Tuesday, 26 June 2018

திட்டமிடாத சில மணித்துளிகள்...

சில நேரங்களில்...
திட்டமிடாமலே நிகழ்வுகள் உரிய திசையில் நகரும். கடந்த, ஜூன் மாதம், 24 ம் தேதி ஞாயிறு.  அப்படித்தான் நகர்ந்தது. நண்பர் நவமணி, சனியன்று மாலை ஒரு தகவல் அனுப்பினார். சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியில் கட்ட உள்ள வீட்டருகே தோட்டம் அமைக்கும் ஆலோசனை கேட்க அழைத்தார்.
ஞாயிறுக்காக திட்டமிட்டிருந்த பணிகள் நிறைவடைந்தால், மாலை வருவதாக பதில் அனுப்பினேன்.
அன்று, பிற்பகலுக்குள், பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. மாலை, 5:00 மணிக்குள், அய்யப்பன்தாங்கல் வந்துவிடுவதாக தகவல் அனுப்பினேன். புறப்படும் முன்,  முத்துக்குமார் என்பவர், செவ்வெண்டை விதைகள் கேட்டு மெசஞ்சரில் வந்தார். நேரில் பெற்றுக் கொள்வதாக கூறினார்.
வளசரவாக்கத்தில் இருந்த அவரை, ‘நீண்ட துாரம் அலைய வேண்டாம். அய்யப்பன்தாங்கலுக்கு வாருங்கள். விதை எடுத்து வருகிறேன்’ என்றேன்.
முறைப்படுத்தின மாதிரி, 5:00 மணிக்கு அய்யப்பன்தாங்கலில் இருந்தேன். நண்பர் நவமணி வரவேற்று, அழைத்து போனார். சிறிது நேரம் கலந்து உரையாடினோம்.
குறைந்த செலவில், சிரமம் தவிர்த்து, காய்கறி தோட்டம் அமைக்கும் வழிவகைகளை சொன்னேன். மனை உள் வளாகத்திலும், தெருவிலும் சில மரங்களை நடவு செய்ய ஆலோசனை சொன்னேன்
தெருவாசிகளுடன் கலந்து, தெரு ஓரம் நடும் பணியை  முடிவு செய்யச் சொன்னேன். குடும்பத்தில், குழந்தைகள், துணைவியாருடன் கலந்து பேசி, ஆலோசனைகளை செயல்படுத்துவது முறையாக இருக்கும் என்பதையும் உணர்த்தினேன்.
கிட்டத்தட்ட ஒரு கிரவுண்ட் மனையில், வீடு கட்டும் பரப்பளவு நீங்கலாக, ஒளிபடும் இடங்களில் தோட்டம் அமைய உரயைாடல் பயன்பட்டது. அதை முன் மாதிரி தோட்டமாக்கி, அந்த பகுதிவாசிகள் பயன்பெற வகை செய்வதாக நண்பர் வாக்களி்த்தார்.
உரையாடலின் ஊடே, முத்துக்குமாரும் வந்துவிட்டார். செவ்வெண்டை, முட்டை கத்தரி விதைகளை  பரிமாறிக் கொண்டோம். ஞாயிறு மாலை, ஆக்கப்பூர்வமாக உரையாடலுடன் நகர்ந்தது பொழுது. இயற்கை இனிது. 

Monday, 25 June 2018

யாழ் புராணம் வாசிச்சிருக்கீங்களா...

பண்டைய இசைக் கருவிகளில் சிறப்பு வாய்ந்தது யாழ்.  நரம்புகளால் கட்டப்பட்டது என்பது இதன் பொருள். இசை உருவாக்கும் கருவிகளை, தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் போன்ற இலக்கியங்களில் யாழ் மீட்டுவது, பல்வகை யாழ் தொடர்பான குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகள், யாழ் பாகங்கள் பற்றியும், யாழ் நரம்புகளை சுருதி கூட்டி இசைப்பதற்கான இலக்கணமும் விரிவாக உள்ளது.
இசையில் தேர்ந்த கந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றி, சீவக சிந்தாமணி பாடல்களில் உள்ளது. யாழுடன் சேர்ந்து பாட இலக்கணமும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்கள், பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவி என  குறிக்கின்றனர்.
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர், 1947 ல் யாழ் நூல் என்ற  இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து தொகுத்துள்ளார். 9 ம் நூற்றாண்டில் கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றிக் கூறுகிறது.
வில் யாழ்  – 21 நரம்புகளை உடையது
பேரி யாழ் – 21 நரம்புகளை உடையது
மகர யாழ் – 17 முதல் 19 நரம்புகளை உடையது
சகோட யாழ் –16 நரம்புகளை உடையது
கீசக யாழ் – 100 நரம்புகளை உடையது
செங்கோட்டி யாழ் (7 நரம்புகளை உடையது)
சீறி யாழ் –7 நரம்புகளை உடையது
நாரதயாழ்  –1000 நரம்புகளை உடையது,
ஆதிகால பெரியாழ் – 100 நரம்புகளை உடையது
 தும்புருயாழ், மருத்துவயாழ் (தேவ யாழ்), ஆதியாழ்  ஆகியவை 1000 நரம்புகளை உடையது. கிளி யாழ், வல்லகியாழ், குறிஞ்சி யாழ், பாலை யாழ், மருத யாழ், முல்லை யாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
சாத்தான் குளம் அ.ராகவன் என்பவர் தனது நூலில் 24 வகை யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 ஆண்டுகள் பழைமையான சில யாழ்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அவை: செங்கோட்டு யாழ், எருது யாழ், மயில் யாழ், மயூரி யாழ்

Sunday, 24 June 2018

நீங்கதான் செத்துப்போயிட்டீங்களே...

அனேகமாக, 1998 ம் ஆண்டாக இருக்கலாம். சென்னை அண்ணாசாலையில் எங்கள் அலுவலகத்துக்கு எழுத்தாளர் சுந்தரராமசாமி வந்திருந்தார். ஆசிரியருடனான சந்திப்பு முடிந்தபின் அவரை வழி அனுப்ப வெளியே வந்தோம். அங்கே ஒரு ஆட்டோ காத்திருந்தது. ‛இவர்தான் சிவதாணு, நல்ல வாசகர்’ என்று அறிமுகப்படுத்தினா் சுரா. கூடவே, ‛சென்னைக்கு எப்போது வந்தாலும், இவரது ஆட்டோவில்தான் பயணம்’ என்றார். ‛நானும் நாவுரோல்தான்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர். 
நாகர்கோவிலைத்தான் அப்படி குறிப்பிட்டார். பேரிக்காய் வடிவில் முகம். தளர்வுடன் கொஞ்சம் சடவும் தெரிந்தது. வாழ்வதற்கு கடுமையாக போராடுகிறார் என, புரிந்து கொண்டேன் . அதிகமாக பேசிக்கொள்ளவி்ல்லை.
பின்னர், அவ்வப்போது சென்னை இலக்கிய கூட்டங்களில் பார்த்துக்கொள்வோம். மறக்க முடியாத முகம். ஒருமுறை, ‛‛நான் மயிலாடியிலதான் பொண்ணு கட்டியிருக்கேன்; ஒங்களுக்கு அங்கதானே,’’ என்றார். கொஞ்சம் பேச்சு நீண்டது. 
அவரது மைத்துனர், மயிலாடி ரிங்கல்தெளபே உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர். பேச்சு நீண்டபோது, கொஞ்சம் காரசாரம் கூடியது. வழக்கமாக மனைவியின் உடன் பிறந்தோரை வசவும், ‛நாவுரோல்’ மனநிலை கரை புரண்டது. வாழ்வதற்கு நடத்தும் போராட்டத்தில், இந்த வசவு ஒலிபரப்பு அவருக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்திருக்கலாம். அவரது மைத்துனரை, எனக்கு தெரியும் என்பதால், என் வழி அவரது வலி, அவருக்கு போகும் என்பதாகவும் இருக்கலாம். 
கடும் போராட்ட நெருக்கடியை பகிர்வதன் மூலம், என் முகம் அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம்.
 பாலுமகேந்திரா உட்பட சில சினிமாக்காரர்கள் பெயர்களை அவ்வப்போது சொல்லி, அவர்கள் விரைவில் தரப்போகும் வேலை மூலம் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்ளப்போவதாக நம்பிக்கையுடன் கூறுவார்.
ஒருநாள் அதிகாலை, தரைவழியில் தொலை பேசினார். அப்போது, அசோக்நகர், ராகவன் காலனி, முரளி ஆனந்த் அபார்ட்மெண்ட் மூன்றாம் தளத்தில் வசித்துவந்தேன். அவசரமாக ஒரு உதவி கேட்டார். வீட்டு முகவரியை குறிப்பிட்டு அழைத்தேன். காலை, 9:00 மணி வாக்கில் வந்தார். என் மகனுக்கு அப்போது வயது 3, பள்ளி செல்ல புறப்பட்டு வாகன வரவை எதிர்பார்த்து மாடியில் இருந்து அவ்வப்போது எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
மாடிஏறிவந்து கொண்டிருந்த சிவதாணுவை பார்த்தும், ‛நீங்கதான் செத்துபோயிட்டீங்களே’ என்றான்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அவனை அள்ளி அணைத்து, ‛டிவி’ ல பார்த்தியா மக்கா’ என்றார். அவன் தலையசைத்தான். பொதுவாக, வீட்டில் செய்தி தவிர, வேறு எந்த நிகழ்ச்சியையும் யாரும் பார்ப்பதில்லை. விசாரித்ததில், பக்கத்து வீட்டில் விளையாடும் போது, ‛டிவி’ தொடரை பார்த்த நினைவில் அப்படி வெளிப்படித்தியுள்ளான். 
அதன்பின் எப்போது பேசினாலும், அந்த அனுபவத்தைபகிர்ந்து கொண்டு அவனை விசாரிப்பார். அதன் பின் பல முறை சந்தித்துள்ளோம். ஒருமுறை, தி.நகர் கண்ணதாசன் சிலை அருகே சிக்னலுக்காக காத்திருந்தேன். ரோகினி லாட்ஜ் பக்கம், அவர் போய்க்கொண்டிருந்தார். அழைத்தேன். குரல் கேட்டு வந்தார். பைக்கை ஓரம் கட்டி பேசினோம். கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். ‛‛ஒங்களைப் போல சிலர்தான் கூப்பிட்டு பேசிறீங்க... பலர் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிடுறாங்க... பார்த்து கூப்பிட்டாலும் அப்புறம் பார்க்கலாம் என்று பறந்துடுறாங்க,’’ என்றார். இந்தமுறை, மிகவும் அமைதியாக காணப்பட்டார். திருப்தியாக இருப்பதாக கூறினார். மகன்கள் படித்து பொருள் ஈட்டுவதாக கூறினார். ‛‛இனி நல்லா வாசிக்கலாம் பாருங்க,’’ என்றார்.
கடைசியாக, பார்த்து, ஆறு மாதங்கள் இருக்கலாம். பத்திரிகையாளர் நண்பர் ரமேஷ்வைத்யாவுக்கு நினைவு இருக்கலாம். அவரைக் காண, எங்கள் ஓயிட்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தார். சந்திப்பின் போது என்னை விசாரித்திருக்கிறார். விவரம் எனக்கு தெரியவர, அவரை சென்று சந்தித்தேன். பணி இடைவெளியில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.அகநாழிகை பொன் வாசுதேவனும் உடன் இருந்தார். அதுவே அவரை சந்தித்த கடைசி தருணம். 
எல்லா இன்னல்களுக்கு இடையேயும் வாழ்வை வாசிப்புக்கு அர்ப்பணித்த அந்த வினோத முகத்தை மறக்க முடியவில்லை. அவர் மறைந்து விட்ட செய்தி நம்பக் கூடியதாக இல்லை. என் மகன் சொன்னது போல…

Friday, 15 June 2018

நீந்தும் நீர்காகங்கள்

சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், சசீந்திரம் போக வேண்டிய வேலை இருந்தது. சிறு துாறலுக்கு  ஒதுங்கி நின்ற போது  தாணுமாலையன் கோவில் தெப்பக் குளத்தில்,  நீர் காகங்களைக் கண்டேன். அவசர பணியின் போதும்,  நிதானமாக நோக்க மனம் லயித்தது. விலகி செல்ல மனம் வரவில்லை. தோதாக, துாறல் சிறு மழையானது வேறு...
கவனித்த போது, காதல் வயப்பட்டு, நீரில் ஆடிய நீர் காகங்கள் தனி அழகாய் தெரிந்து ஈர்த்தன.  அதை வர்ணிக்க சொற்கள் இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில், முதலியார்குப்பம் பகுதியில் படகு சவாரி சென்ற போது, ஒரு மரத்தில், நீர் காகங்கள் காய்ந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று நோக்க முடியவில்லை.
சுசீந்திரம், பழையாற்றில் மீனை தின்றுவிட்டு, உட்பாறைகளில் இறகை காயவைத்துக் கொண்டிருக்கும் நீர்காகங்களை, பஸ் பயணங்களில்   கண்டிருக்கிறேன். அவை போடும் எச்சம், வெள்ளை நிறத்தில் பாறைகளில் படிந்திருக்கும். கறுப்பு நிறத்தில் அதன் மேல் அமர்ந்திருக்கும்.
இப்போதுதான், இயல்பை உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நீர் நிலைகளில் தலையை மட்டும் வெளியே நீட்டி நீந்திக் கொண்டிருக்கும். அவ்வப்போது, நீருக்குள் அமிழ்ந்து எதிர்படும் மீனைப் பிடிக்கும்.
 உடலை  நீருள் வைத்து நீந்தும் போது, பாம்பு  நீந்துவது போல் தோன்றும்.
நீரில் மீனைப் பிடித்த உடன், கழுத்தை வெளியே நீட்டி, மீன் தலை, முதலில்  வாயக்குள் செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து விழுங்கும். இந்த காட்சி அபூர்வமானது.
இதன் சிறகுகளில் எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டும். வயிறு முட்ட மீன் தின்ற பின் பறக்க வேண்டுமே? சிறகுகள் நனைந்திருந்தால் பறக்க முடியுமா...  சிரமத்துடன் மெல்லப் பறந்து,  அருகில் கல்லின் மீதோ, கிளையிலோ அமர்ந்து,  சிறகுகளை விரித்து உலர வைத்துக் கொள்ளும். உலர்ந்த பின் பறந்து செல்லும். அவை, சிறகை விரித்து காற்றில் அல்லாடும் அழகே தனி...

Thursday, 14 June 2018

காயம் வலியை ஏற்படுத்துவதுதானே தவிர...

கால்பந்து ஓர் அபூர்வ விளயைாட்டு. உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டது. உடலும் மனமும் ஒரே சீராக செயல்பட்டால், லட்சியத்தை அடையலாம் என்பதை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பயற்சி.
இந்த விளையாட்டு போட்டிகளில் பிரமாண்டங்களை நிகழ்த்திய பல வீரர்கள் உலக அளவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். வீரம், திறன், நெகிழ்வு, நிதானம் குழு செயல்பாடு ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுபவமாக உணர்த்தி ரசிகர்களை பிரமிக்க வைப்பது இந்த விளையாட்டின் சிறப்பு அம்சம். உற்சாக ரசிப்பு அனுபவத்தையே, பயன் சார்ந்த லட்சியம் நோக்கி இழுத்து செல்லும் வகையிலான செயல்பாட்டை கொண்டது.
கால்பந்தாட்டத்தில் உலக கோப்பைக்கான,  போட்டிகள் சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடந்தன.
 இந்த போட்டித்தொடரில் பிரேசில் நாட்டின் இளம் வீரர்  நெய்மார் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மைதானத்தில் பட்டாம்பூச்சி போல் பறந்து பந்தை லாவகமாக நோக்கி, லட்சிய வளையத்துக்குள் அடிக்கும் திறனை வியக்காதவர்கள் இல்லை. அவரது மைதான அனுபவம் சொல்லும் பாடம் மிக எளிமையானது.
`பயம் வெற்றிக்கனியை பறிக்க உதவாது; அது உங்களை வீழ்த்திவிடும்' எனபதுதான் அந்த பாடம்.
கடந்த முறை பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டித்தொடரில் கால் இறுதிக்கு முன்னேறுவதற்கு முன், ஒரு பரபரப்பான காலைவேளையில், டி.சி.எம். செய்தி நிறுவன நிருபர், நெய்மாருடன் நடத்திய பேட்டியின் தமிழ் வடிவம் இது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தவர் என் மகன் ராஜாநிகில்.
போட்டியின் தமிழ் வடிவம் இதோ...

நிருபர்: பந்தை கோல் வளையத்துக்குள் செலுத்துவதற்கு எடுக்கும் முயற்சியின் போது, ஏற்படும் சறுக்கல்கள், உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதில்லையா?

நெய்மார்: இல்லை. நான் அமைதியாகத்தான் பந்தை எதிர்கொண்டு, நகர்த்துகிறேன். பதட்டம் அடைவதில்லை. வெற்றிக்கனியை பறிக்க, பயம் ஒருபோதும் உதவாது; அது நம்மை வீழ்த்தி புதைத்துவிடும். விளையாடும் போது,  வலிமையான அணிகளை எதிர்கொள்கிறோம் என்பது மனதில் இருக்கும்; ஆனால் பயம் துளியும் இருக்காது. தொடர்ந்து வெல்ல வேணடும் என்ற உணர்வுதான் மேலிட்டு இருக்கும்.
நிருபர்:  ஆட்டத்தின்போது, கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமே?

நெய்மார்: நீங்கள் உங்கள் கனவில் உறுதியாக இருந்து, அதிலேயே வாழும் போது நெருக்கடி என்பது தெரியாது; லட்சியத்தை அடையும் வழி தான் தெரியும். நான் சிறு வயது முதலே, என்ன ஆக வேண்டும் என, கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தேன். இன்று என் கனவு நனவாக கைகூடிவருகிறது. நான் என்ன நினைத்தேனோ அதுவாக மாறிவருகிறேன். அதை நோக்கி நகர்ந்து வருகிறேன்.

நிருபர்: வீரர்கள் தங்களுக்குள் முரண்பாடுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லதல்லவா?

நெய்மார்: உண்மைதான். நாம் இருக்கும் இடம்தான் நமக்கு சொர்க்கம். நாம் எந்த அணி சீருடையை அணிகிறோமோ அதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எவ்வளவோ திறமையான வீரர்கள் உள்ளனர். அனைவருக்கும் உலக கோப்பை தொடரில் ஆடும் வா்ய்ப்பு கிடைப்பதில்லை. ஏத்தனையோ பேர் இந்த வாய்ப்புக்காக ஏங்கிக் கிடக்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும். அ்ந்த வகையில், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.

நிருபர்: தங்க காலணியை வெல்லும் ஆசை  உங்களிடம் இல்லையா?

நெய்மார்: அப்படியெல்லாம் ஆசை இல்லை. நான் சிறந்த வீரன் என்றோ, அதிக கோல் அடித்தவன் என்ற பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்ப்பது என் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான். அதுதான் என் கனவாக உள்ளது. நான் கோல் அடிப்பது மட்டும் அல்ல; என் அணியில் உள்ள வீரர்கள் கோல் அடிக்க உதவுவதும்தான் விளையாட்டு. இதை ஒவ்வொரு வீரனும் மனதில் வைத்தால், வெற்றிக்கனியை பறிப்பது சுலபம்.
நிருபர்: அனைத்து நாட்டிலும் உங்கள் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனரே?
நெய்மார்: நாங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமான அணியாகத்தான் இருக்கிறோம். எங்கள் சக்தியை முழு அளவில் பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் போட்டிகளில் எதிர் அணியை எளிதாக எதிர் கொள்ள முடிவதில்லை.

நிருபர்: சிலிக்கு எதிரான உங்கள் ஆட்டத்தைப்பற்றி கூறுங்கள்?
நெய்மார்:நாங்கள் கடுமையாக போராடினோம் என்பதுதான் உண்மை. ஆட்டம் முடிந்த பின் என் கண்களில் வடிந்த நீர், மகிழ்ச்சி என்ற கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அந்த அணியை வென்றால்தான், தொடரில் நாங்கள் முன்னேற முடியும் என்ற நிலையில் வெறியுடன் ஆடினோம்.


நிருபர்: ஆட்டத்தில் காயம் ஏற்படும் போது, தொடர்ந்து விளையாட முடியுமா என்ற  நம்பிக்கை சிதைவு ஏற்பட்டது உண்டா?

நெய்மார்: ஒரு ஆட்டத்தில் கால் தடுமாறி விழுந்து விட்டேன். சிறிய வலியாகத்தான் அதை உணர்ந்தேன். அதை கடந்து வர சிறிய ஓய்வு மட்டுமே தேவைப்பட்டது. காயம் என்பது வலியை ஏற்படுத்துவதுதானே தவிர, நம்பிக்கை சிதைவை ஏற்படுத்துவது அல்ல. அப்படித்தான் அதை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை  எதிர்கொள்ள வேண்டும்.

நிருபர்: உலக கோப்பையில் அனைத்து ஆட்டங்களையும் சொந்த மண்ணில் ஆடுவதில் ஏதாவது வித்தியாசம் கண்டீர்களா?
நெய்மார்: இது ஒருவகையில் எங்களுக்கு நன்மை என்றுதான் நினைக்கிறேன். உலகக் கோப்பையை நடத்தும் நாடாக எங்களுக்கு பெரும் நெருக்கடி உள்ளது. ஆனால், ரசிகர்களின் உற்சாகம் எங்களை வழிநடத்துகிறது.
நிருபர்: இது உங்கள் முதல் உலகக் கோப்பை ஆட்டம் அல்லவா?
நெய்மார்: போட்டி துவங்கும் முன்பே, என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பிரேசில் வீரர்களுக்கான சீருடையை அணியும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
நிருபர்: லுாயிஸ் பெலிப் ஸ்கோரி போன்ற சிறந்த பயிற்சியாளர்களை வைத்துக்கொள்வதை முக்கியமாக கருதுகிறீர்களா?
நெய்மார்: அவரை பயிற்சியாளராக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாக கருதுகிறேன். நாங்கள் அவரை மிகவும் மதித்து தினமும் தொழுகிறோம். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எப்போதும் மரியாதையை திருப்பித்தரும் பண்பு அவருடையது. அதை நாங்கள் காப்பாற்றுவோம்.

இந்த பேட்டி, கால்பந்தாட்ட வீரராக நெய்மாரின் உற்சாகத்தை மட்டும் அல்ல, கூட்டு செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

தமிழில்: ராஜாநிகில்

Saturday, 9 June 2018

விழிநீர் சோர நின்றேன்


‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்,’ என்ற 72 பக்க தன் வரலாற்று புத்தகத்தை, 65 நிமிடங்களில் வாசித்து முடிந்தேன். கடைசி பக்கங்கள், பெரியார் துணைவி மணி அம்மையாரின் மறைவு சித்திரத்தை காட்டுகிறது. மணி அம்மையார் உடல் முன், ‘விழிநீர் சோர நின்றேன்,’ என்று பதிவு செய்துள்ளார் புத்தக ஆசிரியர் மா.கோபாலன்.
பெரியார் குடும்பத்துடன் இருந்த  பிணைப்பை வெளிப்படுத்த, இதை விட உருக்கமான மொழி, வேறு இல்லை என்றே தோன்றியது.
 தன், 14 வயதில் பெரியாரை சந்தித்த, மா.கோபாலன், அவருடன் பிணைந்த வாழ்க்கை அனுபவத்தை, பதிவு செய்துள்ளார். பெரியாரை மட்டுமே சுற்றி சுழலவில்லை பதிவு. திராவிடர் கழக வளர்ச்சி, சென்னை நகர மாற்றம், அரசு ஊழியர் செயல்பாடு போன்றவற்றை ஊறி வடிந்து பதிவாக்கியுள்ளார்.
குஞ்சிதம் அம்மையார் பற்றிய பதிவு நெகிழவைக்கிறது. எளிமை, கொள்கை பிடிப்பு, சகிப்பு, உறுதி போன்றவை, எப்படி ஒரு வாழ்க்கையை கட்டமைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கை, சமூகத்துக்கு உணர்த்திய பாடம், தமிழ் சமூகத்தின் வாழ்க்கை நெறியாக மாறவில்லை என்றே தோன்றுகிறது. இந்த பாடத்தை கற்றிருந்தால், தமிழர்களின் வாழ்க்கை, விரிவையும் ஆழத்தையும் தேடி, பயணப்பட்டிருக்க வேண்டும்.
நுõலாசிரியர், அரசு அதிகாரியாக பணியாற்றியவர். பெரியாரின் அன்றாட செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தவர். பிணைப்பு கொண்டிருந்தாலேயே, கோபாலன், தன் சுய கருத்தை அழித்துக் கொண்டவராக தெரியவில்லை. நடந்தவற்றை இயல்பாக்கி, தன் எண்ணப்போக்கையும் பதிவு செய்துள்ளார்.

புத்தகத்தில் இருந்து...
புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போதும் கூட, குஞ்சிதம் அம்மையார், ‘இங்கர்சால் போன்ற மேலைநாட்டு பகுத்தறவு வாதிகள்,  கடவுள் நம்பிக்கையோடு இறந்ததாக கூறினார்கள். என்னைப்பற்றியும் அவ்வாறே கூறிவிடுவார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவள். கடவுள் நம்பிக்கை இல்லாதவளாகவே இறக்கிறேன். இதை பதிவு செய்து கொள்ளுங்கள்,” என்றார்.
அப்போது, அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க தலைவராக இருந்தவர் எஸ். இராமநாதன். ராசாசி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். குஞ்சிதம் அம்மையாரின் இறுதி வாக்குமூலத்தை அவர்தான் பதிவு செய்தார். அதற்கு இரண்டு பேரின் சாட்சி கையெழுத்தும் வாங்கப்பட்டது.
குஞ்சிதம் அம்மையார், நெற்றியில் பொட்டு கூட வைத்துக் கொள்ள மாட்டார். பொட்டு வைத்துக்கொள்வது ஒரு மதத்தார் பழக்கம்; அந்த மதத்தின் சின்னம்.
திருமணங்களில் தாலியை ஒரு தட்டில் தேங்காயுடன் வைத்து, வந்திருக்கும் பெரியவர்களிடம் வாழ்த்தித் தருமாறு கேட்டுக் கொள்வார்கள். பெண்கள் உட்கார்ந்திருக்கும் பகுதிக்கு வரும் போது, குஞ்சிதம் அம்மையாரிடம் தாலியைக் காட்ட மாட்டார்கள். அவர் நெற்றியில் பொட்டு இல்லாததால், அவரை கைம்பெண் என்றும் விதவை என்றும் கருதி, அடுத்து உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் சென்று வாழ்த்து பெறுவார்கள். அதை குஞ்சிதம் அம்மையார் அவமானமாக கருதியதே இல்லை.
‘திருமண வீடுகளில் இவ்வாறுதான் நடக்கும். நான், அதை பொருட்படுத்துவதே இல்லை’ என, சிரித்துக்கெண்டே அவர் சொல்வார்.                                                      பக்கம்: 36-37
என் வாசிப்பும்... அனுபவமும்...
வாசிக்கும் அனுபவத்தை, 80 களில் இருந்து பெற்று வருகிறேன். வாசிக்கும் போது, தகவலுடன் , அதை படைத்தவர் பற்றிய மதிப்பீடும், எண்ண ஓரத்தில் அனுபவமாக பதிவாகிறது. இந்த புத்தக பதிவு, நெகிழ்வை ஏற்படுத்துகிறது. புத்தக ஆசிரியர் மா. கோபாலன், கடந்த ஆண்டு மறைந்தார். அவரை பற்றி, சில உரையாடல்களின் ஊடே அறிந்திருக்கிறேன். அவரது கையெழுத்து பிரதியை பார்க்கவும் ஒரு நேரம் வாய்த்தது. இந்த பதிவு பிரதியை அல்ல. அப்போது அவர் உயிருடன் இருந்தார். போதிய கவனம் இன்மையால், அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இந்த புத்தகத்தை வாசித்தபின், அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்ட குற்ற உணர்வு ஏற்படுகிறது.
படைப்புகளை வாசித்துவிட்டு, படைத்தவர்கள் மீது ஏற்படும் மதிப்பீடு அடிப்படையில், அவர்களை சந்திக்கும் விரும்பம் ஏற்படுகிறது. சந்திக்கும் போது, மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாவதும் உண்டு.
 வாசிப்பின் அடிப்படையில் சந்திக்க விரும்பியவர்கள் வரிசை கே. டேனியல்,  நந்தி, அதின் பந்தோபாத்யாய, வைக்கம் முகமது பஷீர் என்று நீண்டு போகிறது. வாசித்தபோது ஏற்பட்ட அதே நெகிழ்ச்சி, சந்தித்த போதும் மாறாமல் இருந்ததில் எம்.எ. நுக்மான், சுந்தரராமசாமி, ராமாமிர்தம், ஏசுதாசன், ஹெப்சிபா, பவா செல்லத்துரை, கோணங்கி, நாராயணன், மாலதி, ஞானி என, வரிசை நீழ்கிறது. யாழ்ப்பாணத்தில் நந்தி வீட்டை பார்த்த போது, நெகிழ்வும் சோகமும் கலந்து கண்ணீரை கரைத்தேன்.

கடவுளுக்கு வரம் கொடுத்த தாத்தா

பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ பேரின் வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான்.
வாழ்க்கை, இன்பத்தை நோக்கிய பயணம். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் மலர்ப் பாதையில் பயணிப்பது வெறும் கனவு. பாலை மணலும், மேடும் பள்ளமும் முட்களும் நிறைந்தது. அதில் தடம் ஏற்படுத்திக் கொள்வது சாதுாரியமானது.
இது போன்ற பாதையை எதிர்கொள்ள திராணி உள்ளவர்கள், பயணிப்பர். வெற்றி தோல்வி என்பதெல்லாம், சூழல் நிர்ணயிக்கும் அளவுகோல் சார்ந்தது
இதை உணர்த்துகிறார், செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,78.
வயது அவரது பயணத்தின் தடைக்கல் அல்ல; அவர் களைத்து கிடக்கவில்லை. உழைப்பை  மதிக்கிறார். நம்பிக்கை கொள்கிறார்.
பயணத்தில் பெரும் சோகங்களை கண்டவர்,  நிகழ்வுகளை எதிர் நோக்கியவர். பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருடன் ஒரு மதிய வேளை உரையாடல்
‘‘சின்ன வயசுல, கழனில நெல்லு, கேழ்வரகுன்னு, பயிர் வைப்போம். மனைவி லட்சுமி, ஆம்பள மாதிரி தலப்பா கட்டிக்குனு, தண்ணீர் பாய்ச்ச ஏத்தத்து மேலே ஏறி மிதிப்பா. அப்பல்லாம், கழனியிலே நல்ல வௌச்சல் கிடைக்கும். வீட்டுல தானியங்களப் போட்டு வைக்கிறதுக்கே இடம் இருக்காது. கழனி வேலையையும் செஞ்சிட்டு, கல் தச்சு வேலைக்கும் போயிடுவேன்,’’ என்றார், சரளமாக...
முதல் சோகத்தை கம்மிய குரலில், ‘‘செங்கல்பட்டு திருமலை தியேட்டர் பக்கத்துல ஒரு வீட்டுல, கல் தச்சு வேலை செஞ்சிக்கிட்டு இருந்தப்போ, என் மனைவி சாப்பாடு எடுத்து வந்திருந்தா. அப்போ...ஊர்ல இருந்து வந்த ஒருத்தர், ‘ஏம்மா இரண்டு பேரும் இங்கே வந்துட்டீங்க... அங்கே உங்க பயிருல மாடு மேயுது’ன்னு சொன்னாரு.
அத கேட்ட என் மனைவி, ஆவேசமா கழனிவெளிக்கு ஓடிப்போனா. அன்னிக்கு, இடி மின்னல் தாக்கி கழனிவெளியிலேயே செத்துட்டா. அந்த கவல, மனசுல முள்ளா குத்திட்டு இருக்கு,’’ என்றார்.
ஆளாளுக்கு கொள்கைகள் மாறலாம். சிலருக்கு கொள்கையே இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு சம்பவம், ஒரு கொள்கையை பின்பற்றும்படி வைத்து விடுகிறது.
‘‘ஐம்பது வருஷத்துக்கு முன்னால... ஒருநாள்...கழனியிலே வேலை செய்துட்டு வந்து, மதியம் வீட்டிலிருந்த கொஞ்சம் கூழ குடிச்சிட்டேன். என் அண்ணன், ‘ஏண்டா எல்லாத்தையும் குடிச்சிட்டே?’ன்னு, கொம்பால, கால், முதுகுன்னு கண்டபடி அடிச்சிட்டார். அன்னேலேருந்து இன்னைக்கு வரை, யாராவது சாப்பாடு கொடுத்து சாப்பிடச் சொன்னா மட்டுந்தான் சாப்பிடுவேன்.
‘‘எவ்வளவு சாப்பாடு முன்னாடி இருந்தாலும், எவ்வளவு பசியா இருந்தாலும், தொடமாட்டேன். இது என் மனைவிக்கு தெரியும். அவ இருந்த வரைக்கும் சாப்பாடு போடுவா. இப்ப என் மருமகள். சாப்பாடு போட்டு வச்சிருக்கேன்னு சொன்னா தான் சாப்பிடுவேன்,’’ என, நெகிழ்ந்தார்.
புத்திரசோகம், தசரதனுக்கு மட்டுமல்ல, இந்த பாலகிருஷ்ணனுக்கும் தாங்க முடியாத ஒன்று தான்.  அவர் மேலும் கூறியதாவது:
என்னை படிக்கவைக்கவில்லை. அதை குறையாகவே உணர்கிறேன். என் பசங்களுக்கு இந்த குறை வர கூடாதுன்னு, கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்.
எனக்கு, இரண்டு ஆம்பள பசங்க. பெரியவன் ஆந்திராவில் கல்லுடைக்கிற வேலை செய்யறான். சின்னவன் கம்பெனி வேலைக்கு ஆளுங்கள ஏத்தி போற வண்டியில, டிரைவரா போனான்.
இரண்டு மாசத்துக்கு முன்ன, ரவுடி பசங்க வண்டிய மடக்கி, அவன அடிச்சிட்டாங்க. இத அவங்க ஓனர்கிட்ட சொல்லிருக்கான். இதை வீட்ல சொன்னா, பெரிய கலவரம் வருமேன்னு, கவலைப்பட்டிருக்கான்.
நாலு பேரு நம்மள அடிச்சிட்டாங்களேன்னு நெனச்சி, வேதனப்பட்டு விஷம் குடிச்சி, செங்கல்பட்டுல விழுந்து கிடந்திருக்கான்.
கடைசி நேரத்தில, அவன் அண்ணங்கிட்ட, போன்ல, ‘நாலுபேரு அடிச்சிட்டாங்க. நான் ஒங்கிட்ட சொன்னா... நீங்க நாலு பேரு சோ்ந்து அவனுங்கள அடிப்பீங்க. அதனால சண்டை தான் வரும். என்னால எதுக்கு சண்டை வரணும்? உனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. நீ அவங்கள பாத்துக்க... அப்படினு சொல்லிக்கிட்டே விழுந்தவந்தான். அப்பறம் ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பிணமா எடுத்து வந்தாங்க. அது என் மனசுல ஆறாத வடுவா மாறிடுச்சு...
நான் கடவுளப் பார்த்து ஒருமுறை கேட்டேன். நான் நோ்மையா இருக்கேன், நோ்மையா உழைக்கிறேன். ஆனா, என் குடும்பத்தை இப்படி சோதிக்கிறியே அப்படின்னு. மகாபலிபுரம் கடல்ல இறங்கி, நடுக்கடல்ல நின்னு, ஒன்பது பூக்களைப் போட்டு, வணங்கி கேட்டேன். எனக்கு ஏன் இந்த சோதனைன்னு.
‘அலைகளுக்கு ஊடே ஆழ் கடலுக்கு வரக்கூடிய தெம்பை குடுத்திருக்கேன். சோகத்தை தாங்கும் மனசை கொடுத்திருக்கேன். இத விட உனக்கு என்ன வேணும்’ன்னு கடவுள் கேட்டார். நியாயம்தானே. பேசாம கரையேறி வந்துட்டேன். அதுக்கு அப்புறம் எது நடந்தாலும், சகிச்சுக்கிட பழகிட்டேன்.
என் மகனிடம், கழனில வேலை செய்து, காய்கறி பயிர் வெச்சா, நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்றேன். அவன் கேட்காம, ஆந்திராவில் கூலிக்கு கல் உடைக்கிறான்.
ஒரு சின்ன ரூம்ல தங்கி கஷ்டப்பட்டு மாசாமாசம் பணம் அனுப்புறான். அதை வச்சு என் மருமக, பேரன்களை படிக்க வைக்கிறா... இப்படித்தான் வாழ்க்கை போவுது.
அனுபவத்தை பகிர்ந்து விட்டு, சுறுசுறுப்பாக விறகு வெட்ட போய்விட்டார் பாலகிருஷ்ணன்.