்தேன். மிகவும் எளிய மனநிலைக்குள் தள்ளப்பட்டேன். 
இந்த அனுபவம் பற்றி, அந்த எழுந்தாளருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 
அவர் ஒரு பதில் எழுதினார். அந்த புத்தகத்தை எழுதும் போது, அதே போன்ற மனநிலையில், மூன்று மாதங்கள் இருந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 
உலகத்தின் பல பகுதிகளிலும் இது போல் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். 
எழுதும் போது ஒருவன் தண்மையை பாய்ச்சுகிறான்; மற்றொருடன் வெம்மையை பாய்ச்சுகிறான். ஒருவன் இரண்டையும் கலந்து முறையான விகிதத்தில் பாய்ச்சுகிறான். மற்றொருவனோ, முறையற்ற விகிதத்தை கலந்து, வாசிப்பு அனுபவத்தை ஒரு சுமையாக ஏற்றிவிடுகிறான்.
நான் எழுத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்துபவன். என் தொழிலும் அதுதான்.  வளர்ச்சிப் போக்கை  நம்பித்தான் வேலை செய்து வருகிறேன். 
படைப்பாளிகளை, வளர்ச்சி்த் தொடர்பியலில் பங்கேற்பவர்களாக பார்க்கிறேன். நான் வாசித்த, 15 தொகுதிகளிலும், ஏதோ ஒரு வழிமுறையில் வளர்ச்சி ஆர்ப்பரிக்கிறது. அவற்றின் அலை வரிசை வேகம் தான் வித்தியாசப்படுகிறது. 
ஒரு படைப்பு,  நான் நிற்கும் கரையில் என் மீது வேகமாக மோதி இழுக்கிறது. இன்னொன்று என் காலை தொட்டு  போகிறது. காலடியில் மணல் பரப்பு கரைந்து, உப்புக்குத்தி உள் இறங்கி ஒரு வகை உணர்வை பெருக்குகிறது. இன்னொரு அலை, நெருங்கி வந்து நுரை நாக்கை நீட்டுகிறது. சில, அலைகளுக்குள் அலையாக ஆர்பரித்து மறைகின்றன. சில பாறைகளில் மோதி அகங்கார ஓசை எழுப்பி மடிகின்றன. நான் வாசித்த, 15 தொகுப்புகளின் அலைவரிசையை இப்படித்தான்  கணிக்கிறேன். 
என் தொழில் சார்ந்த தொடர்பியல் மொழி தட்டையானது.  அதில் படைப்பு உண்டு. உணர்ச்சி இல்லை. ஆனால் வளர்ச்சிக்கான துாண்டுதல் உண்டு.
படைப்பு அப்படியானது அல்ல. அது எல்லாம் கலந்தது. மொழி நெகிழ்வானது; உணர்ச்சி மயமானது; வாழ்க்கை பாதையை அறியும் அறம் அவற்றில் உண்டு.
இவ் உலக வாழ்வு என்பது, பல உயிர்களின் கூட்டு செயல்பாடு. இதை உள்ளடக்கிய அனுபவங்களே சிலாக்கியமானவை. 
வாசிப்பின் மூலம் நெகிழ்ச்சியை தந்தவை அவைதான்.
நெகிழ்வை தந்தவர்களுக்கும், நெகிழ வைக்க முயன்றவர்களுக்கும் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்.
நம்மை சுற்றி, கிட்டத்தட்ட, 753 கோடி பேர் இந்த பூவுலகில் வசிக்கின்றனர். மரம், புல், பூண்டு, நடப்பன, பறப்பன, ஊர்வன என, பல லட்சம் கோடி உயிர்கள் வாழ்கின்றன. அவை நாம் வாழும் சூழலை மேம்படுத்துகின்றன. அனுபவத்தை, உணர்வை, தோழமையை தருகின்றன. பாடங்கள் சொல்கின்றன. அந்த அனுபவ செறிவுகளை உள்வாங்கி வடிவமைக்கும் படைப்பாளர்களை வணங்குகிறேன்.   
எழுதும் கலை மிக கடுமையானது. நீண்ட இடையறாத மொழி பயிற்சியால் தான், அதை அடைய முடியும். வாசிக்கும் கலையும் அதே அளவு திண்மையானது. இவற்றை உள்ளடக்கிய வாழ்க்கையை  கொண்டவர்கள் எழுத்தாளர்கள். இந்த புத்தகங்களை எழுதியவர்களுடன்  எனக்கு நேரடி அனுபவம் ஏதும் இல்லை. அவர்களை வாசிக்க  வாய்ப்பை வழங்கிய நண்பர்களுக்கும், பொறுமையுடன்  உரையை அவதானித்த உங்களுக்கும் மனதை திறக்கிறேன். நன்றி.

(எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் நினைவாக, 16.02.2019 அன்று, சென்னை, சி.ஐ.டி.நகர், கவிக்கோ மன்றத்தில் நடந்த நிகழ்வில் நான் பேசியதன்  உரைநடை வடிவம்)
வாசித்த புத்தகங்கள்:
1. கனா திறமுரைத்த காதைகள் – சித்ரன்
2. நீலம் பூக்கும் திருமடம் – ஜா.தீபா
3. நாம் ஏன் அந்தத் தேனீரைப் பருகவில்லை –உமா பார்வதி
4. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி
5. பாகேஸ்ரீ – எஸ். சுரேஷ்
6. காரிச்சாமியும் செவலக்காளையும் – நா.சிவராஜ்
7. பதிலடி – அரிசங்கர்
8. கல்நாகம் – சுரேஷ்மான்யா
9. பூர்ணிமை – க.வீரபாண்டியன்
10. வருகைக்கான ஆயத்தங்கள் – இதயா ஏசுராஜ்
11. சர்வேஷின் கதைகள் – சத்யா GP
12. காளி – விசயலட்சுமி
13. திருக்கார்த்தியல்  – ராம்தங்கம்
14. பிள்ளையார் சுழி – ப்ரணா
15. புதிய வேர்கள் – கலையரசி



           

Monday, 7 January 2019

எதிர்ப்பின் நுட்பத்தை உள்வாங்கும் அணுகுமுறை

‘வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட வித்தியாசம் ஒரு வெளிச்ச மாறுபாடுதான். அதை கணித்து விட்டால் இலக்கை அடைவது சுலபம்...’ என்பார், பிரபல எழுத்தாளர் ஜிம் கார்பெட். ஒரு காட்டில் இருட்டு அனுபவத்தை அவர் விவரி்ப்பதே அலாதியாக இருக்கும். முற்றிலும் வேறானது அவரது வாழ்வு அனுபவம். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அனுமானித்து கடக்கும் அவரது நுட்பம் மேன்மையானது.
அந்த நுட்பத்தை புரிந்து கொண்டால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், புதிய அனுபவங்களை உணர்த்தும். மென்மை நிறைந்த உலகத்தின் மேன்மைகளை உணர்த்தும். காடு சார்ந்தும், காட்டுயிர்கள் சார்ந்தும் வேட்டை சார்ந்தும், மனிதர்கள் சார்ந்தும் பல புத்தகங்களை, ஜிம் கார்பெட் எழுதியுள்ளார். சில தமிழ் மொழியாக்கம் பெற்றுள்ளன.
ஒரு சுவைக்காக, Jim Carbet எழுதி, Oxford University press வெளியிட்டுள்ள, The Man Eating Leopard of Rudraprayog என்ற புத்தகத்தில் இருந்து, A Wild Boar Hunt என்ற பகுதியை தமிழ் ஆக்கி தந்திருக்கிறேன்.
‘‘...இந்த மலை உச்சி, 12 ஆயிரம் அடி உயரமுள்ளது. இதில் உள்ள கணவாய் வழியாக, காஷ்மீருக்கு செல்லலாம். மலையில், 8000 அடி ஏறியதும் பனிப் புயல் வீசத் துவங்கியது. மேகங்களின் நிறம் மாறியது. என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; கவனமாக, ஒரு மரத்தைத் தேர்வு செய்தேன். பனிப் புயல் வீசும் போது, கூடவே, பயங்கர மின்னலும் வெட்டும். சாய்வான உச்சி உள்ள பெரிய ஊசி இலை மரத்தின் அடியில் ஒதுங்கினால், மின்னல் தாக்கும் அபாயம் உண்டு. எனவே, வட்டமான உச்சியுள்ள, அடர்ந்த இலைகளைக் கொண்ட மரத்தின் அடியில் ஒதுங்கினேன்.
சுள்ளிகளை சேகரித்து, தீ மூட்டினேன். தலைக்கு மேல் மின்னல் கீறியது; இடி கர்ஜித்தது; புயல் வீசி அடித்தது. கணப்பின் கதகதப்பில் உட்கார்ந்திருந்தேன்.
ஒரு மணிநேரத்துக்குப்பின் புயல் ஓய்ந்தது; சூரியன் தலைகாட்டியது. மரத்தடியிலிருந்து, வெளியே வந்த போது, வெண் தேவதைகளின் தேசத்தில், பிரவேசிப்பது போல் இருந்தது. தரையில் வெண் கம்பளம் போல், பனி போர்த்தியிருந்தது. அதில், முத்துக்கள் ஒளிர்ந்தன. இலைகளும், புல் இதழ்களும் பனியை சுமந்து மின்னின.
ஒரு பாறையை அடைந்தேன். அதைச் சுற்றி நீலவண்ண மலைஅரளி பூத்து குலுங்கி மனதை வருடியது. இமயமலை காட்டு மலர்களில், மிக மிக அழகானது. புயலால் தண்டு முறிந்த நீல மலர்கள், வெண்பனிப் படுக்கையில் சாய்ந்து கிடந்தன. இந்த காட்சி என்னுள் நிரம்பியது.
பிரமிப்பூட்டும் பிர் மரங்கள் அடர்ந்த காட்டினுாடே நடந்து, ஒரு புல் சரிவுக்கு வந்தேன்.
சிறிய மண்மேட்டில், சின்ன விலங்கு ஒன்று வாலை காட்டியபடி நின்றது. விலங்கு படப் புத்தகத்தில், அதை பார்த்திருக்கிறேன். இதன் பெயர் காஷ்மீர் சிவப்பு கலைமான்; அது, தலையை உயர்த்திய போது, பெண்மான் என, அடையாளம் கண்டேன்.
புல்வெளிச் சரிவில், ஒரு பாறை மறைவில் நின்று கவனித்தேன்; புல்மேய மான் குனியும் போது, மெதுவாக அதை நோக்கி நகர்வதும், தலையை உயர்த்தும் போது, அசையாமல் நின்று விடுவதுமாக நெருங்கிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வலப்பக்கத்தை அது நோக்கியது; அங்கு, அதன் உறவினர்கள் நிற்கலாம் என கணித்தேன்.
எனவே, ஒரு பாறை மறைவில் நின்று கவனித்தேன். இந்த ரக மானை, முதல் முறையாகப் பார்ப்பதால் சிறுத்தை குரல் கேட்டால், அவை நடந்து கொள்ளும் விதம் பற்றி அறிய விரும்பினேன்.
புல் மேய அது குனிந்த போது, சிறுத்தை போல, குரல் எழுப்பினேன். முதல் குரல் கேட்டதுமே, பெண்மான் ஒரு சுற்றுச் சுற்றி  திரும்பி, குரல் வந்த திசையைப் பார்த்தது. முன்னங்கால்களால், தரையை உதைக்க ஆரம்பித்தது. இது, கூட்டாளிகளை விழிக்க வைக்கும் எச்சரிக்கை சமிக்ஞை. ஆனால், கூட்டாளிகள் நகரவில்லை. சிறுத்தையை, பெண்மான் பார்த்தால் மட்டுமே, குரல் கொடுத்து எச்சரிக்கும் என, அறிவேன்.
 நான், பழுப்பு நிற, கோட் அணிந்திருந்தேன். பதுங்கி நின்ற பாறைக்கு வெளியே, என் தோள்பட்டையை மேலும், கீழுமாக அசைத்தேன். பெண்மான், இந்த அசைவைக் கண்டு, சட்டென்று சில அடிகளை முன் வைத்து, கத்த ஆரம்பித்தது. அதன் பொருள், ‘ஆபத்து நெருங்கி வருகிறது; ஓடி வந்து, என்னோடு சேர்ந்து விடுங்கள்’ என்பதுதான்.
இப்போது, அவை சேர்ந்து கொள்வதுதான் பாதுகாப்பானது. முதலில், ஓடி வந்தது ஒரு குட்டிமான். அது பனிமூடிய பாதை மீது, துள்ளித்துள்ளி வந்து, பெண்மான் ஓரம் நின்று கொண்டது; குட்டியைத் தொடர்ந்து, மூன்று ஆண் மான்கள் ஓடி வந்தன. அவற்றைத் தொடர்ந்து, வயதான ஒரு பெண் மான் வந்தது. இவற்றை, 30 அடி துாரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெண்மான் கத்துவதை நிறுத்தவில்லை. மற்றவை, காதுகளை, மாற்றி மாற்றி விடைப்பதும், முன்னும், பின்னும் நகர்வதும், சப்தமும், காற்றும் வரும் திசை நோக்கி, சலனமின்றி வெறித்து பார்ப்பதுமாக இருந்தன.
நான் நின்ற இடத்தில் பனி உருகியதால், அசவுகரியமாக இருந்தது. இப்படியே, நின்றால் தடுமன் பிடித்து விடும். பெண்மான் கத்துவதைக் கேட்டு விட்டேன்; ஒரு ஆண்மான் கத்துவதையும் கேட்க விரும்பினேன். ஆகவே, பாறை மறைவில் நின்றபடியே, தோள்பட்டையை உயர்த்தினேன். உடனே, ஆண்மான்கள் கத்தின; பெண்மான்களும், குட்டியும் பல்வேறு தொனிகளில் குரல் எழுப்பின.
நான் அன்று புறப்பட்டதன் நோக்கமே, ஏதேனும் ஒரு மானை வேட்டையாடி, உணவுக்காக கொண்டு வருவது தான். அதற்கு அனுமதி சீட்டு வைத்திருந்தேன். ஆனால், வேட்டையாட அவசரப்படவில்லை. மெதுவாக வெளியே வந்தேன். அவ்வளவுதான்... காஷ்மீர் சிவப்பு கலைமான் கூட்டம் திகைத்து, ஓடி மறைந்தன. புதர்களினுாடே அவை ஓடும் சத்தம்  சடசடத்தது...’’
இது போல், தெளிந்த ஆறாக பாய்கிறது, ஜிம் கார்பெட் எழுத்துக்கள். மேன்மையான வாழ்வு அனுபவத்தை பேசுகிறது; மிகை அனுபவத்தை அல்ல. எதிர்ப்பின் நுட்பங்களை உள்வாங்கும் வழிமுறைகளை உணர்த்துகிறது. இதை வாசிக்க கிடைக்கும் வாய்ப்பு, வாழ்வின் பெரும் அனுபவப் பேறு. மின்நுால் வடிவிலும், ஜிம் கார்பெட் புத்தகங்கள், இணையத்தில் கிடைக்கிறது.



Thursday, 11 October 2018

தங்க அரளியும் தலைக்கனமும்

இந்தமுறை, புன்னார்குளம் வழியை தேர்வு செய்தேன். வழக்கமாக செல்லும் பொற்றையடி வழியை துறந்தேன். இரண்டு வழியிலும் ஆலடிவிளையை அடைய நடை பயண துாரம் கிட்டத்தட்ட, 1 கி.மீ., தான் வித்தியாசம்.
அதிகாலையே ரயில்நிலையத்துக்கு, வந்துவிட்டார் எழுத்தாளர் கென்னடி. அவரது வாகனத்தில், மயிலாடியை நெருங்கும் போது, ரிங்கல்தெளபே பள்ளயை ஒரு போட்டோ எடுக்கும் ஆசை ஏற்பட்டது.
முகப்பை படம் எடுத்துக் கொண்டிருந்த போது, என்.எஸ்.எஸ்., முகாமிலிருந்த ஆசிரியர் வந்து கேள்வி கேட்டு கதவை திறந்துவிட்டார்.
ஆறு ஆண்டுகள் தவறாமல், இந்த வளாகத்தில் திரிந்துள்ளேன். காலம் எல்லாவற்றையும் சிதைத்திருந்தது. அடையாளங்கள் அழிந்திருந்தன. பல மங்கியிருந்தன. முகப்பு, வளாக புல்தரை, தோட்டங்கள்,  உருவாக்கிய சிறுகுன்றுகள், நட்ட மரங்கள், வழியை ஒழுங்கு செய்து, வீச்சு அரிவாளுக்கு கட்டுப்பட்டு நின்ற தங்க அரளிகள் எல்லாம் முற்றாக அழிந்திருந்தன.
பனங்கை தாங்கிய ஒட்டுக்கட்டடம் சிதைந்து விரிசல் விழுந்து மழையில் கரைந்து நின்றது. பழ மரங்கள், நிழல் மரங்கள் எதுவும் இன்றி காட்சி மாறிவிட்டது. மனதில் தங்கியுள்ள நிழல் அந்த வளாகத்தில் இல்லை. பதற்றப் பட ஒன்றுமில்லை.
ஒருமுறை வளாகத்தை சுற்றி வந்தேன். வாசல்கள் இடம் மாறியிருந்தன. அப்போதைய தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அறை அருகே வந்தோம்.
எங்களுக்கு வழிவிட்ட ஆசிரியர் நெகிழ்வாக இருந்தார். எளிமையாக உரையாட முடிந்தது. ஒய். ரெஜினால்டு டேவிஸ் என்ற ஒய்.ஆர்.டி., பற்றி அறிந்திருந்தார்.
மண் கூஜாவை துாக்கியபடி, ஒய்.ஆர். டி., கையலம்பும் பகுதியில் அலங்கார செடிகளைக் காணவில்லை. கட்டாந்தரையாகி வெறுமை வடிவமாக கிடந்தது.
ஒய்.ஆர்.டி., காலமாகிவிட்டதாக சொன்னார் அந்த ஆசிரியர்.
பேச்சு அவரது நேர்மை, உழைப்பு, காலந்தவறாமை என, திரும்பியது. இந்த பண்புகளே, பொது சமூகத்தை விட்டு அவரை விலக்கியதாக குறிப்பிட்டார். சரியான கணிப்பாக பட்டது.
மனம் அந்த பக்கம் விலகி நின்று பார்த்தது. பெருங்கருணை, நேர்மை போன்ற அறங்கள், சில நேரம் அகந்தையாக கட்டமைத்துக் கொள்வதை புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரம் மவுனமாக கட்டந்தரையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர்களின் மனநிலையாக அதை கணிக்க முற்பட்டேன்.
ஆப்ரிக்கா கண்டத்தில், சமயம் பரப்ப போன ஐரோப்பியர்களின் அன்பை, நெகிழ்வை, நேர்மையை, அறத்தை, செயலை  தத்துவரீதியாக, நுட்பமாக அணுகியதால், சிதைவுகள் (Things fall apart by Chinua Achebe) என்ற மிகப் பிரமாண்ட காவியம் உலகுக்கு தந்தார் சீ்ன்வா ஆசிபி. ஒரு புராதன சமூகத்தை, சமயம் பரப்ப வந்தவர்கள் அழித்த அவலத்தை அது விளக்கியது.
சமயம் பரப்புதலின் சூழ்ச்சியை வெளிப்படுத்தியது அந்த நுால். உலகின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது.  ஆனால், இங்கு அந்த வாய்ப்பு ஏற்படவில்லை. கண்ணீருடன் கூடிய மன்றாட்டாக தங்கி விட்டது. பாவிகள், மீண்டும் மீண்டும் இந்திய சமூகத்தில் பிறந்து கொண்டிருக்கின்றனர். சாத்தானை நோக்கி, ஐரோப்பிய பாதிரிகள் எய்த அம்புகள், இப்போது நம் சகோதரர்கள் கையில். பாவிகள் பிறந்து கொண்டே இருக்கின்றனர். சாத்தான்களை நோக்கி அம்புகளை எய்து கொண்டே, அன்பையும், கருணையையும் கற்றுத் தருகிறார்கள்.
ஐரோப்பிய ஆண்டவரின் அன்பையும், நெகிழ்ச்சியையும் பெற, சொந்த மண் மண்டியிட்டு, அடிமையாக கிடக்கிறது. இந்த அவலம் இன்னும் உறைக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தும் ‘பாவம்’ செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலை. எழுத்தறிவுக்கு விலையாக பாவமூட்டை முதுகில் ஏற்றப்பட்டது. எந்த சிந்தனை, இந்த பாவமூட்டையை இறக்கி வைக்குமோ... தெரியவில்லை.

சுவாரசியமற்ற தோல்வி

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான இதழியல் பயிலரங்கு ஒன்றை, 2018 ஆகஸ்ட் 15 ம் தேதி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் என்ற  பிரபல இலக்கிய அமைப்பு தக்கலையில் நடத்தியது. இதில், பேச  நண்பர் மூலம் என்னையும் முன்பதிவு செய்திருந்தனர். மாணவர்கள் என்றதால்,  ஆதாயம் வேண்டாமல், சொந்த செலவில் வருவதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
நிகழ்ச்சிக்கு முந்தையநாள், தாயார் மரணம். கலந்து கொள்ள முடியுமா என்ற குழப்பம். ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியை சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழிப்பது என் வழக்கமல்ல. ‘கண்டிப்பாக பங்கேற்பேன்’ என, நண்பரிடம் சொல்லிவிட்டேன்.
நிகழ்வு அன்று காலை கடும் மழை. கிராமத்தில், போக்குவரத்து தடை பட்டிருந்தது. சிறு மழையில் நடந்தும், பெருமழைக்கு ஒதுங்கியும் கிட்டத்தட்ட, 3 கி.மீ., கடந்து, பஸ் பிடித்தேன். நாகர்கோவிலில் பஸ் மாறினேன். குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர வேண்டுமே என்ற கவலை. வாக்கை காப்பாற்றிவிடுவோமா என்ற பதைபதைப்பு.
ஒருவழியாக, குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிட்டேன். உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், நீட்டி, முழக்கி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். சுயபுராணத்தை, முறுக்கல், சாகசங்களுடன் பட்டியலிட்டு முழங்கிக் கொண்டிருந்தார்.
கீழ் நோக்கு (Top to bottom) தொடர்பியல் முறையிலான கூச்சல். தன்னை முன்னிலைப்படுத்தி ஆதாயம் தேடும், வாய் வீச்சுடன் பாசாங்கான உடல் மொழி. குடிசை இதழ் ஆசிரியர் தோழர் இரத்தினசுவாமி, இது போன்ற உரைகளை, ‘வயிறு வளர்க்கும் வாய்கள்’ என்பார். தொடர்ந்த உரைகளும் வயிறு வளர்த்தன.
தவறான இடத்துக்கு வந்துவிட்டது போல் உணர்ந்தேன். பயிலரங்குக்கான தொடர்பியல் முறை இதுவல்ல. விளக்கமுறையும், கலந்துரையாடலுமே, பயிலரங்கில் பலனளிக்கும். அதுவும், மாணவ, மாணவியரிடம் மிகுந்த பொறுப்புடன், எளிமையாக கலந்துரையாடினால் மட்டும் தான், சிறிது பயனை எதிர்பார்க்கலாம்.
எனக்கு கலந்துரையாட மட்டுமே தெரியும். கதைகளை அடித்து விட்டு,  உடல் மொழியால் கவரத் தெரியாது.
நான், ஒரு வகை பணியை செய்கிறேன். பழகினால், அதை எவரும் செய்யலாம். இந்த தொழிலில் கிடைக்கும் அனுபவம் கொஞ்சம் சுவாரசியமானது. அதை, மெருகேற்றி பிரஸ்தாபிப்பதன் மூலம், ஒரு பயிலரங்கின் லட்சியத்தை நிறைவு செய்ய முடியாது.
என்முறை வந்தது. விளக்கமுறையில் கலந்துரையாடலுக்கு, பங்கேற்பாளர்களை தயார் செய்யும் விதமாக துவங்கினேன். நாய் மூத்திரமடித்த கல்சாமி போல, பித்துக்குளிகளை இயல்புக்கு கொண்டுவர எடுத்த முயற்சி எதுவும் பயனளிக்கவில்லை.
கிட்டத்தட்ட, 60 நிமிடங்கள், உத்திகளை மாற்றி மாற்றி தோற்றுப்போனேன். ஒரு கல்லைக் கூட, அசைக்க முடியவில்லை. ஆமாம் சாமிகள், தலையாட்டிகள்... வெறித்துக் கொண்டிருந்தன. பார்க்க கசப்பாக இருந்தது. முயன்று சோர்ந்து தோற்றுக் கொண்டிருந்தேன்.
பங்கேற்பாளர்களின் கண்கள் பிரியாணியை தேடிக்கொண்டிருந்தன.
இழப்பின் பலவீனம் ஒருபுறம். நண்பர்களின் பிரசங்கம் கேட்ட அயற்சி மறுபுறம். சுவராசியமற்ற தோல்வியால் உரையாடலை முடித்து திரும்பினேன். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், ‘ஸ்பான்சர்’ வழங்கிய பிரியாணியை, விளம்புவதில் குறியாக இருந்தனர்.
கடும் பிரயாசப்பட்டு வந்திருக்க வேண்டாமோ என்று என்னை ஒருமுறை கேட்டுக் கொண்டேன்.  உணவை மறுத்து அயர்ச்சியுடன் மழைத்துளிகளுக்குள் புகுந்து நடந்தேன், நேற்றை விட துயரமான மனதுடன்... எனக்கு பசிக்கவே இல்லை.
உழைப்பும், அனுபவமும் மலிவாக கிடைப்பதாக கணக்குப் போட்டு, ஸ்பான்சர்களை, தோழர்கள் தேடுவதாக எண்ணத் தோன்றுகிறது. பயிலரங்கின் பொருள் தெரியுமா உங்களுக்கு..

Thursday, 6 September 2018

கடுவாய் அனுப்பிய துண்டு சீட்டு

பள்ளிக்கு, காலை, 8:00 மணிக்கு முன்பே கடுவாய் வந்துவிடும். வளாகத்தை நிதானமாக அளந்து, செடி, கொடி, மரம், வழி அரண் அரளிகள், கிணற்றடி, தோட்டம், கக்கூசுகள், ஸ்டாப் ரூம், வகுப்பறை, ஆய்வகம் என, கூர் நோக்கி, கண்காணிக்கும். பின், அலுவலக அறைக்கு சென்று அமரும். 
பள்ளி, ‘ப’ வடிவ கட்டடத்தில், தென்கிழக்கு மூலையில், அந்த அறை இருந்தது. எப்போதாவது, வகுப்பறைகள் இரைச்சலால் அதிர்ந்தால், நாற்காலியின் இழுவை ஒலி கேட்கும். அவ்வளவுதான்... அனைத்தும் அடங்கிவிடும். அமைதி துலங்கி நிற்கும்.
பள்ளி வளாகத்துக்குள் வர இரண்டு வழிகள். இரண்டும் எதிர் திசைகளில்... அவற்றை, கண்காணிக்கும் பாணி வியப்பூட்டும். புதிதாக நுழைபவரை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடும் திறன்மிக்க கடுவாய் அது.
மயிலாடி, ரிங்கல் தெளபே பள்ளியில், 6 ம் வகுப்பு சேரும் முன், அச்சுறுத்தலோடு அறிமுகமான பெயர்தான் கடுவாய். சேர்ந்த பின், அந்த பெயர் மறைந்து, ஒய்.ஆர்.டி., என்பது, மனதில் நிறைந்தது. தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் பெயர் சுருக்கம்தான் அது. 
ஆறு ஆண்டுகள்... அவரது ஆளுமையைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒழுக்கத்தை, நேர்மையை, எங்கள் வாழ்வுடன் இணைக்க, அவரது நடத்தை, முன் நிபந்தனையாக இருந்தது. என் அப்பா கற்றுத்தந்தவறை, வலுவாக்கிய தளம் அவரது. 
காலை, 8:00 மணிக்கு முன் துவங்கி, இரவு, 7:00 மணிக்கு பின் முடியும் அவரது பணி. எங்கேயும் இருப்பார். எது நடந்தாலும் கவனத்துக்கு சென்றுவிடும். கல்வி சுற்றலாக்களில் பங்கேற்க மாட்டார். ஆனால், புறப்படும் போதும், முடியும் போதும் அவர் இருப்பார். ஆசிரியர்களுடன், அரட்டை அடிக்கமாட்டார்; வளர்ச்சி உரையாடல் நடத்துவார்.
அது, 9 ம் வகுப்பில் என்று நினைவு. அதிகாலையில், அப்பாவுடன் வயலுக்கு சென்றுவிட்டேன். பருவமழை காலம். மேகம் கவிந்திருந்ததால், நேரம் சரியாக தெரியவில்லை. தாமதம் ஆகிவிட்டது. சாலையில் நின்று பள்ளி வளாகத்தை கவனித்தேன். அவர், கண்ணில் படவில்லை.
உறுதி செய்தபடி, ஓரமாக நகர்ந்து, வகுப்புக்கு போய்விட்டேன். சற்று நேரத்தில், பீயுன் ஒரு துண்டு சீட்டை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார். தலைமை ஆசிரியர், என்னை அழைத்த சீட்டு அது. 
பயந்து நடுங்கியபடி, அவர் அறைக்குப் போனேன். அவரது கைகடிகார சங்கிலி அவிழ, அவிழ அடியும், குத்தும் வாங்கி வந்தேன். மதிய இடைவேளைக்கு பின் மீண்டும் அழைப்பு. நடுங்கிக் கொண்டே போனேன். 
‘வயலுல இருந்து தானே வந்தே... பின்னே நேரா கிளாசுக்கு போக வேண்டியதுதானே. ஏன் ஒளிச்சே...’ என, நெகிழ்ந்தார். ஒழுக்கமும், நேர்மையும், நிர்வாகத்திறனும், காலந்தவறாமையும், அழகியலும்... சொல்லிக் கொண்டே போகலாம் கீர்த்தியை.
பள்ளி வளாகத்தில், அழகிய வடிவமைப்புடன் தோட்டம் இருந்தது. தங்க அரளி செடிகளால் வேலி அமைத்து, ஒழுங்குபடுத்தி, மாணவர்களே பராமரிக்கும் வகையில், செயல் திட்டம் உருவாக்கியிருந்தார். 
விடுப்பு ஆசிரியர் வகுப்புக்கு, வழக்கமாக அவர் பொறுப்பேற்பார். வளாகத்தில் ஒரு மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்துவார். வகுப்பு, இயல்பாக, இயற்கையாக அமைந்திருக்கும். செயல்முறையாக  அமையும். 
காக்கை பறப்பதை பார்... வண்ணங்களை கவனி... கூர்ந்து நோக்கும் போது அலகை நோக்கு... என்ற பாணியில் பாடம் நடக்கும். மண்வெட்டியின், பிடி முனைக்கு, ‘வெப்புதாங்கி’ என்ற பெயர் இருப்பதை, உணர்த்தியது ஒரு மரத்தடி வகுப்புதான். ஒரு விவசாயின் மகனாக, மிகவும் வெட்கப்பட்ட தருணம் அது. 
மொழி, சூழல், பண்பு, நடத்தை, அறிவியல், இயற்கை, இலக்கியம் என, சாதுார்யமாக தொட்டு செல்லும் அந்த பாடம். மனசில் உணர்த்தி, நேரத்தை கலகலப்பாக கரைக்கும்.
ஒரு ஆசிரியர் தின நாள். 1987 என, நினைக்கிறேன். நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி, சென்னை, தியாராயநகர், சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. செய்தி சேகரிக்க, சென்றிருந்தேன். 
முன் வரிசையில், நிருபர்களுக்கான இடம். அதன் அருகே நின்று, இருக்கைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். ஒன்று கவனத்தில் நின்றது. அவர்தான்... உறுதிப்படுத்திக் கொள்ள, செய்தி குறிப்பை வாசித்தேன். பெயர் இருந்தது. 
விருது வாங்கிக் கொண்டு, இறங்கி வந்தார். அவர் முன் விழுந்து வணங்கினேன். மொத்த நிகழ்வும் ஒரு கணம் நின்று, கவனம் எங்கள் மீது திரும்பியது. என்னை இறுக அணைத்துக் கொண்டார். பார்வையில், ‘யார் நீ...’ என்ற கேள்வி. கற்ற காலத்தை சொல்லி, அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
மிகவும் நெகிழ்ந்து, மகிழ்ந்தார். 
பின்னர், இருமுறை நாகர்கோவில், கிறிஸ்டோபர் நகரில் அவரது வீட்டில் சந்தித்து, உலாவலுடன் நீண்ட உரையாடல் நடத்தியுள்ளேன். 
ஆசிரியர் தினம் மட்டும் அல்ல... நேர்மை, ஒழுக்கம், நிர்வாகம் பற்றிய தகவல்களை பகிரும் போதெல்லாம், என் தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அவர்களை மேற்கோள் காட்ட தவறியதில்லை.
#mylaudy #ringletaubeshcool #YRD