Thursday, 21 March 2019

அடைக்கலம் வரும் குருவிகள்

அது, இந்திய –சீன போர் முடிந்திருந்த காலம். இந்தியாவின் தென்முனையில் உள்ள எங்கள் கிராமத்திலும், போர் பீதி நிறைந்திருந்தது. பகலில், விமானச் சத்தம் கேட்டால் ஒருவகை பதட்டம் நிலவும். இரவில் என்றால், விளக்கை அணைக்கை சொல்லி பதட்டமாக சமிஞ்சை செய்வர். குரலற்ற சொற்களை காற்றி்ல் ஏற்றுவர்.
அனேகமாய், அது 1965 ம் ஆண்டு என  நினைக்கிறேன். எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. புன்னைக்காய் எண்ணெய் விளக்குகள் தான் அதிகம். தெரு விளக்குகளுக்கு மண்ணெண்ணெய். எங்கள் வீட்டு மாடியில் சீட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. அவற்றை நாங்கள் அடைக்கலான்குருவி என்போம். மனதில் எப்போதும் அடைக்கலமாக இருக்கும்.
அந்த குருவிகளை சலனப்படுத்த என் பெற்றோர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவை, எங்களுடன் வாழ்ந்தன. மாடியில் உலரும்  புழுக்கிய நெல், அறுவடையாகி களத்தில் விழும் நெல், மாட்டு சாணத்தில் நெளியும் புழுக்களை உண்டன. மாடிக்கும், களத்துக்கும், தொழுவத்துக்கும் மாறி மாறி பறந்து கிறங்கடித்தன.
கிட்டத்தட்ட, 60 குருவிகள் வரை இருக்கலாம். முகத்தில் கரியை பூசியது போல் ஆண்குருவிகள் அழகு காட்டும். மாடி எறவாணம் முழுக்க அவற்றின் கூடுகள் தான். ‘சிட் சிட்’ என, குழாங்கற்களை உரசுவது போல் அவை அன்பைப் பரிமாறிக் கொள்ளும்.
ஒருநாள், ஒரு குஞ்சு கூட்டிலிருந்து நழுவி, மாடியில் விழுந்து கிடந்தது. அதை அப்பாவிடம் காட்டினோம். வரிசை கட்டி கூடுகள் இருந்ததால், அடையாளம் காண முடியவில்லை. கூட்டில் நழுவியது மீண்டும்  அங்கு சேர வாய்ப்பில்லை என, அப்பா சொன்னார்.
அடைக்கலான் குருவிகளின் மகிழ்ச்சியை, காதலை, கோபத்தை நான் நன்கு அறிவேன். அதன்பின், 91 வரை தொடர்ந்தும், இடைவெளிகளிலும் அவற்றை கவனித்துள்ளேன். எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் இருந்ததில்லை. சீராகவே வாழ்ந்தன.
93 ல், அப்பா மரணத்துக்குப்பின்,  விவசாய உற்பத்தி,  குறைய ஆரம்பித்தது. தொழுவத்தில் மாட்டின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. இரை கிடைப்பதில், சிட்டுகளுக்கு பிரச்னை ஏற்பட்டது. அவையும் படிப்படியாக குறைந்தன. உற்பத்தி சார்ந்த பகுதிகள் நோக்கி அவை நகர்ந்திருக்கலாம். ஆனால், மனதின் விளிம்பில் அவற்றின் சிறகசைப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
சென்னை, மவுண்ட் ரயில்நிலையம் அருகே, உடற்பயிற்சிக்காக, இரண்டரை ஆண்டுகளாக அதிகாலையில் சென்றுவருகிறேன். பயிற்சி மைய ஜன்னலை திறந்தால் சுற்றிலும், மூன்று மொபைல் டவர்கள் தெரியும். மையத்தை ஒட்டிய ஒரு வீடு மிகவும் பழமையானது. அங்கு, ஆறு மாடுகள் உள்ளன. அவை உலவுவதற்கு கொஞ்சம் பரப்பு காலியாக உள்ளது. அதில் சிறு புதரும், சில மரங்களும் உள்ளன.
அந்த வளாகத்துக்கு, தினமும் இரண்டு உண்ணி கொக்குகள் வரும். மாடுகளிடம் அவற்றுக்கு இரை கிடைக்கிறது. புதரில் சிட்டுக்குருவிகள் உண்டு. கிட்டத்தட்ட, 30 குருவிகள் இருக்கலாம். அவற்றுக்கு மாட்டுச் சாணத்தில் புழுக்கள் கிடைக்கின்றன. தினமும் பார்க்கிறேன். எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இல்லை.
பயிற்சி நாட்களில், சில நிமிடங்களாவது இவற்றை பார்க்கும் அனுபவம் பெறுவேன். அப்போது, அணில்களுக்கு பயந்தது போல், பரபரப்பாக பறந்து கலகலக்கும் சிட்டுகளை கவனிக்க தவறுவதில்லை. அந்த காட்சி விரிந்து மொபைல் கோபுரங்களையும் விலகவிடுவதில்லை.      

உத்திர பட்டையும் பாயாசக் கஞ்சியும்

நினைவிடத்தை, குழிவாசல் என அழைக்கும் வழக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்டு. மையக்குழி என்றும் அழைப்பர். பங்குனி உத்திர நாளில்,  சில குழுக்களுக்கு குழிவாசல் முக்கியத்துவம் பெறும்.
அன்று, நினைவிடத்தை துலக்கி, சுண்ணாம்பு தெளித்து வெற்றிலை, பாக்கு, பூக்களால் படையல் வைத்து, அந்த குடும்பத்தினர் வழிபடுவர். தொடர்ந்து, அரைப்பத இனிப்பில் கஞ்சி காய்ச்சி, முற்பகல் முதலே விநியோகிப்பர். கஞ்சி குடிக்க, பனை ஓலை பட்டைகள் தயாராக இருக்கும்.
நினைவிடத்தில் கஞ்சி காய்ச்சி விநியோகிக்க வழி இல்லாத ஏழைகள், அண்டை அயலில் ஊற்றும் கஞ்சியை, பட்டைகளில் குடித்து விட்டு, பாத்திரங்களில் வாங்கியும் செல்வர்.
ஒரே பிரிவை சேர்ந்தர்கள் வசிக்கும் ஆலடிவிளை கிராமத்தில், காலசுவாமி, மன்னர் ராசா ஆகியோரை முதன்மை தெய்வமாக வழிபடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இது போன்ற, ‘கஞ்சி வார்த்து  ஊற்றும்’ நடைமுறையைப் பின்பற்றுவர்.
கஞ்சி காய்ச்சுவதற்கு, ‘குட்டுவம்’ என்ற வெண்கல கலங்கள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் வீட்டில் இரண்டு குட்டுவங்கள் உண்டு. அவற்றைக் கேட்டு உத்திரத்துக்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, போட்டி போட்டு முன்பதிவு செய்ய வருவதை பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்வரை கடைபிடித்த  நடைமுறை இது. கலாசாரமும், நம்பிக்கையும் எவ்வளவு வேகமாக மாறிவருகிறது. 
#மாறும்கலாசாரம்

Thursday, 14 March 2019

அறிவைப் போற்றும் காலம்

சென்னை, அண்ணாசாலையில் அப்போது பணி செய்துகொண்டிருந்தேன். ஒரு பிற்பகல் என்று நினைவு. எங்கள் அலுவலக முகப்பில் சிறு புல்வெளியில் ஆ.இரா.வெங்கடாசலபதியைச் சந்தித்தேன். பாரதியின் ஆக்கங்களைச் செம்பதிப்பாகக் கொண்டு வருவது தொடர்பான பணிக்காக வந்திருந்தார். திட்டத்தை எளிமையாக சொன்னார். குறைந்த பேச்சும், அதிகம் உள்வாங்கும் திறனும் அவரிடம் இருப்பதை உணர்ந்தேன். அது மிகக்குறைந்த நேர சந்திப்பு.
தொடர்ந்து சில இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். உரைகளை கேட்டிருக்கிறேன். சென்னை பல்கலைக்கழக இதழியல் துறையில், கருத்தரங்கங்களில் சந்தித்திருக்கிறோம்.
அவரது எழுத்துக்களை ஊன்றி வாசித்திருக்கிறேன்; பயனுள்ள தகவல்களை பெற்றுள்ளேன். அவருடனான சந்திப்புகள் சில கணங்கள்தான் என்றாலும், நுட்பமாக பதிந்துள்ளன. சொற்கள் குறைவு... அவற்றில் கிடைத்த அனுபவம் நிறைவு.
ஒருமுறை, பிரிட்டீஷ் ஆட்சியில் நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ் பற்றிய தகவல்களை திரட்டி வந்திருந்தார். உரிய ஆதாரங்களைத் தந்து ஒரு செய்திக்கட்டுரை வெளியிடக் கேட்டார். சிறு செய்திக்கட்டுரையாக எழுதியிருந்தேன். தகவல்களை தொகுத்திருந்த விதம் அவருக்கு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். பொதுவாக, என் பணியில் இது போன்ற பின்னுாட்டங்கள் கிடைப்பது அரிது.
ஒருமுறை சென்னை பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ.ரவீந்திரன் அறையில் பேசிக் கொண்டிருந்தோம். ‘ஸ்கூட்டர்’ என்ற சொல்லை, தமிழ் படுத்தி, ‘எப்படி எழுதலாம்...’ என்று கேட்டேன். மடைதிறந்த வெள்ளம் போல், ‘குதியுந்து’ என்றார். அது காட்சியாக மனதில் படிந்தது.
அந்த சொல் அருளியதையொட்டி, ஒரு நாள் அண்ணாசலையில் தேவர்சிலையை ஒட்டி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். அருகே குதித்து பாய்ந்து ஓடிய காட்சி நிரம்பியது. அது ஒரு குதியுந்து. என் மன நிழலில் அவர் எப்போது வந்தாலும், ஒரு குதியுந்துவுடன் இணைத்து பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது. அவரது அறிவுக்கூர்மை இணக்கமானது. அவரது எளிமையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவரது சிந்தனை வழித்தடம் எனக்கு உகந்தது.
சமீபத்தில், அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவையொட்டி, சென்னை பெசண்ட்நகரில் நடந்த இறுதி நிகழ்வின் போது சந்தித்தேன். அவருடன் வந்திருந்த நண்பரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘தகவலை சரியாக உள்வாங்கி, செய்தியை மிகையில்லாமல் எழுதுபவர்’ என்று குறிப்பிட்டார். அவர் மனதில் என் மீதான எண்ணப்படிமத்தை புரிந்து கொண்டேன்.
அவரது பங்களிப்புகள் தமிழை செழிமைப்படுத்தியுள்ளது. அரிதிலும் அரிதான செயல்களை நுட்பமாக, முழுமையாக செய்யும் அறிஞர் அவர். அவரது அறிவுலக உழைப்பை பாராட்டி, விரிவும் ஆழமும் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்க நிகழ்வு சிறக்க வாழ்த்துகிறேன். சான்றோரைப் போற்றுதல் நம் தலைக்கடனே...

நிலம் பயன் உயிர்ப்பு

ஏழைகளுக்கான நிலப்பகிர்வில் முன்னிலை வகிக்கும் களப்போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். பூமி தான இயக்கத்தில் இணைந்து, இந்தியாவில் ஏராளமான போராட்டங்களை வெற்றியாக்கியவர், தஞ்சை வெண்மணி கொடூர சம்பவத்தை தொடர்ந்து களப்பணி ஆற்றியவர். 90 வயதைக் கடந்தும், அயராது மக்கள் பணி ஆற்றி வருகிறார். அவரது பயன் வாழ்க்கையை, தோழர் மலர்விழி ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை, எடிட் செய்து செம்மையாக்கி இறுதி வடிவம் செய்துள்ளேன்.
புத்தகத்தில் இருந்து...
கூனி குறுகி வேலை செய்தாலும் அரைவயிறு கஞ்சிக்கு தான் கூலி கிடைக்கும். கூலி நெல்லை ஊற வைத்து உலர்த்தி அரைக்க நேரமில்லாமல், ஊற வச்ச உடனே அப்படியே குத்தி, கும்ப வாசனையோடு கஞ்சி காய்ச்சி குடிக்க வேண்டும். உயிர காப்பாற்றிக்க, மறுநாள் வேலைக்குப் போவார்கள்.
சமயத்தில், கஞ்சிக்கு வெங்காயம், காணப்பயிறு துவையல், வயலில் பிடித்த நண்டு போன்றவை வெஞ்சணமாக இருக்கும். பண்டிகை நாட்களில் எஜமான் வீட்டில் வடித்து போடும் கும்பச்சோறு தான் நெல் சோறு.
இந்த நிலை எல்லாம் ஏதோ இருநூறு, முன்னூறு ஆண்டுகால வாழ்க்கை அல்ல... நம் பாட்டி தாத்தா காலத்தில் ஏறக்குறைய, 50 ஆண்டுகளுக்கு முன் வரை, தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் நிலவிய கொடுமை. உழைத்து வாழ்ந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் நிதர்சன வாழ்வு இது.

வசந்தராணியின் வனப்பு

என் பணி அலுவலகம், சென்னை, ஒயிட்ஸ் சாலையில் உள்ளது. இதன் இடது பின்புறம் டி.வி.எஸ்., பணியகமும், இடது முன்புறம் அமிதீஸ்ட் வளாகமும் உள்ளன. இந்த வளாகங்களின் மதில் ஓரம் ஓங்கி உயர்நந்துள்ளன பல மரங்கள்.
இளைப்பாறுதல்களில் இந்த மர நிழல்களும், அவை தரும் வான் காட்சியும் இனிமையாக நிறைக்கும். அவற்றை அடையாளம் காண ஆர்வம் நிறைந்திருந்த போதும், தகவல் தேட வாய்ப்பில்லாமல் இருந்தது.
மஞ்சாடி என்ற ஆனைக் குன்றிமணி மரம் ஒன்றுள்ளதை, கடந்த ஆண்டு அறிந்தேன்.
இன்று காலை, அலுவலகத்தில் நுழையும் முன், பூக்களால் குலுங்கி ஈர்த்தது, ஒரு மரம். தினமும் பார்க்கிறேன். நேற்றும் கூட பார்த்தேன். சில பூக்கள் மட்டுமே இருந்தன. இன்று, மரம் முழுக்க வெளிர் ஊ:தா நிறம் குலுங்குகிறது.
இந்த மரத்துக்கு, டிரம்பட் (Trumpet tree) என்று பெயர். அறிவியல் வகையில் Tabebuia Rosea என்று பெயர். தென் அமெரிக்கா, கரீபியன் பகுதியை தாயகமாக கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் வரை வளரக்கூடியது. இலையுதிர் காடுகளில், 25 மீட்டர் வரை வளரும். வறட்சியை தாங்கும். வசந்த காலத்தில் பூத்து, மனதை குலுங்க வைக்கும்.
Flickr ல், சவுந்தரபாண்டியன் என்பவர், இதன் பெயரை, ‘வசந்தராணி’ என்று குறித்துள்ளார். வேறு தமிழ் பெயர் அடையாளத்தை காண முடியவில்லை. இந்த மரத்தில், 99 ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பு உள்ளது. இந்த மாதம் முழுவதும், வெளிர் ஊதா வண்ண பூக்களில் நனையலாம்.

வளர்ச்சியின் பொறி... ஒரு இசையாக


சற்று தாமதமாகிவிட்டது. கூட்டம் நடக்கும் பகுதியை கண்டுபிடித்து சேர்ந்து கொண்டேன். ஒருங்கிணைப்பாளர் அனுாப்குமார் பேசிக் கொண்டிருந்தார். முகநுால் போட்டோ அடையாளத்தைக் கெண்டு அனுமானித்துக் கொண்டேன். அவர் உட்பட அங்கு கூடியிருந்த யாரையும் முன் பின் தெரியாது. பெயர் அடையாளமும் தெரியாது.
ஆங்கிலத்தில் துவங்கி, தமிழுடன் இயல்பாக விளக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே, இனிய மலையாளம்.
அது, சென்னை, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா. முகநுாலில், இயல்பு விவசாயம் பற்றி தகவல் பரிமாறிக் கொள்ளும் ‘சென்னை ஆர்கானிக் டெரஸ் கார்டன்’ (Chennai organic terrace gardeners) உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.
மாடியில் காய்கனி, மலர் செடிகள் வளர்ப்பது பற்றி எளிய உரையாடல் நிகழ்ச்சி அது. செடிகள் வளரும் விதம், சூழலுடன் அவற்றுக்கு உள்ள உறவு, இயற்கையை பேண வேண்டிய அவசியம் போன்றவற்றை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கினார், அனுாப். அவரது, அனுபவமும், ஆர்வமும், நிபுணத்துவமும் உரையில் வெளிப்பட்டது. அதில் உள்ளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
இடைஇடைய சிறிய கேள்விகள். அவற்றுக்கு எளிய தீர்வு தரும் விளக்கங்கள். கூட்டத்தை யாரும் முறைப்படுத்தவில்லை. மிக முறையாக கச்சிதமாக நடந்தது. இனிய உரையாடல்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தன.
தோட்டம் அமைப்பதில், துவக்க நிலையாளர்கள், பெரும் அனுபவம் நிறைந்தவர்கள் என, இரண்டு நிலையிலும் இருந்தவர்கள் உண்டு. அனைவருக்கும் ஒரு பொதுவான நிறைவுப் புள்ளி இருந்தது. அது தான், நலம் மிக்க வாழ்க்கைக்கான தேடல். உணவு உற்பத்தி சார்ந்த நுாண் அறிவைத் தேடியக் கூட்டம்.
சமூக வளர்ச்சியின், மிக முக்கிய செயல்பாடாக இதைக் கருதுகிறேன். இது போன்ற இயல்பூக்க அடிப்படையில், பொருட்செலவு இன்றி, காலவிரயம் இன்றி, அறிவுத்தேடல் நடக்கும் போது, சமநிலையான சமூகம் வளரும்.
இதில் பங்கேற்ற, 49 பேரில், 28 பேர் பெண்கள். கூட்ட இறுதியில், விதைகளும், செடிகளும் பறிமாறிக் கொள்ளப்பட்டன. ஆர்வமுடன், விதைகளையும் செடிகளையும் காட்சிக்கு வைத்து அன்புடன் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டனர். கிட்டத்தட்ட, இரண்டு மணி நேரம்... இனிய கலைஞர் லோபமுத்ரா மித்ரா பாடும், ‘ஹரீத் மாஜ்ஹரி...’ இசையை ரசிப்பது போல் காலம் கனிவாக நகர்ந்தது.

கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா...

ஒளைவையின் தனிப்பாடல் ஒன்றின் துவக்க வரி இது. இரண்டு வாரங்களாக, இந்த கவிதை, உரிய இடைவெளியில் அதிகாலை, காலை,  முன்இரவு, பின்னிரவு, நள்ளிரவு என... வீட்டில் ஒலித்துக் கொண்டே இருந்தது. வழக்கமான வகுப்பு பாடத்தை படித்து முடித்த பின், இந்த பயிற்சியை மேற்கொள்வார்.
முதலில்  ஒப்புவித்தல் பாணியில் துவங்கி, கல்யாணி ராகத்தில் இசை வடிவமாக்கி பயற்சியை கூர்மையாக்கிக் கொண்டிருந்தார் மகள். அவரது பயற்சி வடிவம்... ஓரிலையாய், கொம்பாய், உயர் மரமாய் – சீரிய வண்டு போல் கொட்டையாய், வன்காயாய்ப் பின் பழமாய்... என  காட்சியாக மனதில் பதிந்தது.
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்...
என,
வளர்மதியிடம், முதலில் ஒப்புவிக்க துவங்கியவர், பின்னர் பொருத்தமான இசை வடிவத்தைக் கண்டறிந்து நிகழ்த்தத் துவங்கினார். பள்ளி பாடத்தை முடித்து  அவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ந்தது. அதிகாலை எழுந்ததும், இரவில் துாங்கப் போகும் முன் என, தொடர்ச்சியாக நடந்தது. 
அந்த நிகழ்த்துதல் வீட்டை  நிறைத்து நெகிழ வைத்து. மனங்களைப் புதிப்பித்துக் கொண்டே இருந்தது.
ஒளவையின் பாடல் வரிகள் சொல்லும் பொருள் போல, இயல்பாக அவரின் பயிற்சியை புரிந்து கொண்டேன்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான, ஒளவை பாடல் ஒப்புவித்தல் போட்டிக்கு அவர் தயாரான இரண்டு வாரங்களும், நாட்கள் இப்படித்தான் நடந்தது.
இது போன்ற போட்டிகள் பற்றி ஒரு தெளிவை  உருவாக்கியுள்ளோம்.  போட்டியில் பங்கேற்பு என்பது மட்டும் தான் முக்கியம். பயிற்சியை நிறைவு செய்யும் களம் அது.  அங்கு, ‘பயிற்சியால் பெற்ற திறனை முன்னுணர்த்துவது மட்டுமே நடக்க வேண்டும்; எந்த எதிர்பார்ப்பும் கூடாது...’ என்பது தான் அந்த தெளிவு.
அந்த தெளிவின் அடிப்படையில் செயல்பட்டார். அவரது நிகழ்த்துதல், முதல் பரிசாக தேர்வானது. ஆண்டு தோறும் இது போன்ற ஒன்றிரண்டு பயிற்சிகளில் பங்கேற்று, அறம் கற்று வருகிறார். திருக்குறள் பேரவை நடத்திய, பொருளுடன் குறள் ஒப்புவித்தல் போட்டியிலும் முதன்மை பரிசுக்கு தேர்வாகியுள்ளார். 

ஒளவை இயற்றி, கல்யாணி ராகத்தில் நிகிதா நிகழ்த்திய கவிதையின் வரி வடிவம்:
கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின் பழமாய்ப்
பண்டுபோல் நிற்கப் பணி
vvvv
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்ய
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு
vvvv
தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலால், தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளது கொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே!

ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கள்
வாலை நிமிர்க் வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீராக்க லாமோ...